உள்ளடக்கத்துக்குச் செல்

வரலாற்றுக் காப்பியம்/சங்கத் தமிழ்

விக்கிமூலம் இலிருந்து

சங்கத்தமிழ்

சகரக் கிளவி மொழி முதலாக தென்பதே
நம் முன்னோர் கொண்டிருந்த மொழி மரபு
அந்த இலக்கிய நியதிக்குப் புறம்பாக
காவலரும் பாவலரும் கலந்து தமிழாய்ந்த
பேரவையைச் சங்கமென்று சாற்றியது என்னோ?
தமிழ்க் கூடலுக்குரிய பெயர் மறந்ததோ
தமிழின் துறைவாய் என்பது மாய்ந்ததோ
நல்லாசிரியர் புணர் கூட்டென்ற சொல்லும் இல்லையோ
அவையம் என்ற பழஞ்சொல் வழக்கிழந்ததோ
தமிழ் கெழுகூடல் என்ற தனிப்பெயரும் இன்றில்லை
பொதியில் என்ற புகழும் போயிற்று
மன்றமும் அம்பலமும் மறந்தார் மறந்தார்
வடக்கில் போதி மரத்துப் புத்தன்
ஆரியத்தை எதிர்த்து அவை கூட்டினான்
அந்தக் கூடலுக்கு சங்க மென்று பெயர் சூட்டினான்
அவன் கொள்கைகளைக் கொண்டு சுமந்த
தொண்டர்கள் சங்கம் சரணமென்று சாற்றினார்
தொண்டு வளர்த்து தூதும் தொடர்ந்தபோது
தமிழ்ப் புலத்துக்குச் சங்கம் என்ற பெயரைக் கொண்டுவந்தார்
சமயக் கொள்கையில் அவரைச்சார்ந்த
தண்டமிழ் ஆசான்களும் தங்களையும்
சங்கமென்று சொல்லிக் கொண்டார்
சமயத் தொண்டுக்கு வந்த சமணரும்

தமிழ்த் தொண்டுக்கு தானென்று முன்னின்றார்
தங்கள் அமைப்புக்கும் சங்கமென்றே பேர்சொன்னார்
சமயப் பேரவைக்கு வாய்த்த பெயரே
தமிழ்ப் பேரவைக்கும் வலிந்து வாய்த்தது
வரலாற்றுத்தடத்தில் வந்த தடு மாற்றங்களில்
சிதறுண்ட தமிழ்ச் செல்வங்களைத் திரட்டி
வகுத்ததும் தொகுத்ததும் சங்கம் வந்தபின்னே
ஆதலின் முன்னம் தமிழ் நடந்த நிலைக்களத்தை
முழக்க மென்ற பொருளில் சங்கமென்றார்
முன்னைத் தமிழ் முத்தமிழ் ஆனது
மூன்று தமிழும் சங்கத்தமிழ் ஆனது
கடலோடுதல் விலக்கான ஆரியர்க்கு
கடல் படு பொருளான சங்கும் விலக்கே
ஆரியத்தின் அடிப்படை மொழிகளில்
சங்கம் என்ற சொல்லும் அது
சாற்றும் பொருளும் இல்லை இல்லை
ஆதலின் சங்கம் என்பது
தமிழ் இல்லை என்பதற்கும் இல்லை.