வாழும் வழி/திருக்குறளின் அமைப்புமுறை ஆராய்ச்சி
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற வரிசையில் இப்பொழுது காணப்படும் திருக்குறளின் அமைப்பு முறையில் மாறுதல் செய்ய இடமிருக்கிறது. இம்மூன்று பால்களையும் தன்னகத்துக் கொண்டிருப்பது காரணமாகத் திருக்குறள் பெற்றிருப்பதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் முப்பால் என்னும் பெயரையே ஆட்டங் காணும்படிச் செய்யத் தெம்பு இருக்கிறது.
காதில் விழுகிறது; சிறு சலசலப்பு அன்று; பெருங் கூக்குரல்கள் - அறைகூவல்கள் காதைத் துளைக்கின்றன. “பழைய சங்கப் புலவர்களே ‘முப்பால்’ என்று திருவள்ளுவமாலையில் குறிப்பிட்டிருக்கின்றனரே. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் வரிசையில் உறுதிப்பொருள்களை உரைப்பதுதானே தொன்று தொட்ட முறை” என்றெல்லாம் பலர் போர் முழக்கம் இடுவது புரிகிறது.
பழைய சங்கப் புலவர்கள் சிலர் திருக்குறளுக்கு மதிப்புரை (விமர்சனம்) வழங்கியுள்ளனர். அவர்கள் எழுதிய பாக்களின் தொகுப்பாக, ‘திருவள்ளுவ மாலை’ என்னும் பெயரில் ஒரு நூல் உலவுவது பலர்க்கும் தெரிந்திருக்கலாம். அந்த நூலை நன்கு துருவிப்பார்க்க வேண்டும். ‘அறம் பொருளின்பம் முப்பால்’, ‘அறம் பொருளின்பம் முப்பால்’ என இளமையிலிருந்து பார்த்துப் பார்த்துப் படித்துப் படித்துப் பழகிப்போன பழங்கண்களால் திருக்குறளையும் திருவள்ளுவ மாலையையும் பார்க்கக்கூடாது. ஆராய்ச்சி அறிவுக்கண் கொண்டு பார்க்கவேண்டும். படிக்க வேண்டும். அப்பொழுது புரியும் திருக்குறளின் அமைப்பு முறை.
திருக்குறளுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியுள்ள பழைய புலவர்களே ‘சனியீசுவரன் கோயில் சாமி’களைப் போலக் காட்சியளிக்கின்றனர். அக்கோயிலில், ஒன்று கிழக்கே பார்க்கும்; இன்னொன்று மேற்கே பார்க்கும்; மற்றொன்று தெற்கே பார்க்கும்; வேறொன்று வடக்கே பார்க்கும். இவ்வாறே அப்புலவர்களும் பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அவை வருமாறு:
- (1) திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவினது. (திருவள்ளுவமாலை - 9 - கல்லாடர், 10- சீத்தலைச்சாத்தனார், 11 - மருத்துவன் தாமோதரனார், 12 - நாகன்தேவனார், 15 - கோதமனார், 17-முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், 18 - ஆசிரியர் நல்லந்துவனார், 19 கீரந்தையார், 30 -பாரதம் பாடிய பெருந்தேவனார், 31 - உருத்திரசன் மகண்ணர், 39 உறையூர் முதுகூற்றனார், 46 - அக்காரக்கனி நச்சுமனார், 49 - தேனீக்குடிக்கீரனார், 53 - ஆலங்குடி வங்கனார்.)
(2) திருக்குறள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பிரிவினது. (7-நக்கீரனார், 8. மாமூலனார், 20.சிறு மேதாவியார், 33 - நரிவெரூஉத்தலையார், 40 இழிகட் பெருங்கண்ணனார்)
(3) திருவள்ளுவர் மூன்றிலேயே நான்கையும் அடக்கியிருக்கிறார். (22 - தொடித்தலை விழுத்தண்டினார், 44 - களத்தூர்க்கிழார்)
(4) திருவள்ளுவர் வேதக்கருத்தைத் தமிழில் எழுதினார். (4-உக்கிரப் பெருவழுதியார், 28-காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், 37-மதுரைப் பெரு மருதனார், 42-செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்.)
(5) திருவள்ளுவர் திருக்குறளைத் தாமாகவே சொந்த அறிவு அநுபவங்களின் துணைகொண்டே செய்தார். (7- நக்கீரனார்)
(6) திருக்குறளின் முதலிலுள்ள பாயிரம் என்னும் பகுதிதான் வீட்டுப்பால் (20 - சிறு மேதாவியார்)
(7) நான்கையும் இன்பம் (காமம்), பொருள், அறம், வீடு என்னும் முறையில் வரிசைப்படுத்தி அமைத்தல். (33-நரிவெரூஉத்தலையார்) (8) பொருட்பால் ஏழு பிரிவுகளையுடையது. (22- தொடித்தலை விழுத்தண்டினார், 26, போக்கியார்) ஆனால் உரையாசிரியர்களுன் மணக்குடவர் ஆறு பிரிவாகவும், பரிமேலழகர் மூன்று பிரிவாகவும் பிரித்துக் கொண்டுள்ளனர். பிரிவு இயல்களின் பெயர்களும் ஒருவர்க்கொருவர் வேறுபடுகின்றன.
(9) காமத்துப்பால் மூன்று பிரிவுகளையுடையது. (22 - தொடித்தலை விழுத்தண்டினார், 27 - மோசிகீரனார்). ஆனால், உரையாசிரியர்கள் இருவரும் இரண்டாகப் பிரித்துள்ளனர். பிரிவுகளின் பெயர்களும் வெவ்வேறானவை.
இவ்வாறு இன்னும் மாறுபட்ட பல்வேறுவகைக் கருத்துக்களைப் பழைய புலவர்கள் வெளியிட்டுள்ளனர். இதனால் தெரிவது என்ன? திருவள்ளுவரால் எழுதிப் போட்டுவிடப்பட்டுப்போன திருக்குறள் ஒரு நேரம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திருக்கிறது. அதன் அமைப்பு முறையில் பலரும் தத்தம் கைவண்ணங் காட்டியிருக்கின்றனர் - என்பது வரையும் நன்கு புரிகின்றதன்றோ?
பால்களின் அமைப்பில் மட்டுந்தானா வேறுபாடு? பாலின் உட்பிரிவாகிய இயல்களின் அமைப்பில் மட்டுந்தானா வேறுபாடு? இயலின் உட்பிரிவாகிய அதிகாரத்திலும் வேறுபாடு காணக்கிடக்கின்றது. (அதிகாரம் என்பது, பத்துக் குறள்கள் கொண்ட ஒரு தலைப்பு) ‘புதல்வரைப் பெறுதல்’ என்று சிலரும் அதனையே ‘மக்கட்பேறு’ என்று சிலரும் கூறுகின்றனர். அதிகாரத்தின் வேறுபாட்டோடு, குறள்களின் வரிசை அமைப்பிலும் பெரிய வேறுபாடு காணக்கிடக்கின்றது. மணக்குடவர், பருதி, காளிங்கர், பரிமேலழகர் முதலியோர் உரைகளை எடுத்துப் பாருங்கள். ஒவ்வோர் அதிகாரத்திலும் குறள்களை எப்படி முன் பின்னாக ஒவ்வொருவரும் மாற்றி அமைத்திருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அப்படியென்றால், திருவள்ளுவர் அமைத்த முறைதான் எது? ஏன் இத்தகைய மாறுதல்கள் ஏற்பட்டன? எப்படி ஏற்பட்டன? எவரால் ஏற்பட்டன? எப்போது ஏற்பட்டன? இதற்கு முடிவுகட்டித் தக்க விடையிறுப்பவர் எவர்? இஃது ஆராய்ச்சிக்குரியது.