ரோஜா இதழ்கள்/பகுதி 21

விக்கிமூலம் இலிருந்து

21

விரைந்துயரும் விசையை அமுக்கிவிட்டபின் நடுவில் நிறுத்துவதற்கில்லை. ஏதோ ஒரு விசை புகுந்து அவளுடைய வாழ்வுச் சக்கரத்தை இயக்குவதாக மைத்ரேயிக்குத் தோன்றுகிறது. சூறாவளிச் சுற்றுப்பிரயாணம். கூட்டுக் கொடிகள் பறக்கும் கார்களில் பூமாலைகள் துவைபடுவதுபோல், கற்களும் ஒவ்வொரு கூட்டத்தில் வந்து விழுகின்றன. போலீசு கெடுபிடி செய்யும். கார்க் கண்ணாடிகள் உடைவது சகஜமாகிறது. வசைமாரிகள், வாய்ப் பந்தல்களைக் கேட்டுக் கேட்டுக் காதுகள் புளிக்கின்றன. ஒரே மாலையில் நாலைந்து கூட்டங்கள். லோகாவின் தொகுதியில் இரவு பகல் ஓய்வு ஒழிதலின்றி, ஆங்காங்கு இணையும் கூட்டுக்கட்சித் தோழருடன் அவள் சுற்றுப்பிரயாணம் செய்கிறாள். மொட்டைத்தலைக் கணவர் அந்த ஊர்ப் பக்கம் தலைநீட்ட அஞ்சி ஒளிந்துகொள்கிறார். மைத்ரேயிக்கு உணவு, உறக்கம், ஓய்வு குறைந்து, நலம் குன்றினாலும் உற்சாகம் குன்றவில்லை. அது ஒரு வெறிபோல் தானிருக்கிறது. கால்மணிக்கு அவளுக்கு முப்பது ரூபாய் என்று சீனிவாசன் பேசியிருக்கிறான்.

ஸ்டார் ஸ்பீக்கர் என்று பெயர் பெற்ற அழகிய மணவாளனுக்கு இருபத்தைந்து ரூபாய்தான். அவனுக்கு மவுசு குறைந்துவிட்டது. பதினேழு வருஷங்களாகப் பேசும் தொழிலில் கொட்டைபோட்ட அவன் பெயரை, அவள் பெயருக்குக் கீழே சிறிய எழுத்தில் போடுகிறார்கள். பத்திரிகைக்காரன் அச்சில் அவன் பேரைப் போடாமலே விட்டு விடுகிறான். அவன் உள்ளுர வெந்து குமுறினாலும் வெளிக்கு வெற்றிலைச் சாறு துளும்பாமல் சிரிக்கிறான் அழகாக. தனராஜ் எதிர்பாராமல் மேடையில் வந்து சிரிக்கப் போகிறானே என்ற நடுக்கம் அவளுக்கு இப்போதெல்லாம் இல்லை. “செல்வி மைத்ரேயி அவர்கள்”... என்று அவன் முன்னிருந்து அவளைக் குறித்துச் சொல்லுவதும் மைத்ரேயி, “கூட்டுக்கட்சித் தோழர்கள்...” என்று குறிப்பிட்டு வாக்குகளைக் கேட்பதும் மிகவும் பழகியதாகிவிட்டன. அக்காவும் அத்திம்பேரும், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒர்(அரசியல்) விருந்து வைத்ததும், அதற்கு லோகா தம்பதியுடன் தனராஜையும் வரவேற்று, மைத்ரேயியையும் உபசாரம் செய்ததும் அவளைத் திணற அடித்தன. ஞானத்தைத் தேடி வந்து பேசவே, மைத்ரேயிக்கு நேரம் இல்லை. எல்லாம் புதிய அநுபவங்களாக வந்து பழகுகின்றன. எதிர்க்கட்சியாளரின் சவால்களுக்குப் பதில் கூற, கொள்கையளவில் மக்களுக்கு விளக்கம் கொடுக்க அவள் நிறையப் படித்துத் தெரிந்து கொள்கிறாள். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் சில்லறைச் சச்சரவுகளில் அவள் தலையிட்டுக் கொள்வதில்லை. கொள்கைகளைப்பற்றி எவ்வளவு நல்லவிதமாக, எளிய முறையில் அவள் விளக்கம் கூறினாலும், குழுமியிருக்கும் மக்கள் வெறுமே முகவிலாசத்தை மட்டுமே கவனிப்பதாகச் சில சமயங்களில் அவ ளுக்கு ஐயம் தோன்றுகிறது. அழகிய மணவாளனின் பேச்சு முற்றிலும் வேறு வகையாகவே இருக்கிறது. அவன் ஊர் விவகாரங்களில் புகுந்து தனி நபர்மீது அவதூறு தொடுப்பதில் மன்னன்.

நம்ப இயலாத அப்பட்டமான பொய்யை அடுக்க அவன் அஞ்சுவதில்லை.

“ஒரு தனிப்பட்ட மனிதரின் மீது அவதூறு கூறாதீர்கள், நம் வேட்பாளரின் தகுதியைச் சொல்லி ஒட்டுக் கேளுங்கள்.” என்று மைத்ரேயி ஒவ்வொரு முறையிலும் கூறுவது வழக்கம்.

“இத பாருங்கம்மா, நீங்க இன்னிக்குத்தான் மேடையேறி இருக்கேள். பதினேழு வருஷமா நான் மேடை ஏறி இருக்கேன். நான் பேசின கட்சி இன்னிவரை மெஜாரிட்டிலதான் வந்திருக்கு. உங்க படிப்பு, அறிவு, கொள்கை விளக்கம் இதெல்லாம் நிச்சயமாக இங்கே கைகொடுக்கப் போறதில்ல. அதனால் உங்க பாட்டைப் பாத்திண்டு என்னை விடுங்கோ” என்று அவன் கூறுகிறான். அவன் இறங்குமளவுக்கு, கூட்டுக் கட்சித் தம்பிகள் கூட இறங்கிப் பேசாதது கண்டு அவள் வியப்படைகிறாள். அன்று தேர்தல் நாளுக்கு முந்தைய கடைசி நாள் கூட்டம். அன்று நிலைகொள்ளாத சுற்றுப் பிரயாணமாக இருக்கிறது.

இரவு எட்டரை மணிக்கு சீனிவாசனின் தொகுதியில் அவள் பேச வந்திருக்கிறாள். அவள் மேடைக்கு வரும்போது, அழகிய மணவாளன் வழக்கம்போல் பேசிக்கொண்டிருக்கிறான். சீனிவாசன் இருக்கிறான். வெங்கிடாசலம் தலைமை வகிக்கிறார். கடைவீதி முச்சந்தியில் அந்தக் கூட்டம் நடைபெறுகிறது. கணிரென்ற குரலில் அழகிய மணவாளன் எதிர்க்கட்சி வேட்பாளரைத் தாக்குகிறான்.

“இந்த இராஜ பூசணி-பூசணிக்காய் அம்மாள், யாரு? அவ அப்பன் யாரு ? காந்தி இறந்துபோன அன்று பூந்தி வாங்கி வழங்கியவன் அப்பன். ஐயா, காந்தி இறந்தபோது, நாடே கண்ணிர் விடுகிறது; கதறியழுகிறது. சோறும் நீரும் மறந்து சோர்ந்து புலம்புகிறது. இந்த அம்மாளின் அப்பன் என்ன செய்தார்? சுத்தி இருந்தவர்கள் எல்லாரையும் கூப்பிட்டார். பொட்டலம் பொட்டலமாகப் பூந்தி.பூந்தி ஐயா...” "பூந்தி” என்று அவன் அடுத்து உச்சரிக்குமுன் குறி பார்த்து ஒருகல் பறந்து வந்து அவன் நெற்றியைத் தாக்குகிறது. குருதி பொழிகிறது. அப்படியும் அவன் விடவில்லை. ஒலி பெருக்கித் தண்டைப் பற்றிக் கொண்டு இன்னும் உரத்த பயங்கரக் குரலில் “உண்மையைச் சொன்னால் கல்... பார்த்தீர்களா, இன்றைய ராஜ்யத்தில்...?”

கற்கள் தொடர்ந்து விர்விர்ரென்று மேடையை நோக்கிப் பறந்து வருகின்றன.

கூட்டத்திலிருப்பவர்களே கல் வீசுகிறார்களோ என்று மைத்ரேயி நினைக்குமுன் அவள் மீதும் கல்படுகிறது. அழகிய மணவாளனின் ஜிப்பா கிழிந்து நெற்றியில் இரத்தம் பெருகுகிறது. வெங்கிடாசலம் ஓட்டமாக ஓடுகிறார். சீனிவாசன் தலைமீது கைகளைப் போட்டுக்கொண்டு தப்பி ஓடுகிறான். மைத்ரேயி நிலைமையைச் சமாளிக்க ஒலிபெருக்கியின் முன் குரலெழுப்பப் பார்க்கிறாள். போலீசு உள்ளே புகுந்து அகப்பட்டவர்களை அதற்குள் தடியால் அடிக்கிறது. அப்போது தான் ஒரு கிழவன் மைத்ரேயியின் கையைப்பற்றி இழுத்துக் கொண்டு ஓடுகிறான். அவளால் அந்தப் பிடியிலிருந்து திமிற முடியவில்லை.

“சுத்த கயவாளிப் பசங்க, தெம்பில்லாதவங்க, ஏறும்மா,வண்டிலே!” என்று அதட்டுகிறான். அங்கே நல்ல ஒளியில்லை. ஏதோ ஒரு கறுப்பு வண்டி நிற்கிறது. ஓட்டி இருக்கையில் அமர்ந்திருக்கிறான்.

“இது...யார் வண்டி?” என்று பீதியுற்ற மைத்ரேயி நடுக்கம் மாறாமலே வினவுகிறாள். “எல்லாம் நெம்ம வண்டிதான். ஏறம்மான்னா, ஏன் நிக்கிறே? உன் நெல்லதுக்குத்தான் சொல்றேன்!”

மைத்ரேயி அந்த அதட்டலுக்குக் கட்டுப்பட்டாற்போல் வண்டியில் ஏறி உட்காருகிறாள். கிழவன் முன் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறான்.

அந்த முகத்தை மைத்ரேயி நினைவுபடுத்திக் கொள்ள முயற்சி செய்கிறாள்.

பொதுக்கூட்ட முகங்களில் குறிப்பாக எந்த முகம்தான் நினைவில் தங்குகிறது ?

வண்டி காஞ்சீபுரம் சாலையில் செல்வதாக அவள் நம்புகிறாள்.

“ஏன் பெரியவரே, வண்டி...நம்மவீட்டுக்குத்தானே போகிறது ?”

“தோட்ட பங்களாவுக்குத்தான் போகுது. முன்னமே சொன்னேனே ? ஏன் சும்மா கேக்கிறே?”

தோட்ட பங்களா...மாம்பாக்கம் வீட்டை அப்படிக் குறிப்பிடுகிறான் என்று அவள் நம்புகிறாள். இந்த ஒருமாச காலமாக அவள் இரவு அங்கேதான் அநேகமாகத் தங்க வருகிறாள்.

பளிச்சென்று சாலை விளக்குகள் வந்து போகின்றன. மின்சாரக் கிளை நிலையம் ஒன்று போகிறது.

இது...எந்த ஊர்?

தென்னமரச் சோலையிடையே புகுந்து ஒரு வீட்டின் முன் வண்டி நிற்கிறது. கிழவன் இறங்கி கதவைத் திறக்கிறான்.

“எறங்கு!”

“ஏம்பா? நம்ம வீடு இதுவா? எங்க வீட்டுக்குக் கொண்டு போறேன்னில்ல நினைச்சேன்? எனக்குஇப்ப இங்கு வரதுக் கில்ல...” என்று வண்டியை விட்டிறங்க மறுக்கிறாள்.

“அது சர்த்தாம்மா நான் வயசானவன் சொல்றேன் ? வம்புதும்பு செய்யாம எறங்கிவா. இங்கேதான் அந்தையரும் வருவாரு. கையாலாகாத சோமாரிப்பயலுவ கடத்திட்டுப் போகத்திட்டம் போட்டிருந்தாங்க. நீ எறங்கிவா சொல்றேன்...”

பனிக்கட்டி அடித்தொண்டையில் சிக்கிக்கொண்டாற் போல் அவள் விழிக்கிறாள்.

இறங்குவதைத் தவிர வேறுவழியில்லை. வீட்டின் முன் வாயிலில் விளக்கு இல்லை. பக்கத்தில் வண்டி செல்லு மளவுக்கு ஒருசந்து பின்பக்கம் செல்கிறது. அந்தப் பாதையில் அவளை அவன் நடத்திச் செல்கிறான். மைத்ரேயி மனசுக்குள் உறுதியைத் திரட்டிக் கொள்ள முயலுகிறாள். எனினும் நெஞ்சு உலர்ந்து போகிறது. வீட்டில் யாருமே இல்லையோ என்றெண்ணுகிறாள். நீண்ட தாழ்வறை; கிணறு தானியம் சேமித்து வைக்கக்கூடிய அறைபோன்று ஒரு கட்டிடம், மங்கலான நிலவொளியில் தெரிகிறது.

அவன் அதைத் திறந்து, “உள்ளே போம்மா !” என்று ஆணையிடுகிறான்.

கிழவன் வஞ்சகமாக நடந்து கொள்கிறானா, மாற்றுக் கட்சிக்காரனா, வேண்டுமென்று கடத்தி வந்திருக்கிறானா என்றெல்லாம் சிந்தித்தாலும் ஒரு முடிவுக்கும் வர இயல வில்லை. கிழவனைப் பயங்கரமானவனாக ஏனோஅவளால் எண்ண முடியவில்லை.

“இது யார் வீடு? என்னை எதற்காகச் சிறை செய்வதற் குக் கடத்திவருவதுபோல் இங்கே கூட்டி வரவேணும் ? எனக்கு இப்படி ஒளியத் தேவையில்லை! என்னால் யாரையும் எதிர்க்க முடியும்?” என்று அவள் வாய்ச்சவடால் அடித் தாலும் உள்ளுற நடுக்கம் கொல்லுகிறது.

“எதிர்ப்பே...! இன்னாத்தை எதிர்ப்பே?” என்று கிழவன் கேலி செய்கிறான். “ஏம்மா இப்படி வகையில்லாம வந்து மேடையில் நின்று கூச்சல் போடுறே? காங்கிரஸ்காரனுக்கு ஒட்டுப்போடாதேங்குறியே? உனக்கு என்ன தைரியம் ? உனுக்குஎன்னா தெரியும் அத்தெப்பத்தி? அந்தப் பயலுக, உங்க எனத்தையே வேரறுப்போம்னு சொல்லிக்குதிச்சானுவ, அவனுக கூடக் கூடிட்டு, ஏம்மா வகைதெரியாம சாவுறிங்க? உங்க பாட்டன் முப்பாட்டன் வந்தாலும் இங்க காங்கிரசை ஒண்ணும் பண்ணமுடியாது. உன்றமானம் உயிரு தப்பணும்னு பத்திரமாகக் கூட்டியாந்தேன். எனக்குப் பேத்தி வயசிருப்பே. நெல்ல குலத்தில் பிறந்திட்டு ஏம்மா அத்தெ பாழு படுத்திக்கிறே?”

மைத்ரேயி மரக்கிளையிலேறிப் புயலுக்குத் தப்ப நினைத்ததாக நிலைமையைப் புரிந்துகொள்கிறாள்.

தன் படிப்பு, தர்க்க நியாய அறிவு, கொள்கை விளக்கப் பேச்சுக்கள் எல்லாம் இந்தக் கிழவனுக்கு முன் சொல்லிழந்த மொத்தைகளாகப் போகின்றன. தன்னுடைய முதிர்ச்சி யின்மை, அநுபவமின்மை இரண்டுமே பூதங்களாக நின்று தன்னைப் பிணித்துவிட்டதாக நினைக்கிறாள். “அந்தப் பயலுவ, திருட்டுக் கள்ளைக் குடிச்சிட்டு உன்னைத் துாக்கி வரத்துக்கு இருந்தானுவ நான் சொல்றேன். இத்தோட மேடையில் ஏறதில்ல. காங்கிரசு வழிக்கு வரதில்லேன்னு சொல்லு. உன்னெப் பத்திரமா உங்காத்தாவூட்டிலே கொண்டுவுட்டுப் போடறேன். இல்லே... நானே அந்தப் பயங்களை இட்டாந்திடுவேன்.”

அடப்பாவி...!

“ஏன் தாத்தா, இது குடியரசு நாடு, இந்த நாட்டில் எல்லோருக்கும் பேச உரிமை இருக்கிறது. நீங்கள் இப்போது செய்திருப்பது குற்றம். ரொம்பப் பெரிய குற்றம், கோர்ட்டில் வழக்குப் போட்டால் உங்கள் எல்லோருக்குமே ஆபத்து, தெரியுமா ?”

“அட சர்த்தாம்மே, பெரிய கோர்ட்டு நேத்துப் பிறந்த பூனைக்குட்டி நீ. நேரு என்ன, காந்தி என்ன, அவங்கல்லாம் இருந்து வளர்த்த காங்கிரசு, அதுக்கு ஓட்டுப் போடாதேன்னு சொல்றது என்னா நாயம் ? காங்கிரசைப்பத்தி உனுக்கு என்னா தெரியும்? இந்த ரோட்டு, இந்த வெளக்கு, இந்த சினிமா, எல்லாமா முன்ன இருந்திச்சி? அந்தப் போக்கத்த பயலுவ கறுப்புக் கொடி காட்டினாங்க. அவங்ககூட நீங்க சேந்துக்கிறீங்களே, என்ன நாயம் ?”

“தாத்தா, காங்கிரஸ் கட்சிமேலே உங்களுக்கு இருக்கும் விசுவாசத்தை நினைச்சு ரெம்ப சந்தோஷப்படுறேன் நான். ஆனா,இப்ப அது நீங்க இவ்வளவு விசுவாசம் வைக்க உரியதாக இல்லை.”

“சர்த்தாம்மா, நீ ரொம்பக் கண்டுட்டே, நான் சும்மா சும்மாச் சொல்லிட்டு இருக்க மாட்டேன். இந்த வம்பை விட்டுட்டு உன்றசோலியைப் பார்த்துகிட்டுப்போ. காங்கிரசை இங்கே அசைக்க முடியாது. இப்பப்பாரு, நான் வண்டி யிலேறுன்னு அதட்டினேன். நீ ஏறிட்டே. இந்த அளவுக்குக் கூட உன்னக் காப்பாத்திக்கத் தெரியாத நீ, மேடைலே ஏறி அம்மாம் பெரிய மலையை அசைக்கப் பார்க்கிறே, கிழட்டு மாடுன்னு கேலிபண்ணுறேல்ல? நீ இத்தோட இந்த வழிக்கு வாதில்லேன்னு இப்ப ஏங்கிட்ட கையடிச்சுக் குடுத்துட்டு விட்டோட போயிடணும். இல்லாட்டி என்ன நடக்கும்னு எனக்குத் தெரியாது.”

தான் ஒருத்தி மேடையில் ஏறிப் பேசுவதால் மக்களுடைய சக்தி சிதைந்து போவதாக இந்தக் கிழவன் அஞ்சுவது கண்டு அவள் ஓர்புறம் தன்னம்பிக்கை கொண்டு மகிழ்ந் தாலும், பொறியில் சிக்கிய நிலை அவள் முன் இருள் கிடங்காக அச்சுறுத்துகிறது.

மூடத்தனமோ, எதுவோ, கிழவன் ஊறி ஒன்றிப்போன பழைய மண். அவனை அசைக்கமுடியாது; கோட்டைவிட்டு மாறமாட்டான் என்று புரிந்துகொள்கிறாள். ஆனால் அவள் அவனிடம் இனி மேடை ஏறவில்லை என்று வாக்குக் கொடுப்பதற்காகவா இவ்வளவு தீவிரமாக இறங்கினாள்? இவ்வளவு தானா உன் ஆற்றல்? என்று அறிவு இடிப்பதுபோல் தோன்று கிறது. தன்னைப்பற்றிய ஒரு பெருமையான உணர்வுக்கே அது இழுக்கு என்று நம்புகிறாள்.

“உனக்குத் தெரியாது. திருட்டுக் கள்ளைக் குடிச்சிட்டுக் கேவலமா உன்னைப் பத்திப் பேசுறானுவ அத்தெ நினைச்சிப் பாரு. அந்த அசிங்கமெல்லாம் உனுக்கு வேணுமா ?”

“ஒரு நல்லது செய்யணும்னு வந்தால் நாலுபேர் நாலு சொல்லத்தான் சொல்லுவாங்க. வெட்ட வெளியில் வந்து நின்னா அப்படித்தான் புழுதிக் காத்தடிக்கும்; மழையும் பெய்யும். அதற்காக நல்லதுன்னு தோணுவதைச் செய்யா மலிருக்க முடியுமா ?”

“உனக்கு நெல்லது பொல்லாதது என்ன தெரியும்? நீ காங்கிரசுக்கு ஓட்டுப் போடாதீங்கன்னு சொல்லிக்கிட்டுத்

ரோஇ - 22 தானிருப்பேன்னா சொல்லிட்டிரு. நெல்லபடியா நான் சொல்லி நீ கேக்கலே” என்றவன் மின்னல் வேகத்தில் அவளை அறைக்குள் இழுத்துத் தள்ளிவிட்டுக் கதவைச் சாத்திவிடுகிறான்.

அவளுடைய எதிர்ப்புக்கள் ஆற்றோட்டத்தை எதிர்க்கும் சருகிலைகளாகின்றன.

வானமே கருந்திரையாய்த் தனக்கும் வெளிஉலகுக்கும் இடையேபேரொலியுடன் வந்து விழுந்து விட்டாற் போல் அவள் விக்கித்துப் போகிறாள்.

கதவைப் படபடவென்று தட்டுகிறாள். “தாத்தா ? தாத்தா...! கதவைத் திறங்க, தாத்தா...?” என்று கத்துகிறாள்.

எதிரொலியே இல்லை. அறைக்குள் அவன் இழுத்துத் தள்ளியபோது வீழ்ந்த தனால் முழங்காலில் அடிபட்டு எரிச்சல் மண்டுகிறது. கரகர வென்று கண்ணிர் வழிந்து கன்னங்களை நனைக்கிறது.

“சே! கண்ணிர் விடுகிறேனே!” என்று துடைத்துக் கொண்டு திரும்பவும் பலம்கொண்ட மட்டும் கதவைத் தட்டுகிறாள்.

பயனில்லை.

உள்ளே இருட்டாகயிருக்கிறது. சுவரில் தடவிப் பார்க்கிறாள். மின்விசைப் பித்தான் ஒன்றும் தட்டுப்படவில்லை.

புதிய சுண்ணாம்பு உள்ளே நெடியடிக்கிறது. கீழே சிமிட்டி மணல் சொரசொரவென்று உறுத்துகிறது. புதியதாகக் கட்டிய அறையாக இருக்கலாம். ஒர்புறம் சாக்கு மூட்டைகள் தட்டுப்படுகின்றன. வைக்கோலும் புலனாகிறது.

மாட்டுத்தீவனம் அடைத்திருக்கும் அறை அது.

யாருடைய வீடு: ராஜபூஷணியின் வீடுதானோ என்னமோ?

அவளுடைய கையாட்கள்தாம் இத்தகைய இழிசெயலைச் செய்திருக்கிறார்களா? எதிர்க்கட்சி ஆட்களை இப்படிக் கடத்திச் சென்று அடைத்துவைக்கும் நிலைக்கு, ஒரு தேசிய ஸ்தாபனமாக விளங்கிய கட்சி வளர்ந்திருக்கிறது. தியாகத்திலும் அஹிம்சையிலும் மாற்றானை ஊறு செய்யாமல் நகரும தகைமையினாலும் வளர்ந்த ஸ்தாபனத்தின் முகதிரையைப் போட்டுக்கொண்டு எத்தகைய ஈனமான செயல்களைச் செய்கிறார்கள்!

சீனிவாசனையோ, அழகியமணவாளனையோ, அத்திம் பயையோ, அக்காவையோ நினைத்துப் பார்க்க இயலாதபடி கானைப் பற்றிய திகிலில் அவள் நடுங்குகிறாள். எவரேனும் நான்கு முரடர்கள் வந்து கதவைத் திறந்து.

பெண்ணாய்ப் பிறந்ததன் பலவீனத்தை இதற்குமுன் அவள் எப்போதும் இப்படி உணர்ந்ததில்லை.

ஒரு ஆண் இதே நிலையில் அகப்பட்டுக் கொண்டி ருந்தால் கொன்றுவிடுவார்களோ, என்று மட்டும்தான் அஞ்சுவான்.

இது...கொலைக்குமேல்.

அப்படி ஏதேனும் நடந்துவிடுமானால்... நடந்து விடுமானால்...

நெஞ்சுலர்ந்து போகிறது; சிந்திக்கச் சக்தி இல்லை.

அவன் கேட்ட வாக்குறுதியை அவள் கொடுத்திருக்க மாட்டாளா ?

ஞானம்மா...!

உங்கள் கருத்து எவ்வளவு சரியாகப் பலித்திருக்கிறது!

ஒரு பெண் தன்னிடமுள்ள விலைமதிக்கவொண்ணாத பெண்மைக்காக எப்போதும் பாதுகாப்பை நாடவேண்டி யிருப்பதனாலேயே பலவீனமுடையவளாகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளாத மட்டியாக இருந்தாளே!

பொதுக் கூட்டங்களுக்குச் செல்கையில் எத்தனை ஆண்கள் அவளைச் சூழ்ந்துகொள்வார்கள்! வேதகிரி, சுப்புசாமி, கிருஷ்ணமூர்த்தி, வைத்தியநாதன், எல்லோரும் அவளுடைய இனத்தைச் சேர்ந்த ஆடவர்கள்தாம். அவர்களில் ஒருவர்கூட அவளுக்குப் பத்திரமாக உதவவில்லையே! கீழ்த்தரமான உணர்வுகளெல்லாம் கட்டவிழ்ந்து விடக்கூடிய நாட்களில் இத்தகைய சந்தர்ப்பங்களின் அபாயத்தை உணர்ந்து ஒருவன்கூட அவளுக்கு மெய்க்காவலாக இருக்க வில்லையே! ஏன், அத்திம்பேர் அவளுக்கு அப்படி இருந்திருக்கக்கூடாதா? அந்தக் கூட்டத்துக்கு அவர் வரவேயில்லை. ஆஸ்த்மா தொந்தரவினால் அவதிப்படுகிறாராம். கோழைகள்! பிறர் முகத்தில்சேற்றை வீசுகிறோமே என்ற உணர்வின்றி வீசிய அழகிய மணவாளனுக்கு என்ன ஆயிற்று? கைகால் முகத்தில் அடிபட்டிருக்கும். நாளையே பிளாஸ்திரியை ஒட்டிக் கொண்டு தேர்தல் சாவடியில் வந்து நிற்பானாக இருக்கும்.

அவள்.

திகில் குழி பறிக்கும்போது, பசித்தீயும் கிளர்ந்தெரிகிறது.

மணி பத்திருக்குமோ, பதினொன்றிருக்குமோ?

அன்று பகல் குடியாத்தத்தில் ஓட்டலிலிருந்து சாப்பாடு தருவித்து வைத்திருந்தார்கள். அது ஒரே காரமாக இருந்ததுபிறகு மாலையில் எங்கோ வழி நடையில் சிற்றுண்டி. அதுவும் ஒரே பச்சை மிளகாய் மயமாக இருந்தது. அதை விழுங்கி வைத்தாள். இப்போது வயிறு நெஞ்சு எல்லாம் எரிகிறது. அவமானம் நேர்ந்துவிட்டால் பிறகு அவளால் உயிரோடு தலைதுாக்க முடியுமா?

ஆண்டவனே! இதுபோல் மேல்நாட்டுப் பெண் எவளுக்கேனும் நேர்ந்தால் மீண்டுவந்து வழக்காடி நியாயம் கேட்பாள். தவறிழைத்தவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பாள். ஒரு கலக்குக் கலக்குவாள்.

அவளுக்கு அத்தகைய தெம்பு இருக்கிறதா?

நிரூபிக்க உண்மை கூறினால் அது அவமானமாகும் என்று அமுக்கிவைப்பதுதான் இங்கே அதிகம்.

ஆண்டவனே! அவ்விதம் ஏதும் நேராமலிருக்கட்டும். அவள் நியாயத்துக்காகவே போராடுகிறாள். பண்புக் குறைவான எந்தச் செயலையும் அவள் ஒப்புக்கொள்ளவில்லை.

எங்கோ விளக்குப் போடுவதுபோல் ஓர் உணர்வு தோன்றுகிறது. கிழவனாக இருக்குமோ? கதவை பலம்கொண்ட மட்டும் தட்டுகிறாள்.

கைதான் நோகிறது. உள்ளே ஏதேனும் கல், கட்டி மரம் இருக்குமோ என்று தடவிப் பார்க்கிறாள். ஒன்றும் தென்படவில்லை. இடித்து இடித்துச் சோர்ந்தவள் தன் தொண்டை எட்டும் வரையிலும் உரத்த குரலில் கத்துகிறாள்.

“ஸார்!... ஸார்!...

அம்மா...! அம்மா...! யாரேனும் வந்து கதவைத் திறங்களேன் ?”

தாழ்வரையில் செருப்பொலி கேட்பது போலிருக்கிறது.

கூர்ந்து கேட்டுவிட்டு மீண்டும் உரக்கக் கத்துகிறாள்.

“தாத்தா? கதவைத் திறங்க, தாத்தா...”

வராந்தாவில் யாரோ விளக்கைப் போடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

அவள் நம்பிகைத் திரியைத் துண்டிக் கொண்டு கதவை இடிக்கிறாள்.

“யார் கதவைப் பூட்டினார்கள்? யார் உள்ளே? குரல் மெதுவாகத்தான் செவிகளில் விழுகிறது. கிழவன் இல்லை.

‘மர்மக் கதைகளில் வருவதுபோலிருக்கிறதே?’ “என்னைத் திறந்துவிடுங்கள்! யாராயிருந்தாலும் திறந்து விடுங்கள்!” கெஞ்சியவளுக்கு உடனே திகில் கவ்விக்கொள்கிறது. ராஜ பூஷணியின் ஆட்களே எவரேனும் வந்திருப்பார்களோ? கடகட வென்ற சிரிப்புச் சத்தத்துடன் மீசையை முறுக்கிக் கொண்டு ஒரு முரட்டு ஆள் அவளைத் தகாத பார்வையுடன் கொத்தி இழுப்பானோ என்ற கற்பனையில் அவள் இரத்தம் சுண்டிப் போகிறது. பூட்டுத் திறக்கும் ஒசை கேட்கையில் அவள் ஆவியாகிப் போனாற்போல் நிற்கிறாள். ஒளி உள்ளே பாய்கிறது.

“வாட் நான்சென்ஸ்? யார் நீங்க?”

தன்னைக் கூர்ந்து நோக்கும் இளைஞன் அறிவு மலர்ச்சி எய்தியவன் என்றறியும்போது, அவள் தான் ஆவியாகிப் போயிருக்கவில்லையே என்று குன்றிப் போகிறாள்.

“நீங்க யாரு? இங்கே யார் கூட்டிவந்தது?" “எக்ஸ்க்யூஸ்மி, நீங்க யார், இது யார் வீடு என்றெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. பொதுக்கூட்ட மைதானத்தி லிருந்து இங்கு கடத்தி வரப்பட்டு சிறை வைக்கப்பட்டேன். ஒரு கிழவன் என்னை வண்டியில் கூட்டிவந்தான்...”

அவனுக்குப் புரிந்துகொள்ள சில விநாடிகளாகின்றன.

“ஓ..நீங்க...”

“நான் மைத்ரேயி. சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் பேச இருந்தவள்.”

“நீங்கள்தான் அந்த மைத்ரேயியா?... அடாடா ? வாங்க, வாங்க, அட...பாவிப் பயல்களா? வேல்சாமிக் கிழவனா இத்தனைக்குத் துணிஞ்சான் ? எந்தக் காரில் கூட்டி வந்தாங்க?”

“பியட்போல இருந்தது. கருப்புக் கலர்.”

“அப்ப சரி. சர்வீசுக்குப் போயிருந்த வண்டியை எடுத் துட்டு வரேன்னு டிரைவர் போனான். இப்படிப் பண்ணிட்டாங்க. மை குட்னஸ். ரொம்ப மன்னிச்சுக்குங்க, உள்ளே வாங்க...”

அவன் வராந்தா வாயிற்படி ஏறி அவளை அழைக் கிறான். ஒளிவெள்ளத்தில், வைக்கோல் மாசும் கண்ணிர் கதையுமாக அவள் ஆண்டவனுக்கு நன்றி செலுத்துமுன் இந்த இளைஞனை நம்பலாமா என்ற ஐயம் தோன்ற அசையாமல் நிற்கிறாள்.

‘எக்ஸ்க்யூஸ்மி, நீங்க யாரோ என்னமோ எனக்குத் தெரியாது. எனக்கு இன்று நேர்ந்த அனுபவத்தை நினைச்சால் படி ஏறிவரும் துணிவு இல்லை. கதவைத் திறந்துவிட்டீர்கள், மிக்க நன்றி...” -

“அப்ப என்னை நம்பாமல் வெளியே நிற்கப் போகிறீர் களா? இல்லே இந்த நள்ளிரவில் வெளியே நடந்து போகப் போறீங்களா?” என்று அவன் நகைக்கிறான்.

பொறியில் சிக்கிய எலியாகத் தவிக்கிறாள். மறுமொழி வரவில்லை.

“உங்களுக்கு மேலும் ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காகவே நான் படி ஏறி வரச் சொல்கிறேன். சத்தியமாகச் சொல்கிறேன். உள்ளே வாங்க...”

“வீட்டில் உங்கள் தாயார், சகோதரி அல்லது மனைவி யாரேனும் இருந்தால் வரச் சொல்லுங்கள். நான் வருகிறேன்...”

“என்ன துரதிர்ஷ்டம்! தாயார் இறந்து இரண்டு மாச மாகிறது. சகோதரி, மனைவி யாரும் எனக்கு இல்லை. நான் இந்தக் கட்சி அரசியல் எதிலும் சம்பந்தப்படாதவன். சொல்லப்போனால் ஆறேழு வருஷங்களாக இந்நாட்டிலேயே நான் இல்லை. தாயாருக்கு உடல் நலம் இல்லை என்று வந்தேன். அவர்கள் இறந்து போனார்கள். மீண்டும் இம்மாசம் பதினெட்டாம் தேதி நான் சிகாகோ போக இருக்கிறேன். போதுமா? கம் இன் ப்ளீஸ்...”

தனக்குள் நாணியவளாக அவள் படியேறிகூடத்துள் நுழைந்து அங்குள்ள பெஞ்சில் உட்காருகிறாள்.

“நீங்கள் இன்னும் பயத்தை விடவில்லையா? அதோ குளியலறை இருக்கிறது. முகத்தைக் கழுவிக் கொள்ளுங்கள்” என்று காட்டுகிறான். பிறகு உள்ளே செல்கிறான்.

அவள் குளியலறை வாஷ்பேஸினைத் திறந்து முகத்தைக் கழுவி கொள்கிறாள். சில்லென்று குளிர்ந்த நீர் பட்டதும் இதமாக இருக்கிறது. நினைவுகள் குழம்பினாலும் மேலோட்டமாக அமைதியை வரவழைத்துக் கொள்கிறாள். அவன் ஒரு தட்டில் வெண்ணை தடவிய ரொட்டித் துண்டுகளும் ஒரு தம்ளரில் பாலும் கொண்டு வருகிறான். -

“ஐயோ, இதெல்லாம் எதற்கு...இப்போது..?” என்று கூசிக் குன்றுகிறாள்.

“வேறு சாப்பாடு ஒன்றுமில்லை. நீங்கள் பசியோடிருப்பீர்கள். பார்த்தாலே தெரிகிறது...” என்று தட்டை வைத்துவிட்டுப் போய் இரண்டு மலை வாழைப் பழங்களைக் கொண்டு வருகிறான்.

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று புரிய வில்லை. உங்களுடைய ஆட்கள் பத்திரமான இடம் என்று செய்ததை நீங்கள் முறியடித்துவிட்டு மனிதத் தன்மையைக் காட்டுகிறீர்கள். இந்தப் பெரிய வீட்டில் நீங்கள் மட்டுமே இருப்பதால்தான் அவர்கள் துணிவடைந்திருக்கின்றனர். இருந்தாலும் அந்தக் கிழவன் காங்கிரஸ் கட்சியில் இவ்வளவு விசுவாசம் வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்...’

“இந்த வீடு, ராஜா எம்.பி. தெரியுமா? அவருடையது. எனக்கு அவர் மாமா. கிழவன் வேல்சாமி இங்கேயே ரொம்ப நாளாக வீட்டையும் தோட்டத்தையும் பார்த்திட்டிருப்பவன், என் தகப்பனார் பாட்டனார் காலத்தவன். திருச்செங்கோட்டு ஆசிரமத்தோடு நெருங்கிய தொடர்புடைய பழைய காங்கிரஸ்காரர்கள் அவர்கள் எல்லாரும். என் தகப்பனார் நாற்பத்திரண்டு இயக்கத்தில் சிறைசென்று வெளி வந்தபின் நோய்கண்டு காலமானார். அந்தக் காலத்தில் எல்லாம் அவருடனே இருந்தவன் வேல்சாமி. அவனுக்கு இப்போது ஒரே ஆத்திரம். காங்கிரசை யாரேனும் மட்டமாகப் பேசினால் தாங்க மாட்டான். அவன் வேலைதான் இது... இந்திய கிராமவாசி. மிகவும் நல்லவன். படிப்பறிவில்லா விட்டாலும் பண்பு மிகுந்தவன். ஆனால் அவனுடைய நம்பிக்கைகளைத் திருப்புவது மிகக் கடினம். அவன் முரடனாகிவிடுவான். குருடனுக்குப் பாடம் சொல்லி வைப்பதுபோல் மிகவும் கவனமாக இவனிடம் இருக்க வேண்டும்...”

மைத்ரேயி கிழவனின் தன்மையை இப்போது புரிந்து கொள்ளுகிறாள். வேறு காலிகள் அவளைக் கடத்திச் செல்வதைத் தவிர்க்கவே அவன் இப்படிச் செய்ததாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஆண்டவனே தன்னை இவ்விதம் கிழவன் உருவில் வந்து காப்பாற்றியதாக நினைக்கையில் கண்கள் கசிகின்றன.

“நான் ஒன்று கேட்கட்டுமா? நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...”

“கேளுங்கள்...” “இளைஞர் கருத்துக்களெல்லாம் முற்போக்கு அரசியல் கட்சிகளில் ஈடுபாடு கொள்வதுதான் இயல்பு. நீங்கள் எப்படி ராஜா, ராணி என்று பழைய பத்தாம் பசலிக் கொள்கைக் கட்சியில் சேர்ந்தீர்கள்? நீங்கள் இங்கே பக்கத்துப் பள்ளிக் கூடத்துக்குமுன் உள்ள மைதானத்தில் பேசினீர்கள். இங்கே தலைமேல் அடித்தாற்போல் ஒலிபெருக்கியைத் திருப்பி வைத்துவிட்டார்கள். நான் கேட்டேன். அப்போது உங்களைக் கூட்டத்தில் நின்றே பார்த்தேன். என்னால் ஒப்ப முடிய வில்லை.”

மைத்ரேயி புன்னகை செய்கிறாள்.

“நான் இந்தக் கட்சியில் சேர்ந்துவிட்டேன் என்று யார் சொன்னார்கள் !”

“இதுவும் ஒரு அரசியல் விநோதமா? பின் மேடையேறி அந்தக் கட்சிக்காக வாக்காளரை இழுக்கிறீர்களே?”

“உண்மைதான். ஆனால், ராஜமானியம் போன்ற விஷயங்களை நான் மறந்தும்கூடப் பேசமாட்டேனே ? நான் இப்போது முற்றிலும் கூலிப் பேச்சாளிதான். முதலில் ஏதோ உற்சாகத்துடன் இறங்கினேன். ஆனால் இதில் பணமும் சம்பாதிக்கலாம் என்று போகத் போகத் தெரிந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் வசதியான பங்களாவில் நல்ல செல்வாக்குக் குடும்பத்தில் செல்வாக்கான சாதியிலும் இருப்பதால் பணத்துக்காகப் பேசலாமா என்று கேட்கக் கூடும். இங்கு பெரும்பான்மை மக்கள் போராட்டத்துக்கும் கோஷங் களுக்கும் ஏன் வருகிறார்கள்? அது சில நாட்களுக்குச் சோறு போடுகிறது; காபி வாங்கிக் கொடுக்கிறது. நானும் ஒன்றும் இரண்டாயிரம் வயிரமும் பட்டும் வாங்கிக் கொள்வதற்காக சேர்க்கவில்லை. என்னுடைய எத்தனையோ சோதரர் பிழைக்க வழியின்றி சமுதாயத்தின் கண்களில் கேலிப் பொருள்களாய் உலவுவதைத் தடுக்க நான் பொருள் சேர்க்கிறேன். மேற்குலத்தில் பிறந்தாயா? உனக்குக் கல்வித்துறையின் வாயிலை அடைத்துவிடுவோம். உனக்குத் தொழில் துறையில் சலுகை கிடையாது. உனக்கு ஒன்றுமேயில்லை என்று சொல்லாமல் சொல்லும் அரசை நாங்கள் நம்பிட் பயனில்லை. நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள். எங்கள் நிலையை உங்களால் புரிந்துகொள்ள முடியாது!”

“நீங்கள் பேசுவது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. உங்களை வெளிப்படையாக வெறுத்த கட்சியுடன் இன்று குலாவுவது எவ்வளவு கேலிக்கிடமாக இருக்கிறது என்பதை அறிவீர்களா?”

“அறிவேன். ஆனாலும் அவர்கள் வெறுத்ததை ஒப்புக் கொண்டு இப்போது பிளவைச் சரிசெய்து கொள்ள வருகிறார்கள். ஆனால் ஆளும் கட்சியினர் வெறுப்பில்லை என்று கொள்கையளவில் சொல்கிறார்களே ஒழிய, திறமைக்கு மதிப்பில்லை என்று நாங்கள் ஒதுக்கப்பட்டுப் பசுமை இழந்து சமுதாயத்தின் வண்மையான கிளைகளிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை...”

“எனக்கென்னமோ இந்த ஓட்டு எந்த அளவுக்கு இணைந்து உங்களுக்குப் பயன் தரும் என்பது புரியவில்லை.” “நான் ஒன்று உங்களைக் கேட்கட்டுமா? வழிவழியாக அரசியலில் ஈடுபாடு கொண்ட குடும்பத்தில் வந்த நீங்கள் ஏன் அரசியல் கட்சிகளைவிட்டு ஒதுங்கி இருப்பதாகச் சொல் கிறீர்கள்? உங்களைப் போன்ற இளைஞர்கள் ஏன் சொந்த நாட்டில் வெறுப்புக் கொண்டு மேல்நாட்டுப் பித்துபிடித்துப் போக வேண்டும்? அது இந்நாட்டுக்குப் பெரிய இழப் பல்லவா ?”

“அரசியலா? இந்நாட்டு அரசியல் கட்சிகளைப் பற்றி எனக்கு ஒரு தீவிரமான கருத்துத் தோன்றுகிறது. இந் நாட்டுக்கு ஒரு சரியான சர்வாதிகாரி வரவேண்டும். அவன் அத்தனை அரசியல் கட்சிகளையும் ஒழித்துவிட்டுக் கையில் சவுக்கெடுத்துக்கொண்டு அவனவன் வேலையைச் செய்ய வைக்கவேண்டும். மீறி அரசியல் என்று பேச வருபவர்களை வரிசையாக நிற்க வைத்துச் சுட்டு விடலாம்...”

கடைசியாக அவன் கூறிய சொற்கள் அவளுக்குச் சிரிப்பை வரவழைக்கின்றன.

“பின்னே பாருங்களேன்? வானொலின்னு சொல்ல ஒரு போராட்டமாம். கல்லூரிக்குப் பேர் வைக்க ஒருபோராட் மாம். கத்திரிக்காயைக் கத்திரிக்காய் என்று சொல்ல ஒரு போராட்டமாம். ஸில்லியா இல்லை? இளைஞர்களெல்லாம் இப்படியா அரசியல் வாதிகளின் வலையில் வீழ்வார்கள்? அரசியல்வாதிகள் தங்கள் சுய நலன்களுக்கு இளைஞரின் சக்தியை விரயமாக்குகிறார்கள். இந்நாடு என்று உலக நாடு களுக்குச்சமமாகத் தொழிலிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணப்போகிறது, எல்லாத் துறைகளிலும் அரசியல்வாதிகள் புகுந்து குட்டிச்சுவராக்குகிறார்கள். இந்தி வேண்டாம்; இங்கிலீஷ் வேண்டாம். ஒருதலைமுறையையே குட்டிச்சுவராக்க ஒழிகக் கோஷங்கள். ஏன் உங்களைப் போன்ற படித்தவர்கள் சுயமாகச் சிந்திக்கும் தன்மையை இழக்கிறீர்கள் என்பது எனக்கு விந்தையாக இருக்கிறது. வரவர உலகம் குறுகி வருகிறது. அதிவிரைவுப் போக்குவரத்துச் சாதனங்களால் எத்தனைக்கெத்தனை மொழிகள் தெரிகின்றனவோ அத்தனைக்கு அறிவு விசாலமாகிறது; வேலை வாய்ப்புக்கள் பெருகுகின்றன. இப்படி முட்டுக்கட்டை போட்டுக்கொண்டு கிணற்றுத் தவளைகளாக இருப் பதற்காகவா சுயராஜ்யம்? இரண்டாம் மகாயுத்தத்தில் தரை மட்டமாகிப் போன ருஷியாவும் ஜப்பானும் ஜர்மனியும் இன்று எப்படி மகோன்னத நிலைக்கு வந்திருக்கின்றன: நிச்சயமாக ஒழிக. அழிகக் கோஷம் போட்டு வரவில்லை.”

அவனுடைய தாக்குதல்கள், அவள் பேசும்சார்புக் கட்சியை நோக்கியே பாய்கின்றன என்பதை அவள் தெரிந்து கொள்ளாமல் இல்லை.

“இளைஞர் சமுதாயத்தை அதற்காக நீங்கள் குற்றம் சாட்டுவது சரியில்லை. அப்படிப் பார்த்தால் சுதந்திரப் போராட்டத்தில் கூடத் தான் இளைஞரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடாது. மாணவருக்கு அமைதியும் ஆழ்ந்த சிந்தனையும் பெரும்பாலும் கஷ்டப் பட்டாலே வரமுடியும். கிளர்ச்சி எளிதாக இருக்கிறது. அரசியல் தலைவர்கள் அவர்களைத் தூண்டுவது தவறு. குற்றம் அங்கேதான்.”

“அது சரி, உங்களுடன் நான் இப்போது விவாதம் நடத்த விரும்பவில்லை. நீங்கள் சாப்பிடுங்கள். நான் டிரைவரைத் தேடிப் பிடிக்கிறேன்...” மறுபடியும் கார், டிரைவர் என்றாலே அச்சமாக இருக்கிறது. அவளுக்கு.

“வேண்டாம். நான் காலையிலே பஸ்ஸில் போய் விடுகிறேன்...”

அவன் புன்னகை செய்கிறான். “இரவு நீங்கள் தங்குவது யாருக்கேனும் தெரிந்தால் வீணான அவதூறு கிளம்பும். நீங்கள் டிரைவருக்கு அஞ்சுவதாகத் தெரிகிறது. நானே கொண்டுவிட்டு விடுகிறேன்.”

பொறிக்குள் அகப்பட்டுக்கொண்டபின் மென்மையான உணர்வுகளுக்கு இடம் ஏது?

அவதூறு எப்படி வேண்டுமானாலும் கிளம்பட்டும் என்று அவளால் இருக்க முடியவில்லை. குளிரும் வெப்பமும் பழகாமல் அவள் பொது மேடைக்கு வந்திருக்கலாகாது.

“உங்களுக்கு அநாவசியத் தொந்தரவு...”

“பொருளில்லாத பேச்சுக்கள் எதற்கு இப்போது? தொந்தரவுதான். காலையிலோ சற்றுப் பொறுத்தோ வேல் சாமி கதவைத் திறந்து பார்ப்பான். இப்போதே அவனை எழுப்பிச் சொல்லி விட்டுத்தான் வரவேணும்..” என்று சொல்கிறான்.

சற்றைக்கெல்லாம் அவள் வண்டியில் ஏறிக் கொள்கையில் வேல்சாமிக் கிழவன் கதவடியில் நின்று பார்ப்பது தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_21&oldid=1115410" இலிருந்து மீள்விக்கப்பட்டது