வ. வே. சு. ஐயர்/வ.வே.சு. ஐயர் பாரிஸ்டராக இரங்கூன், லண்டன் பயணம்!

விக்கிமூலம் இலிருந்து
வ.வே.சு. ஐயர் பாரிஸ்டராக இரங்கூன், லண்டன் பயணம்!

வேங்கடேச ஐயர் தனது மகன் சுப்பிரமணியத்தை ஆங்கிலக் கான்வெண்டில் படிக்க வைத்து, வழக்குரைஞராக்கியும் கூட, அவருக்குக் குடும்பத்தை நடத்துமளவுக்குப் போதிய வருமானம் வில்லை. அதனால், தனது சட்டத்துறைச் செயலை எவ்வாறு விருத்தி செய்வது என்பதிலேயே சிந்தனையைச் செலுத்தி வந்தார். மேற்கொண்டு என்ன செய்தால் தனது தொழில் முன்னேறும் என்ற முயற்சிகளிலே அவர் ஈடுபட்டிருந்தார்.

அந்த நேரத்தில் சுப்பிரமணியனின், இலலத்தரசி பாக்கிய லட்சுமிக்கு பர்மாவில் ஒரு பெரியப்பா இருந்தார்! அவர் அங்கே உண்டியல் கடை ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு மகன் ஒருவர்! பெயர் பசுபதி! மிகவும் வசதியான குடும்பமும் கூட பணம் சொத்து ஏராளமாக இருந்தது பசுபதிக்கு.

பசுபதி நல்ல பணம் உடையவர் மட்டுமல்லர்; நல்ல மனம் படைத்த குணவான்! பரோபகாரி! யாரானாலும் சரி, வித்தியாசம் ஏதும் பாராமல் ஆபத்துக் காலத்தில் உதவி செய்வதில் தாராள மனம் படைத்த மனிதநேயமுள்ளவர்! பசுபதி தனது சிற்றப்பாவின் குடும்பத்தின் மீது சிறுவயலிருந்தே அன்பு பூண்டவராக இருப்பவர்! தங்கை பாக்யலட்சுமி மீதும் அளவிலா பற்றுடையவர் பசுபதி!

பர்மா நாட்டின் தலைநகரான ரங்கூனில் இருந்து தனது சொந்த ஊரான திருச்சிராப்பள்ளி நகருக்கு அந்த பசுபதி வந்தார். வந்தவரை வேங்கடேச ஐயரும் காமாட்சி அம்மையாரும், சுப்பிரமணியனும், அன்போடு வரவேற்று உபசரித்தனர்! பசுபதிக்குப் பிறந்த ஊர் அல்லவா வரகநேரி? அதனால், தங்கை, மைத்துனர் உபசரிப்பிலேயே சில நாட்கள் தங்கி மகிழ்ந்திருந்தார்.

இவ்வாறு அவர் தனது தங்கை வீட்டில் தங்கியிருந்தபோது, சுப்பிரமணியனுடைய வழக்குரைஞர் தொழில் நிலையைத் தாமே நேரில் பார்த்தார்! இவ்வளவு திறமையுள்ள தனது மைத்துனர் முன்னேற நாம் ஏதாவது செய்தால் என்ன என்று சிந்தித்தவாறே இருந்தார் ஒன்றும் அவருக்குப் புலப்படவில்லை.

மைத்துனர் சுப்பிரமணியத்தையும், தங்கை பாக்யலட்சுமியையும் ரங்கூன் நகருக்குத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் வழக்குரைஞர் தொழிலையே நடத்தச் செய்யலாம் என்று தீர்மானித்து தனது சிற்றப்பா, சித்தியிடமும் தங்கையிடமும், மைத்துனரிடமும் விவரித்துக் கூறினார்.

பசுபதியின் திட்டம், தங்கைக்கும், மைத்துனருக்கும் பிடித்திருந்தது. என்றாலும், தனது தகப்பனாரும் தாயாரும் என்ன சொல்வார்களோ என்று சுப்பிரமணியம் மெளனமாக நின்றார்! ஆனால், சிற்றப்பாவுக்கோ, சித்திக்கோ இந்தத் திட்டம் திருப்தியைக் கொடுக்கவில்லை. காரணம், வயதான காலத்தில் பிள்ளையையும் மருமகளையும் பிரிந்திருக்க மனம் இல்லை. அதனாலே, அவர்களும் மெளனமாக இருந்தார்கள்.

பசுபதியே தனது சிற்றப்பாவைக் கேட்டார். அதற்கு வேங்கடேச ஐயர், “மைத்துனன் தயவில் மகன் வாழ்வதை விரும்பவில்லை. மகனும், மகளும் தங்களுடன்தான் இருக்கவேண்டும். அதே நேரத்தில் நாங்களும் அங்கே வந்து தங்க முடியாது என்ற திட்டத்தில், தனது அண்ணன் மகளிடம் வேங்கடேச ஐயர் இந்தப் பிரச்சினையை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சமாதானப் பதில் கூறினார்!

சுப்பிரமணியத்துக்கும், பாக்கியலட்சுமிக்கும் பசுபதி யோசனை மிகவும் பிடித்திருந்தது. வழக்குரைஞர் தொழிலில் திருச்சியில்தான் வெற்றி பெற முடியவில்லை, ரங்கூன் நகரிலாவது வெற்றி பெற மாட்டோமா? என்ற ஏக்கம் சுப்பிரமணியத்திற்கு இருந்தது. அதனால், தன் பெற்றோர்களிடம் அவர் தன்நிலை, தனது தொழில் நிலை விளக்கங்களைக் கூறி, கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல, தனது பெற்றோரின் சம்மத்தைப் பெற்றுக் கொண்டார்.

பசுபதியும், பாக்கிய லட்சுமியும், சுப்பிரமணியமும் ரங்கூன் நகருக்குப் பயணமானார்கள். ரங்கூன் நகரும் இந்தியாவைப் போல அப்போது பிரிட்டன் சாம்ராச்சியத்திலே இணைந்திருந்தது. அதனால், அவர்களுக்குப் பயணவசதிகளும் சுலபமாகவே இருந்தது.

இந்த ரங்கூன் பயணம்தான், சுப்பிரமணியன் வாழ்வில் ஒர் எதிர்பாராத திருப்பமாக அமைந்து விட்டது எனலாம்.

பசுபதி வாய்ச் சொல் வீரர். அல்லர் செயல்வீரர்; வசதிகள் யாவும் உள்ளவா, ரங்கூன் நகரில் செல்வாக்கும் பெற்றவர்; சொன்னதைச் செய்பவர் செய்வதைச் சொல்பவர்; பணம் குணத்தைமாற்றாது என்பதின் சான்றாளர்; அவர்கள் மீது அளவற்ற அன்புள்ளம் கொண்ட பண்பாளர்!

இரங்கூன் சென்றதும் தங்கை பாக்கியலட்சுமிக்கும் மைத்துனர் சுப்பிரமணியத்திற்கும் எல்லா வசதிகளையும் செய்து தனக்கு வேண்டிய பாரிஸ்டர் நண்பர் ஒருவரிடம் பசுபதி அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அவர் ரங்கூன் உயர் நீதி மன்றத்திலே பார்-அட்-லா வழக்குரைஞராகத் தொழில் நடத்தி வந்தார். அந்த ஆங்கிலேய பாரிஸ்டரிடம், தனது மைத்துனனது கல்வித் தகுதி, திறமைகளை எடுத்துரைத்து தனது மைத்துனரை உதவியாளாராக அமர்த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

சுப்பிரமணியத்திடம் பேசிக் கொண்டிருந்தபோதே, அவரது அறிவாற்றலை நன்கு புரிந்து கூர்மையான, நுட்பத் திறனாளரான சுப்பிரமணியத்தைத் தனக்கு உதவியாளராக நியமித்துக் கொண்டார் பாரிஸ்டர்!

என்னென்ன நெளிவு சுளிவுகள் வழக்குரைஞர் தொழிலுக்குண்டோ, அவற்றை எல்லாம் சுப்பிரமணியம் நுட்பத்துடன் புரிந்து கொள்ளத் தக்க உதவிகளைச் செய்து தந்தார்.

பாரிஸ்டரின் உதவிகளுக்கு எல்லாம் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொண்ட சுப்பிரமணியம், உருது மொழியையும் கற்றுத் தேர்ந்தார்.

எப்போதும், பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து தங்களது சுயநல நோக்கத்தைச் சாதித்துக் கொள்பவர்கள் என்பதுதான் ஆங்கிலேயர்களின் ராஜதந்திர வரலாறாகும். இந்திய வரலாறும், உலக சரித்திரமும், இங்கிலாந்து நாட்டின் உள்வரலாறுகளையும் ஊன்றிப் படிப்பவர்கள் இந்த உண்மையை நன்கு உணர்வார்கள்!

ஆங்கிலேயர்கள் தந்திர சாலிகள் என்று பெயர் பெற்றவர்களாவர். அவர்கள் உலகில் பலநாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சி புரிந்தவர்கள். அதனால்தான் மாபெரும் ராஜ தந்திரியான வின்ஸ்டண்ட் சர்ச்சில், பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் சூரியனே மறையாது, என்று ஆணவத்துடன், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முழக்கமிட்டார். இந்தக் கோலாகல ராஜ வாழ்வு அவர்களுக்கு எப்படி வந்தது? எடுத்துக்காட்டுக்கு ஒன்றைப் பார்ப்போம்!

இங்கிலீஷ்காரர்கள் ஆட்சி புரிந்த அக்காலத்தில் வழக்கறிஞர்களுக்குள் இரண்டு பிரிவுகளை உருவாக்கி விட்டார்கள். அதாவது, அடிமைப்பட்டிருந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள், சட்டக் கல்வி பெற்று வழக்கறிஞர்கள் ஆவதற்கு அந்தந்த நாடுகளில் சட்டக் கல்லூரிகளை இங்கிலீஷ்காரர்கள் உருவாக்கி இருந்தார்கள். அக்கல்லூரிகளில் சட்டம் படித்துப் பட்டம் பெற்று வழக்குரைஞர் பணியாற்றுபவர்கள் உயர் நீதி மன்றங்களில் நீதிக்காக வாதாட முடியாது. வழக்குரைஞர் தொழிலும் செய்ய முடியாது. உயர்நீதிமன்றங்களில் வழக்குரைஞர் தொழில் நடத்த வேண்டுமானால் லண்டனுக்குச் சென்று பார்-அட்-லா பட்டம் பெற்று பாரிஸ்டராக வேண்டும் என்ற இந்த நிலை சுதந்திரத்துக்கு முன்பு வரையிலும் இருந்தது.

அதனால்தான், பெரும்பான்மையான இந்திய வழக்குரைஞர்கள் கீழ் நீதிமன்றங்களிலேயே வக்கீல் தொழிலை நடத்தவேண்டிய நிலை இருந்தது. இந்தியாவைப் போலவே பர்மாவும் அன்றைக்கு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழே இருந்தது. அங்கும் அதே நிலைமைதான். பார்-அட்-லா படித்தவர்களே உயர்நீதி மன்றங்களில் வழக்குரைஞர் தொழிலை நடத்தி வந்தார்கள். மற்றவர்கள் கீழ் நீதி மன்றங்களில் மட்டுமே தொழில் நடத்தி வந்தார்கள்.

இந்தப் பிரித்தாளும் பிரிட்டனின் சூழ்ச்சிக்கேற்ப, சுப்பிரமணியன் சுமார் ஆறு மாதங்கள் ரங்கூன் நகரிலே வழக்குரைஞர் தொழிலை நடத்தினார். பிறகு, லண்டனுக்குச் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற விரும்பி, தனது எண்ணத்தை அவர் மைத்துனரிடம் கூறினார்.

மைத்துனரும் சுப்பிரமணியம் ஆசையிலே நியாயம் இருப்பதை உணர்ந்தார். பாரிஸ்டரானால் தனது தங்கை குடும்பத்துக்கு நல்ல வருவாய் கிடைக்கும் என்பதால், சுப்பிரமணியத்தை லண்டனுக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு அவள் வந்தார்.

ரங்கூன் நகரிலே உண்டியல் கடை ஒன்றைப் பசுபதி நடத்திப் பெரும் பணக்காரனாக வாழ்பவர். அவர் நினைத்தால் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்கான எல்லாப் பணவசதிகளையும் செய்யலாம்! மாதந்தோறும் ஆகும் செலவினங்களையும் அவர் வழங்கலாம்! ஆனால், அவ்வாறு செய்யாமல் லண்டனிலே ஓர் உண்டியல் தொழில் நடத்தும் கடையை வைத்துக் கொடுத்து, அதனால் வரும் லாபத்தை சுப்பிரமணியன் தனது செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பசுபதியின் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தை தங்கை புருஷனிடம் பசுபதி கூறியதும், சுப்பிரமணியமும் இதுதான் மிகச் சிறந்தவழி என்று மைத்துனர் கருத்தை ஏற்றுக் கொண்டார். பசுபதி முடிவின்படி லண்டனில் உண்டியல் கடை துவங்க எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்து முடித்துவிட்டார்.

வராகநேரி வேங்கடேச ஐயருடைய மகனான சுப்பிரமணியம் ஐயர் அதாவது வ.வே.சு.ஐயர் பாரிஸ்டர் பட்டம் பெற்றிட லண்டன் மாநகருக்குப் புறப்பட்டார். அவர் தனது அருமை மனைவி பாக்கிய லட்சுமியையும், அன்பு மகள் பட்டம்மாவையும் மைத்துனர் பசுபதி ஐயரின் பொறுப்பில் ரங்கூன் நகரிலே விட்டு விட்டு லண்டன் சென்றார்.