உலகம் பிறந்த கதை/பூமி தோன்றியது எப்படி?

விக்கிமூலம் இலிருந்து

9. பூமி தோன்றியது எப்படி?


பூமி தோன்றியது எப்போது என்று கண்டோம். எப்படித் தோன்றியது என் பதை இப்போது காண்போம்.

பூமி உருண்டையாயிருக்கிறது. இதன் குறுக்களவு சுமார் எட்டாயிரம் மைல். பூமியின் மேல் பரப்பு கல்பாறையாகக் காட்சியளிக்கிறது. ஆனால் பூமி முழுதும் இப்படி இல்லை.

சுமார் ஐந்து மைல் ஆழம் வரைதான் இப்படி இருக்கிறது. அதற்கு அடியிலே இரண்டாயிரம் மைல் ஆழம் வரை கொதிக்கும் பாறைக் குழம்பு! இன்னும் ஆழத்திலே இதைவிடக் கனமான இரும்பு. பழுக்கக் காய்ச்சிய இரும்புக் குழம்பு! இப்படி யிருக்கிறது பூமி.

இது எப்படி ஏற்பட்டது?

பிரபஞ்சத்தின் தலைநாளிலே சூரியன் எப்படித் தோன்றியது என்பதை அறிந்தோம். அந்த வாயுக் கூட்டத்திலிருந்து பல கோளங்கள் தோன்றின என்றும் கண்டோம்.

அப்படித் தோன்றிய வாயு கோளங்கள் சூரியனைச் சுற்றிவரத் தொடங்கின. எதனால்? ஒன்றை ஒன்று இழுக்கும் தன்மையால்.

அப்படிச் சுற்றி வந்த காலத்திலே இந்த வாயு கோளங்களும் ஒன்றை ஒன்று இழுத்தன. அப்போது ஒன்றுடன் ஒன்று மோதின. அதனால் சில பெரிதாயின. சில தொலைவில் ஓடிப்போயின. இப்படி விலகி வந்ததுதான் நமது பூமி.