வாழும் வழி/கற்றலும் நிற்றலும்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

8. கற்றலும் நிற்றலும்

“கற்ற வேண்டியவற்றைப் பழுதறக் கற்க வேண்டும். அதன்படியே நடக்கவும் வேண்டும்” என்னும் கருத்துடைய

‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக.’

என்னும் குறளினை ஈண்டு ஆராய்வோம்.

(பதவுரை) கற்பவை = கற்கக்கூடியவற்றை, கசடு அறக் கற்க = குற்றமறக் கற்க வேண்டும். கற்றபின் = கற்றதும், அதற்குத் தக நிற்க = கற்றதற்கு ஏற்றபடி நின்றொழுக வேண்டும். (கசடு = குற்றம்; தக = ஏற்ப = பொருந்த நிற்றல் = ஒழுகுதல் நடத்தல்)

(மணக்குடவர் உரை: கற்கப்படுவனவற்றைக் குற்ற மறக் கற்க; கற்ற பின்பு அக்கல்விக்குத் தக வொழுகுக.)

(பரிமேலழகர் உரை: ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க; அங்ஙனங் கற்றால் அக் கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க.)

(ஆராய்ச்சி விரிவுரை) கற்கவேண்டும், அதன்படி நிற்கவேண்டும், என்பது குறள். கல்வி என்னும் பெயரில் உலகில் மக்கள் செய்துகொண்டு வருவது என்ன? பல நூற்களை வைத்துப் படித்துக்கொண்டிருக்கின்றனர். நூற்கள் என்பன யாவை? பல அறிஞர்கள் தங்கள் வாழ்க்கையில் கண்ட முடிபுகளை எழுதி வைத்து விட்டுப் போயிருக்கின்றனர்; அந்த வாழ்க்கையநுபவக் குறிப்புகளின் தொகுப்பைத்தான் நம் நூல் (புத்தகம் என்கின்றோம். அத்தகைய நூற்களைப் படிக்கின்றோம். ஏன் படிக்கின்றோம். அந்த நூற்கள் நம் வாழ்க்கைக்கு எவ்வாறு துணை செய்கின்றன? முதல் முதலில் அமெரிக்கா சென்று வந்தவன், இப்படியிப்படிப் போக வேண்டும்; இப்படியிப்படி நடந்துகொள்ள வேண்டும்’ என்று தன் அநுபவத்தை எழுதிவைத்தான். அதைப் படித்துவிட்டுச் செல்பவனுக்கு வழிப்பயணம் எளிதாகிறது. இந்த வழிகாட்டி (Guide) வேலையைத் தான் முன்னோர் எழுதி வைத்த நூற்களும் செய்கின்றன. இவற்றைப் படித்துத்தானா தெரிந்துகொள் வேண்டும்? நாமே வாழ்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ளக்கூடாதா? செய்யலாம்; ஆனால் காலமும் முயற்சியும் மிகவும் வீணாகும். வாழ்க்கையின் பூட்டுத் திறப்புகளைத் தெரிந்துகொள்வதிலேயே காலங் கழிந்துவிடும். ஆக்க வேலைகளுக்குக் காலம் போதாது. முட்டின்றி வாழ்க்கை வாழ முடியாது. ஆகையால்தான் முன்னோர் நூற்களைக் கற்க வேண்டும்.

ஒருவனுக்கு இப்போது வயது முப்பது. அவன் மூவாயிரம் ஆண்டுகளாக எழுதப்பட்டு வந்துள்ள நூற்களையெல்லாம் படித்திருக்கிறான் என்றால், அவனுக்கு இப்போது வயது வெறும் முப்பது அன்று; மூவாயிரத்து முப்பது (3000+30=3030) ஆகும். அந்த நூற்களைப் படிக்காத எண்பது வயதுக் கிழவன் ஒருவன் இவனுக்கும் சின்னவனேயாவான். மூவாயிரத்து முப்பதுக்கும் வெற்று எண்பதுக்கும் எவ்வளவோ இடைவெளி இருக்கிறதல்லவா? இதனால்தான்,

‘ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’

எனப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூற்றுப் பாடல் (183) ஒன்றில் கூறியிருக்கிறான் போலும்!

எனவே, கற்றல் என்பது, எதிர்கால நல் வாழ்வுக்காக முன்கூட்டியே பெறும் பெரியதொரு பயிற்சியே என்பது விளங்கும். “பெற்றுள்ள சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னைப் பொருத்தி வாழக் கற்றுக் கொள்ளுதலே பயிற்சி பெறுதலே கல்வியாகும்” . என்பது இக்காலக் கல்விக் கொள்கையின் முற்ற முடிந்த துணியாகும். இதைத்தான் வள்ளுகூர் ‘கற்க ... நிற்க’ என அறிவிக்கின்றார். கற்பது எதற்காக? நிற்பதற்காகத்தான்! கற்றுவிட்டோமே என்பதற்காக நிற்பதில்லை. கல்வியின் நோக்கமே நிற்பதுதான் நிற்றல் என்பது வாழவேண்டிய முறைப்படி வாழ்வதுதான். வாழ்வதற்கு வழிகாட்டுவதுதானே கல்வி அதனால்தான் “கற்க ... நிற்க” என்றார் ஆசிரியர்.

‘புரட்சியகராதி’ என்னும் பெயரில் ஓர் அகராதி தொகுக்கும்படி எனக்கு ஆணையிட்டால், கற்றல் என்றால் நிற்றல் என்றே கூட நான் பொருள் எழுதி வைத்துவிடுவேன்.இதற்கு நிகண்டு போன்ற மேற்கோள் சான்றாக இந்தக் குறளையே எடுத்துக் காட்டிவிடுவேன். பின்னே என்ன? படிப்புக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லாமல் எத்தனையோ பேர் தருக்கித் தடுமாறித் திரிகிறார்களே, அவர்களைப் படித்தவர்கள் என்று எவ்வாறு அழைப்பது? இந்தக் கறிக்கு உதவாத பள்ளிக் கணக்கர்களையும் என்னென்பது! அதனால்தான், அண்ணல் காந்தியடிகள் கூட, வாழ்க்கைக்குப் பயன்படும்படியான வாழ்க்கைக்கு ஆதாரமான கல்வியைப் பயிற்றுங்கள் என்று அறிவுரை தந்தார்கள். அவர்களது முறையினை நாம் ‘ஆதாரக் கல்வி’ (Basic Education) என்றழைக்கிறோம். இதைத்தான் வள்ளுவப் பெருமானார், கற்று நிற்க - நிற்கக் கற்க என்று அப்போதே அறிவித்துப் போந்தார். இனி இக்குறளின் சொல்நயங்கட்குச் செல்வோம்:

பள்ளிக்கூடத்துக்கு வெளியிலே பயனற்ற ஏடுகளைப் படிப்பது மட்டுமல்ல பள்ளிக் கூடத்திலேயுங் கூட பிற்கால வாழ்க்கைக்குப் பயன்படாத பல செய்திகள் படிக்கப்படுகின்றனவே. அது கூடாது. வாழ்க்கைக்குப் பயன்படுவனவே கற்கப்பட வேண்டியனவாம். கற்கக் கூடாதவற்றைக் கற்றுக் காலத்தைக் குறைத்துக் கொள்ளற்க; கற்க வேண்டியவற்றையே கற்பீராக, என்று சொல்ல வந்தவர் போல் ‘கற்பவை கற்க’ என்றார் ஆசிரியர். மூன்றாண்டுகள் முற்றுங் கற்றாலும் முடிவு பெறாத ஒரு தேர்வுக்கு (பரீட்சைக்கு) உரிய நூற்களை நான் மூன்றே திங்களில் கற்று முடித்துத் தேர்வு எழுதி வெற்றியும் பெற்றுவிட்டேன் என்று வெட்கமில்லாமல் மார்பு தட்டிப் பெருமை பேசுகின்ற பேயர்களே! முக்கியமாய்த் தேர்வுக்கு வரக்கூடியது எது என்று பார்த்துக் கோடு கிழித்துப் படித்துத் தேர்வு எழுதிவிட்டு, தேர்வுத்தாள் திருத்துபவரைத் துரத்துகின்ற பித்தலாட்டப் பேடியர்களே! உங்களால் எல்லோருக்கும் கெட்ட பெயராம். எனவே, நீங்கள் இப்படிக் கற்றால் போதாது; பிழையற ஐயந்திரிபறக் கற்க வேண்டும், என்று சொல்ல விரும்பியவர் போல ‘கசடறக் கற்க’ என்றார் ஆசிரியர். ‘கல்வி என்பது பின்னால் பயனளிப்பதுதான்’ என்னும் கல்விக் கொள்கைக்கு அகச் சான்றாக, ‘கற்றபின் நிற்க' என்னும் தொடரிலுள்ள பின் என்னும் ஒரு சொல்லே போதுமே கற்றபின் அதற்குத் தக ஒழுகுக - அல்லது நடக்க’ என்று சொல்லாமல் ‘நிற்க’ என்றது ஏன்? ஒழுகுதலில் தளராத உறுதி வேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகவே நிற்க’ என்றார். நிற்றல் என்றால் நிலையாய் நிற்றல்தானே! இந்தக் காலத்தில் என்னவோ கட்டாயக் கல்வி - கட்டாயக் கல்வி (Compulsory Education) என்கிறார்களே - இந்தக் கட்டாயத்தை, ‘க’ எனும் விகுதி பெற்று விதித்தல் பொருளில் வந்துள்ள ‘கற்க - நிற்க’ என்னும் பொருளில் வியங்கோள் வினைமுற்றுக்கள் உணர்த்தி நிற்கும் நுண்பொருள் அழகினை நுனித்தறிந்து மகிழ்க! (வியங்கோள் வினைமுற்றைப் பற்றியும், அதன் விதித்தற் பொருளைப் பற்றியும் இலக்கண நூலுள்கண்டு தெளிக).

மேலும், இந்தக் குறளில் இருபத்தேழு எழுத்துக்கள் உள்ளன. அவற்றுள் இருபத்துமூன்று எழுத்துக்கள் கடின ஓசையுடைய வல்லெழுத்துக்கள். இப்பொழுது இந்தக் குறளை இரண்டு மூன்றுமுறை படித்துப் பாருங்கள்? வள்ளுவர் எவ்வளவு ‘காரசார’ உணர்ச்சியுடன் கல்வியைக் கட்டாயப்படுத்தியுள்ளார்! எவ்வளவு வல்லோசையுடன் வற்புறுத்தியுள்ளார்!. அவர் வல்லெழுத்துக்களை மிகுதியாகச் சேர்க்கவேண்டும் என்று எண்ணியா சேர்த்தார்? இல்லை. அவரது உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சியின் ஊற்றமானது, அவரையறியாது ஊற்றெடுத்து வெளிப்போந்துவிட்டது. இதுதான் இயற்கைப் புலவர்களின் இயல்பு. எனக்கு எப்படி இது தெரிந்தது? இந்தக் குறளைப் படித்ததுமே, இதற்கும் ஏனைய குறள்கட்கும் ஒலி வேற்றுமை விளங்கிவிட்டதே! இதற்காகத்தான், செய்யுட்களை யெல்லாம் நன்கு வாய்விட்டுப் படிக்க வேண்டும்; திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க வேண்டும்.

எனவே, கற்கத் தக்கனவற்றைக் கற்போமாக! கற்றபடியே நிற்போமாக!