உள்ளடக்கத்துக்குச் செல்

வாழும் வழி/வித்தின்றி விளையும் விந்தை

விக்கிமூலம் இலிருந்து

9. வித்தின்றி விளையும் விந்தை

‘இல்லாமல் பிறக்காது’, ‘வித்தாமல் விளையாது’ என்பன முதுமொழிகள். விதை போடாமல் எதுவும் விளையாது என்பது இதனால் அறியக் கிடக்கிறது. மக்கள் விதைக்காவிடினும், தாமாகவே தோன்றி வளரும் மரஞ் செடி கொடிகள் கோடி கோடி. ஆயினும் அவற்றின் கீழ் விதை இருக்கும். நம் வீட்டுத் தோட்டத்தில் கூட சில முளைக்கின்றன. அவற்றை நாம் தப்புச் செடி அதாவது இயற்கையாகவே விதைத்துக்கொண்டு முளைத்த செடி என்கிறோம். அவையும் விதையிலிருந்து எழுந்தவையே!

மணிக்கூண்டுக்கு அடியில் மாயவித்தை செய்து காட்டுபவன் கூட, ஒரு மாங்கொட்டையை நட்டுத்தான், சிறிது நேரத்தில் செடியாக்கிக் காயாக்கிக் காட்டுகிறான். காயோடு கூடிய ஒரு மாங்கொத்தையும் முன்கூட்டியே ஒடித்துக்கொண்டு வரும் அவனும், உடன் ஒரு மாங் கொட்டையையும் கொண்டுவரத்தான் செய்கிறான். வித்தில்லாமல் விளையாதல்லவா? ஆனால், நம் அறிஞர்கள் சிலர் வித்தாமலேயே - விதையின் உதவி தேவைப்படாமலேயே நிலம் தானாகவே நன்றாக விளையும் என்று கூறிச் சென்றுள்ளனர். அவர்களை அடியொற்றி இன்றும் சிலர் கூறிக்கொண்டிருக்கின்றனர். என்னே விந்தை!

இந்த விந்தையை உலகினர் கேள்விப்படின், முற்கூறிய அறிஞர்களைக் கண்டு பேசத் துடிப்பர்; என்ன செய்தால் வித்தாமலேயே நிலம் தானாகவே விளையும் என்பதைத் தாமும் தெரிந்துகொள்ள அவாக் கொள்வர்; மேலும் அத்துறையில் ஆராய்ச்சி நடத்த ஆர்வம் காட்டுவர். ஆம், அந்த வழியையும் நம்மவர்கள் சொல்லியிருக்கின்றனர். அஃது என்ன?

‘தன் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு இருக்கும் உணவை அளித்து, மிச்சம் இருப்பின் தான் உண்ணுபவன் எவனோ, அவனுடைய நிலத்தில் விதையே போட வேண்டியதில்லை; அது தானாகவே “தாம் தாம் என்று விளைந்துவிடும்.”

இதுதான் நம் அறிஞர்களின் கண்டுபிடிப்பு. இது உலக விஞ்ஞானிகளுக்கு ஓர் அறைகூவல் அல்லவா? உலகத்தினர் இதனை நம்பவில்லையென்றால் அது அவர்களுடைய தவறு என்றுதான் நம் மேதைகள் பகர்வர்.

இந்தக் கருத்து சிறிதும் அறிவிற்குப் பொருந்தாத ஒரு மயக்கமாகும். ஒருவன் தன் உணவை வருபவர்க்கு அளித்துவிட்டு, தான் ஈரத்துணியை வயிற்றில் போட்டுக் கொள்வானானால், அவனுக்குப் பெரிய புண்ணியம் உண்டாகும். அப் புண்ணியங் காரணமாக, அவன் நிலம் தானாக விளையும்படிக் கடவுள் அருள்புரிவார் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் நம்மவர் சிலர் இப்படி எழுதி வைத்துள்ளனர். இந்தக் கருத்தை இன்றைய உலகம் - பகுத்தறிவு நிறைந்த உலகம் ஆராய்ச்சித் திறன் பெற்ற உலகம் - விஞ்ஞான உலகம் ஏற்றுக்கொள்ளுமா?

ஒருவேளை, எருவிடாமல் விளைந்தாலும் விளையலாம் - நீர்பாய்ச்சாமல் விளைந்தாலும் விளைய லாம் - களை பறிக்காமல் விளைந்தாலும் விளையலாம். காவல் காக்காமல் விளைந்தாலும் விளையலாம்; ஆனால் விதையில்லாமல் நிலம் விளைய முடியுமா? இங்ங்னம் கூறுபவர்களை உலகப் பொருட்காட்சி நிலையத்தில்தான் வைக்கவேண்டும்.

இவர்கள் இந்த பெரிய இமாலயப் பிழையை தங்கள் மேல் சுமத்திக் கொள்ளவில்லை; திருவள்ளுவர் தலைமேல் கட்டிவிட்டிருக்கிறார்கள். இதுதான் வியப்பு! இல்லையில்லை, வியப்பில்லை வருந்தத்தக்கது. அஃது என்ன? இவர்கள், திருவள்ளுவரின் ஒரு குறளுக்கு, உண்மைப் பொருள் உணராது, இவ்வாறு திரிபான பொருள் கூறியுள்ளார்கள். அந்தக் குறள் வருமாறு:

“வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்”

என்பது குறள். இது விருந்தோம்பல் என்னும் பகுதியில் உள்ளது. இப் பாடலுக்கு, பழைய உரையாசிரியர்கள் பலரும், அவர்களைப் பின்பற்றிய இக்காலத்தவர் பலரும், மேற்கூறிய கருத்தையே உரையாக எழுதியுள்ளனர். இக் குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்ற அறிஞர்களுங்கூட, அந்தக் குட்டையில் ஊறின மட்டையாகவே காணப்படுகின்றனர். அதாவது “விருந்தினர்க்கு முதலில் உணவளித்து, பின்பு மிகுந்திருப்பதைத் தான் உண்ணுபவனுடைய நிலத்தில் விதையும் இட வேண்டுமோ? வேண்டா; அது தானாகவே விளையும்” என்னும் கருத்திலேயே எல்லோரும் உரை எழுதியிருக்கின்றனர். அறிஞர்களின் ஆராய்ச்சிப் பார்வைக்காக இங்கே பழைய தமிழ் உரைகள் மூன்றும், ஆங்கில மொழிபெயர்ப்பு மூன்றும் கீழே தரப்படும்:

1) “முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத்தான் மிசைவானது விளைபுலத்திற்கு வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா; தானே விளையும்.”

- பரிமேலழகர்

2) “விருந்தினரை யூட்டி மிக்க வுணவை உண்ணுமவன் புலத்தின்கண் விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? வேண்டா; தானே விளையாதோ?

-மணக்குடவர்

3) விருந்து உபசரித்து மிஞ்சினதைப் புசிப்பது, கழனிக்கு எருப்போட்டு நீர்த் தேக்கினதுபோல ஒன்று நூறாயிரம் விளையும்.

-பாரதியார்

4) “Does the field of one who partakes what remains after entertaining the guest, need to be sown with seeds?” - by V.R.Ramachandra Deetchathar 5) “Behold the man who feedeth his guest first and then only eateth what is left; doth his land stand in need even of sowing?” - By V.V.S. Aiyar.

6) “What need is there that he should sow his field, who welcomes guests and eats but what remains?” - by H.A.Popley.

விரிவஞ்சி இங்கே அறுவர் உரைகள் மட்டும் தரப்பட்டுள்ளன. இப்படியே பற்பலர் எழுதியுள்ளனர். வள்ளுவர் இந்தக் கருத்திலா இந்தக் குறளை எழுதியிருப்பார்? அறிவுக்கொவ்வாத குப்பைகளை நம்பிவந்த மக்களிடையே தோன்றி வாழ்ந்து வந்தவர்தான் வள்ளுவர் என்றாலும் கருத்துக்களை வெளியிடும் முறையில் அவர் ஒரு பெரும் புரட்சிக்காரர் என்பதைக் கூர்த்த மதியினர் உணர்வர். அந்தக் காலத்துக்கு அவர் போக்கு ஒரு பெரும் புரட்சியே!

இனி, இந்தக் குறளின் உண்மைக் கருத்து யாதாக இருக்கக்கூடும் என்று ஆராயலாம்:-

உணவு அருந்தும் வேளை. ஒருவர் திடீரென்று ஏதோ ஒரு வேலையாக வீட்டிற்கு வந்துவிடுகிறார். உண்ணுவதற்குச்செல்ல இருந்த வீட்டுக்காரர் வந்தவரையும் உடன் உண்ண அழைக்கிறார். ‘திடீரென்று வந்தவிடத்தில் உணவருந்த ஒத்துக் கொள்ளலாமா? நமக்காக முன்கூட்டியே உணவு தயாரித்தா வைத்திருக்க முடியும்?’ என்றெண்ணி வந்தவர் மறுக்கிறார். வீட்டுக்காரர் வற்புறுத்துகிறார்: “உங்களுக்காகவா உலை வைத்துச் சோறு சமைக்கப் போகிறோம்? ஏதோ இருப்பதை எங்களுடன் உண்ணுங்கள்” என்று சொல்லி அழைக்கிறார். இந்நிகழ்ச்சியினை உலகியலில் காணலாம். இன்னும் சிலர், வந்தவரை நோக்கி, ‘உங்களுக்காகவா கூடை எடுத்துக்கொண்டு கடைக்குப் போய் அரிசி வாங்கி வந்து சமைக்கப்போகிறோம்? ஏதோ இருக்கிறது; எடுத்துப் போட்டுச் சமைத்திருக்கிறோம்; அதனை எங்களுடன் நீங்களும் உண்ணுங்கள்’ என்று கூறி அழைப்பர். இஃதும் உலகியலில் காணத்தக்கதொரு நிகழ்ச்சியே.

இப்பொழுது இங்கே இக்குறள்பற்றி இரண்டு படிகள் எடுத்துப் பேசப்பட்டன. நாம் மூன்றாவது படிக்குத் தாண்டுவோமே! அஃது என்ன? ‘இருப்பதை வந்தவர்க்கு அளித்து, மிஞ்சியிருந்தால் தான் உண்ணும் உயர்ந்த உள்ளம் படைத்தவன், விருந்திருனருக்கு என்று கூடுதலாக நிலத்தில் விதைக்க வேண்டுமா? கூடுதலாகப் பயிர் செய்ய வேண்டுமா? கூடுதலாகச் சமைக்க வேண்டுமா? வேண்டா!’ என்பது வள்ளுவர் குறளின் கருத்தாயிருக்கக் கூடாதா? ‘தனக்கு மிஞ்சியே தருமம்’ என்ற உளநிலை படைத்தவன்தான், தனக்குப் போதா விட்டால் என்ன செய்வது என்றஞ்சிப் பிறருக்கென்று தனியாகத் தயார் செய்யவேண்டும். ஆனால், தனக்கு மிஞ்சியே தருமம் என்றில்லாமல், பிறர்க்கு மிஞ்சியே தனக்கு என்ற உயர்ந்த உளநிலை பெற்றவன், தனக் கென்றும் பிறர்க்கென்றும் தயாரிக்க வேண்டியதில்லை; தன்னுடையதையே பிறர்க்குத் தந்துவிடுவான் அன்றோ?

உங்களுக்காகவா உலை வைத்துச் சமைக்கப் போகிறோம்? இது முதல் படி. உங்களுக்காகவா கடைக்குச் சென்று அரிசி வாங்கி வரப்போகிறோம்? இது இரண்டாவது படி. உங்களுக்காகவா விதைத்துப் பயிரிடப் போகிறோம்? இது மூன்றாவது படி. இந்த மூன்றாவதுபடியே இக்குறளிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டது. இந்தக் கருத்தினை அறிஞர்கள் ஆராய்ந்து காண்க.

‘இரட்டுற மொழிதல்’ (இரு பொருள்படக் கூறுதல்) என்றும் ஓர் இலக்கணக் கொள்கைப்படி, இன்னொரு கோணத்தில் நின்றும் இந்தக் குறளை நோக்கலாம். அஃது என்ன?

“தன்னலம் பாராது பிறர்நலமே பேணுபவன் - தன் பசியையும் பாராது பிறர் பசியைப் போக்குபவன் - தனக்கு வைத்திருந்த உணவைப் பிறர்க்கு அளித்துவிடும் பெரிய உள்ளம் படைத்தவன், வீட்டில் ஒன்றும் இல்லாத போது விருந்தினர் வந்துவிட்டால், விதைப்பதற்கென்று வைத்திருக்கும் விதை நெல்லை நிலத்தில் கொண்டு போய் விதைக்கவும் விரும்புவானா? விரும்பமாட்டான். அதனைக் குத்தி அரிசியாக்கிச் சமைத்து விருந்தினர்க்குப் படைக்கவே செய்வான்” - என்ற கருத்து பொதிந்த கண்களுடன் இந்தக் குறளை நோக்குங்கள்! விதைத்த நெல்லையே நிலத்திலிருந்து எப்படியோ எடுத்துக் கொண்டு வந்து குத்திச் சமைத்து வந்தவர்க்கு இட்ட வள்ளல் இளையான்குடி மாற நாயனாரது வரலாறு தமிழ் மக்கள் அறியாததொன்றன்று.

இந்தக்கருத்தின்படி, இக்குறளிலுள்ள ‘வேண்டும்’ என்னும் சொல்லுக்கு ‘விரும்புதல்’ என்று பொருளாம். வேண்டுதல் என்ற சொல்லுக்கு விரும்புதல் என்னும் பொருள் உண்மையை ‘வேண்டுதல் வேண்டாமையிலான்’ என்று தொடங்கும் குறளானும் உணரலாம். வேண்டுங்கொல்லோ என்றால், விரும்புவான்கொல்லோ - விரும்புவானோ என்பது பொருள். ஈண்டு, வேண்டும் என்பது ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டு வினைமுற்று. அஃது, ஆண்பால் ஒருமைக்கும் உரியது என்பதைத் தமிழிலக்கணம் கற்றோர் நன்கறிவர். மேலும், இந்த வாய்ப்பாட்டு வினைமுற்று ஆட்சியை வள்ளுவர் பல குறள்களில் கையாண்டுள்ளார் என்பதனைத் திருக்குறள் கற்றவர் நன்குணர்வர். எனவே இந்தக் குறளுக்கு, “முன்னர் விருந்தினரை ஒம்பிப் பின்னர் மிஞ்சியிருந்தால் தான் உண்ணும் உளநிலை பெற்றிருப்பவன், வித்தினை - விதை நெல்லை - விதைத் தானியத்தை நிலத்தில் இடவும் விரும்புவானோ? மாட்டான்; விருந்தினர்க்குச் சமைத்து அளிக்கவே விரும்புவான்” என்று பொருள் கூறுவது முன்னதினும் சிறந்ததொன்றாம்.

பரிமேலழகர் இந்தக் குறளை, விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக அமைத்துக் கொண்டு (3, 4, 5 குறள்களில்) விருந்தோம்பலின் பயன் கூறப்பட்டதாகச் சொல்கிறார். பரிதியாரோ ஏழாவது குறளாக அமைத்துக்கொண்டுள்ளார். ஏன்? இதனை மூன்றாவது குறளாகக் கொண்டு, விருந்தோம்புவானது உள்ளப் பண்பின் உயர் எல்லையைச் சிறப்பித்தாகக் கொள்ளலாமே!