உள்ளடக்கத்துக்குச் செல்

உலகம் பிறந்த கதை/அணுவின் அட்டகாசம்

விக்கிமூலம் இலிருந்து

3. அணுவின் அட்டகாசம்

அணுவின் தன்மை என்ன? சும்மா இருப்பதா? அன்று. எப்பொழுதும் குதித்துக் கொண்டு இருப்பதுதான் அணுவின் தன்மை. குளிர்ச்சியான பொருளாக இருந்தால் அந்த அணு மெதுவாகக் குதிக்கும். சூடானால் வேகமாகக் குதிக்கும்.

தண்ணீரில் சூடு ஏற்றினால் கொதிக்கிறது. ஏன்? தண்ணீரில் உள்ள அணுக்கள் துள்ளிக் குதிக்கின்றன. ஓடப்பார்க்கின்றன.. புதிதாகப் பிடிப்பட்ட மீன்கள், கூடையிலிருந்து எப்படித் துள்ளுமோ, அந்த மாதிரி.

வான வீதியிலே உள்ள அணுக்கள் எப்படிக் குதிக்கின்றன தெரியுமா? ஜல வாயு அணுக்கள் விநாடிக்கு ஒரு மைல் வேகத்தில் துள்ளிப் பறக்கின்றன; திரிகின்றன.

இந்த அணுவைப் பிடித்து ஆராய்ச்சி செய்தால் என்ன காணலாம். ஒவ்வோர் அணுவிலும் பல பரமாணுக்கள் இருக்கக் காணலாம். அந்தப் பரமாணு ஒவ்வொன்றையும் ஆராய்ந்தால் இன்னும் பல இரகசிகளை அறியலாம்.

பரமாணு ஒவ்வொன்றும் மகத்தான சக்திக் கருவாகக் காணப்படும். பரம அணுக்குள்ளே மின்சக்தி இருக்கிறது. அது எப்படி இருக்கிறது?

அதனாலே என்ன நிகழ்கிறது?

இம்மாதிரி விஷயங்களைத் தெரிந்து கொண்டால்தான், பரமாணுவின் மகத்தான சக்தியை நாம் அறிதல் கூடும்.

மின் சக்தி என்கிற மின்சாரத்தைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.

மின்சாரத்துக்கு ஆங்கில மொழியில் 'எலக்ட்ரிசிடி' என்று பெயர். 'எலக்ட்ரான்' என்ற கிரீக் சொல்லினின்றும் பிறந்தது ‘எலெக்ட்ரிசிடி' எனும் சொல்.

நமது வீடுகளிலே மின்சார விளக்குகள் எரியக் காண்கிறோம். அவை எரிவதற்குக் காரணமா யிருப்பது எது? 'எலக்ட்ரிக் கரண்ட் '.

எலக்ட்ரிக் கரண்ட் என்றால் என்ன பொருள்? மின்சாரத்தின் ஓட்டம் என்று பொருள். மின்சாரம் ஓடுவானேன்?

மின்சக்தியிலே இரண்டு விதம். ஒன்று எலக்ட்ரான். இன்னொன்று புரொதான். மின் சக்தி அதிகமாக உள்ளது எலக்ட்ரான். குறைவாக உள்ளது புரொதான்.

இந்த எலக்ட்ரானும் புரொதானும் காதலர் மாதிரி. எலக்ட்ரான் காதலி. புரொதான் காதலன்.

இன்றைய சினிமாவிலே காதல் காட்சி வந்தால் என்ன காண்கிறோம்? காதலனும் காதலியும் ஒருவரை மற்றொருவர் துரத்திக் கொண்டு ஓடக் காண்கிறோம் அல்லவா? அந்த மாதிரி எலக்ட்ரான் என்கிற காதலி, புரொதான் என்கிற காதலன் பின்னே ஓடிக் கொண்டே இருப்பாள்.

மின் சக்தி அதிகம் உள்ள ஒரு பொருளையும், குறைவாக உள்ள வேறு ஒரு பொருளையும் இணைத்தால் என்ன ஆகும்? அதிகமாக இருக்கும் இடத்திலிருந்து குறைவாக உள்ள இடத்துக்கு மின்சக்தி ஓடும். இந்த ஓட்டத்துக்குத் தான் கரண்ட்' என்று பெயர்.

மின்சக்தியிலே பாசிடிவ் என்றும், நெகடிவ் என்றும் இரண்டு உண்டு. பாசிடிவ் என்றால் மின்சக்தி குறைவாக உள்ளது என்று பொருள்.

பாசிடிவ் என்றால் பெற்றுக் கொள்ளக் கூடியது. ஏற்கத் தக்கது; வாங்கிக் கொள்ளக் கூடியது.

நெகடிவ் என்றால், 'வேண்டாம்' என்று தள்ளுவது; புறக்கணிப்பது; விரட்டுவது; ஒதுக்குவது.

நெகடிவ் மின்சக்தி ஒரு புறமும், பாசிடிவ் மின்சக்தி மறுபுறமும் இருந்தால்--அதாவது எலக்ட்ரானும், புரொதானும் சேர்ந்தால்--என் ஆகும்?

காதலன் காதலி போல் ஒன்றை மற்றொன்று இழுத்துக் கட்டி அணைத்துக் கொள்ளும்.

நெகடிவ் மின் சக்தியும், நெகடிவ் மின் சக்தியும் சேருமானால்-அதாவது, எலக்ட்ரானும், எலக்ட்ரானும் சேருமானால் என் ஆகும்? அவை ஒன்றை மற்றொன்று அணைத்துக் கொள்ளுமா? கொள்ளாது. குஸ்தி போடும். உதைக்கும். விரட்டும். இதுவே, மின்சாரத்தின் தன்மை.

எலக்ட்ரான் என்று கூறப்படுகிற இந்த மகாசக்தி செய்கிற அற்புதங்களை என்ன என்று சொல்வது! பார்க்கப் போனால் இது ஒரு சிறு பொறி. ஆனால் இதன் சக்தியே மகத்தானது.

இந்த மகாசக்தி எப்படிப்பட்டவள் தெரியுமா?

இவள் ஏதாவது ஒரு பொருள் மீது தாக்கினால் அப்பொருள் சூடாகி விடும். தணல் போல் பழுத்து விடும். சூழ்நிலைகளை எல்லாம் தன் மயமாக்கும் தன்மை கொண்டவள் இவள்.

வான வீதியிலே பறந்து திரிகிற காலத்திலே இவள் செல்லுமிடம் எங்கும் மின் சக்தி மயமாகிறது.

எத்தகைய கடினப் பொருளாயினும் ஊடுருவிச் செல்லும் சக்தி இவள்; அசையாத பொருள்களை எல்லாம் அசைக்கக்கூடியவள்.

வான வீதியிலே பறந்து திரிகிறாள் இவள். வாயு வேகம் மனோவேகம் என்று சொல்வார்களே, அந்த மாதிரி பறக்கிறாள்.

விநாடிக்குப் பத்தொன்பதாயிரம் மைல் வேகத்திலே பறக்கிறாள்.