வாழும் வழி/அத்தி பூத்தாற்போல!

விக்கிமூலம் இலிருந்து

16. ‘அத்தி பூத்தாற் போல...!’

'அத்தி பூத்தாற்போல இருக்கிறதே உங்கள் வருகை!’ என்று ஒருவர் மற்றொருவரை நோக்கிக் கேட்பதை உலகியலில் எப்போதோ சில நேரங்களில் கண்டிருக்கிறோம். ‘இவன் வேறு வந்துவிட்டானே - எப்பொழுது தொலைவான்?’ என்று வெறுக்கக் கூடிய நிலையில் அடிக்கடி வந்து ஆணியடித்துக்கொண்டு அமர்ந்துவிடுபவர்களைப் பார்த்து இப்படி யாரும் கேட்பதில்லை. நீண்ட நாட்களாக வராமல், எப்போதோ ஒரு நேரம் அரிதாக வந்து தலையைக் காட்டிவிட்டுப் போகிறவர்களை நோக்கியே இப்படிக் கேட்பது உலக வழக்கம். அரிதாக வருவதற்கும் அத்திபூப்பதற்கும் என்ன ஒப்புமை? ஆராய்வோம்.

நாம் சிறுவராயிருந்தபோது அத்திப் பூவைப் பற்றி என்னென்னவோ கேள்விப்பட்டிருக்கிறோம் சிறுவர்களோடு பேசிக்கொண்டும் இருந்திருக்கிறோம். ஏன் - எப்போதுமே பலர், சிறுவயதில் பேசிக்கொண்ட கேள்விப்பட்ட அதே அளவில்தான் உள்ளனர்!.

‘அத்திப்பூ பார்த்திருக்கிறாயா?’ என்று கேட்பான் ஒரு சிறுவன். ‘அத்தி மரத்தில் பூவே பூப்பதில்லை’ என்பான் மற்றொரு சிறுவன். ‘பூ இல்லாமல் எப்படிக் காய் காய்க்கும்?' என்று கேட்பான் இன்னொருவன். ‘இருட்டினதும் பூத்து விடிவதற்குள் காய்ந்துவிடும்’ என்று ஒரு பதில் வரும். அப்படியென்றால் இதுவரையும் அத்திப்பூவை யாராவது பார்த்திருக்க வேண்டுமே என்று ஒரு கேள்வி புறப்படும். எல்லோரும் தூங்கின பின்பு பூத்து, எல்லோரும் விழித்துக்கொள்வதற்குள் காய்த்துவிடும்’ என்ற பதில் கிடைக்கும். ‘அப்படியென்றாலும் யாராவது ஒருவர் வேண்டுமென்றே இரவு முழுவதும் விழித்திருந்து கண்டுபிடித்திருப்பாரே’ என்ற கேள்வி எழும். ‘பட்டைக்குள்ளே பூத்து, பிறகு காயாக வெளிப்படும் என்றோ அல்லது அது பூப்பதும் தெரியாது காய்ப்பதும் தெரியாது; பூத்த மறுவிநாடியே காய்த்துவிடுவதால் யார் கண்ணுக்கும் புலப்படாது’ என்றோ திறமையான பதில் வரும். அல்லது, ‘அத்தி பூக்காமலேயே ஒரேயடியாகக் காயாகவே காய்த்துவிடும்’ என்றும் ஒரு குரல் பேசும். ‘இல்லையில்லை - அத்திமரத்தின் பூக்கள் உண்டு அவை பூத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்’ என்று அடித்துப் பேசுகிற அண்டப் புளுகு ஆகாயப் புளுகுகளும் உண்டு.

மற்ற பூக்களைப் போல அத்திப்பூ என ஒன்று தனியாக இருக்குமானால், அது பூப்பதும் உண்மையானால், மேற்கூறிய பேச்சுகளுக்கே இடமில்லை; ‘அத்திபூத்தாற் போல’ என்ற பழமொழியும் தோன்றி யிருக்க முடியாது. எனவே, இதில் ஆராய்ந்து காண வேண்டிய மறைபொருள் ஏதோ ஒன்றுள்ளது.

அத்தி மரத்தை நன்கு அறிந்து வைத்துள்ள நம் மக்கள், அத்திப் பிஞ்சு இதற்கு நல்லது - அத்திக்காய் அதற்கு ஏற்றது. அத்திப்பழம் இதற்கு உகந்தது அத்திப்பால் அதற்குச்சிறந்தது - என்றெல்லாம் அத்தியைப் பற்றி மருத்துவமுறையில் நன்கு ஆராய்ந்து அறிந்து வைத்துள்ள நம் மக்கள், அத்திப் பிஞ்சினையும் காயினையும் கூட்டு செய்தும் குழம்புவைத்தும் பொரியல் பண்ணியும் வற்றல் போட்டு வறுவல் செய்தும் உண்டு பழகிய நம் மக்கள் அத்திப்பூவைப் பற்றிய வரலாற்றை மட்டும் அறியாதிருப்பது வியப்பாயுள்ளது. அந்த அரிய வரலாற்றினை நாம் ஈண்டு காண்போமே! 

‘பூவாமல் காய்க்காது - மின்னாமல் இடிக்காது’ என்னும் பழமொழிக்கேற்ப அத்திமரத்திலும் பூக்கள் மிக உண்டு; அந்தப்பூக்களினால் காய்கள் கிடைப்பதும் உண்டு. ஆனால், மற்ற மரத்துப் பூக்களிலிருந்து காய்கள் உண்டாவதற்கும், அத்திப்பூவிலிருந்து காய் உண்டாவதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. வித்தை காட்டுபவன் போல் இதை வளர்த்துவதேன்? ஒரு முடிவுக்கு வந்துவிடுவோம். அத்திப் பூவேதான் காய் - அத்திக்காயேதான் பூ - பூவும் காயும் ஒன்றே. அத்திப்பூ மொட்டுபோல் இருந்தபடியே காயாகிவிடுகிறது. முல்லை மொக்காக மொட்டாக இருந்து, பின்னர் மொட்டு உடைந்து இதழ்கள் விரிந்து மலர்ந்து விடுகிறது. அதுபோல் இல்லாமல், அத்தி கடைசி வரையும் மொட்டு போலவே உருண்டையாகக் காட்சியளிக்கிறது. அந்த ஓர் உருண்டைக்குள்ளேயே பூத்துக் காய்த்துக் கனிந்துவிடுகின்றன. எனவே, ஓர் அத்திக்காய் என்பது, பல அத்திப்பூக்களின் முதிர்ந்த மாற்றமேயாகும். இதனை ‘விருந்த பரிணாம சமூகக் கனி’ என்பர் தாவர நூலார் (Botanist). இது குறித்து இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டுமாயின், பொதுவாக, மரஞ்செடி கொடிகளின் பூ, காய், கனி ஆகியவற்றின் வரலாற்றினை ஆராய வேண்டும்.

பூவின் வரலாறு

இங்கே விளக்கத்திற்காகப் பூவரசம்பூவினை எடுத்துக்கொள்வோம். நகரங்களில் உள்ள சிலர் அறியாவிடினும், சிற்றுரர்களில் உள்ள பலரும் பூவரசம் பூவினைப் பற்றி நன்கு அறிந்திருப்பர். சிறுவர் சிறுமியர் பூவரசம் பூவினைப் பறித்து, பாவாடை கட்டிய பெண் குழந்தைபோல் பொம்மை செய்தும், இதழ்களைக் களைந்தெறிந்துவிட்டு, அடியிலிருக்கும் காய்ப் பகுதியைக் கம்மலாகவும் பம்பரமாகவும் பயன்படுத்தியும் விளையாடுவது வழக்கம். எனவே, சிறார்களும் நன்கறிந்த பூவரசம் பூவினை எடுத்துக் கொள்வது பொருத்தந்தானே. மேலும் அது பூக்களுக்குள்ளே அரசன் அல்லவா? ஆகவே, அதைப் பற்றித் தெரிந்துகொள்வது, மற்ற பூக்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குப் பெரிதும் துணைபுரியும்.

பூவரசங் கிளையின் கணுச்சந்துகளிலிருந்து நீண்ட காம்புகளுடன் பூக்கள் தோன்றுகின்றன. பூவினைத் தாங்கி நிற்கும் காம்புக்கு ‘விருந்தம்’ (Pedicel) என்று பெயர்கூறுகின்றனர் தாவர நூலார். இதனை மலரின் தாள் என்றும் சொல்லலாம். விருந்தத்தின் நுனியில் ஒரு கிண்ணம் பூவின் மற்ற பகுதிகளை உள்ளடக்கி மூடிக் கொண்டிருக்கும். சிறிய அரும்பாயிருந்தபோது மூடிக் கொண்டிருக்கும் இக் கிண்ணம், பெரிய மொட்டானதும் மேற்புறத்து விரிகிறது. உடனே உள்ளிருக்கும் பாகங்கள் வெளிப்பட்டு வளருகின்றன. இப்பூக்கிண்ணத்தை ‘புஷ்பகேசம்’ (Calyx) என்றழைக்கின்றனர்.

புஷ்ப கோசம் எனப்படும் பூக்கிண்ணம் பூவின் வெளிப்பாகமே. உட்புறத்தே அழகிய மஞ்சள் நிறங் கொண்ட ஐந்து தளங்கள் உண்டு. பூவின் நடுவில் நீளக் கம்பி போன்ற ஒரு பாகம் உள்ளது. அதில், குழாய் போன்றும் ஊசி போன்றுமாக இரண்டு உட்பிரிவுகள் உண்டு. குழாய் போன்றது ஊசி போன்றதைச் சுற்றிக் கொண்டிருக்கும். இந்தக் குழாயின் வெளிப்புறத்தைச் சுற்றியிருக்கிற நூல் போன்ற கம்பிகளின் நுனிகளில், மஞ்சள் நிறமுடைய சிறுசிறு உருண்டைகள் இருக்கும். இக் குழாய் ‘கேசரக் குழாய்’ (Staminal tube) என்றும், மஞ்சள் நிற உருண்டை மகரந்தப் பை (Anther) என்றும் அழைக்கப்படும். கேசரக் குழாய்க்குள் உள்ள கம்பி ‘கீலம்’ (Style) எனப்படும். கீலத்தின் நுனிப்பகுதி ‘கீலாக்ரம்’ (Stigma) அல்லது கீல்நுனி எனப்படும். கீலம் அடியில் பிஞ்சுடன் தொடர்புற்றிருக்கும். இந்தப் பிஞ்சு ‘அண்டாசயம்’ (Ovary) எனப்படும். இந்தக் கீலம், கீலாக்ரம், அண்டாசயம் ஆகிய மூன்றும் சேர்ந்து ‘அண்ட கோசம்’ (Gynaecium) என்றழைக்கப்படும். பூவில் காயாக மாறும் பகுதி இந்த அண்டகோசம்தான். எனவே, இதனைப் பூவின் பெண்பாகம் என்று சொல்லலாம் அல்லவா? கேசரப் பகுதியில் உள்ள மகரந்தப் பையில் இருக்கிற ‘மகரந்தப் பொடி’ (Pollen) என்னும் பூந்துள், அண்ட கோசத்துள் விழுந்து தொடர்பு கொண்டால்தான் காய் உண்டாகுமாதலால், அம் மகரந்தப் பொடி உள்ள கேசரப் பகுதியைப் பூவின் ஆண்பாகம் என்று சொல்லலாமன்றோ?

இணையினப் பூஞ்செடிகள்

பூவரசில் ஒரே பூவில் ஆண்பாகம், பெண்பாகம் ஆகிய இரண்டும் உள்ளன. சப்பாத்தி, அகத்தி முதலியவற்றிலும் இப்படியே. இத்தகையனவற்றை ‘மிதுனச் செடி’ என்பர். நாம் இவற்றை ‘இணையினப் பூஞ்செடி’ என அழகு தமிழில் அழைப்போம்.

ஈரினப் பூஞ்செடிகள்

எல்லாச் செடிகளிலுமே ஒரே பூவில் கேசரமாகிய ஆண்பாகமும் அண்டகோசமாகிய பெண்பாகமும் இருப்பதில்லை. சில செடிகளில் ஒரு கிளையிலுள்ள ஒரு பூவில் ஆண்பாகமாகிய கேசரம் மட்டும் இருக்கும். அதற்கு ஆண் பூ என்று பெயராம். அதே அல்லது வேறு கிளையிலுள்ள பூவில் பெண்பாகமாகிய அண்டகோசம் மட்டும் இருக்கும்; அதற்குப் பெண் பூ என்று பெயராம். பூசணி, பாகல், குப்பைமேனி, ஆமணக்கு முதலியவை இந்த வகையைச் சேர்ந்தவை. இத்தகையவற்றை , ‘துவிலிங்கச் செடிகள்’ என்பர். தமிழில் ஈரினப் பூஞ்செடிகள் என்று நாம் சொல்வோம்.

ஓரினப் பூஞ்செடிகள்

வேறு சில வகைகளில், ஒரு செடியிலோ அல்லது கொடியிலோ ஏதாவது ஓரினப் பூ மட்டுந்தான் இருக்கும். அதாவது, கோவைக் கொடியை எடுத்துக்கொள்வோம். ஒரு கோவைக் கொடியில் ஆண்பூக்கள் மட்டுமே இருக்கும். இன்னொரு கோவைக் கொடியில் பெண் பூக்கள் மட்டுமே இருக்கும். ஆண் பூ பெண் பூ என்று சொல்வதற்குப் பதிலாக, ஆண்பனை - பெண்பனை என்பதுபோல, ஆண்கோவை-பெண்கோவை என்றே சொல்லிவிடலாம். இத்தகையனவற்றை ‘ஏகலிங்கச் செடிகள்’ என்பர். தமிழில் ‘ஓரினப் பூஞ்செடிகள் அல்லது கொடிகள்’ என்று சொல்லலாம்.

மகரந்தச் சேர்க்கை

ஒரே பூவில் ஆண்பாகமும் பெண்பாகமும் இருந்தால், ஆண்பாகத்திலுள்ள மகரந்தத்துணுக்குகள் பெண்பாகத்தோடு தொடர்புகொண்டு, கருவுற்று, காய் காய்ப்பது தன்னில்தானே இயற்கையாக நிகழும். இதற்குத் ‘தன் மகரந்தச் சேர்க்கை’ என்று பெயராம். ஆண்பூவும் பெண்பூவும் தனித்தனியாய் இருக்குமானால், காற்று வண்டு, தேனி, பறவை, விலங்கு முதலியவற்றின் வாயிலாக, ஆண்பூவிலுள்ள மகரந்தத் துணுக்குகள் பெண் பூவிற்கு வந்து தொடர்புற்று, கருவுற்று, காய் காய்க்கும். இதற்குப் ‘பிற மகரந்தச்சேர்க்கை’ என்று பெயராம்.

பூக்கதிரும் கொத்தும்

ஈண்டு இன்னொரு செய்தியும் அறிந்து வைக்கற் பாலது; சிலவகை மரஞ்செடி கொடிகளில் பூக்கள் தனித்தனியாகப் பூக்கும். பூவரசு, பூசணி, தாமரை முதலியன இத்திறத்தன. வேறு சிலவற்றில் பூக்கள் கொத்து கொத்தாக மஞ்சரியாகப் பூக்கும். கொன்றை, ஆவிரை முதலியன இத்திறத்தனவாம். கொத்து குலை - மஞ்சரி இனத்திலேயே பலவகை உண்டு. தென்னை, ஈச்சமரம் முதலியவற்றில் கதிர் கதிராக இருக்கும். நீளமான ஒரு கதிரில் கிளைகள் போல் பல பிரிவுகள் இருக்கும். அவற்றில் அடர்ந்து பூக்கள் இருக்கும். வாழைப்பூவும் கதிர் வகையைச் சேர்ந்ததுதான். நாம் வாழைப்பூ என்று மொத்தமாக ஒன்றைக் குறிப்பிடுகின்றோமோ அது ஒரு பூவன்று; அதற்குள் பல பூக்கள் உள்ளன. ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒவ்வொரு காய் உண்டாகிறது. பின்னர் நாம் இவற்றைக் ‘குலை’ என்கிறோம்.

மேற்கூறியுள்ள அடிப்படைக் கருத்துக்களோடு இனி நாம் அடுத்தக கட்டத்திற்குச் செல்ல வேண்டும்.

ஈண்டு இன்னொரு முறை நாம் பூவின் பாகங்களை சுருங்க நினைவு கூர்வோம். முதலில் பூவைத் தாங்கிக் கொண்டிருக்கும் காம்பு என்னும் விருந்தம், இரண்டாவதாக, பூவின் உள் பாகங்களை அடக்கிக் கொண்டிருக்கும் வெளிப்பாகமாகிய பூக்கிண்ணம் என்னும் புஷ்பகோசம். (விருந்தத்திற்கும் புஷ்ப கோசத்திற்கும் இடையில், புற பாகம் சில பூக்களில் இருக்கும் சிலவற்றில் இராது.) அடுத்து, புஷ்ப கோசத்திற்குள் பெண்பாகமாகிய அண்டகோசம், ஆண்பாகமாகிய கேசரம், இப்படியாக பல பகுதிகளும் சேர்ந்ததுதான் ஒரு பூ எனப்படுவது. ஆனால் பூவுக்குப் பூ அமைப்பு முறையில் பல்வகை மாறுதல்கள் இருக்கும்.

சாமானியக் கனிகள் (Simple Fruits)

பெரும்பாலான இனங்களில், பூவில் உள்ள அண்டகோசப் பகுதி மட்டுந்தான் காய்கனியாகிறது. மற்ற விருந்தம் புஷ்பகோசம், கேசரம் முதலியன பயனின்றி இற்றுவிடுகின்றன. இப்படி உண்டாகும் கனிகளுக்கு, ‘சாமானியக் கனிகள்’ அல்லது தனிக்கனிகள் என்று பெயராம். பூவரசு, வெண்டை, அகத்தி, ஊமத்தை முதலியன இத்திறத்தன.

கலப்புக் கனிகள் (Spurious Fruits)

சில இனங்களில், பூவின் பாகங்களாகிய விருந்தம், புஷ்பகோசம், அண்டாசயம், கேசரம் முதலிய பலவும் சேர்ந்து உருண்டு திரண்டு ஒரு கனியாக மாறும். இப்படி உண்டாகும் கனிகளுக்கு, ‘கலப்புக் கனிகள்’ என்று பெயராம். முந்திரி, ஆப்பில், பலா, அன்னாசி, ஆல், அத்தி முதலியன இத்திறத்தன. இவற்றுள்ளும் பலா, அன்னாசி, ஆல், அத்தி போன்றவற்றில், பல பூக்கள் கொத்தாக ஒன்று சேர்ந்து, தம் பல பாகங்களோடும் உருண்டு திரண்டு ஒரே கனிபோல் மாறிக் காட்சியளிப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இதனை இன்னுஞ் சிறிது விரிவாகக் காண்போம்:


விருந்த பரிணாமக் கனி

முதலில் முந்திரிக் கனியை எடுத்துக் கொள்வோம். இதில் இருவேறு தோற்றங்கள் உள்ளன. அதாவது, முதலில் முந்திரிப்பழமும், அதன் நுனியில் முந்திரிக் கொட்டையும் இருக்கக் காணலாம். நாம் நினைத்துக் கொண்டிருக்கிறபடி முதலில் இருப்பது முந்திரிப் பழமன்று. நாம் முந்திரிக்கொட்டை என்று சொல்கிறோமே, அதுதான் உண்மையான முந்திரிப் பழமாகும். முந்திரிக்கொட்டை என்று தவறுதலாகச் சொல்லப்படுகின்ற உண்மையான அந்த முந்திரிப் பழத்தைத் தாங்கிக்கொண்டிருக்கும் காம்பு போன்ற விருந்தத்தையே நாம் இப்போது தவறுதலாக முந்திரிப் பழம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், பழக்கத்திற்கு வந்துவிட்டதால் இவ்வாறு சொல்வது இனி தவறும் ஆகாது. முந்திரியில் விருந்தமே மக்கள் உண்ணுமளவில் நன்கு சதை பிடித்துக் கனியாக மாறிவிட்டது? அதனால் இதனை ‘விருந்த பரிணாமக் கனி’ என்றழைப்பர். பரிணாமம் என்றால், ஒன்று மற்றொன்றாய் மாறுதல் என்று (வடமொழியில்) பொருளாம். நாம் இக்கனியை, ‘காம்பு மாறிய கனி’ என்று தமிழில் அழைக்கலாம்.

உண்மையான முந்திரிப்பழம் எது என அறியாததால், நம் மக்கள், பழத்திற்குள்தானே கொட்டை இருக்க வேண்டும். ஆனால் இயற்கைக்கு மாறாக, முந்திரிக்கொட்டை முந்திக்கொண்டு முன்னால் வந்துவிட்டதே என்று கருதி, துருதுரு வென்று முந்தி முந்திப் பேசுபவர்களை நோக்கி, “முந்திரிக்கொட்டை” போல முன்னே முன்னே வந்துவிடுகிறாயே என்று கண்டிப்பதை உலகியலில் நாம் காண்கிறோமல்லவா?

பரிணாம சமூகக் கனி

அடுத்த படியில் நிற்பன அன்னாசிப் பழமும் பலாப் பழமுமாகும். ஒரு முந்திரிப் பழம் என்பது ஒரு பூ அதில் விருந்தம் என்னும் தாள் சதைபெற்றுக் கனியாக மாறுகிறது. ஆனால் அன்னாசியும் பலாவும் அப்படியல்ல. ஓர் அன்னாசிப் பழம் என்பது பல பூக்களின் கூட்டாகும். அன்னாசிப் பழத்தின் மேல்புறத்தில் பிளவு பிளவாகக் காணப்படும் கண்கள் போலுள்ள ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூவே. அன்னாசியில் பூக்கள் கதிராக உண்டாகி எல்லாப் பூக்களின் விருந்தம் முதலிய எல்லாப் பாகங்களும் ஒரு சமூகம்போல் ஒன்று சேர்ந்து சதைப்பெற்றுப் பருத்து, மகரந்தச் சேர்க்கையும் பெற்று, ஒரே கனிபோல் வளர்ந்து உருவாகும்.

பலாமரத்திலும் மலர்கள் கதிர்களாகவே தோன்றி வளர்கின்றன. ஆனால் இதில் ஆண்பூக்களும் பெண் பூக்களும் தனித்தனிக் கதிர்களாக உள்ளன. ஆண் கதிரிலிருந்து பெண் கதிருக்கு மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டதும், ஆண் கதிர்கள் உலர்ந்து அழிந்துவிடும். பெண் கதிர்கள் மட்டும் வளர்ந்து கனியாக மாறும். ஒரு பலாப்பழத்திற்குள் இருக்கும் ஒவ்வொரு சுளையும் ஒவவொரு பெண் பூவாகும். நாம் உண்ணுகிற சதைப் பாகம் புஷ்பகோசம் போன்றதாகும். அதன் உள்ளே பை போன்ற தோலுடன் இருக்கும் கொட்டை அண்ட கோசமாகும். சில பெண்கள் பிள்ளை பெறாததைப் போல, பலாப்பழத்துக்குள்ளேயும் சில மலர்களே சுளைகளாக மாற, சில மலர்கள் வெறும் நார்களாகவே தங்கிவிடுகின்றன. பலாப்பழம் உண்ணும் மக்கள் இந்த நார்களை அறிவார்களே.

இப்படியாகப் பல பூக்கள் தம் பல பாகங்களுடன் ஒரு சமூகம்போல் - குழுவாக ஒன்று சேர்ந்து ஒரு கனி போல் மாறுவதால் அன்னாசிப்பழம், பலாப்பழம் போன்றவற்றை ‘பரிணாம சமூகக் கனி’ என்றழைப்பர். நாம் இதனை ‘மாறிய கலப்புக் குழுக் கனி’ எனச் சொல்லலாம்.

இனி மூன்றாவது படியாக நாம் நம் இலக்கை அடைய வேண்டும். அதாவது அத்திக்கனிக்கு வர வேண்டும். இந்த இலக்கை அடைவதற்காகத்தான் இவ்வளவு வழி கடந்து வரவேண்டியிருந்துது. பல படிகளைக் கடந்தால்தானே உச்சியை அடைய முடியும்?

விருந்த பரிணாம சமூகக் கனிகள்

அத்தி, ஆல் ஆகியவற்றின் கனிகளும் கலப்புக் குழுக் கணிகளே. ஆனால் இவற்றின் மலர்கள், அன்னாசி, பலா ஆகியவற்றையும்விட மிகச் சிறியனவாகவும் மிக்க மாறுதல் உடையனவாகவும் உள்ளன. பூக்களைத் தாங்கும் விருந்தங்கள் இவற்றில் மாறிவிடுகின்றன. விருந்தமானது ஒரு கிண்ணம் போலாகி மலர்களை உள்ளே அடக்கிக்கொண்டிருக்கிறது. இக் கனிகளை அறுத்து உட்பகுதிகளை நன்றாகப் பார்க்கின், விதை போல் காணப்படுவனவெல்லாம் பூக்களே என்பது நன்கு புலனாகும். தெளிவுக்காக ஒரு பெரிய சீமை அத்திக் கனியை எடுத்து இரண்டாகப் பிளந்து பாருங்கள். விருந்தக் கிண்ணத்தின் மேல் விளிம்பையடுத்து

சீமை அத்திக்கனி

உட்புறமாக ஆண்பூக்கள் இருப்பதையும், கனியின் நடுப்பகுதியிலும் அடிப்புறத்திலும் பெண் பூக்கள் இருப்பதையும் காணலாம். (இவ்விரு வகைப் பூக்களும் மேலுள்ள படத்தில் தனித்தனியாகப் பெரிதாக்கிக் காட்டப்பட்டுள்ளன.) எனவே, அத்தியிலும், ஆலிலும் பல பூக்கள்தம் பல பாகங்களோடு ஒரே சமூகமாக ஒன்று சேர்ந்து, மகரந்தச் சேர்க்கை பெற்று ஒரே கனிபோல உருவாகியுள்ளன என்பதை உணரலாம். இக்கனிகளுக்கு, ‘விருந்த பரிணாம சமூகக் கனிகள்’ என்று பெயராம்.

முந்திரியில் ஒரு பூவின் விருந்தம் மட்டும் ஒரு கனியாக மாறுவதால், அது ‘விருந்த பரிணாமக் கனி’ எனப்படும். அன்னாசியிலும் பலாவிலும் பல பூக்கள் சமூகமாகச் சேர்ந்து கனியாக மாறுவதால், அவை ‘பரிணாம சமூகக்கனி’ எனப்படும். ஆனால் அத்தியிலும், ஆலிலும், விருந்தமும் கனியாக மாறுவதோடு, பல பூக்களும் சமூகமாகச் சேர்ந்து மாறுவதால் - அதாவது, முந்திரியின் தன்மை, அன்னாசி பலாவின்தன்மை ஆகிய இரண்டு தன்மைகளும் அமையப் பெற்றிருப்பதால், அத்திக் கனிகளையும் ஆலங்கனிகளையும் விருந்த பரிணாம சமூகக் கனிகன் என்றழைப்பர். தமிழில் இவற்றைக் ‘காம்பு மாறிய கலப்புக் குழுக் கனிகள்’ என்றழைக்கலாம்.

எனவே, அத்திப்பூக்கள் உண்டென்றும், அவை ஒருவகைக் கிண்ணத்துக்குள்ளே அடக்கி மூடி மறைக்கப்பட்டு, உள்ளேயே பூத்து மகரந்தச் சேர்க்கை பெற்றுக் கனியாகின்றன என்றும் அறியலாம். ஆலங்கனியும் இது போன்றதே யாதலின், ‘அத்தி பூத்தாற்போல’ என்று சொல்வதைப் போல, “ஆல் பூத்தாற்போல” என்றும் பழமொழி சொல்லலாம் போலும். ஆனால் ஆலங் கனிகளைப் பறவைகளே புசிப்பதால், மக்கள் அதன் பேச்சுக்குப் போகாமல், தாம் உண்ணும் அத்தியோடு பழமொழியை நிறுத்திக்கொண்டார்கள் போலும்! அத்தி பூப்பது மக்கள் கண்ணுக்குத் தெரியாததனால்தான், வராத ஒருவர் வந்துவிடின், ‘அத்தி பூத்தாற்போல இருக்கிறதே!’ என்று வியக்கின்றனர் போலும்.

ஆம்! ‘அத்தி பூத்தாற் போல’ என்ற பழமொழியை அடிப்படையாக வைத்துக்கொண்டு, பொதுவாகப் பூகாய்களின் வரலாற்றினையே ஒருமுறை சுருங்கப் பார்த்துவிட்டோமே. பல கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் அந்தப் பழமொழி வாழ்க!

அத்தியைப்போல மக்களினமும் கலந்து குழுவாக வாழ்வதே சிறந்த வாழும் நெறியாகும்.