வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/மானிட வாழ்வின் முக்கிய முரண்பாடு

விக்கிமூலம் இலிருந்து

1
மானிட வாழ்வின் முக்கிய முரண்பாடு
மனிதன் தன் சொந்த இன்பத்திற்காகவே வாழ்கிறான். ஒவ்வொருவனும் தனது நலனுக்காகவே வாழ்கிறான். சொந்த நன்மையில் நாட்டமில்லாமற் போனால் மனிதன் தான் உயிருடன் வாழ்வதாகவே எண்ணுவதில்லை. தன் சுயநலத்தைச் சேர்க்காமல் தனியாக வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கவே அவனால் முடிவதில்லை. தன் நன்மையை நாடுதலும், அதை அடைதலுமே வாழ்க்கை என்பது அவன் கருத்து. மனிதன் தன்னையும் தன் தனித் தன்மையையும் கொண்டே வாழ்க்கையைப் பற்றி உணருகிறான். அதனால் தான் அவன் விரும்பும் நன்மை என்பது தன் தனி நலம் என்று ஆரம்பத்தில் நம்புகிறான். வாழ்க்கை - உண்மையான வாழ்க்கை, தன் சொந்த வாழ்வு

மட்டுமே என்று அவனுக்குத் தோன்றுகிறது. மற்ற மக்களின் வாழ்க்கை தன் வாழ்விலிருந்து முற்றும் வேறுபட்டதாக அவனுக்குத் தோன்றுகிறது. அவர்களுடைய வாழ்க்கை வெறுந் தோற்றம் என்று அவன் கருதுகிறான். அவன் விரும்பும் போது தான் மற்றவர் வாழ்க்கையைப் பற்றி எண்ணிப் பார்க்கிறான். ஆனால், தன்னைப் பற்றித்தான் அவனுக்கு நன்றாகத் தெரியும். தான் வாழ்ந்து வருவதை அவன் ஒரு கணமேனும் அறியாமல் இருக்க முடியாது. எனவே, அவனுடைய சொந்த வாழ்க்கையே உண்மையானதாகக் காட்சியளிக்கிறது. அவனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையும் அவனுக்காகவே ஏற்பட்டதென்று தோன்றுகிறது. அவன் மற்றவர்களுக்கு நன்மையோ தீமையோ செய்கிறான் என்றால், அவைகளும் அவனுடைய சொந்த நன்மைக்காகத்தான். பிறருக்கு நன்மை செய்தால் அது தன் நலனைப் பெருக்கும் என்ற காரணத்தாலேயே அவன் அதனைச் செய்கிறான். மற்றவர்கள் துயரப்படுவதைப் பார்த்தால் அவன் நன்மை குலைவதால், அவன் அவர்களுக்குத் தீங்கு நினைப்பதில்லை. அவனுக்கு முக்கியமாக வேண்டியதெல்லாம் தன் நலன் ஒன்று தான்.

தன் நலன் ஒன்றிலேயே நாட்டமுள்ள மனிதன் அந்த நலனும் மற்றவர்களையே பொறுத்திருப்பதைக் காண்கிறான். அவனைப்போலவே மற்ற மனிதர்களும் விலங்கினங்களும் தம் வாழ்க்கையைப் பற்றி எண்ணுவதையும் அவன் அறிகிறான். ஒவ்வோர் உயிருக்கும் தன் வாழ்வே பெரிது, தன் நலனே முக்கியம் என்ற உணர்ச்சி இருக்கிறது. அப்படியிருந்தும் மனிதன் எல்லா உயிர்களும் தான் சுகத்திற்காகவே அமைந்தவை என்று கருதுகிறான்.

உலகில் ஒவ்வொரு பிராணியும், தனக்கு அற்ப நன்மை கிடைப்பதற்காக, மற்ற உயிப்பிராணிகளின் நன்மையையும் உயிரையும் கூடப் பறிக்க வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும் மனிதன், தனக்கு மட்டுமே வாழ்க்கை ஏற்பட்டிருந்த போதிலும், தனக்கு எதிராக வேறு பலர் இருப்பதைக் காண்கிறான். உலகமெங்கும் பரவி வாழும் உயிர்கள் பல தங்கள் தங்களுடைய சுய நன்மைக்காக அவனை அழித்துவிட ஒவ்வொரு கணமும் தயாராயிருக்கின்றன.

மனிதன் தன் நன்மையை அளவுகோலாகக் கொண்டே வாழ்க்கையை உணர்ந்துகொள்ள முடிகிறது. அந்த நன்மையை அடைவதும் சிரமமாயிருக்கிறது. அடைந்த நன்மையையும் மற்றவர் பறித்துவிடக்கூடும் என்பதும் புலனாகின்றது. மனிதனுக்கு வயது ஆக ஆக, அநுபவம் பெருகப் பெருக, உண்மை நிலைமை தெளிவாகின்றது உலகிலே பல மக்கள் கூடி வாழ்கின்றனர் ; தம்மிலேயே ஒருவரையொருவர் அழிக்கவும் விழுங்கிவிடவும் முயன்று கொண்டிருக்கின்றனர். அவர்களின் நடுவேயுள்ள ஒருவன் தான் தனி மனிதன். ஆகவே, வாழ்வு இன்பமாயிராமல் நிச்சயம் தீமையாகவேயிருக்கும் என்று அவனுக்குத் தோன்றுகிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் அவன் அபாயங்களை பொய்யா தாண்டி வெற்றி பெறுவதாகவே வைத்துக்கொண்டாலும், வாழ்விலிருந்து அவன் பெறக்கூடிய இன்பங்கள் உண்மையான நன்மைகளா யிருப்பதில்லை. அவை இன்பத்தின் தோற்றங்களாகவே இருப்பதோடு, அவைகளைத் தொடர்ந்து துன்பங்கள் வந்து பெருகுகின்றன. இந்தத் துன்பங்களை அதிகமாக உணர்வதற்காக மட்டுமே சிறு சிறு துளிகளாக வரும் இன்பம் பயன்படுகின்றது. ஆராய்ச்சி அறிவும், அநுபவமும் மனிதனுக்கு இவ்விஷயங்களைப் புலப்படுத்துகின்றன. ஒருவன் வாழ்க்கையில் மேலே போகப் போக, இன்பங்கள் அருகிக்கொண்டே வருகின்றன ; களைப்பும் தெவிட்டுதலும் தோன்றுகின்றன ; கஷ்டங்களும் துன்பங்களும் பெருகிக்கொண்டே யிருக்கின்றன.

இவைமட்டுமல்ல, மூப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும்போது, மற்ற மனிதர்களின் நோய்களும், கிழப் பருவமும், மரணமும் மனிதன் கண்முன்பு தென்படுகின்றன. தனக்கும் அவையே கதி என்பதை அவன் அறிகிறான். ஒவ்வொரு கணமும் அவன் தன் வாழ்வு தேய்ந்துகொண்டே வருவதையும், ஒவ்வொரு கணத்திலும் தான் மூப்பு, தளர்ச்சி, மரணம் ஆகியவற்றை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதையும் தெரிந்து கொள்கிறான். அவனோடு போட்டியிடும் மற்ற ஜீவன்கள் ஆயிரக் கணக்கான சந்தர்ப்பங்களில் அவனுக்கு அபாயம் விளைக்கத் தயாராக இருக்கின்றன. துன்பங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன. இத்தனைக்கும் நடுவே வாழ்வு மரணத்தை நோக்கியே யாத்திரை செய்துகொண்டிருக்கிறது. இந்த யாத்திரையில் ஓய்வுமில்லை ; ஒழிவுமில்லை. மரணத்துடன் மனிதனுடைய தனி வாழ்வு முடிவுறும் ; மேற்கொண்டு தனி நன்மை எதுவுமேயில்லாத அழிவு நிலையே அவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இந்த நிலைமைகளை அவன் காண்கிறான்.

மனிதன் தன் தனியான இயல்பே வாழ்க்கை என்று கருதி வருகையில், அவ் வாழ்க்கை உலகம் அனைத்தையும் எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால், உலகத்தையோ யாரும் எதிர்த்து நிற்க முடியாது. இந்நிலையில் மானிடன் பெறவேண்டுமென்று கருதும் இன்பங்கள் வெறும் நிழல்களாக விளங்குகின்றன. இன்பங்கள் எல்லாம் துன்பத்திலேயே முடிவடைகின்றன. இவற்றால், மனிதன் பாதுகாக்க முடியாத ஒரு வாழ்வைத் தான் கட்டிப் பிடித்து வைத்துக்கொள்ள முயல்வது வீணான வேலை என்பது தெளிவாகின்றது.

சுக துக்கங்கள் எல்லாம் தனக்கே உரியவை என்று தனித்தன்மை பாராட்டி வருபவனுக்கு, அதுவே நன்மைக்கும் வாழ்க்கைக்கும் முக்கியமான காரணமாயிருக்கிறது. ஆயினும் அந்தத் தனி இயல்பினால் நன்மையையோ, வாழ்வையோ பெற முடியவில்லை. அவன் விரும்பும் இன்பமும் வாழ்வும் அவனை மட்டும் பொறுத்திருக்கவில்லை; அவனுக்குத் தெரியாத அந்நியர்களின் தயவினால் அவை கிடைக்க வேண்டியிருக்கின்றன. அவர்கள் எல்லோரும் தன்னைப் போன்றவர்கள் என்ற எண்ணம்கூட அவனுக்குக் கிடையாது. ‘நான்’, ‘எனது’ என்று கருதிக் கொண்டிருக்கும் வாழ்வுக்கு எது உண்மையான ஆதாரமாகத் தோன்றுகிறதோ, அது அழிந்து, எலும்புகளாகவும் புழுக்களாகவுமே மிஞ்சுகின்றது. எது நிலையானது என்று தோன்றுகிறதோ, அந்தத தனி வாழ்வு முடிவில் அழிவடைகிறது. எது நிலையற்றது என்று தோன்றுகிறதோ, அந்த மக்களின் வாழ்வு நிலைத்து நிற்கிறது. மனிதன் நசித்துப் போகிறான்; ஆனால், மனித சமுதாயம் சிரஞ்சீவியா யிருக்கிறது. தனி மனிதனுடைய வாழ்க்கை என்பது மாயை; அவனுக்கு வெளியேயுள்ளதே உண்மையான வாழ்க்கை. ஆயினும், மனிதன் வெளியேயுள்ள மற்றவர் வாழ்க்கையைப் பற்றி அக்கறை கொள்வதில்லை; கவனிப்பதில்லை தெரிந்து கொள்வதுமில்லை!

வாழ்வில் மனிதன் எவைகளை விரும்புகிறானோ அவைகள் அவன் பார்த்து கொள்ளாத வெளியிலுள்ள மக்களின் வாழ்க்கையில்தான் அமைந்திருகின்றன. இந்த உண்மை அவனுக்குப் புலனாகி விட்டாற்போதும், அல்லது பிறர் இதை அவனுக்கு விளக்கி யுரைத்துவிட்டாற் போதும் - இதை அவன் கைவிடவே முடியாது. இது அவன் உணர்விலிருந்தும் அழியாது.

ஆன்றோரின் அமுத வாக்கு

மானிடன் தன் இன்பமே வாழ்வின் லட்சியம் என்று முதலில் எண்ணுகிறான். ஆனால் கானல் நீர் போன்ற அந்த இன்பம் ஏற்படும்போது, அதை அநுபவிக்க முடியாதபடி அவனுடைய தனி வாழ்வு, ஒவ்வொரு நிமிஷமும், மூச்சு விடுந்தோறும், துன்பம், தீமை, மரணம், அழிவு ஆகியவைகளை நோக்கியே போய்க்கொண்டிருக்கின்றது! இது இளைஞர் முதியோர் யாவருக்கும் தெரிந்ததுதான் ; படித்தோரும் பாமரரும் இதை அறிவர். பண்டைப் பழங் காலத்திலிருந்தே மனித சமூகமும் இதைத் தெரிந்து வந்திருக்கிறது.

‘ஒவ்வொருவரும் தத்தம் நன்மைக்காக ஒருவரையொருவர் அழித்துத் தாமும் அழிந்து போகும் மனிதர் மத்தியிலே ஒரு மனிதன் தன் தனி இன்பத்தையே நாட்டமாய், கொள்ளும் வாழ்க்கை தீயது; உண்மைக்கு முரண்பட்டது’-ஆதிகாலம் முதலே மனிதன் இப்படி கூறிவந்திருக்கிறான். இந்தியா, சீனா, எகிப்து, கிரீஸ் முதலிய தேசங்களிலே தோன்றிய தத்துவ ஞானிகளும், யூத ஞானிகளும் வாழ்க்கையில் அமைந்துள்ள இந்த முரண்பாட்டைப் பற்றித் தெளிவாகவும், மிகவும் அழுத்தமாகவும் விளக்கி யிருக்கிறார்கள். மானிட உள்ளம் அழியாத அமர இன்பத்தைக் கண்டுபிடிப்பதற்காக மிகப் புராதன காலத்திலிருந்தே முயன்று வந்திருக்கிறது; சண்டைகள், பூசல்கள், துன்பங்கள், மரணம் எதுவும் அழிக்க முடியாத நித்தியமான இன்பத்தை நாடி வந்திருக்கிறது. நிலையான இந்த இன்பத்தைத் தெளிவாக அறிந்து கொண்டு வாழ முற்பட்ட காலங்களிலேதான் மனித சமூகம் முற்போக்கடைந்திக்கின்றது.

சரித்திர ஆராய்ச்சிக்கு எட்டாத பண்டைக் காலத்திலிருந்தே பல நாடுகளில், பல்வேறு மக்களிடையே தோன்றிய ஞானிகள் வாழ்க்கையைப் பற்றி தெள்ளத் தெளிவா விளக்கியிருக்கிறார்கள்; வாழ்க்கையின் முக்கியமான முரண்பாட்டைத் தெளிவுபடுத்தி யிருக்கிறார்கள். மனிதனுக்கு உண்மையான இன்பமும், உண்மையான வாழ்க்கையும் எவை என்பதையும் அவர்கள் எடுத்துக் காட்டி யிருக்கிறார்கள். உலகில் மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள்; எல்லோரும் அவரவர் இன்பத்தையே தேடி அலைகிறார்கள்; எல்லோருமே அந்த இன்பம் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இந்தக் காரணத்தாலேயே மனித சமூகத்தில் தோன்றிய பண்டைப் பெரியார்கள் அனைவரும் உண்மையான வாழ்க்கையைப் பற்றி ஒரே மாதிரியாகவே விளக்கி யிருக்கிறார்கள்.

‘வாழ்க்கை ஒரு யாத்திரை ; ஆன்மாக்கள் பக்குவமடைந்து மேலும் மேலும் இன்பப் பேற்றை அடையும் மார்க்கம்’ என்று மிகப் புராதன காலத்திலேயே இந்திய நாட்டு வேதியர் [1] கூறியுள்ளனர்.

‘மனித சமூகத்தின் நன்மைக்காக விண்ணகத்திலிருந்து வந்த ஒளி பரவி நிற்பதே வாழ்க்கை’ என்று கன்பூஷியஸ்[2] கூறியுள்ளார்.

‘நிர்வாண முக்தி பெறுவதற்காக “நான்” என்ற அகங்காரத்தைத் தியாகம் செய்வதே வாழ்க்கை, என்று புத்தர் கூறியுள்ளார். இவர் கன்பூஷியஸ் காலத்தவர்.

‘நன்மையை அடைவதற்காக அடக்கமும் பணிவும் கொள்ளும் மார்க்கமே வாழ்க்கை’ என்று லாவோத்ஸே[3] அருளியுள்ளார். இவரும் கன்பூஷியஸ் காலத்தவர்.

‘மனிதன் இறைவனுடைய விதியைப் பின்பற்றி நன்மையடைவதற்காக இறைவன் அவன் நாசித் துவாரங்களின் வழியாக ஊதியுள்ளதே வாழ்க்கை’ என்று யூத முனிவர் கூறினர்.

ஆசைகளை அடக்கி அருந்தவம் இயற்றிய வேறு பெரியார்கள், ‘பகுத்தறிவுக்குப் பணிந்து அதன்படி நடப்பதே வாழ்க்கை ; அது மக்களுக்கு இன்பமளிக்கும்’ என்று தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்து பெருமான், முந்திய விளக்கங்களை யெல்லாம் ஒன்று சேர்த்து, ‘ஆண்டவனையும், உன் அண்டையிலுள்ளவரையும் நேசித்தலே வாழ்க்கை. அது மனிதனுக்கு இன்பம் தரும்’ என்று சொன்னார்.

வாழ்க்கையைப் பற்றிய ஆன்றோர் விளக்கங்கள் இப்படி யிருக்கின்றன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மனித வாழ்வின் முரண்பாட்டை இவை தீர்த்து வைத்திருக்கின்றன. போலியான தனி வாழ்வின் பொய்மையான இன்பத்திற்குப் பதிலாக, உண்மையான, அழிக்க முடியாத இன்பத்தை எடுத்துக்காட்டி, அந்த வாழ்வுக்குப் பொருத்தமான அர்த்தத்தையும் இவை அளித்திருக்கின்றன. இந்த உபதேசங்கள் வெறும் தத்துவங்கள் அல்ல ; கோடிக் கணக்கான மக்கள் இவைகளின் உண்மையைத் தங்கள் வாழ்க்கையிலேயே அநுபவத்தில் கண்டிருக்கின்றனர்; இன்றும் கண்டுகொண்டிருக்கின்றனர். இந்த விளக்கங்களை இன்னும் தெளிவாகவோ, அதிக நுட்பமாகவோ கூற முடியும் என்று ஒருவர் அபிப்பிராய பேதம் கொள்ள முடியுமே அன்றி, இவை வாழ்க்கையின் முரண்பாட்டைத் தீர்த்து வைப்பதையோ, பொருளற்றதாகத் தோன்றும் வாழ்வுக்கும் ஒரு பொருளுண்டு என்று தெளிவுபடுத்துவதையோ யாரும் மறுக்க முடியாது. தனிப்பட்டவரின் சுயநல ஆசை வெறும் ஏமாற்றத்தில் முடிவதை மாற்றி, துன்பங்களும் மரணமும் தொடர முடியாத ஒரு நன்மையை அடைய முடியும் என்பதை முற்காலத்து அறிஞர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

மதிநலம் வாய்ந்த ஞானிகள் வாழ்க்கையைப் பற்றி மானிட சமூகத்திற்கு அறிவுறுத்திய விளக்கங்களை உணர்ந்து அவற்றின்படி அநேகர் நடந்து வந்திருக்கின்றனர். ஆனால் அவைகளை அறியாதவர்களே பெரும்பாலோர், மனித வாழ்வில் முரண்பாடு இருப்பதையே பலர் பார்ப்பதிலை. வாழ்க்கை முழுதிலுமோ, அது ஒரு பகுதியிலோ, மிருகவாழ்க்கையே வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் கோடி கணக்கான மக்கள். இவர்களிலே சிலர், உலகிலே தாங்கள் பெற்ற உயர்ந்த பதவிகளை பயன்படுத்திக் கொண்டு தங்கள் அறியாமையைத் தங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், மக்கட் சமுதாயத்திற்கு வழிகாட்டவும் முன்வந்து விட்டனர். வழி காட்டுவோருக்கே வாழ்வின் பொருள் தெரியாத நிலையில், மனிதனின் தனி வாழ்வே வாழ்க்கை என்று அவர் போதித்து வந்தனர் ; இன்றும் அப்படியே கூறி வருகின்றனர்.

இத்தகைய போலிப் போதகர்கள் எப்போதும் இருந்து வந்ததுபோல், இக்காலத்திலும் இருக்கிறனர். இவர்கள் இரு பிரிவினராக உள்ளனர். ஒரு கூட்டத்தார், மனித சமூகத்திற்கு வழிகாட்டிய மேதைகளின் போதனையைப் பெயரளவில் ஒப்புக் கொண்டு, அதன் கருத்தைக் கைவிட்டு விட்டனர். ஆன்றோருடைய போதனை நேரடியாகத் தெய்வத்திடமிருந்து வந்ததென்றும், மரணத்தின் பின்னால் ஏற்படக்கூடிய எதிர்கால வாழ்வைப் பற்றியே அது விளக்குவதென்றும் இவர்கள் மக்களுக்கு உபதேசித்து வரலாயினர். நாளடைவில் மத சம்பந்தமான சடங்குகளையும், வெளி ஆசாரங்களையுமே மக்கள் நிறைவேற்றி வரும்படி இவர்கள் கட்டாயப்படுத்தி வந்தனர். வாழ்க்கை ஆராய்ச்சி அறிவுக்குப் பொருத்தமில்லாதது என்பது இவர்கள் கொள்கை. மறு உலகில் கிடைக்கப் போகும் மகா உன்னதமான வாழ்க்கையை நம்புவதாலேயே இகவாழ்வு திருந்திவிடும் என்று இவர்கள் போதிக்கின்றனர்.

இரண்டாவது பிரிவினர் இயற்கைக்கு அப்பாற்பட்ட இறைவன், எதிர்கால வாழ்வு, எதையும் நம்புவதில்லை, காட்சிப் பிரமாணமே இவர்களுடைய முக்கியமான அளவுகோல். கண் முன்பு காணும் வாழ்க்கையைத் தவிர, வேறு வாழ்வில் இவர்களுக்கு நம்பிக்கை கிடையாது. மனிதன் பிறப்பதிலிருந்து இறப்புவரை உன்ன மிருக வாழ்வே வாழ்க என்று இவர்கள் வீர முழக்கம் செய்கின்றனர், மனிதனை விலங்காகக் கருதி, அவன் வாழ்வில் ஆராய்ச்சிக்குப் பொருந்தாத விஷயம் எதுவுமில்லை என்பது இவர்கள் துணிபு.

மேலே கூறிய ஒரு பிரிவினரும் போலிப் போதகர்கள், இவர்களுடைய போதனைகளுக்கு ஒரே அடிப்படையாக விளங்குவது வாழ்வின் மூலாதாரமான முரணை அறியாமை தான். இரு கூட்டத்தாருக்கும் எப்போதும் பகைமைதான். உலகம் முழுவதையுமே இவர்கள் தங்கள் பூசல்களால் நிரப்பிவிட்டனர். இவர்களுடைய சண்டைகளின் நடுவில், ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் அருள் சுரந்து அறிவுறுத்திய வாழ்க்கை விளக்கங்கள் மறைந்து ஒதுங்கிவிட்டன. இதனால் உண்மையான நன்மைக்குரிய பாதை புலனாகவில்லை.

முதலாவது கூட்டத்தார், செத்த பிறகு ஏற்படும் எதிர்கால வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டி, மெய்யறிவுக்குரிய போதனைகளை ஒழித்துக் கட்டுகின்றனர். இரண்டாவது கூட்டத்தார், இந்தப் போதனைகள் எல்லாம் பழங்கால அறியாமையால் விளைந்த பழக்கங்களின் சின்னங்கள் என்றும், மனிதனின் உடல் வாழ்வு தவிர வாழ்க்கையைப் பற்றி வேறு கேள்விகளை எழுப்பாமலிருப்பதே சமூக முன்னேற்றப் பாதை என்றும் அறுதியிட்டு உறுதி கூறுகின்றனர்.


  1. ஆரிய ரிஷிகள்
  2. இவர் சீன தேசத்து ஞானி. இவர் கிறிஸ்து நாதருக்கு 600 ஆண்டுகள் முந்தியவர்.
  3. இவரும் சீன அறிஞர்.