உலகம் பிறந்த கதை/இருள் விலகியது

விக்கிமூலம் இலிருந்து

11. இருள் விலகியது


இவ்விதம் பூமியானது இருளிலே சுற்றிக் கொண்டிருந்த அந்த நாளிலே கடல்கள் இல்லை; ஆறுகள் இல்லை; நீர் நிலைகள் எதுவும் இல்லை; பருவ கால மாறுதல் எதுவும் இல்லை. மழையும் இல்லை.

சந்திரன் பிறந்த பிறகு பூமியின் உடம்பிலே மேடு பள்ளங்கள் தோன்றின. உடல் சிறிது குளிர்ந்தது. எனவே வான மண்டலத்தில் திரிந்து கொண்டிருந்த மேகங்கள் பூமியின் மீது மோகம் கொண்டன. மழை பெய்தது. கொதிக்கிற செங்கல்லில் தண்ணீர் விட்டால் ஆவியாவது போல் பூமியில் பெய்த மழையும் அந்த நொடியிலேயே ஆவியாகிக் கொண்டு இருந்தது. இப்படி மழை பொழிவதும் ஆவியாவதும் நிகழ்ந்து கொண்டே இருந்தது. ஓராண்டு அன்று. நூறாண்டு அல்ல; பல நூறு ஆண்டுகள் ஆயிரம் ஆண்டுகள். மழை! மழை! ஓயாத மழை. தங்கு தடங்கல் இல்லாத மழை. அதனாலே மேலும் பூமி குளிர்ந்தது. ஆவியாக மாறுவதும் குறைந்தது. பூமியிலே இருந்த மேடு பள்ளங்கள் நீர் நிரம்பப் பெற்றன. எங்கு நோக்கினும் ஒரே தண்ணீர், பரந்து அகன்ற வெள்ளக்காடு. பூமியின் மேற்பரப்பில் முக்கால் பகுதி நீர் நிரம்பியது.

வான வீதியிலே குவிந்திருந்த மேகங்கள் குறைந்தன. சூரியனுக்கும், பூமிக்கும் இடையே இருந்த திரை விலகியது. சூரிய கிரணங்கள் பூமியின் மீது நேராக வீழ்ந்தன. பூமியைச் சூழ்ந்திருந்த இருள் விலகியது. வெளிச்சம் உண்டாயிற்று.

அன்று முதல் சூரியன் பூமியை வளர்க்கத் தொடங்கினான்; உருவாக்கினான். தனது மெல்லிய கரங்களால் பூமியின் உடலைத் தடவினான். தனது மின்சாரக் கதிர்களால் பூமிக்கு இன்பம் அளித்தான்.