நாலடியார் - செய்யுளும் செய்திகளும்/1. செல்வம் நிலையாமை
அன்பு மனைவி அருகிருந்து ஊட்டுகிறாள்; சுவை ஆறு என்பதை அவன் அறிகிறான்; “உண்க அடிகள்!” என்று உணர்த்துகிறாள்; வயிறு நிறைகிறது; மனம் குளிர்கிறது; வாழ்க்கை தளிர்க்கிறது; எதுவும் இனிக்கிறது; இவை அன்று; இன்று செல்வம் அழிந்தது; அஃது அவனைவிட்டு ஒழிகிறது; ‘வறியவன்’ என்று அவனை வாழ்வோர் உரைக்கின்றனர்; கூழுக்காகக் கையேந்தி நிற்கிறான்; பிறர் வீட்டுப் படிகட்டு ஏறும்போது எல்லாம் அந்த வீட்டு மகள் அவனுக்குத் தாயாகிறாள்; “அம்மா தாயே!” என்று அழைக்கிறான்; அவள் “ஏன்யா! என்ன தேவை?” என்கிறாள். முன்பு உணவு சுவைத்தது; இன்று கைவிரல்கள் சுவைக்கின்றன. அவன் குழந்தையாகிக் கைவிரல்களைச் சுவைக்கிறான். காலம் பார்த்தாயா! எப்படி இருந்தவன், எப்படி ஆகிவிட்டான்? செல்வ வாழ்க்கை முன்பு; அல்லல் சேர்க்கை இன்று. செல்வம் நிலைக்கும் என்று செருக்குக் கொள்ளாதே; ஒரு பருக்கைச் சோற்றுக்குத் தெருத் தெருவாக அலையும் காலம் வரும். பணம்! அதனை அடக்கி ஆளவில்லை என்றால், பின்னால் வருந்துவாய்; மதம் கொண்ட யானை! அது இன்று கைவிட்டுச் சென்றுவிட்டது; நிதமும் அறம் செய்து வாழ்ந்திருந்தால், அவன் அழிந்திருக்கமாட்டான், அறம் அவனை அரவணைத்திருக்கும்; துணை நின்றிருக்கும். அறத்திற்கு இணை வேறு யாதும் இல்லை.
அறம் செய்து வாழ்ந்திருக்க வேண்டும்; நீ செய்த தவறு என்ன? நீயும் உன் மனைவியும் மட்டும் மகிழ்ந்து உண்டீர்; அரிசிச்சோறுதான்; வரிசைப்படுத்திச் சுற்றத்தவரோடு அதனை உண்க; அந்த மகிழ்ச்சி உனக்குப் புகழ்ச்சி, செல்வம் தட்டை அன்று; உருளை, அஃது உருண்டு கொண்டே செல்லும்; வண்டியின் சக்கரமாய் இடம் மாறும்; உள்ளபோது உவந்து உண்க; உறவினரோடு உண்க.
அதோ, அவன் எப்படி வாழ்ந்தான் தெரியுமா? “பட்டத்து யானைமீது பகட்டாகச் செல்பவன்; சேனைத் தலைவன்” என்று ஏனையோரை மருட்டினான்; இன்று அவன் பகைவரிடம் சிறைப்பட்டுவிட்டான். நிறையுடைய அவன் பத்தினி பகைவன் கைப்பட்டுவிட்டாள். கட்டியவளை இழந்து, ஒட்டி உறவாட உறவினரும் இன்றி, இன்று ஆடி அசைந்து நாடி தளர்ந்து உலவுகின்றான். யாராவது நம்புவார்களா? இவன் ஒரு காலத்துப் பேரரசன் என்று சொல்வார்களா? அன்று இவன் நாடாண்டான்; இன்றோ அவனை வறுமை ஆள்கிறது; அன்று காலாட்டினான்; இன்றோ காலம் அவனை ஆட்டி வைக்கிறது; காரணம் செல்வம் இழந்தான்.
“நிலைத்தது” என்று நினைத்தாய்; “அசைக்க முடியாது” என்று இசைத்தாய். நின்று நிலைத்தவை எல்லாம் கன்றி மறைந்துவிட்டன; அவை வரலாற்றுச் செய்திகள் ஆகி வருகின்றன.
அதோ, அவனைப் பார், கஞ்சப் பயல்! காசு கொடுத்து எதையும் அவன் வாங்கி உண்ண மாட்டான்; ‘எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்’ என்பான்; பில் பணம் கொடுக்கும்போது மெதுவாகக் கை கழுவச் சென்றுவிடுவான். பணம் தருவதிலிருந்து இடம் நழுவி விடுவான்.
“நாலு நல்ல காரியம் செய்ய வா” என்றால் ‘அது நமக்கு ஆகாது’ என்பான்; ‘ஒத்துக்காது’ என்பான். ஒளிதரும் செயல்களைச் செய்யமாட்டான். “புகழ் அடையச் செயல்படுக; இல்லாவிட்டால் நின் பிறப்பே தேவை இல்லை” என்று வள்ளுவர் அடித்து அடித்துக் கூறுகிறார். ‘புகழ்’ அது தேவை இல்லை! என்று இகழ்கிறான். பசிக்கு அலையும் பரதேசிகள்! வசிக்க வழியின்றி வந்து அடையும் விருந்தினர்; சுற்றத்தினர்! அவர் உற்ற துயரைக் களைய மாட்டான்; இவன் மனிதனா? “மகனே! நீ, ஏன் பிறந்தாய்? இந்த உலகத்துக்கு நீ சுமை” என்று தாய்மை வினவுகிறது.
உடுத்துகிறானா! ஒன்றையே மாற்றிமாற்றி மடுத்துகிறான்; தோய்த்துத் தோய்த்து அது காவி ஏறிவிட்டது. பளிச்சென்று அவன் வெளிச்சத்துக்கு வருவதில்லை. வெள்ளிக்கிழமை! அன்று விரதம்தான்; ஞாயிற்றுக்கிழமையையும் அவன் வெள்ளிக்கிழமையாக்கிவிடுகிறான்; அவன் வீடே ரேஷன் கடை ஆகிறது: பிறர் கையேந்தி நிற்கிறார்; கட்டி இருந்த நாய்! அதனை அவிழ்த்துவிட்டு அவர்களை விரட்டி ஓட்டுகிறான்; ‘கொடுப்பது என்பது தன்னைக் கெடுப்பது’ என்று கருதுகிறான்; சேமிப்பு என்று சேர்த்து வைத்த நிதி இழந்து நிர்க்கதியாகிறான்; செல்வம் நிலைக்காது. இவன் ஒரு தேனீ; தேடியதை இழப்பான்.
தேனி என்ன செய்கிறது; உழைத்துச் சேகரிக்கும்; தானும் உண்ணாது; பிறரையும் அண்டவிடாது; காத்திருந்த பெண்ணை நேற்று வந்தவன் அடித்துச் சென்று விடுகிறான்; கட்டிக் காத்துப் பயன் இல்லை; அவன் வாழ்க்கை வெற்று வேட்டாகிறது; இப்படித்தான் பலர் தேன் ஈயாக வாழ்கிறார்கள்; ஏன் என்று கேட்டால் அதற்கு விடை இல்லை.