வாழும் வழி/புகழ்ச்சியில் வெறுப்பு

விக்கிமூலம் இலிருந்து

5. புகழ்ச்சியில் வெறுப்பு

என்ன! புகழ்ச்சியிலே வெறுப்பா? ஆம். அப்படியென்றால் பிறர் புகழ்ச்சியில் வெறுப்போ? இல்லயில்லை. தம் புகழ்ச்சியிலேயே வெறுப்பு. இப்படியுங் கூட உலகத்தில் உண்டா? இது என்ன விந்தையாக இருக்கின்றதே! ஆம் விந்தையாகத்தான் இருக்கும். எவ்விதத்தில்.

உலகில் புகழ்ச்சி விரும்பாதோர் பெரும்பாலும் இருக்கமாட்டார்கள். ஒவ்வொருவரும் தாம் புகழ்ச்சி அடைவதற்காக அரும்பாடுபடுகின்றனர். ஆனால், அப்புகழ்ச்சி நேர்மையான முறையில் கிடைப்பதாக இருந்தாலும் ஒருவாறு ஒத்துக்கொள்ளலாம்.

அப்பப்பா உலகில் புகழ்ச்சிக்காகச் சிலர் செய்யும் கொடுமைகளைப் பொறுக்க முடியவில்லையே! வேறொருவர் செய்த புகழ்ச்சிச் செயல்களைத் தம்முடையன என்று சொல்லிக் கொள்வோர்சிலர். பிறரை வருத்திச் சில காரியங்களை முடித்துக்கொண்டு அதனை வெளியில் மறைத்துப் புகழ்கொள்வோர் சிலர். இப்படி இன்னும் பலர் உளர். மாட்டை அடித்துச் செருப்புத்தானம் செய்வதால் யாது பயன்? கடைத் தேங்காயைத் திருடி வழிப் பிள்ளையாருக்கு உடைக்கலாமா?

இன்னும் சிலருக்கு எழுத்து வாடையே தெரியாது. ஆனால் பையில் எழுதுகோல் சொருகியிருப்பார்; கையில் கடிகையாரம் கட்டியிருப்பார். மற்றும் சிலர், வாடகைக்கு ஆடையணி வாங்கி அணிசெய்து கொள்வர்; கஞ்சிக்கும் வழியிருக்காது; காஃபி சாப்பிடுவது வழக்கம் என்று சொல்லிக்கொள்வர். இவ்விதம் பல பிறவிகள் உண்டு. குடிப்பது கூழ் - கொப்பளிப்பது பன்னீர் போலும்?

இத்தகைய புகழ்ச்சியுலகில் புகழ்ச்சியை வெறுப்பது என்பது எளிதா? மிகவும் அரிய செயல் அல்லவா? ஆனால் அப்புகழ்ச்சியினையும் வெறுத்த வீரர்கள் உலகில் இல்லாமற் போகவில்லை. அப்படியெனின், அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலும் எழுச்சியும் அடைய வேண்டாமா?

பண்டொரு காலம். ஓர் அழகிய காடு. அதன் நடுவில் ஒரு பலாமரம். அதன் அடியில் ஒருவர் அமர்ந்திருந்தார்; அவர் கட்டியிருந்த துணியில் இனிகிழிய இடமில்லை. அது பருந்தின் சிதறிய சிறகுபோல் பார்வைக்குத் தெரிந்தது. வயிறு இருக்கும் இடமே தெரியவில்லை; முதுகோடு ஓடி ஒட்டிக்கொண்டிருந்தது. ஏழ்மையின் எல்லையைக் கண்டவர் அவர். தற்போது பசியெனும் தீராப் பகைவனால் பெரிதும் தாக்கப்பட்டிருந்தார். அவர் யார்? 'குசேலரோ என எண்ணிவிட வேண்டாம். ‘வன்பரணர்’ என்னும் பெயர் பூண்ட புலவர் பெருமான் அவரே. அவரைச் சுற்றிலும் அவர் தம் மனைவி மக்கள் சூழ்ந்திருந்தனர். வேற்றூர்க்குச் செல்லும் அக்குடும்பம் இளைப்பாறுவதற்காக வழியில் உள்ள அக்காட்டில் தங்க வேண்டி வந்தது.

அங்கே ஒரு வில்வீரன் வந்தான். ஏன், ஒரு சிற்றரசன் என்றே செப்பலாம். வேட்டைக்கு வேண்டிய ஒப்பனை செய்துகொண்டிருந்தான் அவன். அவனைக் கண்ட புலவர் வணங்கி எழுந்தார். எழுந்ததற்கு காரணம் அச்சமன்று; பெருமதிப்பே. ஆனால், புலவரை எழுந்து நிற்க வைத்தானா அரசன்? இல்லையில்லை. தலையசைத்து, இன்சொல் புகன்று, கையால் அமர்த்தி உடனே அமரச் செய்துவிட்டான். புலவரின் ஏழ்மை நிலைமையையும், பசியால் வாடிய தோற்றத்தையும் கண்டான். அக்காட்சியை அவனால் பொறுக்க முடியவில்லை.

புலவரின் பசிப் பிணியினைப் போக்கும் மருந்து அரசனிடம் கையிருப்பு இல்லை. காரணம் என்ன தற்போது அவன் இருப்பது அரண்மனையன்று; நடுகாடு காடு அல்லவா? அதனால் அவன் வறிதே விட்டானா? இல்லை? உணவு தயாரிக்கத் தொடங்கினான். தன்னுடன் வந்த வேலையாட்கள், வேட்டை காரணமாகப் பல மூலை முடுக்குகட்குப் பிரிந்திருந்தனர். இருப்பினும், அவன் சிறிதும் பின் வாங்கவில்லை. தானே உணவுப் பொருளைத் தேடினான். தீக்கடைக் கோலால் நெருப்பு மூட்டினான். நெருப்பின் உதவியால் உணவு தயார் செய்யப்பட்டது. புலவர் குடும்பம் உண்டு பசி நீங்கி அருவியில் நீர் பருகி இன்புற்றது. அவ்வின்பத்தைக் கண்டு அரசனும் இன்புற்றான்.

பின்னர், புலவர் அரசனுக்கு நன்றியும் வணக்கமும் செலுத்திப் புறப்படத் தொடங்கினார். அவ்வளவில் அனுப்பிவிடுவானா அவன்? பசியைப் போக்கியாயிற்று. ஒரு சிறிதாவது ஏழ்மையினையும் போக்க வேண்டும் அல்லவா? தான் அணிந்துகொண்டிருந்த அணிகலன்களை கழற்றித் தந்தாள். தந்து, “புலவரீர் நான் இப்போது இருப்பது அரண்மனையன்று, நடுக்காடே என்பதை நீவிர் நன்கு அறிவீர்கள் ஆதலின் இவ்வளவுதான் அடியேனால் செய்ய முடிந்தது. இன்னும் சிறந்த உதவிகளைச் செய்ய இயலாது போனமைக்கும் பெரிதும் மன்னித்தருள வேண்டுகிறேன்” என்று விண்ணப்பமும் செய்து கொண்டான். ஆ! அவன் பெருங் கொடைத்திறனை என்னென்று புகழ்வது!

அந்த வள்ளலின் வரலாற்றை அறிந்துகொள்ளப் புலவர் பெரிதும் ஆவல் கொண்டார். அவனை நோக்கி, “அரசே நுமக்குரிய நாடு யாது?” எனப் பணிவுடன் வினவினார். அதற்கவன், “புலவரீர் என் நாடு எதுவாயினும் ஆக அதைப்பற்றி நுமக்கேன் கவலை?” என்ற தெரிவித்துவிட்டான். பார்த்தார் புலவர். “அப்படி யாயின் நும் பேரையாவது அறிவிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதற்கும் அவ்விதமே பதில் கூறிவிட்டான் அவன். தற்புகழ்ச்சி என்பதே அவன் அகராதியில் இல்லை போலும் வேறொருவராய் இருப்பின் தம் பெருமைகளை வானளாவக் கொட்டி அளந்திருப்பார்கள் அல்லவா? உடனே அவன் புலவரிடம் விடைபெற்றுச் சென்று மறைந்தான்.

பின்னர், புலவர் அங்கு வந்த சிலரை வினவி, அவ்வரசன் ‘தோட்டி’ என்னும் மலைநாட்டிற்குத் தலைவன் எனவும், கண்டீரக் கோப்பெருநள்ளி எனும் பெயருடையன் எனவும் அறிந்துகொண்டார். அவனைப் புகழ்ந்து அழகாகப் பாடினார். பாடி, அப்பாடலைத் தமிழ்நாட்டிற்கு ஈந்து, தம் கடமையை முடித்ததாக எண்ணி ஆறுதல் அடைந்தார். இந்நிகழ்ச்சியை, அவர் பாடிய,

“கூதிர்ப் பருந்தின் இருஞ்சி றகன்ன
பாறிய சிதாரேன் பலவுமுதற் பொருந்தித்
தன்னும் உள்ளேன் பிறிதுபுலம் படர்ந்தவென்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி
மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்
வான்கதிர்த் திருமணி விளங்குஞ் சென்னிச்
செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன்
தொழுதனன் எழுவேன் கைகவித் திரீஇ
இழுதின் அன்ன வானினக் கொழுங்குறை
கானதர் மயங்கிய இளையர் வல்லே

தாம்வந் தெய்தா அளவை ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, நின்
இரும்பேர் ஒக்கலொடு தின்மெனத் தருதலின்
அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி
நன்மரன் நளிய நறுந்தண் சாரல்
கல்மிசை அருவி தண்ணெனப் பருகி
விடுத்தல் தொடங்கினோனாக, வல்லே
பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
பிறதொன் றில்லைக் காட்டு நாட்டெமென
மார்பிற்பூண்ட வயங்குகாழ் ஆரம்
மடைசெறி முன்கைக் கடகமோடு ஈத்தனன்.
எந்நாடோ என நாடும் சொல்லான்
யாரீரோ எனப் பேரும் சொல்லான்
பிறர் பிறர் கூற வழிக்கேட் டிசினே:
இரும்புபுனைந் தியற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றிற்
பளிங்கு வகுத்தன்ன தீநீர்
நளிமலை நாடன் நள்ளி அவன் எனவே.”

என்னும் புறநானூற்றுப் (150) பாடலால் நன்குணரலாம். இப்பாடலின் பிற்பகுதியிலுள்ள ‘எந்நாடோ என நாடும் சொல்லான்; யாரீரோ எனப் பேரும் சொல்லான்; பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே; தோட்டி மலை காக்கும் நளிமலை நாடன் நள்ளி அவன் எனவே’ என்னும் அடிகள் ஈண்டு குறிப்பிடத்தக்கன.

படிக் கல்லில் பட்டை பட்டையாகத் தங்கள் பெயர் பொறித்துக்கொள்ளும் தற்புகழ்ச்சி வேட்டைக் காரர்களுக்கு, வள்ளல் நள்ளியின் வரலாறு ஓர் அறை கூவலன்றோ? இத்தகைய புகழ் வேட்டைக்காரர்களை நோக்கி, உங்கள் ஊர் பேர் என்ன என்று கேட்டால், இவர்கள் விரிவாகத் தங்கள் வாழ்க்கை வரலாற்றையே எழுதிக் கொடுத்தாலும் கொடுப்பார்கள் கேட்காத போதே தம் புகழ் பாடுபவர்களாயிற்றே!

ஏதேனும் நன்கொடை கொடுத்துவிட்டு, தங்கள் பெயரை வெளியிடவே கூடாது என்று வற்புறுத்திக் கேட்டுக்கொள்பவர்களும் இக்காலத்தில் சிலர் உளர். ஆனால் இவர்களுள் பெரும்பாலோர், புகழ்ச்சியில் உள்ள வெறுப்பினால் இவ்வாறு நடந்து கொள்வதில்லை; பலமுறை கெஞ்சிக் கேட்ட பிறகு வேண்டா வெறுப்புடன்தாங்கள் கொடுத்த சிறிய நன்கொடையின் இல்லையில்லை - வன்கொடையின் அளவு பிறருக்குத் தெரியக் கூடாது என்பதற்காகவும், இதையறிந்து இன்னும் பலர் வந்து கேட்காமல் இருப்பதற்காகவுமே இத்தகையோர் தங்கள் பெயரை வெளிக்காட்டுவதில்லை. இவர்களை நோக்க, புகழ்ச்சியை விரும்பியாவது உலகிற்கு உதவி ஒப்புரவு செய்பவர்கள் வரவேற்கத் தக்கவர்களல்லவா?

புகழ்ச்சியை விரும்பாது நல்லதற்கு நல்லவர்க்குக் கைம்மாறு கருதாது உதவிய நள்ளி போன்றோரால் அல்லவா வன்பரணர் போன்றோர் வாழ முடிந்தது? வன்பரணர் போன்ற புலவர் பெருமக்கள் வாழ்ந்ததனால் அல்லவா தமிழ்மொழி வளம்பெற்றுள்ளது? புகழ் வேண்டாத நள்ளியின் புகழ் வாழ்க!