உள்ளடக்கத்துக்குச் செல்

உலகம் பிறந்த கதை/சந்திரன் பிறந்தான்

விக்கிமூலம் இலிருந்து

10. சந்திரன் பிறந்தான்

விலகி வந்த பூமி அனல் கக்கிக் கொண்டிருந்தது. ஒரு வருஷமா? இரண்டு வருஷமா. சுமார் ஐந்நூறு வருஷ காலம்.

பிறகு சிறிது சிறிதாக அதன் உடல் குளிர்ந்தது. ஆனால் உள்ளம் குளிரவில்லை. இன்று வரை இல்லை. உஷ்ணவாயு கோளமாயிருந்த பூமி கெட்டிப்பட்டது; குழம்பாயிற்று; திரவ கோளமாயிற்று. இப்படிப் பல நூறு ஆண்டுகள்; பிறகு பூமியின் மேல் பகுதி மட்டும் மெல்லிய தோல் மாதிரி ஆயிற்று; இறுகியது. உள்பகுதி மட்டும் ஒரே குழம்பாயிருந்தது.

அந்த நிலையில் பூமி, சூரியனைச் சுற்றி வந்து கொண்டு இருந்தது. அதே சமயத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் இருந்தது.

சூரியனிடமிருந்து விலகி வந்த நாளிலே பூமி இப்போது போல் மெதுவாகச் சுற்றவில்லை. மிக வேகமாகச் சுழன்றது.

இப்போது பூமி தன்னை ஒரு முறை சுற்றுவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. ஆனால் அந்தக் காலத்திலே ஆறுமடங்கு வேகம் அதிகமாகச் சுற்றியது. அதாவது நாலே மணி நேரத்தில் பூமி தன்னைத்தானே சுற்றி வந்தது.

அவ்வளவு வேகமாக அவள் சுற்றிய காலத்திலே அவளுக்குக் கரு உண்டாயிற்று.

வயிறு பெருத்தது. பிறகு வயிறு கிழிந்தது. சிறுவன் ஒருவனும் பிறந்தான். அவனே சந்திரன்.

பூமியின் வயிறு கிழிவானேன்? இதைச் சிறிது விளக்கமாகக் கவனிப்போம்.

கிராமங்களிலே பெண்கள் ஆற்றிலே குளிக்கச்செல்வார்கள். குளித்துவிட்டு வரும் போது தண்ணீர் கொண்டு வருவார்கள். சிலர் குடங்களிலே தண்ணீர் கொண்டு வருவார்கள். வேறு சிலர், வாய் அகன்ற அண்டாக்களிலே கொண்டு வருவார்கள். அப்போது பெண்களின் நடைக்கு ஏற்ப அண்டா நீரில் அலை மோதும். வேகமாக நடந்தால் அலையும் வேகமாக மோதும். மெதுவாக நடந்தால் அலையும் குறையும். பெண்கள் கடக்க நடக்க அண்டாவில் உள்ள நீர் தாளம் போட்டுக்கொண்டே இருக்கும். பெண்கள் காலடி எடுத்து வைப்பதற்கு தக்க படி தாளமும் இருக்கும். காலடியோ கால அளவோடு இருக்கும்.

பெண்கள் ஓர் அடி எடுத்து வைப்பதற்கு ஒரு விநாடியாகிறது என்று வைத்துக்கொள்வோம். அண்டாவில் உள்ள நீரும் விநாடிக்கு ஒரு தாளம் வீதம் போடும்.

இது, தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இதற்கு ‘ரிதமிக் ஆக்ஷன்' என்று இங்கிலீஷிலே சொல்வார்கள்.

பெண்களின் நடைக்கும், அண்டாவின் அலைக்கும் என்ன சம்பந்தம்? வேகமாக நடந்தால் அலை வேகமாக மோதுவது ஏன்? மெதுவாக நடந்தால் அலை மெதுவாக மோதுவது ஏன்?

வேகத்தினால். அண்டா நீரை வேகம் அமுக்குகிறது. அதனால் அலை எழும்புகிறது. நடையின் வேகம் அதிகமானால் அமுக்குதலும் வேகமாக நிகழும். அப்போது அலையும் வெகுதூரம் எழும்பும். நீர் ததும்பி வெளியே கொட்டும்.

இதே மாதிரி பூமியிலும் அலை எழும்பியது. எப்படி?

தலை நாளிலே பூமியின் மேல் பகுதி சிறிது கெட்டிப்பட்டிருந்தது என்று சொன்னேன். உள் பகுதி திரவமாயிருந்தது என்று சொன்னேன்.

பூமியானது நான்கு மணி நேரத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருந்த போது, பூமியின் உள்பகுதியிலே இருந்த திரவத்தில் அலை எழும்பியது. பூமி சுற்றச் சுற்ற அலையின் அமுக்குதலும் விசை முடுக்கியது போல் ஆயிற்று.

அவ்விதம் முடுக்கி விடப்பட்ட அலைகள் பூமியின் மெல்லிய ஓட்டைத் தாக்கின; மோதின. இவ்விதம் மோதியதால் அம் மெல்லிய ஓடு நொறுங்கியது. பூமி சுழன்ற வேகத்திலே நொறுங்கிய பகுதியிலே ஒன்று, தொலைவில் போயிற்று.

அவ்விதம் போனதே சந்திரன்!

பூமியிலிருந்து விலகிப் போன ஓடு தவிர, மீதமுள்ள நொறுங்கிய துண்டுகள் என்ன ஆயின. குளத்திலே தெப்பம் மிதப்பது போல் மிதந்து கொண்டிருந்தன. அப்படி மிதந்த துண்டுகளே இப்போது நாம் காணும் நிலப்பாகம்; தேசங்கள்.

பூகோள படம் ஒன்றைப் பார்த்தால் ஆப்பிரிக்காக் கண்டம் வெகு தூரத்தில் தெரியும். அமெரிக்கா, அதைவிட வெகு தூரத்தில் தெரியும். இடையே பெரும் கடல். ஆனால் பூமியிலிருந்து சந்திரன் பிறந்த காலத்திலே இப்படி இல்லை. இவை ஒன்றாக இருந்தன.

பூமியின் ஓடு நொறுங்கியதால் சந்திரன் பிறந்தான். நொறுங்கிய மற்ற ஓடுகள் நிலை கொள்ளாமல் மிதந்தன. மிதந்து மிதந்து அவை தொலைவில் விலகிப் போயின.

மேல் ஓடு விலகிப் போகவே, அடியில் இருந்த திரவக்குழம்பு இறுகத் தொடங்கியது.

மிதந்து கொண்டிருந்த ஓடுகள் நிலையாக நின்றன. மிதப்பதும் ஓய்ந்தது.

பூமி சுற்றிக்கொண்டேயிருந்தாள். மேலும், மேலும் சுற்றிக்கொண்டே யிருந்தாள். இருளிலே வெகு வேகமாகச் சுற்றினாள். மேடு பள்ளங்கள் இல்லாது இருந்த அவள் மேனியில் மேடு பள்ளங்கள் தோன்றின. அவள் மேலும் ஆனந்தமாகச் சுற்றினாள். பம்பரம் போல் சுற்றினாள். மிகுந்த கர்வத்துடனே சுற்றினாள். அவள் மீது வெளிச்சம் படவில்லை . ஒரே இருளாயிருந்தது.