வாழும் வழி/குடிசை
புதுச்சேரிக்குச் சில கல் தொலைவில் ‘இடையன் சாவடி’ என்று ஒரு சிற்றுர் உள்ளது. சில ஆண்டுகட்கு முன் அங்கிருந்து ஒரு பெரியார் என் இல்லத்துக்கு வந்து என்னைக் கண்டு உரையாடினார்; தம் குமாரியின் திருமணத்தில் சொற்பொழிவாற்ற வேண்டும் என்று கோரினார். யானும் இசைந்தேன். இசைவு கண்ட அவர் என்னை விட்டுப்பிரியும்போது, ‘வருக’ என்ற அழைப்போடு மட்டும் செல்லவில்லை; “தாங்கள் வந்தால், காலையில் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு, உடனே புறப்பட்டுவிடக் கூடாது. ஏதோ என் இருப்பிடம் சிறு குடிசையாயிருப்பினும் நண்பகல் வரை தங்கியிருந்து விருந்தருந்தியே ஊர் திரும்பவேண்டும்” என்ற அன்புக் கட்டளையும் விடுத்தார். “குடிசை யாயினும் மாடமாளிகை கூட கோபுரமாயினும் எல்லாம் ஒன்றுதான்” என்று கூறி யானும் உடன்பட்டேன்.
மன்றல் நாள் வந்தது. மணவீட்டை நெருங்கினேன் நான். மங்கல இன்னியங்கள் முழங்கின. ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப, வாழை, தோரணம் முதலிய மங்கலப் பொருட்களுடன் பொலிவுற்றுத் திகழ்ந்த வாயிலையடைந்தேன். அவ்வீட்டின் உச்சியை அண்ணாந்து பார்த்தேன். ஒன்றன் மேல் ஒன்றாய் இரண்டடுக்குக் கட்டிடம் நிமிர்ந்து நின்றது. அந்தக் காட்சியைக் கூர்ந்து நோக்கிய எனக்கு, அன்று அப்பெரியார் குறிப்பிட்ட குடிசை நினைவிற்கு வந்தது. அக்குடிசை வேறோரிடத்தில் இருக்கலாமென்றும் இம்மாடி வீடு திருமணத்திற்காகப் பெற்ற இரவல் வீடாயிருக்கலா மென்றும் எனக்குள் தீர்மானித்தேன். ஆயினும் அருகில் நின்ற ஒருவரையணுகி, ‘இது யாருடைய வீடு’ என்று கேட்டேன். உடனே பின் புறத்திலிருந்து, ‘ஏன் ஏமாந்துவிட்டீர்களா?’ என்ற குரல் எழுந்தது. திரும்பிப் பார்த்தேன். அவர்தாம் - அந்த வீட்டுக்காரர் - புதுவை வந்து என்னை அழைத்து வந்தவர். தம் மாடி வீட்டைக் ‘குடிசை’ என்று தன்னடக்கமாக என்னிடம் அன்று தெரிவித்திருக்கிறார் என்பது அப்போது எனக்கு வெட்ட வெளிச்சமாகப் புலப்பட்டது. அன்றைக்கே இதை யான் உணர்ந்து கொண்டிருக்கவுலாம். ஆனால் அவரது அடக்கமான தோற்றம் அவர் வீடு குடிசையாகத்தான் இருக்கும் என்பதை மெய்ப்பித்ததுபோல் தோன்றியது. மேலும், யான் இது போன்றெல்லாம் பேசிப் பழகியதில்லை. பட்டறிவு (அனுபவம்) பெருகப் பெருகத் தானே உலகின் உண்மை யுருவத்தை உணர முடியும்?
திருமண நிகழ்ச்சியும் தொடங்கப்பெற்றது. மன்றல் வினைச் சொற்பொழிவை ஆரம்பபித்த யான் ஆங்கு வெளியிட்ட பல கருத்துக்களுள் குடிசையைப் பற்றிக் கூறிய கருத்துக்களை மட்டும் இவண் தருகிறேன். இக் கட்டுரையின் நோக்கமும் இதுதானே!
“பெரியோர்களே இவ் வீட்டுப் பெரியார், என்னை அழைக்கவந்த வன்று, தம் குடிசையில் தங்கி விருந்து அருந்திச் செல்லவேண்டு மென்று கோரினார். யான் இங்கு வந்து சேர்ந்ததும், ‘குடிசைஎன்று கூறியதால் ஏமாந்துவிட்டீர்களா?’ என்று என்னைக் கேலியும் செய்தார். உண்மையில் யான் ஏமாறவேயில்லை. ஏமாந்தவர் அவரே எப்படி? குடிசை என்றதும், ஓலை வேய்ந்த கூரை வீட்டை நினைத்துக்கொண்டிருப்பேன் என்பது அவர் நினைப்பு. அதுதானில்லை. குடிசை என்றால் குடியிருக்கும் இடம் என்பது பொருள் என்பது என் நினைப்பு. எனவே, அவர் மாட மாளிகையில் இருப்பினும், அல்லது மண் கூரையிலிருப்பினும் அவரிருக்குமிடத்தைக் ‘குடிசை’ என்று கூறுவேன் யான். இதைப் பற்றிச் சிறிது சொல்லாராய்ச்சி செய்து பார்ப்போம்:
நம் பழந்தமிழ் முன்னோர்கள், மக்கள் குடி இருக்கும் இடத்தை ‘குடிசை’ ‘குடில்’ ‘குடிசல்’ முதலிய சொற்களால் குறிப்பிட்டு வந்தார்கள். பண்டைக்காலத்தில் முதல் முதல் மனிதன் அமைத்த வீடு, கால் (மரக்கிளை) அல்லது மண்சுவரின் மேல் தழை அல்லது ஓலை வேய்ந்த பரண் அல்லது கூரையேயாகும். இத்தகைய வீடுகளையே மேற்கூறிய சொற்களால் குறிப்பிட்டு வந்தார்கள். பொதுவில் பார்க்கப் போனால், குடியிருக்கும் காரணத்தினாலேயே குடிசை - குடில் - குடிசல் என்ற பெயர்கள் வீட்டிற்குக் கொடுக்கப்பட்டன என்பது விளங்கலாம். இம் மூன்று சொற்களையும் இவ்வுருவத்திலேயே தமிழகராதிகளும் தமிழ் நூற்களும் பெற்றிருக்கின்றன. இவ்வுருவத்தில் இச்சொற்களை எழுதினாலும் பேசினாலும், இலக்கணமாக எழுதுவதாகவே பேசுவதாகவே கருதப்படும். ஆனால் உண்மையில் இவை இலக்கண முறை மாறாத சொற்கள் அல்ல. ஆமாம் போலிருக்கிறது என்ற சொல்லை ‘ஆமாம் பெலக்கு’ என்ற பேசுவதுபோல் பேசப்படுகின்ற சொச்சைச் சொற்களே இவைகள். அங்ஙனமாயின் இவற்றின் சரியான உருவங்கள்யாவை என்பதை ஆராய்ந்து காணவேண்டியது நம் கடமையாகும்.
தமிழ் மொழியில், ‘செய்‘ என்னும் சொல்லுக்கு நிலம் என்ற பொருளுண்டு. நன்செய் - புன்செய் என்னும் சொற்களை நோக்கினும் இவ்வுண்மை புலனாகும். ‘இல்’ என்னும் சொல்லுக்கு இருப்பிடம் என்ற பொருள் உண்டு. இல்லறம், இல் வாழ்க்கை, இல் வாழ்வான், இல்லம் என்ற சொற்களை நோக்குக. எனவே, இப் பொருளையொட்டியே நம் பழந்தமிழ்ப் பெரியோர்கள் குடியிருக்கும் நிலப்பகுதி என்ற பொருளில் ‘குடிசெய்’ (குடி செய்) என்றும், குடியிருக்கும் இடப்பகுதி என்ற பொருளில் ‘குடியில்’ (குடி இல்) என்றும் பெயர் வழங்கினார்கள். இவை நாளா வட்டத்தில், குடிசெய் - குடிசெய் - குடிசை - குடிசை என்றும், குடியில் - குடிசெய் - குடிசை - குடிச என்றும், குடியில் - குடியில் - குடில் - குடில் என்றும் குறைந்து மருவிவிட்டன. ‘செய்’ என்பதை ‘சை’ என ஒலிக்கும் வழக்கம். நன்செய் புன்செய் என்பவற்றை நஞ்சை புஞ்சை என ஒலிப்பதாலும் புலப்ப்டுமன்றோ? அதுபோலவே, குடி செய் குடிசையாய் விட்டது போலும். குடி என்னும் சொல்லோடு செய், இல் இன்னும் இரு சொற்களையும் இணைத்து, குடியிருக்கும் நிலமாகிய இடம் என்னும் பொருளில் குடி செய் இல் - குடிசெய்யில் (குடி + செய் + இல்) என்று பெயர் வழங்கினார்கள். இது நாளடைவில் குடிசெய்யில் - குடிசயில் - குடிசயில் - குடிசல் - குடிசல் - என்று குறந்து மருவிவிட்டது. மருவி வரும் இத்தகைய சொற்களை தமிழிலக்கணத்தில் மரூஉ என்பார்கள். கொச்சைச் சொற்களாகிய இச் சொற்களும் நாளடைவில் இலக்கணமுடைய சொற்களைப் போலவே காணப்பட்டு இலக்கியங்களிலும் இடம் பெற்றுவிட்டன. எனவே, குடிசை என்றால், குடியிருக்கும் வீடு என்பது பொருள் என்பது இப்போது எல்லோர்க்கும் விளங்கலாம். ஆகவே, இவ்வீட்டுப் பெரியார் ‘தம் குடிசையில் வந்து தங்க வேண்டும்’ என்று கூறியதை, தாம் குடியிருக்கும் வீட்டில் வந்து தங்கவேண்டும் என்று கூறியதாகவே யான் எண்ணி இங்கு வந்தேன். ஆனால் அவர் யான் ஓலைக் கூரை வீட்டை எண்ணி ஏமாந்துவிட்டதாகத்தாம் எண்ணி ஏமாந்துவிட்டார்” என்று, அத்திருமணச் சொற் பொழிவில் கூறினேன்.
ஆனால், அவரை ஏமாற்றியதுபோல் யான் எல்லோரையும் ஏமாற்ற விரும்பவில்லை; ஏமாற்றவும் முடியாது. மனிதன் முதலில் கட்டிய வீட்டிற்கு குடிசை - குடில் - குடிசல் என்ற பெயர்களை வைத்தான். பின்னர் அறிவு முதிர முதிர, நாகரிகம் வளர வளரப் புதுப் புது முறையில் வீடு கட்டத் தொடங்கினான். அப்புது வீடுகட்கெல்லாம் புதுப் புதுப்பெயர்கள் வைத்தான். ஏன்? ஆரம்ப கால வீடுகளினின்றும் இவற்றிற்கு வேற்றுமை காட்ட வேண்டுமல்லவா? முதலில் நான்கு கால்களுடன் செய்த பொருளுக்கு ‘நாற்காலி’ என்று பெயர் வைத்தான். பின்னர் நான்கு கால்களுடன் அமைக்கப்பட்ட (மேஜை, ஸ்டூல் முதலிய) பல பொருள்களைக் கண்டு, அவற்றையெல்லாம் நாற்காலி என்றழைக்கவில்லை. முதலில் கண்ட நாற்கால் பொருளை மட்டுமே நாற்காலி என்ற சொல்லால் குறிப்பிட்டு வருகிறான். இதற்குத்தான் இலக்கணத்தில் ‘காரண இடுகுறிப் பெயர்’ என்று பெயராம். அதுபோலவே, மாட மாளிகைகளும் குடியிருக்கும் இருப்பிடமாயினும் அவற்றைக் குறிக்காமல் முதலில் கண்ட ஓலைக் கூரைகளை மட்டுமே குடிசை - குடில் - குடிசல் என்னும் பெயர்களால் மக்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இஃது இயற்கைதானே!