உள்ளடக்கத்துக்குச் செல்

உலகம் பிறந்த கதை/பூமியின் வயது என்ன?

விக்கிமூலம் இலிருந்து

8. பூமியின் வயது என்ன?

பூமியின் வயது என்ன? அதாவது, இந்த பூமி தோன்றி எவ்வளவு காலம் ஆகிறது?

"சுமார் இருநூறு கோடி ஆண்டுகள் முன்பு இந்த பூமி தோன்றியிருக்கவேண்டும்" என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

எந்த அடிப்படையில் அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்?

இயற்கையில் நடைபெறும் ரசவாதம் இருக்கிறதே! அதன் அடிப்படையில்தான் அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள். எப்படி என்று கவனிப்போம்.

யூரேனியம் என்பது ஓர் உலோகம். தோரியம் என்பது மற்றோர் உலோகம். இவை இரண்டும் ஈயமாக மாறுகின்றன. இப்படி மாறியுள்ள ஈயத்தின் அளவைக் கொண்டு பூமியின் வயதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

உலகத்திலே மொத்தம் எவ்வளவு ஈயம் இருக்கிறது? இவ்வளவு ஈயமும் ஏற்பட எவ்வளவு காலம் ஆகும்?

இதுவே, புவி இயல் அறிஞர்கள் போட்ட கணக்கு.

ஓர் ஆண்டுக் காலத்திலே ஒரு கிராம் யூரேனியத்திலிருந்து 1/7, 600,000,000 கிராம் ஈயம் கிடைக்கிறது.

ஒரு கிராம் தோரியத்திலிருந்து ஒரு வருஷ காலத்தில் 1/28, 000,000,000 கிராம் ஈயம் கிடைக்கிறது.

இதைக் கொண்டு கணக்குப் பார்த்ததில் என்ன தெரிந்தது? உலகத்திலே மிகப் பழமையான ஈயப் பாறை எதுவோ அதன் வயது தெரிந்தது. அதாவது அந்த ஈயப் பாறையின் வயது நூற்று எண்பத்து ஐந்து கோடி வருஷங்கள் என்று தெரிந்தது.

இந்த அளவில் நின்றார்களா புவி இயல் அறிஞர்கள்? இல்லை. மேலும் சோதிக்கத் தொடங்கினார்கள். கடல்களின் வயது என்ன என்று கண்டுபிடிக்க முற்பட்டார்கள்.

இந்த பூமி இருக்கிறதே! இதன் முக்கால் பகுதி கடல். கால் பகுதி தான் நிலம்.

கடலின் வயதைக் கண்டுபிடிப்பது எப்படி? கடலிலே உள்ள உப்புதான் அதன் வயதைக் காட்டியது. கடலிலே உப்பு ஏது? எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது?

ஆறுகள் கொண்டு வந்தன.

வானத்திலிருந்து பொழிகிறது மழை. அம் மழை நீரை ஏந்திக் கீழே இறக்கி விடுகின்றன மலைகள்.

மழை நீர் என்ன செய்கிறது? வானத்திலிருந்து பூமிக்கு இறக்கி விட்ட மலையரசை மதிக்கிறதா? இல்லை; மிதிக்கிறது; இடிக்கிறது; தகர்க்கிறது.

பாறைகளை உருட்டிக் கொண்டு ஓடுகிறது. குதிக்கிறது. 'இடி இடி' என்று சிரிக்கிறது. கீழே இறங்குகிறது. பூமியைத் தோண்டுகிறது. மண்ணை வாரிக் கொண்டு ஓடுகிறது. மண்ணைக் கரைத்துக் எடுத்துக் கொண்டு போய் கடலில் கொட்டுகிறது. மண்ணிலே உப்பும் இருக்கிறது. அந்த உப்பு, நீரிலே கரைந்து விடுகிறது. மண் மட்டும் கரையாதிருக்கிறது.

இவ்விதம் ஆறுகளினாலே கொண்டு கொட்டப்பட்ட மண் கடலுக்கடியில் போய் விழுகிறது. உப்பு, நீரில் கரைந்து விடுகிறது.

சூரிய வெப்பத்தினாலே, கடல் நீர் ஆவியாக மாறுகிறது. ஆவி, மழையாகப் பொழிகிறது. மழை நீர் ஆறாக உருக் கொள்கிறது; ஆறுகள் மூலம் மீண்டும் கடலை அடைகிறது. இந்த நிகழ்ச்சி ஓய்வில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் ஆறுகள் கடலில் கொண்டு போய் கொட்டும் உப்பு அதிகரிக்கிறது. அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. உலகம் தோன்றிய நாள் முதல் கடல் நீர் அப்படியே இருக்கிறது. உப்பு மட்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் தான் கடல் நீர் உப்பாயிருக்கிறது.

உலகத்தில் உள்ள ஆறுகள் எல்லாமாகச் சேர்ந்து மொத்தம் நாற்பது கோடி டன் உப்பை ஆண்டு தோறும் கடலில் கொட்டி வருகிறது.

இந்தக் கணக்குப்படி பார்த்தால் என்ன தெரிகிறது? கடலின் வயது தெரிகிறது. அதாவது கடல்கள் தோன்றி எவ்வளவு காலம் ஆகிறது என்று தெரிகிறது. எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன? சுமார் இரு நூறு கோடி ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.

பூமியின் வயதும் அதுவே. அதாவது இரு நூறு கோடி ஆண்டுகள்.