உலகம் பிறந்த கதை/சிவசக்தி தாண்டவம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

4. சிவசக்தி தாண்டவம்


எலக்ட்ரானைக் காதலி என்றேன். புரொதானைக் காதலன் என்றேன். இந்தக் காதலன் காதலி திருவிளையாடல் எங்கே நடைபெறுகிறது தெரியுமா? பரமாணுவிலே.

பரமாணுவின் நுண் கரு இருக்கிறதே, அங்கேதான் இருக்கிறான் காதலனாகிய புரொதான். அவனைச் சுற்றி வந்து நடனம் ஆடுகிறாள் காதலியாகிய எலக்ட்ரான்.

சிவசக்தி தாண்டவம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கலாம். அது, பரமாணுவிலே நடைபெறுகிறது.

அண்ணன், தம்பி ஆகிய இருவரும் சிறுவர்; சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அண்ணன் தம்பியை அடிக்கிறான். உடனே தம்பி கூச்சல் போடுகிறான்.

‘அப்பா, பாரப்பா! அண்ணன் அடிக்கிறான்.'

‘நீ என்ன செய்தாய்?'

‘நான் ஒன்றும் செய்யலே. சிவனே என்றிருந்தேன்.'

சிவனே என்று இருத்தலாவது என்ன? சும்மா இருப்பது. ஒன்றும் செய்யாமல் இருப்பது.

புரொதான் சிவனே என்று இருக்கிறான். எலக்ட்ரான் நடம் புரிகிறாள்.

பரமாணுவிலே ஒரே ஒரு காதலன் காதலிதான் இருப்பதாக நினைக்க வேண்டாம். காதலர் பலர் உள்ளனர். காதலிமாரும் பலர் உள்ளனர். அவை எல்லாம் பரமாணுவின் தன்மையைப் பொறுத்தவை.

சில பரமாணுவிலே ஒரே ஒரு புரொதானும் ஒரே ஒரு எலக்ட்ரானும் மட்டுமே இருக்கும்.

இன்னும் சிலவற்றிலே பல புரொதான்களும், பல எலக்ட்ரான்களும் இருக்கும். இம்மாதிரி இருப்பதால் அறிவியல் அறிஞர்கள் என்ன செய்திருக்கிறார்கள்?

பரமாணுக்களுக்கு நம்பர் (எண்) கொடுத்திருக்கிறார்கள்.

நீர் வாயுவின் பரமாணுக்கு நெ. 1 என்று எண் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன்? நீர் வாயுவின் பரமாணுதான் மிக இலேசானது. அதிலே புரொதான் ஒரே ஒரு பொறிதான் இருக்கிறது. அதன் பொருள் என்ன? ஒரே ஒரு புரொதானை காதலனை-க் கொண்ட பரமாணு என்று பொருள்.

அடுத்தபடி வருவது ஹீலீயம். அதன் பரமாணுவிலே இரண்டு காதலர்கள் இருக்கிறார்கள். அதாவது இரண்டு புரொதான்கள் உள்ளன.

ஆகவே, அதற்குப் பரமாணு நெ. 2 என்று எண் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி மொத்தம் 98 நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய பரமாணுவின் சேர்க்கையே அணு ஆகும். ஆகவே, சூரியனைப் பற்றி அறிய வேண்டுமானால் இந்த அடிப்படையான விஷயங்களை அறிந்து கொள்ளல் வேண்டும்.

அதாவது, சூரியனின் பிறப்பிடம்-வான வெளி-கனவாயு நிரம்பியது. கனவாயு குளிர்ந்தால் திரவமாகிறது. மேலும் குளிர்ந்தால் கட்டியாகிறது.

கட்டியாயிருக்கும் பொருளுக்குச் சூடு ஏற்றினால் திரவமாகிறது. மேலும் சூடு ஏற்றினால் கனவாயுவாகிறது.

இவற்றிற்கெல்லாம் காரணம் அணுவின் சேர்க்கையே. சூடு ஏறினால் அணுக்கள் விலகுகின்றன. குளிர் ஏறினால் இறுகுகின்றன.

அணுக்களோ பல பரமாணுக்களின் சேர்க்கை. அவை வானவெளியிலே வெகு வேகமாகப் பறந்து திரிந்து அட்டகாசம் செய்கின்றன.

பரமாணுவோ, மகத்தான மின்சக்தி பொருந்திய எலக்ட்ரான் கொண்டது. அந்த எலக்ட்ரான்களோ சூழ்நிலையையே மாற்றி விடக் கூடியவை.

ஆக, வெளியின் தன்மை இது வரை கூறப்பட்டது.

இனி, சூரியனின் பிறப்பைக் கவனிப்போம்.