ரோஜா இதழ்கள்/பகுதி 20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

20

தெருவில் போகும் மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு, கால்வாய் பாலத்தின் மீது உட்காரும் சமாசாரம் வேல்சாமி நாய்க்கருக்குப் பிடிக்காததொன்று. என்றாலும் அன்று மனமில்லாமல், வயிற்றெரிச்சலுடன் உட்கார்ந்து எதிரே மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். எங்கு பார்த்தாலும் கறுப்பு சிவப்புத் தோரணங்கள்; ஆங்காங்கு நட்சத்திர இணைப்புக் கள். ஒலி பெருக்கி மைத்ரேயியின் குரலை நாலாபுறங்களிலும் பரப்பிக் கொண்டிருக்கிறது.

“நீங்கள் யோசனை செய்து பாருங்கள்! பதினேழு ஆண்டு ஆட்சியில் சுய தேவைத் திட்டம், நிறைவேறியதா? இல்லை. கோடி கோடியாகச் செலவு செய்து திட்டங்கள் தீட்டிச் செயலாற்றினார்கள். முக்கியமாக அடிப்படைத் தேவை உணவு. அது கிடைத்திருக்கிறதா இன்று, இல்லை.”

அந்தக் குரல் ஒவ்வொன்றாய் அடுக்கும்போது வேல்சாமியின் அடி நெஞ்சிலிருந்து கிளர்ந்து வரும் ஆத்திரம் விருவிரென்று நடந்து சென்று அந்த ஒலிபெருக்கியைப் பிடுங்கி எறிந்துவிடத் துண்டுகிறது. மேல்துண்டை உதறிப் போட்டுக்கொண்டு விடுவிடென்று, சாலையில் நடக்கிறார். பெரிய பெரிய சுவரொட்டிகளில் ‘செல்வி மைத்ரேயி பேசுவார்’ என்று பெயர் விளங்குகிறது. பார்த்தாலும், கேட்டாலும் ஐயமார் குலப்பெண்ணாகத் தோன்றுகிறது. சின்னஞ் சிறிசு.

அதன் முகத்தைப் பார்த்துக்கொண்டு, கேட்டுக் கொண்டு... சை...!

ஏணிப்படி எல்லாரும் புத்திக்கெட்டுப் போனார்கள்?

சாலை கிழக்கும் மேற்குமாக நெடுஞ்சாலையாக விரித்து விரித்து ஊர்ப் புடவைகளை எல்லாம் போட்டாலும் கண்ணுக் கெட்டிய தொலைவுக்குக் கால்வாசி தீராத சாலையாக, ராஜபாட்டையாக ஓடுகிறது.

“இந்தக் கூத்துப்பயலுக,தெக்கு தேயுது, தேயுதுன்னு கத்துறானுகளே, தேஞ்சா கிடக்குது? இம்மாம் பெரிய ரோடில கம்பத்துக்குக் கம்பம் வாழைத்தண்டு விளக்குப் போட்டு வச்சது யாரு? இந்த ரோட்டழகு பதினைஞ்சு வருசம் முன்னே இருந்ததா? இங்கிலீசுகாரனா இதெல்லாம் போட்டுவச்சான்... ?”

சாலை ஊரோரத்தைத் தாண்டி இருபுறமும் திறந்த வெளிகளைக் காட்டிக் கொண்டு செல்கிறது. கீற்றுக் கொட்டகை, சினிமாவுக்கு வண்ண வண்ணங்களாய்த் திரண்டு வருகிறது கும்பல், கொட்டகை முன் ஒலிபெருக்கி, கரகர ஒலிக்கட்டியத்துடன் பயத்துடன் சினிமாப் பாட்டொன்றை முழக்குகிறது. “லே லங்கடி, லே லேங்கடி லேலோ... வாங்க மச்சான் வாங்க...”

சாலையிலே, மச்சான்களும் மாமன்மாரும் மாமியரும் தம்பி தங்கச்சியரும் சாரிசாரியாக வந்து கொண்டிருக்கின்றனர் கொட்டகைக்குப் பின்னே ஏரிக்கரை மேட்டுக்கு அப்பால் முட்டு முட்டான குடிசைகளிலிருந்தும் குடிசைகளுக்கப்பால் விரிந்து கிடக்கும் வயல் வரப்புகளிலிருந்தும் சாலையின் கிழக்கே குவிந்து நெருங்கும் குடியிருப்புகளிலிருந்தும் அந்தக் கீற்றுக் கொட்டகை முகப்புக்கு வந்து காத்திருக்கின்றனர். வரிவரியாய்க் கறுப்புச் சிவப்பு பனியன்கள், பளபளப்புச் சட்டைகள், தேங்காய்ப்பூத் துவாலைகள், போலிப்பட்டுச் சேலைகள், கனகாம்பரக் கொண்டைகள், அழும் குழந்தைகளுக்குப் பால் புட்டிப் பைகள் என்றெல்லாம் திருநாள் பவனியல்லவா போகிறது.

“நேரமாயிடுச்சி, ஓடு ஓடு, பத்து டிக்கெட்வாங்கி வையி!” என்று ஒரு கட்டை வண்டிக்கூட்டம் ஒரு தேங்காய்ப் பூத்துவாலை இளைஞனை விரட்டுகிறது. கொட்டகையின் முன் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கொளியைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு கும்பல். அங்கே என்ன, சுண்டல் வடை வியாபாரமா? அரும்பு மீசைப் பருவங்கள் அப்படிக் குழுமியிருக்க இளவெட்டுப் பெண் பாயசம் விற்கிறாளா? இல்லை...

‘மேகநாட்டு இளவரசி’ பாட்டுப் புத்தக வியாபாரம்தான்.

குடிசைக்குள் எங்கேனும் திருட்டுக்கள் இருக்கலாம். கூடைக்குள் வைத்து எந்தப் பெண்ணேனும் திருட்டு வியாபாரம் செய்பவளாக இருக்கலாம்.

ஆனால் இத்தனை திருநாள் கொள்ளை, கள்ளை எடுக்குமுன் இருந்ததா? அப்போது பூவேது, பொட்டேது, உல்லாச ஓட்ட மேது? கையிலே காசு இருந்ததா? பையிலே அழும் குழந்தைக்குச் சீனி மிட்டாயும் பால் புட்டியும் வைத்துக் கொண்டு சினிமாவுக்கா வந்தார்கள்? அடித்துப் பிடித்துக் கொண்டு கூட்டம் உள்ளே அடைபடுகிறது. ஆனால் இன்னும் மக்கள் சாரி சாரியாக வருவது குறையவில்லை.

அடுத்த ஆட்டத்துக்குக் காத்து நிற்கின்றனர். தேநீர்க் கடை நாயருக்கு வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிறது.

அப்போது டிக்கெட் கொடுக்கும் குடிசையிலிருந்து தங்கவேலு வருகிறான். சில்க் சட்டை என்ன, கைக்கடியாரமென்ன, டால் வீசும் மோதிரமென்ன, கருவேப்பிலைக்குச்சி போலிருந்த பயல் எப்படியாகிவிட்டான்!

“அட, வேல்சாமி மாமாவா? ஏன் இங்கே நிக்கறீங்க, எப்ப வந்தாப்பலே மாமா ?”

“முந்தாநாதான், நாயகியப் பார்த்திட்டுப் போகலான்னு வந்தேன். டேயப்பாடி, இந்த ஊரு எப்படீயாயிட்டது! சினிமாக்கொட்டாய்ல்ல துட்டுச் சேருதுபோலிருக்குது...?”

“பரவாயில்ல, படம் பாக்கிறீங்களா, மாமா ?”

“நெல்லாருக்குமா ?”

“கூட்டம் பாத்தீங்கல்ல? மொத்த ஜனமும்அவன் படம், பேச்சு, பாட்டுன்னா மயங்கிப் போகுது, போயிப்பாருங்க...”

தங்கவேலு அவரை உள்ளே அழைத்துச் செல்கிறான். ஒரு பையன், டிக்கெட் அறையிலிருந்து மடக்கு நாற்காலியைக் கொண்டு வந்து உள்ளே போடுகிறான். வேல்சாமிக்குப் பெருமையாக இருக்கிறது. மரியாதை தெரிந்த பையன் என்று நினைத்துக் கொள்கிறார்.

திரையிலே மிகப்பழைய செய்திப்படத்தைக் காட்டுகிறார்கள். நேருவும் அவர் மகளும் இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்த படம்.

அந்த வடிவைப் பார்க்கும்போது, அந்த எளிய கிராமத்து மனிதர் மெய்மறந்து போகிறார். என்ன கம்பீரம் ! என்ன கனிவு! பால் வடியும் எளிமை. சிரிப்புக்கு உலகையே கொள்ளை கொள்ளும் கவர்ச்சி. செல்லுமிடங்களிலெல்லாம் மக்கள் ரோஜாச் செண்டுகளை வீசுகிறார்கள். மலர்மாரி பொழிகிறார்கள். லட்சோப லட்சமாய் மக்கள்... எங்கோ வடநாட்டுப் பிராமண குலத்தில் பிறந்தவர் என்றா தோன்று கிறது? ஆதிக்கம் செய்ய வந்த ஆரியர் என்றா தோன்றுகிறது? நேரு என்றால் இந்தியா. இந்தியா அவர் பிறந்தமண். கொடானு கோடி மக்களின் வெவ்வேறு தன்மைகளை ஒன்று சொ்க்கும் ஒரு சக்தி; ஒரு அழகு வடிவம்; ஒரு வசீகரப் புன்னகை, ஒரு மந்திரக் குரல்.

அவர் கங்கைக் கரையைப் பார்த்ததில்லை. ஆனால் இருகரைபெருக வரும் காவிரியே சோறூட்டி வளர்த்த அன்னை கங்கையம்மன் பூசை என்று அவளைத்தான் கும்பிடுவார்கள். அவள் ஊழித்தாயாகத் தாண்டவம் ஆடினாலும் எல்லையற்ற கருணை அவளுடைய வடிவம் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவர் பிறந்த பொம்ம சமுத்திரம் கிராமரம் இன்று இல்லை. மேட்டூர் அணை கட்டியபோது, காவிரி அந்தக் கிராமத்தை நிரந்தரமாகத் தனதாக்கிக் கொண்டாள். ஆனால் என்ன? மக்களுக்கு அவள் பெரு நிதியங்களை வாரி வழங்குகிறாளே? ஒளி வெள்ளங்களாய் விளக்குகள்; பக்கத்துக்குப் பக்கம் தொழிற்சாலைகள். நாளெல்லாம் மாக்கல்லைக் குடைந்து இரண்டு கற்சட்டிகளைச் செய்து கொண்டுபோய் ஐயமார் வீடுகளில் கொடுத்தால் நாலணா கிடைக்கும். இரண்டு மரக்கால் கொராளி கிடைக்கும். அதை ஏழு தடவை குற்றிப் புடைத்துச் சோறாக்கிய பெண்களுக்கு என்ன சுகம் இருந்தது? அவர் பிறந்த கிராமம் அழிந்து விடவில்லை. அது கொழிக்கிறது. அதன் உயிர்த் தன்மை , நாடு முழுவதும் பூந்துளிகளாய் பரவி அதன் புகழ் பரப்புகிறது. அதன் ஒளி இங்கும் வருகிறது. இந்தக் கொட்ட கையில் நேருவின் பால் வடியும் முகத்தைப் பார்க்கிறார்.

பெரிய பூச்செண்டைக் காட்டி, நேருவின் இந்தோனிசிய விஜயத்தைத் திரையில் நிறைவு செய்கின்றனர்.

வேல்சாமி பெருமூச்சு விடுகையில் பாட்டுடன் இசைக் கருவிகளும் செவிகளைத் துளைக்க, மேகநாட்டு இளவரசி படம் தொடங்குகிறது.

இளம்பரிதி பிக்சர்ஸாரின் மேகநாட்டு இளவரசி!

அரைக்கச்சும் முகமூடியும் கையில் வாளுமாக ஒரு கொள்ளைக்காரன் குதிரையில் பாய்ந்து பறக்கிறான்.

கொட்டகை அதிரக் கைகொட்டல்.

பருத்த தனங்கள் எடுப்பாகத் தெரிய, கச்சணிந்த இடை தெரிய அரைக்கட்டு உடையுடன், மேகக் கூந்தல் சிங்காரி ஒருத்தி, பருத்த தோள்களைக் குலுக்கி, கண்களைச் சுழற்றி நெளிந்து கொண்டு பணிப் பெண்கள் பலர் சூழக்கோயிலுக்கு வருகிறாள். கோயிலில் ஒரு அர்ச்சகர், தொந்தி தெரியப் பஞ்சகச்சம் உடுத்தி, நெற்றியிலும் கைகளிலும் மார்பிலும் பட்டை பட்டையாகத் திருநீறு அணிந்திருக்கிறார். அவர் கோயிலுக்கு வந்த பெண்ணைத்தகாத நோக்குடன் பார்க்க அவள் மருண்ட மான்போல் கண்களைக் காட்டி, உடலை நெளித்து, ஓட முடியாமல் சிக்கிக் கொண்டாற்போல் அபயக் குரல் கொடுக்கையில் அந்தக் கொள்ளைக்காரக் குதிரை வீரன் தொம்மென்று அங்கே குதிக்கையில் கொட்டகையில் ஒரே ஆரவாரம்; சீழ்க்கை ஒலி. உடனே அந்த வீரன் கல்லுச் சாமியின் காவலனாக நடித்துக் கன்னியரை வலைவீசக் காத்திருக்கும் கயவர்களைப்பற்றி ஒரு காரசாரமான சொற் பொழிவை அடுக்கு மொழியில் பொழிகிறான். மக்கள் அந்தச் சொற்பொழிவைக் கைதட்டி ஆரவாரம் செய்து ரசிக்கின்றனர். பிறகு அந்தப் பெண்ணும் கள்ளனும் தோட்டத்தில் காதல் புரிகின்றனர். தனித்தனியாக முகத்தோடு முகம், உடலோடு உடல், பல கோணங்களில் இணைந்த குளோஸ் அப் காட்சிகளுடன் இரு குரலிசை வழங்குகின்றன.

“வசந்தம் வந்தது ஏனோ இங்கே கன்னித்தேனே”

“வண்டார் வந்து மலரை முகர்ந்ததால் சின்னராஜா.”

உய் உய் என்ற சீழ்க்கையொலிகள், கைத்தாளங்கள்; கால் தாளங்கள்...

வேல்சாமி ஏதேனும் சாமி படமென்றால் தவறாமல் செல்வார் அந்தக் காலத்தில். பக்தகுசேலர், கந்தலீலா, பட்டினத்தார், சக்ரதாரி போன்ற படங்களை அவர் ரசித்துப் பார்த்திருக்கிறார். வேமன படம் பார்த்துவிட்டு வந்து அழுதிருக்கிறார்.

இதெல்லாம் சினிமாவா? சை!... வேல்சாமி வெளியே எழுந்து வருகிறார்.

“என்ன மாமா ? படம்புடிக்கலியா...?”

தங்கவேலு பணத்தை எண்ணித் தோற்பைக்குள் வைத்துக் கொண்டு இருக்கிறான்.

“நான் வாரேன் தம்பி...”

“...செய்யுங்க மாமா...”

தேநீர்க் கடையில் ஒரு தேநீரருந்தலாம் என்று நடக்கிறார் இரண்டாவது ஆட்டத்துக்கு மூலைமுடுக்குகளிலிருந்து மக்களைக் கொண்டு வந்து கொட்டிவிட்டுப் பஸ் ஒன்று நிற்கிறது. பொதுக் கூட்டம் இன்னமும் முடியவில்லை போலும்! பேச்சொலி தெளிவில்லாமல் விழுகிறது.

தேநீர்க்கடை என்று வெளிக்குத் தெரிந்தாலும், அது தேநீர்க்கடை மட்டுந்தானா என்று வேல்சாமிக்கு ஐயம் தோன்றுகிறது.

தெருவில் ஒளி பொழியும் விளக்குக்கு எட்டாத ஓரமாய், இருபதோ, பதினைந்தோ, மஞ்சளாய் அழுது வடியும் விளக்கொளியில் கம்பி நாற்காலியில் ஒருவன் கலங்கிய விழிகளும் பெரிய மீசையுமாக வீற்றிருக்கிறான். அவன் கையில் ஒரு காலிக்கிளாசு இருக்கிறது. இன்னொருவன் தேநீருக்காகக் காத்திருக்கிறான் போலிருக்கிறது. கறுப்புப் பனியன் போட்ட பையன் பீஸ் கிழிப்பதுபோல் அரை தம்ளர் தேநீரை ஆற்றுகிறான். முடியில் பூரான் புகுந்தால் தெரியாத அடர்த்தி, அப்போது கட்டம் போட்ட கைலி யுடன் கட்டைத் தொண்டையில் ஒரு சாயாவுக்கு ஆர்டர் கொடுத்துக்கொண்டு ஒருவன் வந்து நிற்கிறான்.

“பொதுக்கூட்டத்துக்குப் போகலியா அண்ணாச்சி” என்று அவன் கட்டைக் குரலில் கேட்கையில் மீசைக்காரன் அடித்தொண்டையிலிருந்து கனைக்கிறான். அது உறுமலைப் போலிருக்கிறது.

“பொண்ணு யாரு தெரியிதாரா?...”

“நீங்க சொன்ன அதே வகைதான் அண்ணாச்சி.”

அண்ணாச்சி மீசையை முறுக்கிக் கொள்கிறான்.

“சிங்கம் உக்காந்த எடத்தில இந்த நரிப்பசங்க உக்காருவாங்களா ?”

“தள்ளாடிய காளைமாடுன்னு அந்த நேத்துப் பொண்ணு கிண்டல் பண்ணுது அண்ணாச்சி!”

“அந்தப் பொட்டைக் குட்டியை அலாக்கத் தூக்கியாந்துடனும். அந்தையனை எந்திரிக்கவொட்டாம. அடிக்கணும்...”

வேல்சாமிக்கு நெஞ்சில் முள் குத்துவதுபோலிருக்கிறது. இது எதிர்க்கட்சி வினையா, அல்லது, கொழுத்துப்போன குண்டர்களின் தனிச் செயலா?

“யோவ், யாரையா அங்கே நிக்கிறது?” என்று நிழலோடு நிற்கும் வேல்சாமியை நோக்கிப் பையன் கூவுகிறான்.

“ஒரு சிங்கில் கேட்டேன்...”

“ஏன் அங்கிட்டு இருட்டில போயி நிக்கிறே?...” என்று அதட்டிவிட்டு அவன் தலையை உள்ளே இழுத்துக் கொள்கிறான்.

வேல்சாமி கடையின் முன் வந்து நிற்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ரோஜா_இதழ்கள்/பகுதி_20&oldid=1115406" இருந்து மீள்விக்கப்பட்டது