உள்ளடக்கத்துக்குச் செல்

வாழும் வழி/தெவிட்டாத திருக்குறள்

விக்கிமூலம் இலிருந்து





இலக்கியவியல்


6. தெவிட்டாத திருக்குறள்


“தேருந்தொறும் இனிதாந் தமிழ்”

என்பது தஞ்சைவாணன் கோவையில் ஒரு செய்யுட் பகுதி. இச்செய்யுள் எவர் வாயிலிருந்து வந்தது? “பொய் பிறந்தது புலவர் வாயிலே” என்பர் சிலர். இல்லையில்லை; புலவர்கட்குள்ளேயே ‘பொய்யா மொழிப் புலவர்’ பாடிய செய்யுள் இது. ஈடுபாடு கொள்ள ஈடுபாடு கொள்ளத் தமிழ் மிக மிக இனிக்கும் என்பது இதன் கருத்து. தமிழில் ஈடுபாடு கொண்டவர்கள் இதனை உணர்வர் - நம்புவர். கற்கண்டின் இனிமையைச் சுவைத்தே உணர வேண்டும் உணர முடியும் அல்லவா?

தமிழை ஆராய்ந்து இன்புறுதல் என்றால் என்ன? தமிழிலுள்ள தலைசிறந்த நூற்களை ஆராய்ந்து இன்புறல்தானே! அங்ஙனமெனின், தமிழ் நூற்களை ஆராய ஆராய இனிமை மிகும் என்பது போதரு மன்றோ? முதல் பொய்யாமொழிப் புலராகிய திருவள்ளுவரே கூறியுள்ளாரே! படிக்கப் படிக்க நூலின் நயம் இனிப்பதைப் போலப், பழகப் பழகப் பண்புடையவரது நட்பு இனிக்கும், என்பது அவர் கருத்து.

‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடையாளர் தொடர்பு’

என்பது அக்கருத்தமைந்த குறளாம்.

உண்மை அஃதெனில், ஆராய ஆராயத் தெவிட்டாது இனிக்கும் தமிழ் நூற்களுள் தலைசிறந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஆராய்ந்து ஆராய்ந்து அவ்வின்பத்தைத் துய்க்கலாமே! இழப்பதேன்?

அத்தகையதொரு தமிழ் நூலைத் தேர்ந்தெடுத்தல் அரிதன்று; எளிது, மிக எளிது. அவ்வேலையை உலகம் நமக்குத் தரவில்லை. அதனை முன்னமேயே அது செய்து முடித்துவிட்டது. அந்த நாடறிந்த நூலை ஏன், உலகமறிந்த அத்தலைநூலை ஏறக்குறைய ஓரீராயிரம் ஆண்டுகட்கு முன்பே, சங்கத் தமிழ்ப் புலவர்களே - பன்னூற்கள் எழுதிய தமிழ்ப் பாவாணர்களே விருப்பு வெறுப்பின்றி ஒருமுகமாய்த் தேர்ந்தெடுத்துவிட்டனர். ஆம்; உள்ள உள்ள உள்ளம் உருக்கும் அந்தத் தமிழ் நூலை - ஆராய ஆராய அறிவு ஊற்றெடுக்கும் அந்தத் தமிழ் நூலை - சிந்திக்கும் சிந்தைக்கு இனிய, அது மட்டுமா, கேட்கும் செவிக்கும் இனிய, அம்மட்டுமா, சொல்லும் வாய்க்கும் இனிய அந்தத் தமிழ்நூலை அவர்கள் அப்போதோ தேர்ந்தெடுத்துவிட்டனர்.

“அருங்குறளும் பகர்ந்ததற்பின் போயொருத்தர்
வாய்க் கேட்க நூலுளவோ”

என்றார் நத்தத்தனார்.

“உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு”

என்றார் மாங்குடி மருதனார்.

“வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு”

என்றார் உருத்திர சன்ம கண்ணர்.

“சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய...
வள்ளுவனார் பன்னிய இன்குறள் வெண்பா”

என்றார் கவுணியனார்,

“உலகடைய உண்ணுமால் (வள்ளுவர்)
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து”

என்றார் ஆலங்குடி வங்கனார். இப்படி இன்னும் பலர், பற்பலர்.

அக்காலப் புலவர்கள் மட்டுமா அதன் அருமை பெருமையினை அறிந்திருந்தனர்? இக்காலத்தும் பல்வேறு இந்திய மொழிப் புலவர்கள் உட்படப் பல்வேறு உலக மொழிப் புலவர்களும் அதன் ஈடு இணையற்ற சிறப்பினை நுனித்துணர்ந்தனர். தத்தம் மொழிகளிற் பெயர்த்துக் கொண்டனர். பிற மொழி யாளர்கள் அத்தமிழ் நூலை மொழிபெயர்த்துக் கொண்ட செயல், அவர்தம் பரந்த மனப்பாங்கையோ, பரந்த அறிவின் பெருக்கையோ அறிவிப்பதாகப் பொருள் இல்லை; அத்தமிழ் நூலின் கருத்தாழத்தை எவரையும் கவர்ந்து தன்வயப்படுத்தும் அந்நூலின்தனி மாண்பினை அறிவிப்பதாகவே பொருள் அல்லவா?

காலங் கடந்த, கண்டங் கடந்த, சாதி சமயங் கடந்த அத்தகு உலகப் பொது நூல் - உலகப் பொதுமறை திருவள்ளுவரின் தெவிட்டாத திருக்குறளன்றோ? “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று சுப்பிரமணிய பாரதியார், திருக்குறள் உலகப் பொதுநூல் என்பதற்கு நற்சான்றிதழ் (Certificate) கொடுத்திருப்பதாகக் கூறுவது வழக்கம். இல்லை, இஃது அவரது சொந்தச் சரக்கில்லை. ஒருவேளை அவ்வாறே எடுத்துக்கொண்டாலும், இக்கருத்தை முதலில் வெளியிட்டவர் அவரல்லர். இதனைத் திருவள்ளுகூர் காலத்திலேயே புலவர் பெருமக்கள் பறைசாற்றித் தெரிவித்துவிட்டனர்.

“வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்முடுக்குந்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகு அடைய உண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து”

என ஆலங்குடி வங்கனார் அப்போதே அறிவித்துப் போந்தார். ‘உலகு அடைய - உலகம் முழுவதும் உண்ணும்’ என அப்போதே குறி (ஆருடம்) சொல்லிவிட்டுப் போனார். எதிர்காலத்துக்கும் இடம் வைத்து, ‘உண்ணும்’ என்று செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்றில் கூறிப் போந்தமையின் நுணுக்கத்தினை நோக்கி நுனித்து மகிழ்க.

“வள்ளுவர் உலகங் கொள்ள மொழிந்தார் குறள்”

என நரிவெரூஉத்தலையாரும் கூறியுள்ளார்.

ஆம், உலகின் உட்கொள்கின்றனர்; ஆனால் தமிழர்களின் நிலை என்ன? “வள்ளுவன் குறளை வையகமெல்லாம் வாரி யிறையடா தமிழா’ என்று பாடுகிறோம், ஆடுகிறோம்; ஆனால் செய்தோமா? செய்கின்றோமா? போகட்டும், இனியேனும் செய்வோமா?

தமிழர்கள் திருக்குறளை மறந்தது உண்மைதான். அதனை அனைத்துலகிற்கும் அறிமுகப்படுத்த அவர்கள் மறந்தது உண்மைதான். ஆனால், திருக்குறள் தமிழர்களை மறக்கவில்லை. அவர்களை அனைத்துலகிற்கும் அறிமுகஞ் செய்து வைக்க அது மறக்கவில்லை. தன் கருத்தின் திண்மையால் உலக மக்களைக் கவர்ந்ததன் வாயிலாக, திருக்குறள் என ஒரு நூலுண்டு, அஃது எழுதப்பட்டது தமிழ்மொழியில், அம்மொழியினைப் பேசுபவர் தமிழர்கள், அவர்கள் அத்தகையதொரு நூலை உலகிற்கு அளிக்கவல்ல ஆற்றலும் அநுபவமும் நிரம்பியவர்கள்’ என அனைத்துலகினரும் அறிந்து வியக்கச் செய்தது நம் அருமைத் திருக்குறளன்றோ?

‘உலகிற்கு அறிமுகஞ் செய்து பரப்புவது அப்புறம் இருக்கட்டும், முதலில் நீங்கள் படியுங்கள்!’ என்று திருக்குறள் சொல்லுவதுபோல் - திருவள்ளுவர் சொல்வதுபோல் தோன்றவில்லையா?

திருக்குறளை ஒரு முறை படித்தால் போதுமா? இரு முறை படித்தால் போதுமா? ஒரு கருத்துரையைக் கற்றால் போதுமா? ஒரு குறிப்புரையைக் கற்றால் போதுமா? திருக்குறளோ ஒரு வாழ்க்கை நூல் வாழ்க்கைத் துணை நூல். இன்னும் சில்லாண்டுகள் சென்ற பின்னர் - சில அநுபவங்களைப் பெற்றபின்னர் திருக்குறளை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தால் தெரியும். புது அழகு புது நயம் புதுப்பொலிவு காணப்படும். இவ்வாறே ஆண்டுக்கு ஆண்டு, அநுபவத்துக்கு அநுபவம் திருக்குறள் தெவிட்டாது இனிக்கும். ‘உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி’ என மாங்குடி மருதனாரும், ‘முப்பால் ஆய்தொறும் ஊறும் அறிவு’ என உருத்திரசன்ம கண்ணரும் உரைத்திருப்பதை இப்போது ஒரு முறை ஊன்றி நோக்குக.