வரலாற்றுக் காப்பியம்/தலைச் சங்க நாட்கள்
நிலமகள் தனக்குத் தானே
சுழன்று கொள்வது ஒரு நாள்
நிலவும் நிலமகளை வலம் வருவதே ஒரு திங்கள்
தரைமகளும் கதிரவனைச் சுற்றுவதே ஓராண்டு
காலத்தை அளக்கின்ற கணக்கு இதுவே
முன்னையுகத்துச் சேதிகளை தேதியிட்டு
ஆண்டுக் கணக்கில் அளப்பதற்கு இல்லை
தனித்த சரித்திரமும் செழித்த பண்பாடும்
கொண்டு வளர்ந்த குமரித்திருநாட்டில்
தென்மதுரை மாநகரைத் தலைமை கொண்டு
காய்ச்சின வழுதிமுதல் கடுங் கோன் ஈறாக
நாற்பத்து ஒன்பதுபேர் அரசிருந்தார்
நாவலர் எழுவர் கவியரங்கேறினார்
நாலாயிரத்து நானூற்று நாற்பது யாண்டுகள்
தமிழுக்குப் பேரவை தலைச்சங்கமென்று
நடந்ததென்பார் வியப்பே சிறப்பே
திரிபுரம் எறித்த விரிசடைக் கடவுள்
குன்றம் எறிந்த குமரவேள் என்பார்
தேவரோ-தெய்வப் பெயர்தரித்த புலவரே
தமிழக்கு தாலேலோ பாடினார்
முரஞ்சியூர் முடிநாக ராயர் முதலாக
அகத்தியன் நிதியின் கிழவன் உள்ளிட்ட
ஐநூற்று நாற்பத்து ஒன்பது புலவர்
நாலாயிரத்து நாநூற்று நாற்பத்து
ஒன்பது பாடல் இயற்றினார் என்ப
பரிபாடல் முதுநாரை முதுகுருகு முதலாக
களரி யாவிரை எனக் கணக்கிருந்த நூல்கள்
தமிழ் வழக்கில் இன்றில்லை இருந்ததென்று சாற்றினார்
களவியல் உரைகாரர் கட்டுரைத்த கதை இதுவே
முதற் சங்கத் திருந்த முதும் பெரும்புலவரான
முரஞ்சியூர் முடி நாகராயர்
அலங்குகளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது களத்தொழிய
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
என எழுதிய புறநாநூற்றைப் பார்த்தால்
பாரத காலத்தில் முடி நாகர் இருந்தவர்
சோறு கொடுத்த உதியன் சேரனும்
சங்கத் தமிழ் நடந்த சம காலத்தவனே
பாரதப் பாழுக்கு பிழைத்து வந்தவன்
பார்த்தனின் பேரன் பரிட்சித்து என்பார்
அவன் காலம் ஏசுகிருஸ்துக்கு முன்னால்
ஆயிரத்து நானூறு ஆண்டுகள் என்பார்
தெற்கில் தலைச்சங்கம் நடந்தபோது
வடக்கில் பாரதம் நடந்தது என்பதே
ஆதாரப்படிபெறப்படும் வரலாற்று உண்மை
சங்கக் கணக்கை கூட்டி எண்ணினால்....
முதற் சங்கத்துக்கு அவர் கொடுத்த புள்ளி
நாலாயிரத்து நானுாற்று நாற்பது யாண்டு
மூவாயிரத்தெழுநூறு யாண்டென்று
இரண்டாம் சங்கத்துக்கு எழுதிவைத்தார்
ஆயிரத்து எண்ணுாற்று ஐம்பது யாண்டு
முன்றாம் சங்கத்துக்கு அவர் செய்த முடிவு
மூன்று கணக்கையும் ஒன்று கூட்டினுல்
பத்தாயிரத்துக்கு ஒரு பத்தே குறைவு
பாரத நாளில் பரீட்சித்து கருவிலிருந்தான்
உதியன் சேரல் கரூரில் அரசிருந்தான்
முடிநாக ராயர் கவியரங்கிருந்தார்
மூவரும் ஒரு காலத்தவர் என்பது முடிவு
நக்கீரன் சொல்லிச் செல்ல வழிவழியே
முசிரி நீல கண்டனார் கொண்டுவந்த
மூன்று சங்கக் கணக்கையும் தொகுத்தால்
இன்றும் சங்கம் தொடர்ந்திருக்க வேண்டும்
நாற்பத் தொன்பது புலவரும் நம்மோடி ருக்கவேண்டும்.
இல்லை என்பதால் அவர்கணக்கு பிழை என்பதற்கில்லை.
கணக்கைப் பற்றியே கணக்கே பிழை
முற்றும் கற்பனை ஒப்புவதற்கில்லே என்பவர் உண்டு
இவர்களுக்குச் சான்றாக இன்னுமொரு கணக்கு
நிலம் தருதிருவின் நெடிய பாண்டியன்
நாடாளுமன்றம் நடந்த நாட்களை
எண்ணிச் சொல்லும் மரபின்றும் உண்டு
சங்கக் கணக்கை சாற்றியதும் அவ்வழியே
தலைச்சங்க பாடல்களின் கூட்டுத்தொகை
நாலாயிரத்து நானூற்று நாற்பதொன்பது
மொழிமுறையும் பொருளுரையும் மரபியலும்
உறைக் கின்றபடி இருக்கின்றவற்றைத் தேடினால்,
தலைசங்க பாட்டென்று எண்ணூறுதேறும்
எஞ்சிய பாடல்கள் தென் மதுரையோடு
சேர்ந்து கடலுள் மாய்ந்தது கொடுமை
போயிற்று போயிற்று என்று புலம்புவதே நிலமை.