வாழும் வழி/இலக்கணம் இன்றியமையாததா?

விக்கிமூலம் இலிருந்து





3. மொழியியல்


11. இலக்கணம் இன்றியமையாததா?

பெரும்பாலோர் தமிழைப் பிழையாகவே எழுதுகின்றனர். கடிதம், விளம்பரத்தாள், பெயர்ப் பலகை, சில வெளியீடுகள் முதலியவற்றில் பிழைகள் மலிந்திருக்கலாம். இதற்குக் காரணம் இலக்கண அறிவு இன்மையேயாகும். ‘இலக்கணவிதி தெரியாமற் போனாலென்ன? பிழையாக எழுதினால்தான் என்ன? ஏறக்குறைய கருத்தைத் தெரிவித்தால் போதாதா?’ என்ற வினாக்கள் எழுப்பப்படலாம்.

உலகில் எந்த மொழியினையும் பிழைபடப் பேசுவதாலும் எழுதுவதாலும் உண்டாகும் கேடு (நஷ்டம்) சொல்லுந்தரத்தன்று. எடுத்துக்காட்டாக நம் தென்னிந்திய மொழிகளையே எடுத்துக்கொள்வோம்:

சிலவாயிரம் ஆண்டுகட்கு முன்தென்னிந்தியாவில் ஏதோ ஒரு மொழியே பேசப்பட்டு வந்தது. ஒரே மொழியைப் பேசிய மக்களே, ஒரு மூலைக்கு ஒரு மூலை அம்மொழியினைப் பலவிதமாக இழுத்தும் விழுங்கியும், நீட்டியும் குறுக்கியும், சேர்த்தும் குறைத்தும், மாற்றியும் திருத்தியும் பேசி வந்தனர். இதனால், ஒரே மொழி பலவகை மாறுபாடு அடைய இடமுண்டல்லவா?

அது மட்டுமன்று; ஆங்காங்கு வந்து குடியேறிக் கூடி வாழ்ந்த பிற மொழியாளர்களின் வீதத்திற்கு ஏற்ப, கூடுதல் குறைச்சலாக, மூலைக்கு மூலை பிற மொழிக் கலப்பு ஏற்பட்டதாலும், ஒரே மொழி பல மாறுபாடு அடைய நேரிட்டது.

அது மட்டுமன்று; ஆங்காங்கே படையெடுத்து வந்து வென்று அடக்கியாண்ட பிறமொழி யரசர்களின் வீதத்திற்கு ஏற்பவும், அவர்தம் ஆட்சியாண்டுகளின் அளவிற்கு ஏற்பவும் கூடுதல் குறைச்சலாக, ஒரு மூலைக்கு ஒரு மூலை, பிறமொழிக் கலப்பு ஏற்பட்டதாலும், ஒரே மொழி பல்வேறு மாறுபாடு அடைய நேர்ந்தது.

இங்ஙனம் நாளடைவில், ஒரு மொழியினர்க்குள்ளேயே, இம்மூலையில் வாழ்ந்தவர் பேசியது ஒருவிதமாகவும், அம்மூலையில் வாழ்ந்தவர் பேசியது மற்றொருவிதமாகவும் இருந்ததால், இது ஒரு மொழி போலவும், அது வேறொரு மொழி போலவும் தோன்ற இடமுண்டாயிற்று.

இந்நிலையில், சூழ்நிலையின் காரணமாக, அவ்வொரு மொழி மக்களுக்குள்ளேயே மேலும் பல பிரிவினைகள் ஏற்பட்டு விட, அவ்வவர் பேசிய பேச்சுக்கள், வெவ்வேறு பெயர்களுடன், வெவ்வேறு மொழிகளாகப் பிரிந்துவிட்டன.

இவ்விதம் பிரிந்தவைகளே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்னும் நான்கு மொழிகளுமாகும். இவற்றுள் ஒவ்வொன்றும் வடமொழி (சமஸ்கிருதம்) கலப்பின் வீதத்தால் மாறுபடும். இந்நான்கனுள், மிகக்குறைந்த அளவு கலப்புடையது தமிழ்தான். கலக்காமலேயே, தமிழைப் பேசவும் எழுதவும் வேண்டிய சொற்கள் தமிழிலேயே உள்ளன. மற்றைய மூன்று மொழிகளும், தம்மிடம் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கிக் கொள்ளுமாயின், மீண்டும் தமிழோடு ஒன்றுபட்ட மொழிகளாகத் தோன்றும். இக்கருத்தை மெய்ப்பிப்பதற்காக நான்கிலும் ஒத்துள்ள சில சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஊன்றி நோக்கின் உண்மை புலனாகும்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்
அண்ணன் அன்ன அண்ணா சேட்டன்
தம்பி தம்புடு தம்ம அனுசன்
மகன் குமாரடு மகனு ஆண்குட்டி
மகள் குமாரத்தி மகளு பெண்குட்டி
பாட்டன் தாத தாத மூப்பன்
அக்காள் அக்க அக்க சேட்டச்சி
மாமன் மாம மாவ அம்மாவன்
எது எதி எது எது
அது அதி அது அது
இது இதி இது இது
சிறிய சின்ன சிக்க சிறிய
நெருப்பு நிப்பு பெங்கி தீ
மழை வானெ மளெ மழ
கொடு ஈய் கொடு கொடு
இரவு ராத்திரி ராத்திரி ராத்திரி
பகல் பகலு அகலு பகல்
யார் எவரு யாரு யாரானு
ஊர் ஊரு ஊரு ஊரி
ஊருக்கு ஊரிக்கி ஊரிகே ஊரிலே
சோறு அன்ன ஊட்ட ஊணு
சேலை சீரா சேலை முண்டு
கண் கன்னு கண்ணு கண்ணு
மூக்கு முக்கு மூங்கி மூக்கு
காது செவ்வு கிமி செவி
வாய் நோரு பாயி வாயி
தலை தல தலெ தலை
பசு ஆவு அசுவு பசு
எருது எத்து எத்து காள


மேற்கூறிய சான்றுகளால், இந்நான்கு மொழியினரும் ஒரு காலத்தில் ஒரே மொழியைப் பேசிவந்தனர் என்பது உறுதிப்படுமன்றோ? மற்றும், இப்போது மலையாளம் எனப்படும் பகுதி பண்டைக்காலத்தில் தமிழ் நாட்டின் மூவல்லரசுகளுள் ஒன்றான சேர நாடாகத் திகழ்ந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கதாகும்.

இவ்விதம் இவர்கள் மொழியினால் பிரியாமல் ஓரினத்தவராயிருந்தால், தமிழர், தெலுங்கர், (ஆந்திரர்) கன்னடியர், மலையாளிகள் என்ற நால்வகைப் படாமலும், தனித்தனி ‘மாநிலம்’ (மாகாணம்) கேட்காமலும், ஒரு மொழிப் பெயரினராய் ஒரு மாநிலத்தினராகவே இன்று திகழலாமன்றோ? திகழவே, இவ்வட்டத்திய ஒரே மொழிமக்கள் பலகோடியினர் என்ற பெயரும் கிடைக்குமே! மொழி பிரிந்ததனாலன்றோ மக்கள் பிரிந்து சென்றனர்! இதனை ஊன்றி நோக்க வேண்டும்.

மொழி பிரிந்ததற்குப் பல காரணங்கள், மேலே கூறப்பட்டிருப்பினும், எல்லாவற்றினும் இன்றி யமையாததான மற்றொரு காரணமும் உண்டு. பண்டைய மக்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கண முறையைப் பின்பற்றாமைதான் அக்காரணமாகும்.

பேச்சு வழக்கில் பின்பற்ற முடியாது போயினும், எழுத்து வழக்கிலாவது ஒரேவிதமான இலக்கணத்தைப் பின்பற்றி ஒரே விதமாக எழுதி வந்திருப்பார்களேயானால், அப்பழக்கம், பேச்சையும் ஓரளவு கட்டுப்படுத்தி, மொழி பிரிந்து சிதையாமல் இருக்கச் செய்திருக்குமல்லவா?

உலகம் முழுவதும் பெரும்பாலும் ஒரே விதமான இலக்கணத்தைப் பின்பற்றி ஆங்கிலத்தை எழுதுவதாலேயே, சீனன் எழுதும் ஆங்கிலத்தை இந்தியனும், இந்தியன் எழுதும் ஆங்கிலத்தை ஐரோப்பியனும் புரிந்துகொள்ளும்படியாக அம்மொழி ஒத்துள்ளதன்றோ? ஐரோப்பியன் எழுதும் ஆங்கிலத்திற்கு ‘இங்லீஷ்’ என்றும் ஆசியாக்காரன் எழுதும் ஆங்கிலத்திற்கு ‘கிங்லிஷ்’ என்றும் பெயர் வேறுபாடு இல்லையே!

இம்முறையைப் பண்டுதொட்டு நம் தென்னிந்தியரும் பின்பற்றி வந்திருப்பாரேயாயின் நான்கு மொழியினராகவும் - இனத்தினராகவும் பிரிய வேண்டியது வந்திராதே!

“போனது போயிற்று, பிள்ளையாரே வாழி” என்று ஏற்றப் பாட்டு பாடுவார்கள். அதுபோல், பிரிந்தவர் போக, தமிழர்களாகிய நாமாயினும் இன்னும் நமக்குள்ளேயே பற்பல மொழியினராகப் பிரிந்து விடாவண்ணம் தற்காத்துக்கொள்ள வேண்டியது நம் கடமையல்லவா? அதுதானே அறிவுடைமையாகும்!

இன்றைக்கு சென்னைத் தமிழன் பேசும் தமிழும், இலங்கைத் தமிழன் பேசும் தமிழும், மலேயாத் தமிழன் பேசும் பேச்சும் வேறுபட்டிருப்பதைப் பார்க்கக் காண்கிறோம். ஓரிடத்தார்பேசும்தமிழை மற்றோரிடத்தார் கேட்டுப் புரிந்துகொள்வது சில நேரத்தில் அரிதாயுள்ளது. ஆயினும், வெவ்வேறு இடங்களிலுள்ள இவர்கள் எழுதியுள்ள சில நூற்களைப் படித்துப் பார்ப்போமானால், பெரும்பாலும் நடையில் ஒத்துள்ளன; புரிந்துகொள்ளவும் முடிகிறது. காரணமென்ன? ஒரே வித இலக்கணத்தைப் பின்பற்றி எழுதியதுதானே! எல்லோரும் வெவ்வேறு விதமாகப் பேசுவது போலவே எழுதவும் தொடங்கிவிடின், புரியாமற் போகுமாதலின் ஒவ்வொருவடைய தமிழும் ஒவ்வொரு வேறு மொழியாக மாறிவிடக் கூடுமன்றோ?

ஆதலின், “பேசுவது போலத்தான் எழுத வேண்டும், இலக்கணம் வேண்டா” என்றெல்லாம் கூறுபவர்கள் இக் கருத்துக்களை நுணுகி யாராய வேண்டும்.

எடுத்துக்காட்டொன்று வருமாறு:- ஒரு பக்கத்தில் ‘வாழ பழம்’ என்கிறார்கள் மக்கள்; மற்றொரு பக்கத்தில் ‘வால பலம்’ என்கிறார்கள்; இன்னொரு பக்கத்தில் ‘வாய பயம்’ என்கின்றனர்; வேறொரு பக்கத்தில் ‘வாச பசம்’ என்கின்றனர். இப்படியே எல்லோரும் எல்லாச் சொற்களையும் வேறு வேறுவிதமாக எழுதத் தொடங்கி விடின் நிலைமை என்னாவது! யார் புரிந்துகொள்வது? (மழை, தலை, எருது முதலிய சொற்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள என்னும் மொழிகளில் சிறுசிறு மாறுதலுடன் இருப்பதை, மேலுள்ள அட்டவணையில் காண்க) ஆகவே, ‘வாழைப்பழம்’ என இலக்கண விதிப்படி எல்லோரும் எழுதினால்தானே எல்லோரும் புரிந்துகொள்ளவும், மொழி சிதையாமலும் மக்கள் பிரியாமலும் இருக்கவும் முடியும்?

எனவே, மக்கள் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் வாழப் பாடுபட்டுத் தொண்டாற்றும் அரும்பெருந் தலைவர்களைப் போல, இலக்கணமும் ஒரு வகையில் தொண்டாற்றும் ஆற்றலுடையது என்பது விளங்கும். எனவே மொழிக்கு இலக்கணம் எவ்வளவு இன்றி யமையாதது என்பது இப்போது இனிது புலனாகுமே!