புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்/முன்னுரை

விக்கிமூலம் இலிருந்து

முன்னுரை


புதுக்கவிதைபற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் இரண்டு:

(1) புதுக்கவிதை புரிவதில்லை.
(2) புதுக்கவிதையில் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது?

பண்டைக் காலத்தில் கவிஞனுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்; அவன் சகலகலா வல்லவன்.

இளங்கோ கவிஞர் மட்டுமல்லர்; இசை மேதை; நாடகாசிரியர்; வானநூல் வல்லுநர்; நவமணிகளின் குண வேறுபாடுகளை உணர்ந்தவர்.

மைக்கேல் ஏஞ்சலோ ஓவியர்; சிற்பி; கவிஞர்.

லியனார்டோ டாவின்சி ஓவியர்; சிற்பி ; கட்டிட மேதை; பொறிஞர்; இயற்பியல் அறிஞர்; கவிஞர்.

அறிவியல் மேதையான கலீலியோ கவிஞரும் கூட.

கெதே மாகவிஞர்; இசைமேதை; நாடகாசிரியர்; அரசியல் அறிஞர். தமது அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு பாரிசு நகரம் சென்று ஓவியம் பயின்றார்; தாவரவியல் (Botany) பற்றியும் ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

ஷேக்ஸ்பியர் உலகம் அறிந்த தெல்லாம் அறிந்தவர். நம் நாட்டிலும் ‘கல்வியில் பெரியவன் கம்பன்’;

19-ஆம் நூற்றாண்டில் அறிவியல் பொருளியல், அரசியல், உளவியல், தத்துவவியல் ஆகியவற்றில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக இந்நிலை மாறத் தொடங்கியது.

ஒவ்வொரு கலையிலும் சிறப்புத் துறைகள் (Specialization) தோன்றிக்கிளைத்தன. ஓர் இயற்பியல்வாதியின் மொழி மற்றோர் இயற்பியல்வாதியாலும், ஒரு துறையைச் சார்ந்த சிற்பி, ஓவியர் அல்லது இசை மேதையின் நுட்பம், அவ்வத் துறையைச் சார்ந்த கலைஞர்களாலும் மட்டுமே புரிந்து கொள்ளப்பட்டன. இப்பாதிப்பு கவிதையிலும் தனித் தன்மை வாய்ந்த, சிறப்புப் பிரிவுகளைத் தோற்றுவித்தது.

உரைநடையிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்காகக், கவிதை இவ்வளவு காலமாகத்தான் அணிந்திருந்த செழுமை, இருண்மை மயக்கும் மந்திரம் ஆகிய அணிகலன்களை இழக்க வேண்டி நேரிட்டது.

சமகால மக்களோடு பேசுவதற்காகவும், அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவும், டிரைடன், போப், பைரன், டென்னிசன் போன்றவர்கள் கவிதை மொழியின் சில பண்புகளைத் தியாகம் செய்தனர். டன் , காலெரிட்ஜ், பிளேக், ஹாப்கின்ஸ் போன்ற கவிஞர்கள் தங்களுக்கென்று ஒரு குறுகலான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, தங்கள் வாசகர்களின் அளவைக் குறுக்கிக் கொண்டனர்.

ஆனால், கவிதைத் துறையில் உண்மையான புரட்சியை உண்டாக்கிக் கவிதைப்புதுமை (Modernism in Poetry) யைத் தோற்றுவித்தவன் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பதினாறு வயது இளைஞன் ரெம்போ. அவன் கவிதை எழுதியது மூன்றாண்டுகள் மட்டுமே. அம் மூன்றாண்டுகளில் அவன் எழுதிய கவிதைகள் ஐரோப்பியக் கவிதையுலகையே தலை கீழாகப் புரட்டிவிட்டன. என்றாலும், ரெம்போ என்னும் உதய சூரியனுக்கு விடிவெள்ளியாக முன்னால் நின்றவர் பிரெஞ்சு மகாகவி போதலேர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

போதலேரின் ‘மாநகரக் கொள்கை’யை அப்படியே ஏற்றுக் கொண்டதோடு, விடலைப் பருவக் கனவுகளையும் உணர்வுகளையும் மிகத்துல்லியமாகத் தன் படைப்புகளில் முதன் முதலாக வெளிப்படுத்துகிறான் ரெம்போ.

இந்த கோபக்கார இளைஞன் (angry young man) பழமையோடு தொடர்பு கொண்ட சமயம், அரசியல், பொது ஒழுக்கம் ஆகியவற்றை மறுதலித்ததோடு, கவிதை மொழியையும் எதிர்த்துப் புரட்சி செய்தான். கவிதைச் சொற்களின் இயல்பான பொருளையே மாற்றினான். உரை நடையிலேயே உயர்ந்த கவிதைகளை எழுதினான்.

கடவுள் மதம் ஆகியவற்றில் நம்பிக்கை வைக்காத ரெம்போ, “ஒரு கவிஞன் தன்னையே ஞானியாக்கிக் கொண்டு, தன் ஆன்மாவைத் தேடி சோதித்துணர்ந்து அதைப் பண்படுத்திக் கொள்வதன் மூலம் ‘பாவ விமோசனம்’ பெறலாம்” என்று கூறியிருக்கிறான்.

ரெம்போவின் தாக்கம் பிரெஞ்சுக் கவிதை மீதும், மற்ற ஐரோப்பியக் கவிதைகள் மீதும் அளவிடமுடியாத அளவு இருந்தது. ஏற்கெனவே பிரெஞ்சு நாட்டில் குறியீட்டியக்கம் கால் கொண்டிருந்தது, மல்லார்மே, வெர்லேன் போன்ற குறியீட்டுக்கவிஞர்கள் பழஞ் சிறப்பியச் சிம்மாசனத்திலிருந்து கவிதையைக் கீழே இறக்கி, அதன் வடிவத்தில் புதிய சோதனை முயற்சிகள் மேற்கொண்டிருந்தனர். உளவியல் அறிஞரான ஃப்ராய்டின் ஆய்வுகள் கலையிலக்கியத் துறையில் புரட்சிகரமான மாற்றங்களைத் தோற்றுவித்தன ‘புற மெய்ம்மையிய’ (Surrealism) இயக்கம் தோன்றியது.

பண்டைய மரபுகளைப் புறக்கணித்தல், உள்ளத்தைச்சுதந்திரமாக வைத்துக்கொள்ளுதல், கனவுகளில் மூழ்கியிருத்தல், மிகைக்கற்பனைகளில் ஈடுபடுதல், அகக்காட்சிகளின் துணையால் புறவுலகைப் புரிந்து கொண்டு வாழ்வின் அடிப்படை உண்மைகளை அறிதல்யாவும், புறமெய்ம்மை இயக்கத்தின் பண்புகள் ஆகும். இவ்வியக்கம் 1924-இல் ஆந்தர் பிரெடன் என்பவரால் முறையாகத் தோற்றுவிக்கப்பட்டாலும், இதன் அடிப்படைக் கூறுகள் எல்லாம் ரெம்போவின் படைப்புகளில் முழுமையாகப் பொருந்தியிருக்கக் காணலாம். எனவே புற மெய்ம்மை இயக்க முன்னோடி ரெம்போதான் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.

இந்த நூற்றாண்டின் ஒப்புயர்வற்ற ஆன்மீகக் கவிஞன் என்றும், மிகச் சிறந்த தன்னுணர்ச்சிக் கவிஞர்களுள் ஒருவன் என்றும் குறிப்பிடப்படுபவன் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ரெய்னர்மேரியா ரில்க். இவன் பழமையில் நம்பிக்கையற்றவன். இவனுடைய சிந்தனை வளர்ச்சியை, கலை நுணுக்கச் செம்மையில் ஈடுபட்டிருந்த குறியீட்டாளர்கள், வெறித்தனமாகச் சூன்யத்தைப் பின் தொடர்ந்து சென்ற ரெம்போ ஆகியோரின் வளர்ச்சிக்கு அடுத்த வளர்ச்சியாகக் கொள்ளலாம். தன்னையே அழித்துக்கொள்ளும் உலகப் பெரும்போருக்கு எதிரான மக்களுணர்ச்சி பெற்றெடுத்த குழந்தையாக இவனைக் குறிப்பிடலாம். இவனுடைய கவிதைகளில் இருண்மைக் கூறு மிக அதிகம்.

“என் பாடல்கள் இறுக்கமும் சுருக்கமும் மிக்கவை. இவற்றை ‘அறிந்து கொள்ளுதல்’ என்பதைவிட ‘உள்ளுணர்வால் உணர்ந்து கொள்ளுதலே’ படிப்போரால் இயலும்” என்று ரில்க்கே ஓரிடத்தில் குறிப்பிடுகிறான். அவனுடைய உண்மையான உலகம் கண்ணுக்குத் தெரியாத மெய்ப்பொருள் உலகமே (World of Spirit). அவ்வுலகின் உண்மையை உணர்ந்து துய்க்க, பொய்யான இப்பருப் பொருள் உலகில், அன்பும் மனிதத் தன்மையுமே வழி என்று குறிப்பிடுகிறான். இம் முயற்சியில் தேவதைகளையும் துணைக்கழைக்கிறான்.

இதே ‘ஆன்மீகத் தேடல்’ , பேகய், டி. எஸ். எலியட், டி. எச். லாரன்ஸ், டிலான் தாமஸ், ராபர்ட் லோவல் ஆகியோரின் படைப்புக்களில் வெவ்வேறு வடிவம் கொள்ளுகின்றன. இதற்கு நேர்மாறாகச் சமதர்மக் கவிஞர்கள் ஒரு பூலோக சொர்க்கத்தைத் தம் கற்பனையில் படைக்கத் தொடங்கினர். மார்க்சியக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெர்டோல்ட் ப்ரெக்ட். ரில்க்தனிமனிதனின் ஆன்ம தரிசனத்தைப் பாடியவர். ப்ரெக்ட் மக்கட்சமுதாயத்தின் ஏக்கங்களைப் பிரதிபலித்த சீர்திருத்தவாதி, ரில்க் சீமாட்டிகளின் மடியிலமர்ந்து ஆன்மாவைப் பற்றிச் சிந்தித்தவர்; ப்ரெக்ட் தெருவோர்த்திலமர்ந்து ஏழ்மையைப் பற்றிச் சிந்தித்தவர். ரில்க்கின் கவிதை அறிவை மயக்கும் புதிர்க்கவிதை (mystic poetry). ப்ரெக்டின் கவிதை அன்றாட வாழ்க்கையை ஆய்வு செய்யும் நடப்பியக் கவிதை (Functional poetry) இதைப் புதிய மெய்ம்மையியம் (New Realism) என்றும் சொல்லலாம்.

தற்பெருமை, தத்துவார்த்தம், பிரபஞ்ச ரகசியம், அடிமனக் கற்பனை என்பவற்றைப் பாடு பொருளாகக் கொண்டுவரும் கவிதைகட்கு எதிரானது நடப்பியக்கவிதை. நேர்ப்படும் உண்மைகளை உள்ளது உள்ளபடியாகத் தரமான கவிதைகளில் அறிவார்ந்த சிந்தனையோடு வெளிப்படுத்த வேண்டும் என்று நடப்பியற் கவிஞர்கள் விரும்பினர்.

ப்ரெக்ட் கவிதையின் எல்லாச் சட்ட திட்டங்களையும் உடைத்தெறிந்து விட்டு எழுதினார்; தமது கருத்துக்களை மக்களுக்கு வன்மையாகக் கூறும் கண்டிப்பான ஆசிரியராக விளங்கினார். முன்னோக்காளர் இயக்கம் (Futurist movement) ருசியாவிலும், இத்தாலியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பரவியது, ப்ளாக், எஹ்ர்ன், போர்க், மாயகோஸ்ஸ்கி ஆகியோர் முன்னோக்கியத்தை ஆதரித்த முன்னோடிக்கவிஞர்கள். இத்தாலி நாட்டைச் சேர்ந்த டி’அன்னன்ஸியோ, மாரினெட்டி ஆகிய இரு கவிஞர்களும் ஃபாசிலியத்தின் தத்துவத் தந்தைகளாகக் கருதப்படுகின்றனர். முன்னோக்கியமும், ஃபாசிஸமும் தனிமனித சுதந்திரத்தை (individualism) முற்றாக வெறுப்பவை.

விளாடிமிர் மாயகோவ்ஸ்கி ருசியப்பொதுவுடைமைக் கொள்கையால் கவரப்பட்டு, அதன் புரட்சிக் குரலாக ஒலித்தவர். அவர் எழுதிய கட்டற்ற கவிதை, வால்ட் விட்மன், அப்போலினர், மாரினெட்டி ஆகியோரைப் பினபற்றிப் புரட்சியின் திடீர் வேகத்தோடும், குத்தூசிக் கிண்டலோடும் எழுதப்பட்டவை: ஆலைத் தொழிலாளர்களின் கூட்டங்களில் அடிக்கடி பாடப்பட்டு, ருசிய மக்களிடையில் அதிக விளம்பரம் பெற்றவை.

இந்த நூற்றாண்டுக் கவிஞர்களுள், அதிகமாக உலக இலக்கிய வாதிகளின் கவனத்தைக் கவர்ந்தவர்கள் இருவர்; அவர்கள் டி. எஸ். எலியட்டும், எஸ்ரா பவுண்டும்.

டி.எஸ். எலியட் கிறித்தவ சமயத்தின்பால் அதிக ஈடுபாடு கொண்ட ஆன்மீகக் கவிஞர். வாழும் காலத்திலேயே பெருங் கவிஞராகவும் இலக்கிய மேதையாகவும் மதிக்கப்பட்டு எல்ல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவர், இவரது படைப்பிலுள்ள இருண்மையின் காரணமாக அருவக் கவிஞர் (invisible poet என்று இலக்கிய வாதிகளால் அழைக்கப்படுபவர். ஆழ்ந்தகன்ற பெரும்புலமையும், மரபிலக்கியப் பயிற்சியும் மிக்கவர். இவர் படைப்பான ‘பாழ் நிலம்’ (Waste Land) ஒப்பற்ற குறியீட்டுக் காப்பியமாகவும், அங்கதமாகவும் கருதப்பட்டு, உலகின் உயர்ந்த பரிசான நோபெல் பரிசையும் பெற்றது, முதல் உலகப் போருக்குப் பின் ஐரோப்பாவில் ஏற்பட்ட நன்மீக வறட்சியையும், அதன் விளைவாக மக்கட் சமுதாயத்தில் ஏற்பட்ட சீர்குலைவையும் ‘பாழ்நிலம்’ விவரிக்கிறது.

டி. எஸ். எலியட்டின் சமகாலத்தவரும் நண்பருமான எஸ்ரா லூமிஸ் பவுண்ட் சிறந்த கவிஞர்; பன்மொழி வல்லுநர்; பல்கலை அறிஞர்; சீர்திருத்தவாதி. ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் சிறப்பை உலகறியச்செய்தவர். பெருங்கவிஞர் யேட்ஸ், எலியட் போன்றோரின் கவிதைகளில் தமது கத்தரிக் கோலை நீட்டிச் செம்மைப்படுத்தியவர். யாரும் நெருங்குவதற்கு அஞ்சிய, பிடிவாதமான முரட்டு இலக்கியமேதை. கவிதைத்துறையில் ‘படிம இயக்கத்தைத்’ தோற்றுவித்தவர். ஃபாசிஸத்தை ஆதரித்துப் பிரசாரம் செய்தவர்; முசோலினியின் நண்பர். கண்டபடி மனம்போன போக்கில் எழுதப்பட்ட புதுக்கவிதை இவரால் செறிவும், இறுக்கமும், செம்மையும் நுட்பமும், வேலைப்பாடும் மிக்கதாக மாறியது.

ஸ்பானிஷ் மொழிக்கவிஞர்களான லார்காவும், பாப்லோ நெருடாவும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய படைப்புக்கள் பிரெஞ்சு, ஆங்கிலக் கவிஞர்களின் படைப்பினின்றும் வேறுபட்டவை. முதல் உலகப்போர் முடிந்தபிறகு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிளம்பிய முன்னோக்கியம், டாடாயியம் என்ற புரட்சி அலைகள் ரெஸிடென்சியாவில் இருந்த ஸ்பானிய இலக்கிய வாதிகளிடத்திலும் பாதிப்புகளை உண்டாக்கின. ஆனால் லார்கா எந்த இலக்கியக் கட்சியிலும் ஈடுபாடு காட்டவில்லை. மரபிலும், புதுமையிலும் காணப்பட்ட நல்ல அம்சங்கள் யாவும், அவனையும் அறியாமல் லார்காவின் படைப்புக்களில் இடம்பெற்றன. லார்கா புதுக்கவிஞனாகவும், அதேசமயத்தில் மரபோடு கூடிய கிராமியப்பாடல் பாடும் கவிஞனாகவும் (Folk Poet) விளங்கியது வியப்பிற்குரியது.

பாப்லோ நெருடா சிலிநாட்டுக் கவிஞன். ப்ரெக்டைப்போல் அரசியல்வாதி; மாயகோவ்ஸ்கியைப்போல் பொதுவுடைமைக் கட்சியின் தீவிர உறுப்பினனாக இருந்ததோடு, அவனைப் போல பாட்டாளிகளின் கூட்டங்களில் படிக்கும் பேச்சுக் கவிதைகளை (spoken poetry) எழுதியவன்; கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் சிலிநாட்டின் அரசியல் தூதராக நீண்ட காலம் பணியாற்றியவன்; சிலிநாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகித்தவன். அரசியல் வெளிப்பாட்டியமும், நடப்பியமும் இவன் கவிதைக் கொள்கைகள். தாந்தேயையும் மில்டனையும் எப்படித் தெய்வீகக் கோட்பாட்டினின்றும் பிரித்துப் பார்க்கமுடியாதோ, ஹ்யூகோவையும், விட்மனையும் எப்படி மக்களாட்சிக் கோட்பாட்டினின்றும் பிரித்துப் பார்க்க முடியாதோ, அதுபோல் பாப்லோ நெருடாவை அரசியல், ஏழ்மை, நீதி, சமத்துவம் ஆகிய கோட்பாடுகளினின்றும் பிரித்துப் பார்க்க முடியாது, அதனால்தான் நெருடாவை நைந்துபோன உலக அபலைகளின் ஒட்டு மொத்தமான ஆத்திரக் குரலாகவும், ஒதுக்கப்பட்ட தென்னமெரிக்க ஏழை நாடுகளின் புரட்சிச் சங்கநாதமாகவும் கேட்க முடிகிறது. பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த கவிஞர்களுள் முதன் முதலாக நோபெல் பரிசு பெற்றவன் நெருடா.

இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞர்களுள், எலியட்டுக்கு அடுத்தாற்போலக் குறிப்பிடத்தக்கவர்கள், டபிள்யூ. எச். ஆடனும், டைலான்தாமசும் ஆவர். ஆடன் தீவிர மார்க்சியவாதியாக இருந்து, இருப்பியல் தத்துவத்தில் நுழைந்து இறுதியில் ஆன்மீகவாதியாக மாறியவர். நடப்பு உலகிலிருந்து விலகியிருந்த மந்திரத் தன்னியக்கத்தையும் (magical automatism) குறியீட்டாளர்களின் மொழிப் புரட்சியையும், (linguístic revolution) உங்கியலோடு இணைக்கும் கவிதை முயற்சியில் டைலான் தாமஸ் ஈடுபட்டனர்.

கவிஞன் எடுத்தியம்பியாகவும் ஆறுதல் கூறுவோனாகவும், தீர்க்கதரிசியாகவும் இருப்பதைவிடத் தன் சொந்த அனுபவங்களையே கவிதையாக வெளிப்படுத்த வேண்டும்; அதற்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்கு அவன் திரும்ப வேண்டும். இம்முயற்சியின் மூலம் மனிதனுக்குள் குடியிருக்கும் மிருகத்தையும் தெய்வத்தையும் அறிந்து கொள்ளுவதோடு, வரலாற்றுக்கு முற்பட்ட அடிமனத்தின் தொடர்ச்சியையும் அறிந்து கலையைப் புதுப்பிக்க முடியும்”

என்று தாமஸ் குறிப்பிடுகிறார். இது மீண்டும் இயற்கைக்குத் திரும்புதல் (return back to nature) என்னும் குசோவின் கொள்கையைச் சார்ந்தது.

இருபதாம் நூற்றாண்டின் இயந்திரநாகரிகத்தால் சோர்வுற்ற ராபர்ட் க்ரேவ்ஸ் என்ற கவிஞர் வெண் தேவதை (White Goddess) என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் கீழ்க்கண்டவாறு உள்ளம் நைந்து எழுதுகிறார்:

"கவிதையின் செயல்பாடு என்பது கலைத் தேவதையின் கருணைவேட்டல், நம் வேண்டுதலுக்கேற்பக் கலைத் தேவதை வெளிப்படுத்தும் உணர்ச்சி வேறுபாடுகள் நம்மைப் பரவசப்படுத்தியும், நடுங்கச் செய்தும் அனுபவங்களாக மாறுகின்றன. இன்றும் கவிதையின் செயல்பாடும் பயனும் அப்படியே உள்ளன என்றாலும், அணுகு முறை மாறியிருக்கிறது. பண்டைநாளில் இயற்கையின் எச்சரிக்கையை உணர்ந்து மனிதன், தான் வாழும் உயிரினத்தோடு இசைந்தும், குடும்பத்தில் பெண்ணின் விருப்பங்களை மதித்துக் கட்டுப்பட்டும் வாழ்ந்தான். இப்போது அந்த இயற்கையின் எச்சரிக்கையை மதிக்காமல் தத்துவம், அறிவியல், தொழில் ஆகிய தாறுமாறான

ஆய்வுகளினால் வீட்டைத் தலைகீழாகப் புரட்டிக் குடும்ப வாழ்க்கையைச் சீர்குலைத்துக் கொண்டான்.

“இன்றைய நாகரிகத்தில் கவிதையின் தலையாய சின்னங்கள் மதிப்பிழந்து போயின. பாம்பும் சிங்கமும் வல்லூறும் வட்டக் காட்சிக் கொட்டகைக்குச் சென்றுவிட்டன. எருதுகளும், கரடிகளும், மீன்களும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுவிட்டன. வேகக்குதிரைகளும் வேட்டை நாய்களும் பந்தய அரங்கிற்குக்கொண்டுசெல்லப்பட்டன. தூய காடுகளெல்லாம் அழிக்கப்பட்டு அறுப்பு ஆலைக்கு அனுப்பப்பட்டன. காதல் நிலவு, எரிந்து தணிந்த கோளாகிவிட்டது. பெண்கள் எடுபிடிகளாக மாற்றப்பட்டனர். பணம், உண்மையைத் தவிர எல்லாப் பொருள்களையும், உண்மைக் கவிஞனைத் தவிர எல்லாரையும் விலைக்கு வாங்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது”

மேலே இதுவரை நான் கூறிய விளக்கங்களிலிருந்து, காலப் போக்கில் கவிதைக்கலை பெற்ற வளர்ச்சியும், மாறுதலும், அவற்றின் விளைவாகப்பெற்ற தனித்தன்மைகளும் விளங்கும். இத்தனித்தன்மைகளையும் அவற்றைச் சார்ந்து தோன்றியுள்ள கவிதைக் கொள்கைகளையும் கவிதை இயக்கங்களையும் புரிந்து கொண்டால்தான் புதுக்கவிதையைப் புரிந்து கொண்டு சுவைக்க முடியும்.

கவிதை வளர்ந்து கொண்டே இருக்கிறது. இக்கணிப் பொறியுகத்தில் கவிஞனின் சிந்தனைகள் செயற்கைக் கோளில் ஏறி அண்டத்தில் பவனி வருகின்றன. புதனில் தொடங்கவிருக்கும் புது வாழ்வைப் பற்றிக் கவிஞன் சிந்திக்கத் தொடங்கி விட்டான். கவிதை ஒரு தொடர் விளைவு.

அடுத்துப் ‘புதுக் கவிதையில் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது?’ என்று கூறுவோருக்கும், சில விளக்கங்களைக் கூற விரும்புகிறேன். மரபுக் கவிதைகளில் ‘வெள்ளைப்பாட்டு’ இருப்பது போல் புதுக் கவிதைகளிலும் வெள்ளைப்பாட்டு உண்டு. இன்று தமிழில் வெளியாகும் புதுக் கவிதைகளில் நூற்றுக்குத் தொண்ணூறு, கவிதைகளே அல்ல. அவை அலங்கரிக்கப்பட்ட உரைநடையும் (decorated prose), துணுக்குகளும்தான். புதுக் கவிதைக்குரிய பண்புகளோடு வெளிவரும் கவிதைகளைப் படிக்கும் போது, அவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கும்.

நிலவு-
வேலிக்குள் அடைக்கப்பட்டது;
என் காதலும் மடிந்தது.

இக்காதல் வரிகளின் அவலச்சுவை, நம் உள்ளத்தில் முள்ளாகத் தைக்கிறது. இது ஒரு ஸ்பானிய நாட்டுப் பாடல். இதைப்படித்த லார்கா பரவசப்பட்டு “நாட்டுப் புற மக்கள் விரும்பிப்பாடும் இந்த வரிகளில் புதைந்து கிடக்கும் புதிர் மிக எளிமையானது; சுவையானது; தூய்மையானது. இப்புதிர்ச் சுவை, புகழ்பெற்ற மேட்டர்லிங்க் நாடகத்திலும் கிடையாது” என்று வியந்து பாராட்டுகிறான்.

இசை
சிற்பங்களின் மூச்சு
ஓவியங்களின் பேச்சு
இதயத்தின் வெளிவளர்ச்சி

ரில்க்கின் இந்த வரிகளைப்பற்றி முடிவில்லாமல் சிந்தித்துக் கொண்டே இருக்கலாம்.

ருசியக்கவிஞர் ஸ்வெட்டேவா ஒரு கவிதை நூலை எழுதி முடித்தவுடன் கவிஞர் பாஸ்டர் நாக்கிற்குக் கீழ்க்கண்டவாறு ஒரு கடிதம் எழுதுகிறாள்:

“நான் மிகவும் களைத்துவிட்டேன்; ஆசிரிஸ் துண்டு துண்டாக வெட்டி நொறுக்கி எறியப்பட்டது போல் நானும் உணர்கிறேன் ...சமயத்தூதர் தாமஸின் விரல்கள், புண்களைத் தொட்டுப் பார்த்தது போல் நானும் ஒரு கவிதைக்கும் மற்றொரு கவிதைக்கும் இடையில் தீண்டிப்பார்க்கிறேன்.”</poem>

இது உரைநடையில் எழுதப்பட்ட கடிதம். இதில் கூறப்பட்ட செய்திகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், எகிப்தியத் தொன்மமும், கிறித்துவ விவிலியமும் படித்திருக்க வேண்டும்.

எஸ்ரா பவுண்டின் கவிதைப்பூட்டைத் திறவுகோலின் (Key book) துணையில்லாமல் திறக்கமுடியாது. அவர் கவிதைகளைப் புரிந்து கொள்ளப் பலமொழியறிவும், பன்முகப்பட்ட இலக்கிய வரலாற்றுப் புலமையும், கிரேக்க இதிகாசத் தெளிவும் பெற்றிருக்க வேண்டும்; சீன ஜப்பானியக் கவிதைப் போக்கும், கன்ஃபூசியத் தத்துவமும், ஃபாசிசமும் புரிந்திருக்க வேண்டும். பேரகராதி (Encyclopedia) மற்றும் பன்மொழிச் சிற்றகராதிகளின் துணையும் வேண்டும். பவுண்டின் சமகால நண்பர்கள் அவர்களிடம் அவர் கொண்டிருந்த நட்பு, அந்தரங்கம் யாவும் தெரிந்திருக்க வேண்டும். இவ்வளவும் போதாது; இசையறிவும், சிற்ப ஓவியக் கலையறிவும் வேண்டும்.”

புதுக் கவிதையில் புரிந்து கொள்ள
எவ்வளவோ இருக்கிறது.

கவிதையின் தோற்றம் பற்றிப் பண்டை நாள் தொட்டுப் பல்வேறு கருத்துக்கள் பல்வேறு கவிஞர்களாலும் அறிஞர்களாலும் வெளியிடப்பட்டுள்ளன. கிரேக்க ஞானி சாக்ரட்டீஸ்.

“கவிஞர்கள் சாமியாடியைப் போன்றவர்கள். சாமியாடி சில சமயங்களில் மருள் வந்து அருள் வாக்குக் கூறுவது போல, இவர்களும் சில சமயங்களில் ஆவேசப்பட்டு கவிதைகளை வெளிப்படுத்துகிறார்கள்.”

என்று குறிப்பிடுகிறார். கவிதை ஆவேசம் பெறுவதற்காகச் சில கவிஞர்கள் மதுவையும் மற்ற போதைப் பொருள்களையும் நாடுவதுண்டு. பிரெஞ்சுக் கவிஞர் போதலேர்,

கஞ்சாப் போதையின் துவக்கத்தில் வழக்கத்திற்கு மாறான வண்ணத்தின் ஆதிக்கம் நமக்குப் புலப்படும், கண்ணைப் பறிக்கும் ஒளியுடம்போடு காட்சி தரும் மோகினிப் பெண்கள், நீலவானைவிடத் தெளிவான ஆழமான விழிகளால் நம்மை உற்றுப் பார்ப்பார்கள். அப்போது ஏற்படும். இனம்புரியாத க்ஷன நேர மன நிலைகளில் நம் வாழ்க்கையின் ஆழ அகலங்களும், தெளிவு சுழிவுகளும், அற்புதங்களும் நம் கண் முன் பளிச்சிடும். நம் கண்ணுக்கு முதன்முதலில் எந்தப் பொருள் தென்படுகிறதோ, அதுவே நம் அறிவை நடத்திச் செல்லும் குறியீடாக அமையும். தெளிந்த நீர் நிலைகளும், நிலைக் கண்ணாடிகளும், கனவுலகத்தை நமக்குத் திறந்து விடும்; சோகமயமான ஒரு பேரின் பத்தில் நம் உள்ளம் ஆழ்ந்து, எல்லையற்ற காட்சிகளில் திளைக்கும்”

என்று குறிப்பிடுகிறார்.

உள்ளம் தீவிரமாக உணர்ச்சிவசப்படும் போது, கவிதை தானாக ஊற்றெடுத்துக் கரைபுரண்டு வருவதாக ஆங்கிலக் கவிஞர் வோர்ட்ஸ் வொர்த் குறிப்பிடுகிறார். இக்கருத்தை ஒத்துக் கொண்டது போல், பிரெஞ்சுக் கவிஞர் ரெம்போவும் கவிதைத் தோற்றம் பற்றிக் கீழ்க்கண்ட கருத்தை வெளியிடுகிறார்:

கவிஞனுக்குக் கட்டுப்பாடு கூடாது. கவிதை கவிஞனுள்ளத்தில் தானாகக் கருக்கொண்டு, கற்பனை வடிவம் பெற்றுப் பக்குவமடைந்து பொங்கி வரவேண்டும். கவிஞன் தனது உள்ளத்தில் கருத்துக்கள் மலர்ந்து வருதலைக் கண்டு சுவைத்து அதை அப்படியே அனுமதிக்க வேண்டும்.”

பொதுவாக, ரெம்போவுக்குப்பின் தோன்றிய புறமெய்ம்மையியலார் எல்லாரும் கவிதை பற்றிய இக் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றனர். புதிதாக அடிமனக் கோட்பாடு இவர்கள் கருத்துக்களோடு சேர்கின்றது.

பொதுவுடைமைக் கொள்கையாளனும், முன்னோக்கிய வாதியுமான மாயகோவ்ஸ்கி, கவிதைத் தோற்றம் பற்றிச் சுவையான கருத்தொன்றைக் கீழ்க்கண்டவாறு வெளியிடுகிறார்.

நான் என் கைகளை வீசி வார்த்தைகள் ஏதுமின்றி முணுமுணுத்த வண்ணம் நடக்கிறேன்; என் முணு முணுப்புக்கு இடையூறு வராத வண்ணம் நடக்கிறேன். என் நடையில் வேகம் கூடும்போது, நான் வேகமாக முணுமுணுக்கிறேன்.


இப்படியே தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு, கவிதைக்கு அடிப்படையான சந்தம் பீறிட்டுக் கிளம்புகிறது. அவ்வாறு கிளம்பும் அந்த ஓசையிலிருந்து சொற்கள் வடிவம் பெறுகின்றன.

“பீறிட்டுக் கிளம்பும் அந்தச் சந்த ஓசை எங்கிருந்து வருகிறது என்று யாருக்குத் தெரியும்? அது எனக்குள் திரும்பத் திரும்பத் தோன்றும் ஓர் ஒலி; ஒரு தாலாட்டு; என்னுள் மீண்டும் மீண்டும் தோன்றும் ஏதோ ஒன்றுக்கு நான் கொடுக்கும் ஒலி வடிவம். அந்த ஒலிகளை முயன்று இயக்குதலும், ஒன்றைச் சுற்றி அந்த ஒலிகளை ஒழுங்குபடுத்தி அமைத்தலும், அவற்றின் இயல்பையும் பண்பையும் கண்டறிதலும்தான் கவிதையின் தொடர்ந்த உழைப்பாகும்.”

ருசியக் கவிஞர் ஸ்வெட்டேவாவும் கவிதைத் தோற்றம்பற்றி, இதே போன்ற கருத்தையே வெளியிடுகிறாள். “என் படைப்புக்கள் எல்லாமே என் கேட்கும் செயல்” என்பது அவள் கருத்து.

ஜெர்மானியக் கவிஞர்ரில்க்கின் அனுபவம் இவர்களினின்றும் சற்று மாறுபட்டது. டியூனோ கோட்டையில் ஒரு நாள் தனிமையில் அமர்ந்திருந்தபோது, தன் உள்ளத்தில் நிகழ்ந்த கவிதை ஆவேசத்தை ரில்க் கீழ்க்கண்டவாறு படர்க்கையில் பதிவு செய்கிறார்:

"இனம்புரியாத ஒன்று அவனிடம் அன்று நிகழ்ந்தது. வழக்கம்போல் ஒரு புத்தகத்தைக் கையிலேந்திய வண்ணம் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்த அவன், கவையாகப் பிரிந்திருந்த மரக்கிளையொன்றில் வசதியாக அமர்ந்து கொண்டான். மிகவும் ஓய்வாக அமர்ந்த நிலையில் கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டுச் சுற்றியிருந்த அமைதியான, அழகிய இயற்கைச் சூழ்நிலையில் தன்னை மறந்து மூழ்கினான்.

"இதற்குமுன் அனுபவித்திராத ஓர் உணர்ச்சி வெள்ளம் அவனுள் தலையாகப் பரவுவதை உணர்ந்தான். அவன் அமர்ந்திருந்த மரத்தினிடையிலிருந்து அவ்வுணர்ச்சி மெல்லிய அதிர்வுகளாக அவனுள் இறங்கியது. இது போன்ற இன்ப அதிர்ச்சியை அவன் என்றும் அனுபவித்ததில்லை, அவன் உடம்பே ஆன்மாவாகமாறி இயல்பான தன் செயல்களை மறந்து ஏதோ ஒரு பேராற்றலை தன்னுள் ஏற்றுக் கொண்டது போலிருந்தது; அதுவுமன்றி எளிதில் புலப்படாதஇயற்கையின் மறுபுறத்தைக் கண்டது போலவும் இருந்தது."
மாயகோவ்ஸ்கி அசாத்தியத் துணிச்சல்காரன். வானத்தில் ஏறிவரும் பகலவனைத் தேநீர் அருந்தக் கூப்பிடுகிறான்.


என்ன...?
கடவுளே!
நான் வந்திருக்கிறேன்.
காதில் விழுகிறதா?
உன் தொப்பியைத்துக்கி
வணக்கம் செய்!

என்று வழிப்போக்கனிடம் பேசுவது போல் ஆண்டவனிடம் துடுக்காகப் பேசுகிறான். கருத்தில் மட்டுமன்று; வடிவத்திலும் சில துணிச்சலான முயற்சிகளை அவன் மேற்கொண்டான்.

கவிதை செறிவாகவும், இறுக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை எல்லாக் கவிஞர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஜப்பானில் ஹைக்கூவும், தமிழில் குறளும் வடிவத்தால் சிறப்புப் பெற்றவை. மாயகோவ்ஸ்கி மின் வெட்டுக்களைப் போல் பளிச்சிடும் தந்திக் கவிதை வடிவம் ஒன்றைத் தோற்றுவித்திருக்கிறான்.

தாகம்-தணிக்க
பசி-தீர்க்க
உடம்பு-இதுநேரம்
போர்ககளம்-போரிட

குண்டுகள் பறக்கட்டும் ,
கோழைகளை நோக்கி
துப்பாக்கி முழங்கட்டும்
எதிரி ஓட

கவிதையை ஒரு ‘வரமாகவும்’ கலைத்வேதையின் கடைக் கண் நோக்காகவும் எல்லாரும் போற்றுவது வழக்கம். ஆனால் ஒரு ருசிய இளங்கவிஞன்,

கவிதையே!
என் துரதிர்ஷ்டமே!
என் செல்வமே!
என் புனிதக் கலையே!

என்று பாடுகிறான். கவிதையைத் ‘துரதிர்ஷ்டம்’ என்று அவன் குறிப்பிடக் காரணம் உண்டு. கவிதை எல்லாருக்கும் புகழையும் செல்வத்தையும் வாரிக் கொடுத்து விடுவதில்லை. நல்ல கவிதை எழுதவேண்டும் என்பதற்காகச் சிலர் தங்கள் வாழ்க்கை வசதியையும், வருவாயையும், மகிழ்ச்சியையும், தியாகம் செய்வதை இன்றும் காண்கிறோம். நல்ல கவிதைக்கு அவர்கள் கொடுக்கும் விலை இவை. எனவே கவிதை, கவிஞனுக்கு ஒருவகைத் துரதிர்ஷ்டம் தானே?

‘இந்தியம்’ சில ஐரோப்பியக் கவிஞர்களால் மதித்துப் போற்றப்பட்டிருக்கிறது. எலியட் தமது சிறந்த காப்பியமான பாழ்நிலத்தை.

தத்தா, தயாதவம், தம்யதா
சாந்தி சாந்தி சாந்தி

என்று உபநிடத வரிகளால் நிறைவு செய்கிறார். இந்தியச் சமயமான பெளத்தத்தையும் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் தென்னமெரிக்கக் கவிஞனான பாப்லோ நெருடா,

அழகிய நிர்வாணப் புத்தர்கள்
மதுவிருந்தைப் பார்த்தவண்ணம்
திறந்த வெளியில்
வெறுமையாகச்
சிரித்துக்கொண்டிருக்கின்றனர்.

என்று இந்திய நாட்டையும், இந்தியச் சமயத்தையும் கேலி செய்கிறான். இந்நூலில் கூறப்பட்டுள்ள பத்துக்கவிஞர்களும் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் வரலாறே புதுக்கவிதை வரலாறு. தரமான கவிஞர்களையும், தரமான கவிதைகளையும் புரிந்து கொண்டு சுவைக்க, இந்நூல், நிச்சயமாக உதவும்.

மேவார் மீராவின் குறிக்கோள் பிருந்தாவனமும் நந்தகுமாரனும்; சிவகங்கை மீராவின் குறிக்கோள் நல்ல நண்பர்களும் நல்ல நூல்களும் நான் அவருக்கு நல்ல நண்பன்; நல்ல நூலும் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

சேலம்-16

அன்புடன்

1–1–93

முருகு