வாழ்க்கை (லியோ டால்ஸ்டாய்)/மிருக வாழ்க்கையும் மனித வாழ்க்கையும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
3
மிருக வாழ்க்கையும் மனித வாழ்க்கையும்

நல்ல வாழ்க்கை வேண்டும்; வாழ்வதில் அர்த்தம் இருக்க வேண்டும் என்பதுதான் ஆன்மாவின் அந்தரங்க வேட்கை. மரணத்துக்குப் பின்பே நல் வாழ்வு உண்டாகும் என்பதை எவ்வளவு அழுத்திச் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும், மனிதனுக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை.

எதிர்கால வாழ்வில் நம்பிக்கை வைக்க முடியுமா ? இப்போது கிடைத்துள்ள வாழ்வே பொருளற்றதாயிருக்கும் போது, இனி வருவது பொருத்தமான பெருவாழ்வாயிருக்க முடியுமா? அது சரியானதாயிருக்க முடியாது என்றே மனிதன் நம்புகிறான்

ஒருவன் தனக்காகவே வாழ்வதா ? தனிப்பட்ட வாழ்க்கை தீமையாயும் பொருளற்றதாயும் இருக்கிறதே! மனிதன் தன் குடும்பத்திற்காக வாழ்வதா, அல்லது தான் வசிக்கும் இராஜ்யத்திற்காகவோ, சமுதாயத்திற்காகவோ வாழ்வதா ? எனது தனி வாழ்க்கை அர்த்தமற்ற துன்ப மயமாக இருப்பதை நான் அறிவேன். இதுபோல்தானே மற்ற மனிதர் ஒவ்வொருவருடைய நிலையும் இருக்கும்? எண்ணற்ற மக்கள் அறிவுக்குப் பொருத்தமில்லாது, பொருள் ஒன்றும் இல்லாது, பயிர்கொண்டு உலவி வருகின்றனர். இவர்கள் அனைவரும் எல்லோருக்கும் பொருத்தமாயுள்ள ஒரே நன்மையான வாழ்வில் ஒன்றுகூடிவிட மாட்டார்கள். தனிப்பட வாழ்தலின் பொருள் என்ன ? இதை அறியாமல், மற்றையோர் செய்வதை நானும் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால், அவர்களும் என்னைப் போலவேதான் இருக்கிறார்கள் ; அவர்கள் செய்வதை ஏன் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது என்பது எனக்குத் தெரியும்.

ஒரு காலம் வருகிறது ; அப்போது பகுத்தறிவு உணர்ச்சி போலிக் கொள்கைகளைத் தாண்டி வளர்ந்து விடுகிறது. வாழ்வின் நடுப் பாதையிலே மனிதன் நின்று யோசிக்க ஆரம்பிக்கிறான். வாழ்வின் பொருளைப் பற்றி அவன் வினவுகிறான்.

போலிக் கொள்கைகள் அம்பலமாகும் காலம் வந்துகொண் டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் விரைவில் உண்மையைத் தெரிந்துகொள்வர். அப்போது, வறுமையால் கசக்கிப் பிழியப்பட்டவர்களும், போக வாழ்க்கையில் புத்தியைப் பறிகொடுத்தவர்களுமே தங்கள் வாழ்வின் பொருளற்ற தன்மையையும் இழி நிலையையும் உணராமல் இருப்பார்கள்.

நாளுக்கு நாள் அதிக மக்கள் விழிப்படைந்து வருகின்றனர். மானிட வாழ்வின் அடிப்படையான முரண்பாடு பயங்கரமான தெளிவுடனும், வேகத்துடனும் பெரும்பாலான மக்களுக்கு விளக்கமாகி வருகிறது.

விழிப்படைந்த மனிதன் தனக்குத் தானே இவ்வாறு சொல்லிக் கொள்கிறான் : ‘என் வாழ்க்கை முழுதும் எனது சொந்த நலனையே தேடிக்கொண்டிருக்கிறது. அத்தகைய நலன் இருக்க முடியாது என்றும், நான் ஏதேது செய்தாலும், என்னென்ன வெற்றிகள் பெற்றாலும், எல்லாம் முடிவில் துன்பம், மரணம், அழிவிலே போய்த்தான் சேரவேண்டும் என்றும் என் பகுத்தறிவு கூறுகின்றது. நான் விரும்புவதற்கு நேர் மாறாக, என்னிலும், என்னைச் சுற்றிலும், தீமையும், மரணமும், மடமையுமே அடர்ந்திருக்கின்றன. நான் என்ன செய்ய வேண்டும் ? நான் எப்படி வாழமுடியும் ?’ இந்த வினாக்களுக்குப் பதில் எதுவும் தென்படுவதில்லை.

அவன் சுற்றிச் சுற்றிப் பார்க்கிறான். மறுமொழி கிடைப்பதில்லை. ஆனால், அவன் கேளாத கேள்விகளும் விடைகள் வந்து குவிகின்றன. விவரம் தெரியாத ஜனக் கும்பல்களில் ஒருவரைப் பார்த்து ஒருவர் ஏதேதோ செய்துகொண்டிருக்கும் சந்தடியே பலமாயிருக்கிறது.

அவனுடைய பரிதாப நிலையை எவரும் உணர்வதில்லை. ‘எல்லோரும் அறிவற்றுப் போனார்களா? அல்லது நான் தான் அறிவை இழந்துவிட்டேனா ?’ என்று அவன் சிந்திக்கிறான். பகுத்தறிவோடு கூடிய அவனுடைய உள்மனம் கூறுவது பொருளற்றதாக இருக்க முடியாது என்று அவன் தீர்மானிக்கிறான். ‘உலகம் முழுதும் எதிராக இருந்து, என் உள்மனம் மட்டும் தனித்து நின்றாலும், அதையே நான் நம்புவேன்!’ என்ற முடிவுக்கு வருகிறான்.

‘நான்’ என்ற உணர்ச்சியுள்ள அவனுடைய அகம் இரண்டு பிரிவாகக் காட்சியளிக்கிறது : ஒன்று, அவன் வாழவேண்டும் என்று பணிக்கிறது. மற்றது, (பகுத்தறிவு) அவன் வாழ முடியாது என்று கூறுகிறது.

மனிதன் தான் இரு பிரிவாகப் பிரிந்திருப்பதை உணர்கிறான். இந்தப் பிரிவு அவனைச் சித்திரவதை செய்து, அவன் ஆன்மாவையே பிளக்கிறது.

இந்தப் பிரிவுக்கும் துன்பத்திற்கும் தன் அறிவே காரணம் என்று அவனுக்குத் தோன்றுகிறது.

அந்த அறிவு- பகுத்தறிவு-மனிதனுடைய விலை மதிக்க முடியாத தலைசிறந்த செல்வம். அவன் வாழ்வுக்கு அது இன்றியமையாதது. பிறக்கும்போது அவன் நிர்வாணமாக ஒரு கதியுமின்றித் தோன்றியவன். அந் நிலையில், இயற்கையின் கோரமான அழிக்கும் சக்திகளின் நடுவே அவன் உயிரோடு இருக்கவும், உபயோகித்துக் கொள்ளவும் தேவையான பொருள்களை அளிப்பதும் அந்த அறிவு தான். இவ்வாறு உதவியாகவுள்ள அந்த அறிவே அவன் வாழ்வை விஷமாக்குகிறது!

அவனைச் சுற்றிலுமுள்ள பிராணிகள் தமக்கு அவசியமான உணர்ச்சிக் கருவிகளை இயற்கையாகவே பெற்றிருக்கின்றன ; அவற்றால் நன்மையடைகின்றன. தாவரங்களும், புழுப் பூச்சிகளும், விலங்குகளும் தமக்கு உரிய நியதிகளுக்கு உட்பட்டு வாழ்கின்றன ; அதனால் இன்பமான, அமைதியான நல்வாழ்வைப் பெறுகின்றன. மனிதனுக்கு மற்ற உயிர்களினும் கூடுதலான ஆறாவது அறிவு ஒன்று கிடைத்திருக்கிறது. அந்த அறிவு அவனுக்கு எவ்வளவு அநுகூலமா யிருந்தபோதிலும், அதுவே அவனைச் சித்திரவதை செய்கிறது ; மனச்சாந்தியே இல்லாமற் செய்கிறது. இது விபரீதமாகவே தோன்றும்! உள்மனத்தில் நடக்கும் இந்தப் போராட்டம் நம் காலத்தில் உச்ச நிலையை அடைந்திருக்கிறது.

குழப்பத்தால் வந்த முரண்பாடு

மனிதன் இளமைப் பருவத்தைத் தாண்டி வளர்ந்து வருகையில் ஏதாவது ஒரு சமயத்தில் பகுத்தறிவு உணர்ச்சி அவன் உள்ளத்தில் தலைதூக்கி நிற்பதை உணர்கிறான். இவ்வாறு புதிதாக எழுந்துள்ள பகுத்தறிவு உணச்சி அவன் வாழ்வை இரு கூறாக்கி, வாழ்வையே தடைப்படுத்தி நிறுத்துவது போல் அவனுக்குத் தோன்றுகிறது. ஏனெனில், அவன் தனக்குச் சொந்தமில்லாத ஒன்றைத் தன் வாழ்க்கை என்று மயங்கி நிற்கிறான். அந்த ஒன்று என்றுமே அவன் வாழ்க்கையாக இருந்ததில்லை ; இருக்கப் போவதுமில்லை. நவீன உலகிலே நடை பெறும் தவறான போதனைகளே மனிதனின் மயக்கத்திற்குக் காரணமாயுள்ளன.

பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படைந்த பிறகு மனிதன் தன் வாழ்வே மாறிவிட்டதாக எண்ணுகிறான். பிறந்ததிலிருந்து குழந்தையாகவும், வாலிபனாகவும், அறிவு வந்த மனிதனாகவும் இதுவரை தொடர்ந்து வாழ்ந்து வந்ததுபோல் மேற்கொண்டு வாழ முடியாது என்று அவனுக்குச் சந்தேகமின்றித் தெளிவாகிவிடுகின்றது. இத்துடன் அவனுடைய பழைய வாழ்க்கை அறுபட்டு நிற்கிறது.

அறுபட்டு நிற்றல் என்பது வெறும் தோற்றந்தான். அதற்கு முன்னால் அவனுக்கு வாழ்க்கையே இருந்ததில்லை. பகுத்தறிவு உணர்ச்சி தோன்றிய பிறகே அவனுக்கு முந்திய வாழ்வு என்ற பிரக்ஞை உண்டாகியுள்ளது.

குழவிப் பருவத்தில் மனிதன், வாழ்க்கையைப் பற்றி ஒரு கருத்தும் இல்லாமல், மிருகம் போலவே வாழ்ந்திருந்தான். அவன் சிசுவாகப் பத்து மாதம் மட்டும் வாழ்ந்திருந்தால், தன் வாழ்க்கையைப் பற்றியோ, வேறு வாழ்க்கையைப் பற்றியோ, அவன் என்ன தெரிந்திருக்க முடியும் ? கருவிலேயே மடிந்ததிருந்தால் எப்படியோ, அந்த நிலையில் தான் இருந்திருப்பான். பைத்தியம் பிடித்தவனும், முழுமூடனும் குழந்தையைப் போலவே இருக்கின்றனர் ; அவர்கள் தாம் வாழ்வதையோ, பிற உயிர்கள் வாழ்வதையோ அறியமாட்டார்கள். ஆதலால், அவர்கள் மனிதவாழ்வு பெற்றிருப்பதாய்க் கருத முடியாது.

பகுத்தறிவு உணர்ச்சி தோன்றும்போதுதான் மனித வாழ்வு ஆரம்பமாகிறது. அதுவே மனிதனுக்குத் தன் வாழ்வையும், பிறர் வாழ்வையும் எடுத்துக் காட்டுகின்றது ; துன்பங்களும் மரணமும் ஏன் ஏற்படுகின்றன என்பதை விளக்குகின்றது. அதுவே தனிப்பட்ட வாழ்க்கையில் நன்மை இருக்க முடியாது என்று மறுத்து, வாழ்க்கையின் முரண்பாட்டை வெட்ட வெளிச்சமாக்குகின்றது.

மனிதன் வாழ்க்கை எவ்வளவு காலம் நிலைத்திருக்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்த்து அதை விளக்க விரும்புகிறான். தன் உடல் எவ்வளவு காலம் நிலைக்கிறது என்று பார்ப்பது போலவே, அவன் வாழ்க்கையையும் காலத்தின் உதவியால் தெளிவு படுத்த ஆசைப்படுகிறான். ஆனால் திடீரென்று அவனிடம் ஒரு புது வாழ்க்கை எழும்போது, ‘இது என் உடல் தோன்றும்போது இல்லையே ! இது எப்பொழுது தோன்றிற்று? இந்தப் புது வாழ்வுக்குக் காரணமான பகுத்தறிவு உணர்ச்சி பிறவியிலிருந்தே என்னுள் மறைந்து இருந்து வந்ததா?’ என்று ஆச்சரியப்படுகிறான். காலத்தையும் இடத்தையும் வைத்தே அவன் எல்லாப் பொருள்களையும் பிரித்து அறிய முடிகிறது. ஆனால், பகுத்தறிவு உணர்ச்சி சம்பந்தமாகக் காலமும் இடமும் அளவுகோல்களாக உதவ முடியாது.[1]

மனிதனின் உடல் தோன்றியதை (அவன் பிறந்த தினமாகிய) காலத்தைக் கொண்டு கணக்கிட முடியும். ஆனால், அவனுடைய பகுத்தறிவு உணர்ச்சி தோன்றியதை, அவன் எவ்வளவு தான் ஞாபகப்படுத்திப் பார்த்தாலும் கணக்கிட முடியாது. அந்த உணர்ச்சி எப்போதுமே தனக்கு இருந்து வந்ததாக அவனுக்குத் தோன்றும். அவன் பிறக்கும்போது அது அவனுடன் இருந்ததென்று அவன் அறிய முடியுமா? அவன் உடலின் பிறப்போடு சம்பந்தமில்லாத ஓர் இடத்திலேயே அது இருந்திருக்கிறது. ஆகவே, அவனுடைய உடல் பிறந்ததும், பகுத்தறிவு உணர்ச்சி பிறந்ததும் வேறுபட்ட விஷயங்கள் என்பது அவனுக்குத் தெளிவாகிறது.

மனிதன் தன் உடல் வாழ்வு எப்படி வந்தது என்பதை அறிய முடியும். அவன் தன் பகுத்தறிவு வாழ்வு சம்பந்தமாக ஆலோசனை செய்யும்போது தான் தன் பெற்றோர்களின் மைந்தன் என்றோ, பாட்டன் பாட்டிமார்களின் பேரன் என்றோ, தான் இன்ன ஆண்டில் பிறந்தவன் என்றோ கருதுவதில்லை; ஆனால், எந்தவித உறவு முறைகளையும் ஒதுக்கிவிட்டு, காலத்தாலும் இடத்தாலும் அவனிடமிருந்து விலகியுள்ள பகுத்தறிவு பெற்ற மக்களுடைய உணர்வோடு அவனும் ஒன்றிவிடுகிறான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் உலகின் வேறொரு மூலையிலே வாழ்ந்த மக்களுடனும், அகண்டமான பகுத்தறிவு உணர்ச்சியின் மூலம், அவன் ஒன்று சேர்ந்து விடுகிறான். தான் எவ்வாறு தோன்றினான் என்பதைக்கூட அவன் தன் பகுத்தறிவு உணர்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ள முடிவதில்லை; ஆயினும், காலத்தையும் இடத்தையும் கடந்து, மற்றைப் பகுத்தறிவு உணர்ச்சிகளுடன் தனக்குச் சம்பந்தம் இருப்பதை உணர்கிறான் ; அவைகள் தன்னுள் வந்து சேருவதாகவோ, தான் அவைகளுள் கலந்துகொள்வதாகவோ உணர்கிறான். மனிதனின் அகத்துள்ளே பகுத்தறிவு உணர்ச்சி விழிப்படைவதால் தான் அது வரை வாழ்க்கை என்று அவன் கருதி வந்த வெறுந் தோற்றம் முடிவடைகிறது; அதிலிருந்துதான் உண்மையான வாழ்க்கை ஆரம்பமாகிறது.

வேற்றுமையும் முரணும் வெறும் தோற்றங்கள்

பகுத்தறிவு உணர்ச்சி விழிப்புற்ற பின்பு மனிதர்கள் அடையும் வேற்றுமை உணர்ச்சிக்கும் வேதனைக்கும் காரணமா யிருப்பவை அவர்கள் முன்னால் பெற்றுள்ள போலிப் போதனைகளே. இவைகளாலேயே வாழ்க்கை இரு துண்டுகளாகப் பிரிந்து விட்டதாகப் பிரமை ஏற்படுகிறது.

வாழ்க்கை ஒன்றுதான் என்பதை மனிதன் அறிவான். ஆனால், இரண்டாக உணர்கிறான், உடலின் வாழ்வே வாழ்க்கை என்பது அவன் கற்ற பாடம். பகுத்தறிவு உணர்ச்சியின் துணையால் பின்னால் உண்மையான வாழ்க்கையை அவன் தெரிந்து கொண்டதும், முந்திய (கற்பனை) வாழ்க்கை ஒன்று, உண்மையான வாழ்க்கை வேறு ஒன்று என்று எண்ணுகிறான்.

பகுத்தறிவு உணர்ச்சி, அவனுடைய சொந்த நன்மைக்கான தனி வாழ்க்கை என்பது பொய் என்றும், வேறு ஒரு நலனுக்காக அவன் ஈடுபட வேண்டும் என்றும் வழிகாட்டும்போது, அது இயற்கைக்கு மாறுபட்டதாக அவனுக்குத் தோன்றுகிறது அதனால் நன்மையில்லை என்றும் என்றும் எண்ணுகிறான்.

ஆனால், தனி நபரின் நன்மையும், தனிப்பட்ட வாழ்க்கையும் சாத்தியமில்லை என்பதைப் பகுத்தறிவு பெற்ற மனிதன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. பகுத்தறிவு உள்ளவன் தனி வாழ்க்கையின் நலனைத் தியாகம் செய்தல், பறவை தன் கால்களால் நடக்காமல் சிறகுகளால் பறப்பது எவ்வளவு இயற்கையான செயலோ அவ்வளவு இயற்கையாகும். பறக்க வேண்டிய பெரிய பறவை ஒன்று கால்களால் ஓடிச்சென்றால், அதிலிருந்து பறத்தலே இயற்கைக்கு மாறுபாடு என்று ஆகிவிடாது. அதுபோல் தான் நம்மைச் சுற்றிலும் வாழும் பகுத்தறிவு விழிப்படையாமலுள்ள மனிதர்கள் நிலையும். அவர்கள் தங்கள் சொந்த நலனே வாழ்க்கை என்று கருதி வந்தால், நாம் அறிவுக்குப் பொருத்தமாக வாழ ஆரம்பித்தல் இயற்கைக்கு முரணாக ஆகிவிடாது.

பகுத்தறிவுப் புது வாழ்வு பெறும் மனிதர்கள் அடையும் வேதனை, பருவமடையும் யுவதிக்குரிய லட்சணங்களை அறியாத ஒரு பேதை, தன் உடலின் மாறுதல்களைக் கண்டு பயந்து, துயர்ப்படுவதைப் போன்றது. பின்னால் குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு, தாய்மையின் கடமைகளைச் செய்யவும், அதன் இன்பங்களை நுகரவும் தகுதி பெற்று வளர்வதை அந்த யுவதி அறியாமல், இயற்கைக்கு மாறான தோற்றங்கள் தன் உடலில் ஏற்பட்டிருப்பதாகவும், தன் ஆரோக்கியம் கெடுவதாகவும் வீணாக வேதனைப் படக்கூடும். இத்தகைய வேதனையையே புது வாழ்வு பெற்ற மனிதர்களும் அநுபவிக்கிறார்கள்.

ஒரு மிருகம், தன் இயல்பை உணராமல், தான் வெறும் சடப்பொருள் என்று கருதி, ஒரே இடத்தில் படுத்துக் கிடப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால், உடலுக்கு உணவு வேண்டிப் பசி எழுந்துவிடும் ; இனப்பெருக்கத்திற்கு வேண்டிய ஆசையும் எழும். இவ்விரண்டும் அதை நெடு நேரம் அசைவற்றுக் கிடக்கும்படி விடுவதில்லை. மிருகம், உயிரற்ற பொருளாக இருக்க முடியாமல், விழிப்படைகிறது. சடமாய்க் கிடந்த வாழ்வு மாறி மிருக வாழ்வு ஆரம்பமாகும் போது, அது திகைப்படைந்து துயரப்படுகின்றது. மிருகம் தன்னைச் சடப்பொருள் என்று கருதியது போலவே, மனிதன் தனக்கென்று தனி வாழ்வு உண்டு என்று கருதி வந்திருக்கிறான்.

மிருகம் தன் துயரத்தை ஒழிக்க வேண்டுமானால், சடத்திற்கு உரிய விதிகளின்படி நடவாமல், பிராணிகளுக்கு உரிய விதிகளின்படி நடக்க வேண்டும். இது போலவே மனிதனும், மிருகங்களின் விதிகளின்படி நடக்காமல் தன் பகுத்தறிவு உணர்ச்சியின் மூலம் தெரிந்துகொள்ளும் மானிட விதிகளின்படி நடக்க வேண்டும். இதை உணர்ந்ததும், வாழ்க்கையிலே காணப்படும் முரண்பாடு மறைந்துவிடும் ; மனிதன் ‘நான்’ என்று கருதிவரும் தனித்தன்மை பகுத்தறிவு உணர்ச்சிக்குப் பணிந்து அதற்குப் பணியாற்றி வரும்.


  1. பொதுவாக உயிர் எப்படி உண்டாயிற்று என்றும், மனித உயிரின் தோற்றம், வளர்ச்சி பற்றியும் விவாதங்கள் நடப்பதை அடிக்கடி காண்கிறோம். விவாதம் செய்பவர்கள் உண்மையை நேரிலே கண்டவர்கள்போல எண்ணிக்கொண்டு பேசுவார்கள். காலத்தை வைத்துக்கொண்டு உயிரின் வளர்ச்சியைப் பற்றி அவர்கள் கூறும் வாதங்களைப் பார்க்கினும் கற்பனை மிகுந்தவை வேறு இருக்க முடியாது. மானிட உயிரின் ஆரம்பத்தை எதிலிருந்து கணக்கிடுவது ? உயிரின் ஆரம்பம் தாயின் கர்ப்பத்திலா, குழந்தை மண்மீது பிறந்தவுடனா. அல்லது பெற்றோர்களின் பிறப்பிலா, அல்லது எல்லாவற்றிற்கும் முன்னால் மனிதன் விலங்கு உருவத்தில் இருந்த நிலையிலா ? அல்லது உயிர் உண்டாவதற்கு ஏற்ற மூலமான சடப்பொருள் என்று கருதப் பெறும் ‘பிராடோ பிளாஸம்’ (Protoplasm) என்பதிலிருந்து உயிர் தோன்றியதாகக் கொள்வதா ? சூரியனிலிருந்து ஒரு பகுதி தெறித்து விழுந்து நாளடைவில் அப்பகுதியின் கொதிப்பு அடங்கிக் குளிர்ந்துவிட்டதாம். அந்தக் குளிர்ச்சியடைந்த பகுதியில் உயிர் உண்டாவதற்கு ஏற்ற ‘பிராடோபிளாஸம்’ ஏற்பட்டதாம். இத்தகைய விவாதங்கள் எல்லாம் அளவுகோல் இல்லாமலே அளக்கும் கற்பனை விஷயங்களேயாகும்.