வாழும் வழி/புதுவைத் தமிழ்

விக்கிமூலம் இலிருந்து

12. புதுவைத் தமிழ்

திருச்சிராப்பள்ளியை யடுத்த டால்மியாபுரம் திருவள்ளுவர் கழகத்தில் ஒருநாள் மாலை சொற்பொழி வாற்றிவிட்டு, அங்கிருந்து கோயமுத்தூர் செல்வதற்காக, அன்று நள்ளிரவில், டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தில், திண்டுக்கல் நோக்கிச்செல்லும் புகை வண்டிக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது புகைவண்டி நிலையப் பொறுப்பாளர் (Station Master) விளக்கு, கொடி முதலிய கருவிகளுடன் வண்டியை வரவேற்கத் தயாராக வந்துநின்றார். நான் அவரிடம், “இந்த வண்டி எத்தனை மணிக்குத் திண்டுக்கல் போகும்? அங்கிருந்து கோயமுத்துருக்கு உடனே வண்டி உண்டா?” என்பதுபோல ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தேன். அவரோடு பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்திற்குள் இப்படியும் ஒரு கேள்வி போட்டேன். அதாவது “நீங்கள் வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவரா?” என்று கேட்டேன். “இல்லை. திருச்சி... சென்னை” என்று அவர் ஏதோ சொன்னார். நான் ஒத்துக்கொள்ளவில்லை. ‘நீங்கள் திருச்சியிலோ சென்னையிலோ நீண்ட நாட்களாக இருந்தாலுங் கூட, உங்கள் பெற்றோர் குடும்பம் இப்போது வேறு மாவட்டத்தில் இருந்தாலுங்கூட, நீங்கள் பிறந்து வளர்ந்த இடம் வடார்க்காடு மாவட்டமாகத்தான் இருக்க வேண்டும்’ என்று அடித்துப் பேசினேன் நான். ‘உண்மைதான் என்று இறுதியில அவர் ஒத்துக்கொண்டார். அந்த நள்ளிரவில் என்னை வழியனுப்ப வந்திருந்த டால்மியாபுரம் சிமன்ட் தொழிற்சாலைப் பொறியியல் வல்லுநரும் - திருவள்ளுவர் கழகத் தலைவருமான என் நண்பர் என்னை நோக்கி, ‘அவர் வடார்க்காடு மாவட்டத்தார் தான் என்று எதைக் கொண்டு இவ்வாறு துணிந்து சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். நண்பருக்குச் சொன்ன பதிலையே இங்கேயும் தருகிறேன்.

புகைவண்டி நிலையப் பொறுப்பாளர் பேசிக் கொண்டிருந்தபோது, ‘வண்டி வரச்சொல்ல நாம் முன்கூட்டியே தயாராயிருந்து இன்னது இன்னது செய்ய வேண்டும் என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன ‘வரசொல்ல’ என்னும் சொல்லைக்கொண்டு, அவர் வடார்க்காடு மாவட்டத்தார் எனத் துணிந்துகொண்டேன். மற்ற மாவட்டத்தார்கள் ‘வரும்போது - போம்போது’ என்றோ, அல்லது கொச்சையாக ‘வரச்ச-போச்ச’ என்றோ சொல்வதற்குப் பதிலாக, வடார்க்காடு மாவட்டத்தினர், ‘வரசொல்ல - போசொல்ல’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இன்னும் இந்த மாவட்டத்தினருள்சிற்சிலர், ‘என்னாங்க - இல்லிங்க’ என்பதற்குப் பதிலாக ‘என்னாப்பா - இல்லப்பா’ என்றும், ‘பல்லு குச்சி’ என்பதற்குப் பதிலாகப் ‘பெல்லு குச்சி’ என்றும், ‘சாமி (கோயில் விக்ரகம்) வருகிறது’ என்பதற்குப் பதிலாகச் ‘சாமியார் வருகிறார்’ என்றும் சொல்கின்றனர். இப்படி சில சொல்லொலிக் குறிகளைக் கொண்டு வடார்க்காடு மாவட்டத்தினரை அடையாளங் கண்டுகொள்ளலாம்.

ஒருமுறை சென்னையிலுள்ள பேர்பெற்ற எலும்புருக்கிநோய் மருத்துவ வல்லுநர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்போது, ‘நீங்கள் திருநெல்வேலிக்காரரா?’ என்று நான் அவரைக் கேட்டேன். ‘இல்லை, சென்னைதான் என்ற பதில் வந்தது. இப்போது சென்னையாக இருக்கலாம்; ஆனால் உங்கள் பழங் குடியிருப்பு திருநெல்வேலிப் பக்கமாகத்தான் இருக்க வேண்டும்’ என்றேன் நான். அவரும் ஒத்துக்கொண்டார். ஒலி வேறுபாட்டைக் கொண்டு ஓரிரு நிமிடத்தில் திருநெல்வேலி மாவட்டத்தினரை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்றாலும், அந்த மருத்துவ அறிஞர் நீண்ட நாட்களாகச் சென்னையில் தங்கிவிட்டதால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், உரையாடலின் ஊடே ஓடிவந்த ஒரு சொல் அவரது மாவட்டத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டது; அவர் ‘பொறவு’ என்னும் ஒரு சொல்லை இடையே கையாண்டார். பிறகு - அப்புறம் என்னும் பொருளில் ‘பொறவு’ என்னும் சொல்லை நெல்லை மாவட்டத்தினர் சொல்கின்றனர். இதே பொருளில் ‘அப்பால’ என்னும் சொல்லைச் சென்னைப் பக்கத்தில் உள்ளவர் சிலர் சொல்லுகின்றனர். ‘பொற வென்ன’ (பிறகு என்ன) என்னும் சொல்லாட்சியை நெல்லை வட்டத்தினரிடம் மிகுதியும் காணலாம். என்னாங்க - என்னையா என்பது போன்ற பொருளில் ‘என்னவே’ என்னும் சொல்லாட்சியையும் இவர்களிடம் காணலாம்.

‘இந்த போடு போடுகிறான்’ - ‘நான் சொல்லிப் போட்டேன்’ - ‘இத்தசோடு பெரிசு’ முதலான ஆட்சிகள் கொங்கு நாட்டாருடையவை. மெதுவாக என்னும் பொருளில் 'பைய-பைய’ என்பதும் வாலப்பலமும் கோலிக்குஞ்சியும் பாண்டிய நாட்டாரது ஆட்சி. வந்துகொண்டு போய்க்கொண்டு என்னும் பொருளில் ‘வந்துகினு - போய்க்கினு’ என்பது தென்னார்க்காடு மாவட்டத்து ஆட்சி. இதே பொருளில் ‘வந்துகிட்டு - போய்க்கிட்டு’ என்பது சோழ நாட்டாருடையது. இடம் என்னும் பொருளில் ‘தாவு’ என்று சொல்வது தொண்டை நாட்டு ஆட்சி. வழி என்னும் பொருளில் ‘தடம்’ என்று சொல்வது பாண்டியநாட்டு ஆட்சி. நமது தமிழ் - நமது நாடு என்னும் பொருளில், ‘எங்கள் தமிழ் - எங்கள் நாடு’ எனப் பேசுவது யாழ்ப்பாணத்தார் (சிலோன்) வழக்காறு. சென்னைத் தமிழோ நாடறிந்த ஒன்று. கீது, இஸ்துகினு, பேஜாரு முதலியன சென்னைத் தமிழின் சிறப்பு வளமாம்?!

இந்த வட்டார வழக்காறுகளை, நான் வெளியூர்க் கல்லூரிகளில் படித்த காலத்தும் ஆசிரியனாயிருந்த காலத்தும் பல மாவட்டத்து மாணவர்களோடு பழகியதால் அறிய முடிந்தது. இன்னோ ரன்னவை, அவ்வம் மாவட்டத்துப் பெரும்பான்மை மக்களின் வழக்காறுகளாகும். வெளி மாவட்டக்காரர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, ‘நீங்கள் இன்ன ஊர்க்காரரா?’ என்று கேட்கும் பழக்கம் - அது நல்லதோ கெட்டதோ - எப்போதுமே எனக்குண்டு. சிற்சில நேரங்களில், ஒருவரது நடையுடை தோற்றத்தைக் கொண்டும், அவர் இன்ன இடத்தார் என்று சொல்லிவிட முடியும். சாதிப்பட்டத்துடன் கூடிய பெயரைக் கொண்டே கூட சிலரது மாவட்டத்தை அறிந்து கொள்ளவும் முடியும்.

பிறருடைய மாவட்டங்களை வினவும் வேட்டைக்காரனாகிய யான், ஒருமுறை ஒருவரிடம் அகப்பட்டுக் கொண்டேன். தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆடுதுறை புகைவண்டி நிலையத்திற்கு அருகில், அணைக்கரை செல்லும் (பஸ்) வண்டிக்காக ஒருநாள் நான் காத்து நின்றேன். வண்டிவர நேரமாகவே பக்கத்திலிருந்த ஒரு கடைக்காரரிடம் போந்து, எனது கைப்பையைத் தந்து, முகம் தூய்மை செய்து வரும்வரையும் அதனைப் பார்த்துக் கொள்ளும்படி ஒப்படைத்துவிட்டுச் சென்றேன். நான் திரும்பி வந்து பையைப் பெற்றுக்கொண்டபோது, கடைக்காரர் என்னை நோக்கி, நீங்கள் புதுச்சேரிக்காரரா? என்று கேட்டார். அவரது வினா என்னை வியப்பில் ஆழ்த்தியது. புதுச்சேரிக்காரன் என்பதற்குரிய அறிகுறிகள் நம்மேல் என்ன இருக்கின்றன என்று என்னையே ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டேன். பின் ‘எதைக்கொண்டு நீங்கள் அப்படிக் கேட்டீர்கள்?’ என்று நான் அவரைக் கேட்டேன். ‘தண்ணீர் கானுக்குச் சென்று முகங்கழுவி வருகிறேன் என்று சொன்னீர்களே அதைக் கொண்டு கண்டுபிடித்தேன்’ என்று சொன்னார் அவர்.

மற்ற ஊர்களில், ‘தண்ணீர்க் குழாய்’ என்று தமிழிலோ, அல்லது ‘பைப்’ (Pipe) என்றும் ‘டேப்' (Tap) என்றும் ஆங்கிலத்திலோ சொல்லுவதை, புதுச்சேரியினர் ‘தண்ணீர் கான்’ என்று சொல்லுவார்கள். இந்தச் சொல்லைக்கொண்டுதான், நீங்கள் புதுச்சேரிக்காரரா? என்ற ஆடுதுறைக்காரர் என்னை மடக்கிவிட்டார். ‘உங்களுக்கு எப்படி இது தெரியும்?’ என்று நான் அவரைக் கேட்டேன். ‘புதுச்சேரிக்குச் சில முறை வந்திருக்கிறேன் - அங்கே இந்தச் சொல்லைக் கேட்டிருக்கிறேன்’ என்றார் அவர்.

‘கான்’ என்பது பிரஞ்சு மொழியில் இல்லை. ‘Can’ (ஒருவகைப் பாத்திரம்), "Canal” (கால்வாய்) என்னும் ஆங்கிலச் சொற்களிலிருந்து வந்ததாகவும் சொல்வதற்கில்லை. இது தமிழ்ச்சொல்லே. காடு, மணம் முதலிய பொருள்களுடைய ‘கான்’ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு, சலதாரை, வாய்க்கால் என்னும் பொருளும் உண்மையை, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியில் காணலாம். சலதாரை, வாய்க்கால் என்பன போல, தண்ணீர்க் குழாயும் நீர்வரும் பொருள் தானே இச்சொல் புதுவை வழக்காறாகும்.

புதுச்சேரியைப் போலவே மற்றொரு முன்னாள் பிரஞ்சிந்தியப் பகுதியாகிய காரைக்காலில், தண்ணீர்க் குழாயை, பீலி என்று அழைக்கின்றனர். இதன் அகராதிப் பொருள் நீர்த்தொட்டி என்பதாகும்.

புதுச்சேரி தென்னார்க்காடு மாவட்டத்திற்குள் அமைந்திருப்பினும், அது சில காலம் பிரெஞ்சு ஆட்சியின் கீழே தனித்திருந்ததாலும், இப்போது இந்திய ஆட்சியின் கீழே புதுவை மாநிலம் (State) என்னும் தனி மாநிலத்தின் தலைநகரமாயிருப்பதாலும் ஒருவகைத் தனிச் சிறப்புடையதாகும். எனவே, புதுச்சேரி வட்டாரத்தில் வழங்கும் சில சொல்லாட்சி வழக்காறுகளை ஈண்டு காண்போம்.

புதுவைத் தமிழக - புதுச்சேரி வழக்காறுகளை ஈண்டு கொடுக்கப்படுவனவற்றை, புதுச்சேரியினரை விட, பிற ஊர்க்காரராலேயே தம்மூர் வழக்காற்றினின்றும் பகுத்துணர முடியும் பிரித்துணர வியலும். இளமைக் காலமெல்லாம் கடலூரிலும் பிற ஊர்களிலும் வளர்ந்து வாழ்ந்து, இடைக்காலத்தில் புதுவையின் புதுமையான சில வழக்காறுகளைக் கேட்டு வியந்தேன். இதனை இங்கே ஏன் எழுதுகிறேன் என்றால் புதுவைக்குத் தெற்கே பதினைந்தாவது கல் தொலைவிலுள்ள கடலூரில் வளர்ந்த நான், கடலூர் வழக்காற்றினின்றும் புதுவை வழக்காற்றில் புதுமை கண்டதனாலேயாம். அண்மையில் உள்ள கடலூர்க்கே புதுமை என்றால், பிற ஊர்கட்கும் புதுமை தானே! என் பட்டறிவுக்குப் புதுமையாகத் தெரிகிறது மற்றவர்க்கு எப்படியோ!

புதுவை மக்கள் ஒருவரையொருவர் காணும் போது நலம் விசாரித்துக்கொள்வதில் வற்றாத குளிர்ச்சி காணப்படும். ‘செளக்கியமா யிருக்கிறீர்களா?’ என்று நலம் விசாரிப்பது பழக்கம் என்றாலும், புதுவையில் அடிக்கடி பார்த்துக்கொள்பவர்கள்கூட, பார்க்கும் போதெல்லாம் ‘செளக்கியமா யிருக்கிறீர்களா?' என்று வாய் குளிரக் கேட்பார்கள். அடிக்கடி விசாரிக்கிறார்களே என்று நான் வியந்ததுண்டு.

மற்ற ஊர்களில் படித்தவர்கள் ‘குட் மார்னிங் சார்‘ (Good Morning Sir), ‘குட் ஈவ்னிங் சார்’ (Good Evening Sir) சொல்வது போல, இங்கே ‘போன் மூர் முசியே’ (Bon Jour Monsieur), “போன் சுவர் முசியே” (Bon Soir Monsieur) என்று சொல்லி, காலை வணக்கமும் மாலை வணக்கமும் செய்வார்கள். அங்கே எடுத்ததற்கெல்லாம் ‘சார் சார்’ (Sir) என்று சொல்வதைப் போல, இங்கே ’முசியே முசியே’ என்பார்கள். அங்கே மிஸ்டர் ஆறுமுகம் என்பதைப் போல, அங்கே ‘முசியே ஆறுமுகம்’ என்றழைப்பர். நன்றி சொல்லும் பொருளில் அங்கே ‘தாங்சு’ (Thanks) என்பதுபோல, இங்கே ‘மெர்சி’ (Mercie) என்பார்கள். இந்த பிரெஞ்சு வழக்காறுகள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி கையாளப்படுதவதால் இங்கே எடுத்துக் காட்டப்பட்டன. இனித் தமிழ் வழக்காறுகளையே நோக்குவோம்:

உடல் நலம் இல்லாதிருப்பவரை, உடம்பு சரியில்லாமல் இருக்கிறார் - அல்லது காயலாவா இருக்கிறார் என்றெல்லாம் கடலூர்ப் பக்கத்தினர் சொல்லுவர் - ஆனால் இங்கோ, ‘நோவா இருக்கிறார்’. என்று சொல்லும் வழக்கு மிகவும் காணப்படுகிறது.

ஏதாவது ஒன்றைத் தொடங்கியாயிற்று என்று குறிப்பிடுவதற்காக, ஆரம்பிச்சாச்சு அல்லது தொடங்கி யாச்சு என்று சொல்வதற்குப் பதிலாக, ‘தோக்கியாச்சு’ (துவக்கியாயிற்று) என்னும் வழக்கு இங்கே பெரு வரவிற்று.

இங்கே எளிய மக்கள், வம்புக்கிழுத்தல் சண்டை போடுதல் என்னும் பொருளில் ‘சண்டை வாங்குதல்’ என்னும் தொடரைக் கையாள்கின்றனர். ‘என்னிடம் சண்டை வாங்காதே’ ’ஏன் என்னிடம் சண்டை வாங்குகிறாய்’ என்றெல்லாம் எளிய மக்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்கலாம்.

சோப் (Soap) என்பதனை, ‘சவுக்காரம்' என்னும் சொல்லால் குறிப்பிடும் பழக்கம் சிலரிடம் உண்டு.

‘இடம்‘ என்னும் சொல்லை ’வெடம்’ என்று கொச்சையாக ஒலித்துப் பேசும் பழக்கமும் சிலரிடம் உண்டு.

‘மேசையின் கீழே இருக்கிறது என்பதற்குப் பதிலாக ‘மேசையின்தாழ இருக்கிறது’ என்கின்றனர் சிலர்.

‘அவனிடம் பேசிக் கொண்டிருந்தேன்’ ‘அவனிடம் திட்டு வாங்கினான்’ என்பவற்றுக்குப் பதிலாக, ’அவன் கையில் பேசிக்கொண்டிருந்தேன்’‘அவன் கையில் திட்டு வாங்கினான்’ என்று சிறுவர்களும் பேசிகொள்கின்றனர்.

பரிட்சையில் தேறவில்லை - மாறவில்லை - பெயிலாய் விட்டது என்றெல்லாம் சொல்வதற்குப் பதிலாக, பரிட்சையில் அடித்துவிட்டார்கள் என்று சொல்லும் வழக்கம் ஈங்குண்டு.

சில ஆங்கில வினைச் சொற்களைத் தமிழ்ப் படுத்திப் பேசும்போது ‘பண்ணுதல்’ என்னும் சொல்லையும் சேர்த்துக்கொள்வது வழக்கம். எடுத்துக்காட்டாக, பர்ஸ் பண்ணுதல், வெய்ட் பண்ணுதல் போன்றவற்றை நோக்குக. ஆனால் இங்கே , ‘இடுதல்’ என்னும் சொல்லைச் சேர்த்துப் பேசும் ஒரு வகை வழக்கம் உள்ளது. எடுத்துக்காட்டாக, பாஸ் பண்ணுதல் என்னும் பொருளில் ‘பசேர் இடுதல்’ (Passer = Pass) என்றும், ஓய்வுகொள்ளுதல் என்னும் பொருளில் ‘ரெப்போசேர் இடுதல்’ (Reposer = Rest) என்றும் சொல்வதைக் கேட்கலாம்.

பிரெஞ்சு மொழி படித்தவரை ‘பாஷை படித்தவர்’ என்றும், பிரெஞ்சுமொழியில் எழுதுதலையில் பேசுதலையும் பாஷையில் எழுதுதல் பேசுதல் என்றும் குறிப்பிடும் வழக்கம் பரவலாக மக்களிடம் உள்ளது. மக்களது வழக்காற்றில், பாஷை என்றால் பிரெஞ்சு மொழி என்று பொருள் போலும்!

கடற்கரையைக் ‘கடலோரம்’ எனக் குறிப்பிடுவது இங்கே பெருவாரியான வழக்காகும். புறப்படுதல் என்பதற்குக் ’கிளம்புதல்’ என்றும், அப்புறம் என்பதற்கு ‘அப்பறமேல்பட்டு’ என்றும் சொல்வதை இளைஞர்கள் இடையே மிகவும் காணலாம்.

புதுவையில் என் கவனத்தை ஈர்த்த மற்றொரு வழக்காற்றைக் குறிப்பிடாமல் விடுவதற்கில்லை. அதுதான் ‘கண்டுபிடித்தல்’ என்பது. இந்தச் சொல் எல்லாரும் அறிந்த ஒன்றேயாயினும், இங்கே ஒரு கோணத்தில் வழங்கப்படுகின்றது. இருவர் உரையாடிக் கொண்டிருக்கும்போது, சொல்வது தெரிகிறதா - புரிகிறதா என்னும் பொருளில், ‘கண்டு பிடிச்சீங்களா’ என்று கேட்பது வழக்கம். ஒருவர் சொல்வதோ அல்லது ஆசிரியர் பாடம் நடத்துவதோ அவனுக்குப் புரியவில்லை - அவன் விளங்கிக் கொள்ளவில்லை என்னும் பொருளில் ‘அவன் கண்டுபிடிக்கவில்லை’ என்று சொல்வது ஈண்டு மிகவும் பழக்கப்பட்ட வழக்காறாகும்.

தண்டோரா அல்லது தமுக்கு அடித்து அறிவிப்புச் செய்வதை ஈண்டு கிறிச்சை கொட்டுதல் என்கின்றனர்.

செல்வராசு, ராஜாபாதர், மஞ்சினி முதலிய பெயர்கள் இங்கே மக்களுக்கு பரவலாக வைக்கப் பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னொரு தனிச்சிறப்புடைய வழக்காற்றோடு இக்கட்டுரையை முடித்துக்கொள்ளலாம். ‘நயா பைசா’ வருவதற்கு முன், ரூயாய் - அணா - பைசா கணக்கு இந்தியா முழுவதும் இருந்ததனை எல்லாரும் அறிவர். ஆனால் புதுவையிலோ, ரூபாய் - பணம் - காசு கணக்குத்தான் பெரும்பாலோர் சொல்லுவர். 24 காசு கொண்டது ஒரு பணம்; 8 பணம் கொண்டது ஒரு ரூபாய். இதுவே பொதுமக்களின் கணக்காகும். புதுவையில் ஓரணா அரைப்பணமாகும். ஒன்றரையணா முக்கால் பணமாகும். இரண்டனா ஒரு பணமாகும். மூன்றணா ஒன்றரை பணமாகும். பத்தனா ஐந்து பணமாகும். கால் ரூபாய், அரை ரூபாய், முக்கால் ரூபாய் என்பதனினும், இரண்டு பணம், நான்கு பணம், ஆறு பணம் என்னும் வழக்காறுதான் காதில் விழும். முக்காலணா, ஒன்றே காலணா, ஒன்றே முக்காலணா என்பவற்றிற்குப் பதிலாக, ஒன்பது காசு, பதினைந்து காசு, இருபத்தொரு காசு என்றும், மூன்றே காலணாவை ஒரு பணம் பதினைந்து காசு என்றும், மூன்றே முக்காலணாவை ஒரு பணம் இருபத்தொரு காசு என்றும் சொல்லும் வழக்கே ஒரு தனி அழகாகும்.

இதுவரையும் புதுவைத் தமிழ் வழக்காறுகளாகச் சில குறிப்பிடப்பட்டன. இது குறித்துக் கருத்து வேற்றுமையும் இருக்குமோ என்னவோ! ஒரு வட்டாரத்திலேயே ஒரு சில வழக்குகள் ஒரு பிரிவினரிடத்து இல்லையாயினும் வேறு பிரிவினரிடத்தில் இருக்கத் தான் செய்கின்றன. இந்த கண்கொண்டே ‘புதுவைத் தமிழ்’ என்னும் இக்கட்டுரையையும் காணவேண்டும். புதுவைத் தமிழ் என்னும் தலைப்பில், பல மாவட்டங்களின் தமிழ் வழக்காறுகளையும் ஓரளவு பார்த்துவிட்டோமே! (இக்கட்டுரைக் குறிப்புகள் துப்பறியும் துறையினர்க்கும் ஒரு வேளை உதவலாமோ?)

‘புதுவைத் தமிழ்’ என்னும் தலைப்புக்கு, வேறொரு கோணத்தில் நின்றும் பொருள் காணலாம். இந்த இருபதாம் நூற்றாண்டில், உலகில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் இருக்கும் நாடுகளில், புதுவைத் தமிழ் அறியாதவர்கள் இருக்க முடியாது புதுவைத் தமிழை ஒரு முறையாயினும் பாடாதவர்கள் இருக்க முடியாது. அதாவது, உலகத்திற்கு மாபெருந் தமிழிலக்கியங்களைப் பாடித் தந்த புரட்சிப் பாவேந்தர்களாகிய பாரதியாரும் பாரதிதாசனும் தங்கள் தமிழ்ப்படைப்புகளைப் படைத்த இடம் புதுவையே என்பது, நாடறிந்த - ஏன் - உலகறிந்த செய்தியன்றோ!