உலகம் பிறந்த கதை/உயிர் இயங்குவது எப்படி?

விக்கிமூலம் இலிருந்து
25. உயிர் இயங்குவது எப்படி?


உயிர், உயிர் என்று சொல்கிறார்களே! அது என்ன? எப்படியிருக்கும்? நமக்குத் தெரியாது. இது பற்றி அறிவியல் என்ன சொல்கிறது? உறுதியாக எதுவும் சொல்ல வில்லை. ஆனால் உயிர் உள்ளவற்றின் குணாதிசயங்கள் என்ன என்று சொல்கிறது.

அதாவது ஒரு பசுவோ, கன்றோ, மனிதனோ உயிருடன் இருப்பதாக எப்போது சொல்ல முடியும்?

தெருவிலே பார்க்கிறோம். மாடு ஒன்று அசையாமல் கிடக்கிறது. 'இருக்கா? போயிடுத்தா பாரு' என்று சொல்கிறார்கள்.

இருக்கிறதா? போய்விட்டதா? என்றால் எது? உயிர். உயிர் இயங்குதல் இன்றேல் செத்து விட்டதாகச் சொல்கிறோம்.

உயிர் இயங்குதல் என்றால் என்ன? முக்கியமான சில நிகழ்ச்சிகள் நடைபெறுமானால் உயிர் இயங்குகிறது எனலாம். அம்மாதிரி முக்கியமான நிகழ்ச்சிகள் பத்து என்கிறது அறிவியல்.

அந்தப் பத்து நிகழ்ச்சிகள் எவை?

1, உணவு தேடல், 2. ஜீரணித்தல் 3, சேகரித்தல், 4. வளர்த்தல், 5.மூச்சுவிடல்! 6. வேண்டாதவற்றை வெளியே தள்ளல், 7.குறைந்தவற்றை நிரப்புதல், 8. அசைதல், 9. உணர்தல், 10.இனப்பெருக்கம்.

ஆக இந்தப் பத்து விதமான நிகழ்ச்சிகளும் நடைபெறுமானால் உயிர் இயங்குகிறது எனலாம்.

இப்படி அறிவியல் சொல்கிறது. இந்தப் பத்து விதமான நிகழ்ச்சிகளையும் நிகழ்த்துவது எது? செல் அல்லது கருக்கூடு. கருக்கூடுகள் இவற்றைச் செய்கின்றன.

இதற்கான அடிப்படை எது? புரொடோபிளாசம்.

புரொடோபிளாசம் என்கிற உயிர்க்கஞ்சிதான் உயிரின் அடிப்படை. ஆகவே, ஜீவதாது என்று அதைச் சொல்வது சரியே.

புரொடோபிளாசேம் என்கிற ஜீவதாதுவை வளர்க்கத்தான் நாம் சாப்பிடுகிறோம். நமது உணவிலே பலவிதமான தாதுப்பொருள்கள் உள்ளன. தாவரங்கள் சேகரித்துக் கொடுத்த தாதுப் பொருள்கள். அவையே பற் பல மாறுதல்களுக்குப் பின் புரொடோபிளாசம் ஆகின்றன. புரொடோபிளாசம் என்பது ஒரு ரசாயனக் குழம்பு. இந்த ரசாயனக் குழம்பு இன்றேல் உயிர் இல்லை, இந்த ரசாயனக் குழம்பே உயிர் தோன்றக் காரணமாகிறது.