வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/தவறான கொள்கைகள்

விக்கிமூலம் இலிருந்து
2
தவறான கொள்கைகள்

றிவின் சிகரத்தை அடைந்திருந்த தீர்க்கதரிசிகள் அறிவுறுத்திய கொள்கைகள் தம் ஆழ்ந்த கருத்துக்களால் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்திருந்தன. அந்த ஞானிகளைச் சாதாரண மக்கள் மானிட நிலைக்கு மேம்பட்ட தெய்வ அம்சங்களாகவே கருதி வருவதைக் கொண்டு அவர்களுடைய அறிவுரைகளின் மகிமையை உணரலாகும். வெறும் மிருக வாழ்க்கையில் நம்பிக்கையுள்ளவர்கள், இதையே காரணமாகக் கொண்டு, இந்தப் போதனைகள் தவறானவை, காலங் கடந்தவை என்று வாதிக்கின்றனர்.

அரிஸ்டாட்டல்,[1] பேகன்,[2] காம்டே[3] முதலிய தத்துவ நூலாசிரியர்களின் கொள்கைகள் முக்கியமானவை அல்ல. அவை சிலருடைய ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுவதைத் தவிர மக்களிடையே பரவ முடியவில்லை. அவை தவறானவை; மக்கள் மனங்களைக் கவர முடியாதவை. மக்கள் அவைகளை ஏற்றுக்கொண்டிருந்தால், அவைகளைச் சுற்றித் தெய்வீகமான கதைகளைக் கட்டிப் போற்றி வந்திருப்பார்கள். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள அந்தக் கொள்கைகளிலேயே உண்மை பொதிந்திருப்பதாக இக்காலத்தில் சிலர் சாதனை செய்கின்றனர்.

வேத ரிஷிகள், புத்தர், ஜாரதுஷ்டிரர்,[4] லாவோத்ஸே, கன்பூஷியஸ், இஸையா, கிறிஸ்து ஆகியோருடைய கொள்கைகள் மூட நம்பிக்கையைச் சேர்ந்தவை என்றும், தவறானவை என்றும் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையை அடிமுதல் நுனிவரை மாற்றி அமைத்திருக்கின்றன அல்லவா!

‘மூட நம்பிக்கைகள்’ என்று கருதப்படும். அந்தக் கொள்கைகளைப் பின்பற்றிக், கோடானு கோடி மக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர்; இன்றும் வாழ்ந்து வருகின்றனர். அக் கொள்கைகள் காலக் கிரமத்தில் மாறுதலடைந்து சில புதுச் சேர்க்கைகளோடு இருப்பினும், உண்மையான நலன் எது என்பது பற்றி மனிதர் கேட்கும் கேள்விகளுக்கு அவை இப்போதும் விடையளித்து வருகின்றன. பற்பல நூற்றாண்டுகளில் தோன்றும் பேரறிஞர்களின் சிந்தனை ஊற்றை அவைகளே திறந்து வைக்கின்றன; அவர்களுடைய சிந்தனைகளுக்கு உற்ற துணையாகவும் விளங்குகின்றன.

எதிர்க் கட்சியார் போற்றும் கொள்கைகளோ, அவர்களிடையிலே மட்டும் உலவி வருகின்றன. பொது மக்கள் அவைகளைத் தீண்டுவதில்லை. அவைகளுக்கு எப்போதும் இடைவிடாமல் ஆட்சேபங்கள் தோன்றிக் கொண்டே யிருக்கின்றன. சில சமயங்களில் அக் கொள்கைகள் பத்து ஆண்டுகள் கூட நிலைத்து நிற்பதில்லை. அவை தோன்றும்போதே மக்கள் அவைகளை மறந்துவிடுகின்றனர். ஆயினும் இந்தக் காரணங்கள் அனைத்தும் எதிர்க் கட்சியாரைச் சிறிதும் பாதிப்பதே யில்லை.

மனித சமுதாயத்தைப் பற்றிய இக் கால ஆராய்ச்சிகள் சொல்லும் பாதை தவறாயுள்ளது. பண்டைத் தீர்க்கதரிசிகளின் கொள்கைகளுக்கு இந்த ஆராய்ச்சிகளில் உரிய மதிப்பு அளிப்பதில்லை. எந்தக் கொள்கைகளால் சமுதாயம் நன்கு வாழ்ந்துவந்ததோ, எவைகளால் அது உருவாக்கப்பெற்றதோ, எவைகளைப் பின்பற்றிச் சமுதாயம் இன்றும் வாழ்ந்து உருவாகிவருகின்றதோ, அவைகள் இதுகாலை இகழப்படுகின்றன.

உலகத்தைப் பற்றிய செய்திகள், புள்ளி விவரங்கள் அடங்கிய நூல்களில் இப்போது உலக மக்கள் பின்பற்றும் சமயங்கள் ஆயிரம் இருப்பதாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. பௌத்த தர்மம், இந்து மதம், கன்பூஷியஸ் மதம், டாவோ சமயம், கிறிஸ்தவ மார்க்கம் ஆகியவைகளும் அந்த ஆயிரத்துள் அடக்கம் போலும்! ஆயிரம் சமயங்கள் ! இந்தக் கூற்றை நம் காலத்து மக்களும் நம்புகிறார்கள் ! ‘ஆயிரம் மதங்கள் இருக்கின்றன; எல்லாம் ஆராய்ச்சிக்குப் பொருத்தமில்லாதவை; நாம் ஏன் அவைகளை வீணாகப் பயில வேண்டும்?’- இப்படிக் கூறும் மனிதர்களே, ஸ்பென்ஸர்,[5] ஹெம் ஹோல்ட்ஸ்[6] முதலியோர் சமீபத்தில் கூறிய விஷயங்களைக்கூட நாம் அறிந்திராவிட்டால் கேவலம் என்று கருதுகின்றனர். வேத ரிஷிகள், புத்தர், கன்பூஷியஸ், லாவோத்ஸே, எபிக்டெடஸ்,[7] இஸையா-இவர்களுடைய பெயர்களையாவது அந்த மனிதர்கள் கேள்விப்பட்டிருப்பார்களோ என்னவோ!

இக் காலத்தில் மக்கள் பின்பற்றும் சமயங்கள் ஆயிரமல்ல, மூன்றுதாம் என்பது அவர்களுக்குப் புலனாவதில்லை. சீன மதம், இந்திய மதம், யூத-கிறிஸ்தவம் (இதன் கிளை இஸ்லாம்) என்பவையே அந்த மூன்று சமயங்கள். இந்தச் சமயங்களைப் பற்றிய நூல்களை ஏழெட்டு ரூபாய்க்கு வாங்க முடியும். இரண்டு வாரங்களில் அவைகளைப் படித்து முடிக்கலாம். (காடுகள், ஒதுக்கமான தீவுகள் முதலிய இடங்களில் வசிக்கும்) நூற்றுக்கு ஏழு பேர் நீங்கலாக மற்ற மனித சமுதாயம் முழுதும் இந்த நூல்களைப் பின்பற்றியே வாழ்ந்து வந்திருக்கிறது; இன்றும் வாழ்ந்து வருகின்றது. இந் நூல்கள் மானிட அறிவின் களஞ்சியங்கள். இன்றைய சமுதாயம் அடைந்துள்ள நிலைக்கு இவையே காரணங்கள். இந்த விஷயங்களில் எதுவும் மேற்கூறிய மனிதர்களுக்குப் புலனாவதில்லை.

சாதாரண மக்கள் இந்த நூல்களின் கொள்கைகளைப் புரிந்துகொள்வது கடினம் என்றால், அது அவ்வளவு பெரிதன்று. ஆனால், படித்த வகுப்பினரே இவைகளை நுணுக்கமாய்ப் பயிலாமல் அலட்சியம் செய்து தள்ளுகின்றனர். இக் காலத்துத் தத்துவ ஞானிகள் கூட இந் நூல்களைக் கண்ணாலாவது பார்க்க வேண்டுமென்று கருதுவதில்லை. வாழ்க்கையில் முரண்பாடு இருப்பதையே காண முடியாதவர்களுக்கு இவைகளால் என்ன பயன்?

கண்களில் பார்வையுள்ளவர்கள் தம் முன்னால் காண்பவைகளை அறிந்து விளக்கிச் சொல்லுவார்கள். ஆனால் குருடனோ, கையிலுள்ள தன் கழியால் தட்டிப் பார்த்துக்கொண்டே நடக்கிறான் ; கழியில் தட்டுப் பட்ட பொருள்களைத் தவிர வேறு எதுவுமே இல்லை யென்று அவன் கூறுவான்!

போலி விஞ்ஞானிகள் கூற்று

‘வாழ்க்கை என்பது பிறப்பிலிருந்து மரணம் வரை ஒரு பிராணிக்கு ஏற்படும் நிகழ்ச்சிகள். ஒரு மனிதன், நாய், அல்லது குதிரை பிறப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பிராணிக்கும் தனி உடலுண்டு. இந்த உடல் உயிரோடிருந்து, பிறகு மரிக்கின்றது. மரணம் என்பது உடல் பதனழித்து மற்றப் புழுப் பூச்சிகளுக்கு உணவாதலே. இவ்வாறு ஒரு பிராணி உயிரோ டிருந்து தீர்ந்து போகிறது. வாழ்க்கை இருந்தது; வாழ்க்கை முடிந்தது. இதயத் துடிப்பு, மூச்சுப் பைகள் மூச்சு வாங்கி விடுதல், உடல் பதனழியாமல் இருத்தல் ஆகியவற்றால் மனிதன், நாய், அல்லது குதிரை வாழ்வதை நாம் அறிகிறோம். இதயத் துடிப்பு நின்று போகிறது. மூச்சுப்பைகள் சுவாசிப்பதில்லை. உடல் உலைய ஆரம்பிக்கிறது. அப்போது மரணம் வந்துவிட்டது, வாழ்க்கை முடிந்துவிட்டது என்று அறிகிறோம். எனவே, வாழ்க்கை பிறப்புக்கும் சாவுக்கும் நடுவிலுள்ள காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொகுதியே இதைவிட வேறு எது தெளிவாயிருக்க முடியும்?’

விலங்கு நிலையிலிருந்து சற்று மேலே உயர்ந்து வரும் மனிதன், ஆதி முதல் வாழ்க்கையைப் பற்றி இப்படித்தான் கருதி வந்தான். இந்தக் கேவலமான பழைய கருத்தே இக் காலத்தில் விஞ்ஞானத்தின் பெயரால் கூறப்படுகிறது. மனித சமுதாயம் ஆராய்ச்சிக்காகக் கண்டுபிடித்துள்ள நுண்ணிய கருவிகளை யெல்லாம் பயன்படுத்திக் கொண்டு விஞ்ஞானம் கண்டுபிடித்துக் கூறுவது இந்தப் போலிக் கொள்கைதான். ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன், எவ்வளவோ முயற்சியாலும் உழைப்பாலும், மனிதனை அறியாமை இருளிலிருந்து கரையேற்றி விட்டதை மாற்றி, மறுபடியும் அவனை அதே அந்தகாரத்திற்கு அழைத்துச் செல்வதே இக் கொள்கையின் நோக்கம்.

வாழ்க்கையை உணர்ச்சியால் விளக்க முடியாதாம். நன்மை அடைய வேண்டும் என்ற ஆவலே நம் உணர்ச்சியில் வாழ்க்கையாகத் தென்படுகிறது என்றால், இந்தக் கொள்கையுடையார் அது வெறும் கானல் நீர் என்பர். உயிருள்ள பொருள்களை விட்டுவிட்டு அஃறிணைப் பொருள்களை ஆராய்ந்து பார்த்தால் தான் வாழ்க்கையை அறிந்து கொள்ள முடியுமாம் ! அந்த ஆராய்ச்சியின் மூலம் அசேதனப் பொருள்களின் விதியை அறிந்து, அந்த விதியின் உதவியால் வாழ்க்கையின் விதியையும், மனித வாழ்வின் விதியையும் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.[8]

இந்தப் போலிப் போதனையின் அடிப்படையான தவறு இதுதான் : வெளிப்படையாகத் தோன்றும் மனிதனுடைய மிருக வாழ்க்கையை மட்டும் எடுத்துக் கொண்டு, அதுவே அவனுடைய முழு வாழ்க்கை என்று வைத்துக்கொள்கிறது. மனிதன், விலங்குகள், தாவரங்கள், சடப் பொருள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலெல்லாம் வெளிப்படையாகத் தெரியும் விஷயங்களையே பரிசீலனை செய்கிறது. உயிர் இயங்குவதால் ஏற்படும் தோற்றங்களை மட்டும் பார்த்துவிட்டு, உயிரையே ஆராய்வதாக இடைவிடாமல் தம்பட்ட மடிக்கிறது. இந்த ஆராய்ச்சி சிக்கலாயும், பல திறப்பட்டதாயும், குழப்பம் விளைப்பதாயும் இருக்கிறது. இதற்காகச் செலவிடும் நேரமும் முயற்சியும் அளவற்றவை.

இந்த ஆராய்ச்சி, வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பற்றியதுதான் என்பதை மக்கள் மறந்து விடுகின்றனர். சடப் பொருள், செடிகள், விலங்குகள் இவைகளின் தோற்றத்தில் தெரியும் குணங்களை ஆராய்வதே வாழ்க்கையின் ஆராய்ச்சி என்று அவர்களும் நம்ப ஆரம்பித்துவிடுகின்றனர்.

பொம்மலாட்டத்தில் திரைக்குப் பின்னாலிருந்து காட்டும் பொம்மைகளின் நிழல்கள் ஆடுவது தெரிகின்றது. அந்த நிழல்களைத் தவிர வேறு எதையும் பார்க்கக் கூடாது என்றும், முக்கியமாக எவை நிழல்களுக்குக் காரணமானவையோ அந்தப் பொம்மைகளை எட்டிப் பார்க்கக் கூடாது என்றும், பொம்மைகளே இல்லாமல் நிழல்கள் தாமாகவே உண்டாகிவிட்டன என்றும் பொம்மலாட்டக்காரன் கூறுவது எப்படியோ அப்படித்தான் இருக்கிறது இந்த ஆராய்ச்சி!

போலி விஞ்ஞானம் இக்காலத்தில் இதைத்தான் செய்து வருகிறது. வாழ்க்கையின் முக்கிய லட்சியம் நன்மையடைதல் என்று மனித உணர்வு எடுத்துக் காட்டுகிறது. அந்த லட்சியத்தை ஒதுக்கி விட்டுப் போலி விஞ்ஞானம் ஆராய்ச்சித் திறனில்லாத பாமர மக்களோடு கைகோத்துக் கொண்டு ஆடுகின்றது.

போலி விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாழ்க்கையின் இலட்சியங்கள் எவை? ஒவ்வொரு மனிதனும் தான் நசித்துவிடாமல் காத்துக்கொள்ளல், மனித சமூகம் நசித்துவிடாமல் காத்தல், உயிர் வாழ்வதற்காகப் போட்டியிடல்- இவைகளே அந்த லட்சியங்கள். இவை மனிதனுடைய இயற்கையான லட்சியங்கள் அல்ல ; ஆனால், இவைகளைப் போலி விஞ்ஞானம் அவன் தலைமீது ஏற்றிவைக்கின்றது.

உண்மையை அறிய முடியாத இந்த விஞ்ஞானம் பண்பற்ற பாமர மக்களின் ஆசைக்குத் தக்கபடி தாளம் போடுகிறது. மனிதன் உயிர் வாழ்வதற்காகவும், தன் இனத்தை விருத்தி செய்து கொள்வதற்காகவும், சமூகத்தைப் பாதுகாப்பதற்காகவும் மற்ற மிருகங்களைப் போல் போராடி வருவதே வாழ்க்கை என்று இந்த விஞ்ஞானம் உறுதிப் படுத்துகிறது. மனிதன், தன் அறிவு கொஞ்சம் விருத்தியானவுடனேயே, இக்கொள்கை தன் உணர்ச்சிக்குப் பொருத்தமில்லை என்று உதறிவிட்டான்.

வழக்கமே வழிகாட்டி

போலிப் போதனைகளைக் கேட்டு மயக்கமடைந்த ஜனங்கள், ‘வாழ்க்கையை விளக்க வேண்டிய அவசியமில்லை. எது வாழ்க்கை என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவே போதும். ஆகையால், நாம் பேசாமல் வாழ்வோம்’ என்று சொல்லலாம். வாழ்க்கையையும், அதன் நன்மை எதிலிருக்கிறது என்பதையும் அறியாமலே, அவர்கள் தாங்களும் வாழ்வதாக எண்ணிக்கொள்வார்கள். வெள்ளத்திலே அலைகள் ஒருவனை அடித்துக் தள்ளிக்கொண்டு போகும்போது, அவன் தான் விரும்பிய இடத்திற்கு நீந்திச் செல்வதாக எண்ணுவது போல் தான் இந்த எண்ணமும்.

குழந்தை வளர்ந்து வரும்போது அதற்கு வாழ்க்கையின் சிக்கலோ, முரண்பாடோ, எதுவும் தெரியாது. தன்னைச் சுற்றி யிருப்பவர்களைப் பார்த்துப் பார்த்து அதுவும் பழகிக்கொள்கிறது. சுற்றியிருப்புவர்கள் போலி விஞ்ஞானக் கொள்கையைப் பின்பற்றினாலும், மத ஆசாரங்களில் வெளிச் சடங்கு மட்டும் பின்பற்றினாலும், குழந்தையும் அவர் அநுசரித்து நடந்துகொள்ளும். அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் திருப்தியடைவது போலவே அதுவும் திருப்தியடையும்.

ஏழைக் குழந்தை தன் பெற்றோர்கயே பின்பற்றும். நிறையப் பணமும் உணவும் கிடைக்க வேண்டும். ஆனால், வேலை குறைவாயிருக்க வேண்டும் -இதுவே வாழ்க்கை என்று அது கருதும். செல்வக் குழந்தை, தன் பெற்றோர்களைப் போல், செல்வங்கள் சேர்ப்பதும், கௌரவங்கள் பெறுவதுமாகக் காலத்தைச் சந்தோஷமாக கழிப்பதே வாழ்க்கை என்று கருதும் இந்த இரண்டு குழந்தைகளின் நோக்கமும் ஒன்று தான் ; முடிந்தவரை தங்கள் வாழ்க்கை சுகமாய் கழிய வேண்டும்.

ஏழை தன் சுகத்தைப் பெருக்கிக்கொள்ள விரும்புகிறான் ; அதற்குத் தேவையான அறிவைத் தேடி அலைகிறான். பணக்காரனும் தன் சுகத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புகிறான் ; தன் களைப்பு நீங்கி, நேரம் இன்பகரமாகக் கழிவதற்காக விஞ்ஞானத்தையும் கலைகளையும் பற்றிய அறிவைத் தேடுகிறான். பிற்காலத்தில் இவர்களுக்குக் குடும்பங்கள் ஏற்பட்டுப் பெருகும்போது, உடல் வாழ்வுக்கு அவசியமான நன்மையை அடைவதற்கு ஆத்திரமும் அதிகமாகின்றது.

அந்த ஏழைக்கோ, பணக்காரனுக்கோ ஏதாவது ஒரு சமயம் சந்தேகம் தோன்றலாம் : ‘ஒரு லட்சியமும் அல்லாமல் இது என்ன வாழ்க்கை ? கேவலம் உயிர் வாழ்வதற்காகப் போராடுவது ஏன் ? நம் குழந்தைகளும் அப்படித்தானே போராடியாக வேண்டும்? இன்பங்களைத் தேடித் தேடி ஏமாந்துபோய், முடிவில் துன்பங்களைப் பெறுவது எதற்காக? நமது கதிதானே நம் மக்களுக்கும் ஏற்படும்?’ என்று அவர்கள் சிந்திக்க நேரலாம். இந்தக் கேள்விகளுக்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்னரே பதில் கூறப்பட்டிருக்கிறது. மனித சமூகத்திற்கு அறத்தை உணர்த்திய ஆதி மகான்கள் வாழ்க்கையைப் பற்றி அருளிய விளக்கங்களே இவைகளுக்குத் தக்க பதிலாகும். ஆனால், இந்த விளக்கங்களைத் தெரிந்து கொள்ளப் பலருக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை.

போலி விஞ்ஞானிகள், போலிச் சமயவாதிகளுடைய கொள்கைகள் இந்த விளக்கங்களைக் கவனமாக மூடி மறைத்துவிடுகின்றன. மிகச் சிலரே இவைளைக் காண முடிகிறது.

வாழ்க்கையை ஏன் துன்பமயமாக இருக்கிறது ?

போலிச் சமயவாதிகள் இந்தக் கேள்விக்குக் கூறும் விடை இது தான் : ‘வாழ்க்கை துன்பமயந்தான். எப்போதும் இப்படியே இருந்து வந்தது ; இனியும் இப்படித்தான் இருக்கும். வாழ்க்கையின் நலன் என்பது இப்போது ஒன்றும் கிடைக்காது. ஒருவனுடைய பிறப்புக்கு முன்னும், மரணத்திற்குப் பின்னாலுமே அது கிடைக்கும். எதிர்காலத்தில் நன்மை கிடைக்க வேண்டுமானால், எங்கள் கொள்கைகளை நம்பி, நாங்கள் விதித்துள்ள சமயச் சடங்குகளை முறையாக நடத்தி வரவேண்டும் ?’

சந்தேகம் கொண்டவனுக்கு இந்தப் பதில் திருப்தியளிப்பதில்லை. அவன் இதை ஆராய்ந்து கூடப் பார்க்காமல் ஒதுக்கிவிடுகிறான். சமயத் தலைவர்களும் தங்கள் வாழ்க்கையில் தன்னைப் போலவே தத்தளிப்பதை அறிந்து, அவன் விஞ்ஞானம் வழி காட்டுமா என்று பார்க்கிறான். போலி விஞ்ஞானிகள் அவன் முன்பு தென்படுகின்றனர்.

அவர்கள் கூறும் பதில் இதுதான் : ‘வெளிப்படையாகத் தெரியும் மிருக வாழ்க்கை தவிர வாழ்வைப் பற்றிய மற்றப் போதனைகளெல்லாம் அறியாமையால் தோன்றியவை. உன் சந்தேகங்கள் வெறும் கனவுகள். பிரபஞ்சத்திலே அண்டங்கள், பூமி, மனிதன், விலங்கினம், தாவர வர்க்கம் ஆகியவற்றின் வாழ்வு குறிப்பிட்ட நியதிகளின்படியே நடந்து வருகிறது. அந்த விதிகளையே நாங்கள் கண்டுபிடித்துப் போதிக்கிறோம். அண்டங்களின் ஆரம்பம், மனிதன், மிருகங்கள், சகல சடப்பொருள்களின் தோற்றம் ஆகியவை பற்றி நாங்கள் பரிசீலனை செய்கிறோம். இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் சூரியன் காலக்கிரமத்தில் குளிர்ச்சியடைந்து போனால், உங்களுக்கு என்ன நேரும் என்பதைக்கூட ஆராய்கின்றோம். மனிதன், விலங்கு, செடி கொடிகள் ஆகிய எல்லாவற்றின் முந்திய நிலைமை, இனிவரும் நிலைமை முதலியவற்றை நாங்கள் பரிசீலனை செய்கிறோம். நாங்கள் எதைச் சொன்னாலும் உடனே அதனைக் கண்முன்பு நிரூபித்துக் காட்டமுடியும். எங்களுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளால் மனிதனுடைய துன்பம் குறைந்திருக்கிறது. ஆனால், உன் வாழ்க்கையைப் பற்றியோ, நீ நாடும் நன்மையைப் பற்றியோ, உன்னைப் பார்க்கிலும் அதிகமாக எங்களுக்கு ஒன்றும் தெரியாது. ஏதோ நீ உயிரோடு இருக்கிறாய். அவ்வளவு தான்! கூடியவரை நல்ல முறையில் வாழ முயற்சி செய்!’

போலியான சமயவாதிகள், விஞ்ஞானிகள் இரு திறத்தாரிடத்திலும் சந்தேகம் நீங்கக்கூடிய விடை கிடைப்பதில்லை. எனவே மனிதன், தன் பழைய நிலைமை மாறாமல், வாழ்க்கைக்குத் தன் உணர்ச்சிகளையே வழிகாட்டியாகக் கொள்கிறான்.

காலையிலே துயிலெழுந்து இரவில் மீண்டும் துயிலச் செல்லும்வரை மனிதன் எத்தனையோ செயல்களில் ஈடுபடவேண்டியிருக்கிறது. நூற்றுக் கணக்கான வேலைகளில் செய்து முடிக்க வேண்டியவை எவை என்று ஒவ்வொரு நாளும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. இதற்கு மேலே கூறிய சமயவாதிகளின் கொள்கையோ, விஞ்ஞானிகளின் கொள்கையோ வழிகாட்ட முடியவில்லை. வழிகாட்டி இல்லாமல் மனிதன் தன் செயல்களைத் தேர்ந்து கொள்வதும் கஷ்டம். ஆகவே அவன் தன் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல், வெளியிலிருந்து கிடைக்கும் வேறொரு வழிகாட்டியின் உதவியை நாடுகிறான். அந்த வழிகாட்டி என்றும் இருப்பது. இன்றும் எல்லா மக்கட் சமூகங்களிலும் நிலைத்து நிற்கிறது. அதற்கு ஆராய்ச்சி அறிவு எதுவும் தேவையில்லை மக்களுடைய பெரும்பாலான செயல்களுக்கு அதுவே காரணமாயுள்ளது. அதன் பெயர் தான் வழக்கம்.

வாழ்க்கை என்ன என்பதையே அறியாத மக்களை வழக்கம் முற்றிலும் ஆட்கொண்டு விடுகின்றது. வழக்கத்தைப்பற்றி விளக்கிச் சொல்ல முடியாது. காலத்திற்கும் இடத்திற்கும் தக்கபடி வேறுபட்ட விஷயங்களும் செயல்களும் வழக்கம் என்பதில் அடங்கியிருக்கின்றன. சீன மக்களின் வழக்கம் தம் முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்தல். முஸ்லிம்களின் வழக்கம் புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்லுதல். இந்துக்களின் வழக்கம் பிரார்த்தனை செய்தல். இவ்வாறு இடங்களுக்கும் சமூகங்களுக்கும் தக்கபடி வழக்கம் மாறுபட்டிருக்கும். வாழ்க்கை முழுவதற்கும் உரிய செயல்களை வழக்கமே விதித்துவிடுகின்றது. உணவு தயாரித்தல், வீட்டில் பொருள்களை அடுக்கிவைத்தல், குழந்தைகளின் கல்வி, ஜனனம், மரணம், திருமணம் ஆகிய எந்த விஷயத்திற்கும் வழக்கமே வழிகாட்டியாக விளங்குகின்றது. உலகில் பெரும்பாலான மக்கள் அதையே பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களைப் பார்த்துத் தானும் அவர்களைப் போலவே நடந்துவருகிறான். வழக்கத்தைப் பின்பற்றுவோர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்றோ, எந்த நோக்கத்தோடு செய்கிறார்கள் என்றோ வினவினால், எல்லாவற்றையும் நன்றாக அறிந்துகொண்டே செய்வதாக நம்பிக்கையுடன் பதில் கூறுவார்கள்.

ஒருவரைப் பார்த்து ஒருவர் தவறான பாதையில் இறங்குகின்றனர். மக்கள் காரியங்களுக்கு உரிய காரணங்கள் தங்களுக்குப் புரியாவிட்டால், அவைகள் எங்கோ கோபமாயமாய் மறைந்திருப்பதாக நம்புகின்றனர். மொத்தத்தில் வழக்கத்தால் ஏற்படும் செயல்களே ‘கடமைகள்’ என்றும், ‘புனிதமான கடமைகள்’ என்றும் வழங்கி வருகின்றன.

புதிதாக உலகத்திலே தோன்றும் குழந்தைகள் வளர்ந்து, வயது வந்த பிறகு, வாழ்க்கை என்ற பெயரால் இங்கே நடைபெற்று வரும் குழப்பத்தைப் பார்க்கின்றனர். இந்தக் குழப்பத்தில் தலை நரைத்த கிழவர்களும் பங்குகொண்டிருப்பதைக் கவனிக்கின்றனர். அறிவற்ற இந்தக் குழப்பமே வாழ்க்கை என்று அவர்கள் திடமாக நம்பவும் முற்படுகின்றனர். அவர்ளும் இவ்வுலகின் வாயிற்படியிலேயே நின்று, வருவார் போவார்மீது மோதிவிட்டுத் தங்கள் காலம் முடிந்தபின் தாங்களும் சென்றுவிடுகின்றனர்.

ஒரு மண்டபத்தினுள்ளே பொதுக்கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது. வெளியிலே மண்டப வாயிலிலும் ஜனத்திரள் முண்டி நெருக்கிக்கொண்டு நிற்கிறது. அந்த வெளிக்கூட்டத்தினுள்ளே சிக்கி உதையும் மிதியும் வாங்கிக்கொண்டு திரும்பிய ஒருவன், தானும் சொற்பொழிவில் கலந்துகொண்டதாக எண்ணுவது போல்தான் மேலே கூறியுள்ள அநுபவமும்.

மலைகளைக் குடைகிறோம்; கடல்களின் வழியே கண்டங்களைச் சுற்றி வருகிறோம்; மின்சாரம், பூதக் கண்ணாடி, தூரதிருஷ்டிக் கண்ணாடி முதலிய கருவிகளைக் கண்டுபிடித்திருக்கிறோம்; போர்கள், சட்ட சபைகள், அறநிலையங்கள், சர்வ கலாசாலைகள், ஆராய்ச்சி மன்றங்கள், கண்காட்சி சாலைகள், அரசியல் கட்சிகள், கட்சிச் சண்டைகள் - இவைகளெல்லாம் வாழ்க்கையல்லவா ?

மக்கள் எவ்வளவோ வர்த்தகம் செய்கிறார்கள்; போர்கள் நடக்கின்றன; போக்குவரத்து சாதனங்கள் பெருகுகின்றன; விஞ்ஞானம், கலை முதலியவைகளுக்காக ஜுர வேகத்தில் வேலைகள் நடக்கின்றன. ஆயினும் இவை யாவும் மேலே கூறிய மண்டப வாயிலில் நெருக்குண்ட கும்பலின் அறிவற்ற குழப்பத்தைப் போன்று, வாழ்க்கையின் முன்வாயிலில் நடக்கும் பூசலேயாகும்.


  1. Aristotle
  2. Bacon
  3. Comto
  4. Zoroaster
  5. Spencer
  6. Helmholtz
  7. Epictetus
  8. உண்மையான விஞ்ஞானம் இப்படிக் கூறுவதில்லை. சக்தி, சடப்பொருள், உயிர் (Force, matter and life) ஆகிய மூன்றும் பரிசீலனைக்கு உரியவையல்ல என்று விஞ்ஞானத்தின் பல பிரிவுகளும் அவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளன. ஆகவே, அவைகளை ஆராயாமல் மேற்கொண்டு செய்ய வேண்டிய ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளன. இத்தகைய விஞ்ஞானத்தால் கேடு விளையாது. ஆனால் தத்துவங்களை விளக்க முற்படும் போலி விஞ்ஞானம் அப்படியன்று. சடப்பொருள், சக்தி, உயிர் ஆகியவைகளைப் பற்றி ஆராய்ச்சி மூலமே அறிந்து விடலாம் என்பது அதன் கூற்று. அது சடப் பொருளையோ, சக்தியையோ, உயிரையோ, ஆராயவில்லை. அவைகளின் சம்பந்தங்களையும், உருவங்களையுமே (Relations and forms) ஆராய்ந்து கொண்டிருக்கிறது.