வ. வே. சு. ஐயர்/தீரம் செறிந்த திருச்சி நகர் தியாகி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தீரம் செறிந்த திருச்சி நகர் தியாகி

திருச்சிராப் பள்ளி என்றழைக்கப்படும் திருச்சி மாநகர் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஒரு சிறப்பான நகரமாகும். இந்நகரைக் கற்றார் திரிசிரபுரம் என்றும் சுருக்கமாகத் திருச்சி நகர் என்றும் அழைப்பார்கள்!

காவிரி நதி இந் நகரில் பாய்ந்தோடுவதால், இந்த மாவட்டம் முழுவதுமே வளம் கொழிக்கும் பகுதிகளாகக் காட்சி தரும். உணவு தந்து உடலோம்பும் உழவர்களும் உணர்வு, தந்து உயிரோம்பும் மன்னர்கள் சிலரும் ஆண்ட பகுதி.

எல்லாவற்றுக்கும் மேலாக, பிறவா யாக்கைப் பெரியோன் எனப்படும் சிவசக்தி நாயகனான சிவபெருமான் திருக்கோயிலான திருவானைக்கா மற்றும் திருவரங்கத்திற்கு எதிர்க்கரையில், காவிரி நதி பாயும் தென்கரையில் இந்தத் திருச்சி மாநகர் அமைந்துள்ளது. இந்த அழகுவளம் கொழிக்கும் நகர் நடுவில் வானளாவி நிற்கும் தாயுமானார் சுவாமி திருக்கோயிலின் திருக்கோலமும், அதன் உச்சியில் பல்லவ மாமன்னது மகுடம் போல் பொலிவுதரும் உச்சிப்பிள்ளையார் கோயிலும், அங்கு வாழ் மக்களின் மதிவளத்தையும், மன நலத்தையும் எடுத்துக் காட்டுவனவாக அமைந்துள்ளன எனலாம்.

காவிரி நதியின் வடகரையில் திருவரங்கம் எனப்படும்ப ஶ்ரீரங்கம் கோவிலும், திருவானைக்கா என்ற சிவனார் திருக்கோயிலும் தெய்வமணம் வீசி பக்தர்கள் மனம் குளிர்விப்பதை இன்றும் பார்த்து ஆன்ம நேயம் பெறலாம். அது போலவே, வரலாற்றுச் சிறப்புடன் விளங்கும் மேற்கூரையில்லா வெஃகாளி அம்மனது திருக் கோயிலின் அற்புதங்களையும் கேட்டு இன்புறலாம்!

இவை போன்ற சிறப்புக்கள் பல பெற்ற திருச்சிராப் பள்ளி நகரின் ஒரு பகுதியாய் விளங்கும் சிற்றூர் வரகநேரி. இங்கே வேங்கடேச ஐயர், காமாட்சி அம்மையார் எனும் தம்பதியருக்கு 2.4.1881-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் சுப்பிரமணியம். வரகநேரி வேங்கடேச சுப்பிரமணியம் என்பவர்தான், பிற்காலத்தில் தமிழ் வரலாற்றிலே வ.வே.சு.ஐயர் என்று சுருக்கமாக மக்கள் இதயத்திலே இடம் பெற்றார்!

சுப்பிரமணியம் பிறந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப்போது நாம் வாழ்வதோ இருபத்தொன்றாம் நூற்றாண்டு. இந்த நூற்றாண்டிலே வாழும் படித்தவர்கள், உலக நாகரீக வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டவர்கள், நமது நாட்டை அடிமைப்படுத்தி, இந்திய மக்களைக் கொடுமையாக, ஆட்சி செய்தவனை 1947-ஆம் ஆண்டு நாட்டை விட்டே விரட்டியடித்து, சுதந்திரம் பெற்ற பிறகும்கூட, இன்றைய மக்கள் இங்கலீஷ் மோகவெறி பிடித்து அலைகிறார்கள் என்றால், ஆட்டுத்தோலுக்கு இடம் கேட்டு வியாபாரம் செய்ய வந்த இங்கிலீஷ்காரன் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த போது இங்கிலீஷ் வெறி எப்படி இருந்திருக்கும் என்று சற்று எண்ணிப்பாருங்கள்.

ஆங்கிலேயன் ஆட்சியை விட்டு ஓடிப்போய், 54 ஆண்டுகள் ஆனபிறகும் கூட நம்முடைய பிள்ளைகள் இன்றைக்கும் இங்கிலீஷ் கான்வெண்ட் பள்ளிகளிலே படிப்பதையே ஒரு கர்மமாய் கருதி நடந்து வருகிறார்கள். அவர்களது செல்வங்கள், பெற்றோர்களை மம்மி, டாடி என்று அழைப்பதிலே பேரானந்தப்பட்டு, அதற்காக ஏராளமான பணங்களைச் செலவழிக்கின்றார்கள். சுதேசி பள்ளிகளிலே அவர்களது குழந்தைகளைப் படிக்க வைக்க மனமில்லாமல், பெருமைக்காக, போலி கெளரவத்திற்காக, பகட்டு படாடோபத்திற்காக, தாய் மொழிக்குத் துரோகம் செய்து விதேசிப் பள்ளிகளுக்குப் பணத்தைக் கொட்டிப் பாழ்பட்டு வருகிறார்கள் என்றால், 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயன் ஆட்சியிலே ஆங்கில இன்பம் எப்படிக் கரையுடைந்த கடலாக இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தாலே ஆங்கில வெறியின் கோர உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும் அல்லவா?

வ.வே.சுப்பிரமணிய ஐயரின் தந்தையான வேங்கடேச ஐயர் ஒர் ஆங்கில மோகியாக இருந்தார். எனவே, தனது மகனுக்கும் ஆங்கிலம் கற்பிக்க விரும்பினார்.

அன்றைக்கு இந்திய மக்களிடம் பற்று இருந்தது; ஆனால், மெக்காலே பிரபு திணித்த வயிற்றுப் பிழைப்புக்கான இங்கிலீஷ் குமாஸ்தா கல்வி முறை என்ற பேய் அவர்களை நினைத்தபடி ஆட்டிப் படைத்துக்கொண்டு இருந்தது. சோறுதான் பிழைப்பு என்று அவர்கள் எண்ணினார்களே தவிர, மானம் அதைவிடப் பெரியது என்ற நினைப்பே அவர்கள் நெஞ்சில் இடம் பெறவில்லை.

ஆங்கிலேயரையும், அவர்கள் ஆட்சியையும் நமது இந்திய மக்கள் வெறுத்ததும் உண்மைதான். ஆனால், சோற்றுக்காக மக்கள் ஆங்கிலேயர்களிடம் பய பக்தியுடனும், அடக்க ஒடுக்கத்துடனும் ஆமைபோல வாழ்ந்து வந்தார்கள் என்பதும் உண்மைதான்!

இப்போது கான்வெண்டில் படிக்கும் தங்களது பிள்ளைகளிடம் அக்கறை காட்டும் இன்றைய பெற்றோர்களைப் போல, அப்போதும் பெற்றோர்கள் இருக்கத்தான் செய்தார்கள்.

ஒருவேளை அப்படி இங்கிலீஷ் படித்து விட்டால், இங்கிலீஷ் கான்வெண்டிலே படிக்கும் பிள்ளைகட்கு அரசு பணிகளிலே இரட்டைச் சம்பளமா கிடைக்கிறது? இல்லையே, சாதாரண ஒரு பள்ளிப்படிப்பைப் படித்தவன் என்ன ஊதியம் பெறுகிறானோ, அதைத்தானே காண்வெண்டானும் பெறுகிறான்? ஏன் இதைச் சிந்திக்க மறுக்கிறார்கள்? அவ்வளவு அந்நிய மொழி மோகம் அதனாலே அது அவர்களது சிந்தனையை முடக்கிவிட்டது போலும்!

தாய்மொழி தமிழுக்குத் துரோகம் செய்யும் ஒரு கூட்டம், 19-ம் நூற்றாண்டிலேயும் இருந்தது. அதனால்தான் அப்போதைய வயிறு கள் ஆங்கிலக் கல்வியைக் கற்க மோதின. அந்தச் சூழ்நிலையிலேதான் சுப்பிரமணியனும் ஆங்கிலக் கல்வி கற்க வேண்டும் என்று அவரது தந்தையும் பேராசைப்பட்டார்!

ஆரம்பப் பள்ளிக் கல்வியிலிருந்தே தனது மகன் சிறந்து விளங்க வேண்டும் என்று தந்தை எண்ணினார். அதனால், தனது வீட்டிலேயே ஆங்கிலம் கற்பிக்க மகனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் அவர் செய்தார் ஒர் ஆங்கில ஆசிரியர் வேங்கடேச ஐயர் வீட்டுக்கு வருவார். சுப்பிரமணியத்துக்கு இங்கிலீஷ் போதிப்பார். சிறுவரான சுப்பிரமணியன் படிப்பில் சிறந்து விளங்கினார். தந்தையார் ஆசைக்கு ஏற்றவாறு மகன் இங்கிலீஷ் மொழியிலே ஒப்புயர்வற்ற மணிபோல மதிப்புப் பெற்றார் உடனே ஐயர் தனது மகனைத் திருச்சியிலே உள்ள ஆங்கில மிஷனரிப் பள்ளியிலே. ஐரோப்பிய முறைப்படிகல்வி கற்க அனுப்பினார்.

வீட்டிலேயே சுப்பிரமணியன் ஆங்கில மொழிக் கல்வி, கற்றதால், மிஷனரி கல்வி அவருக்குச் சுலபமாக இருந்தது. அதனால், எல்லாப் பாடங்களிலும் சிறந்த மாணவராக அவரால் கற்க முடிந்தது. வகுப்பிலும் நற்பெயரோடு நல்ல ஒழுக்க சீலமோடு கல்வி கற்றிடும் மாணவராகத் திகழ முடிந்தது.

ஆங்கிலேயர்கள் தமது தாய்மொழியான இங்கிலீஷக்கு அடுத்தபடியாக லத்தீன் மொழிக்கு நல்ல மதிப்பளித்தார்கள்,  அதனால் மிஷினரி பள்ளிகளில் லத்தீன் இரண்டாவது பாட மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. சுப்பிரமணியனும் லத்தீன் மொழியிலே நன்கு தேர்ச்சி பெற்றார்.

ஆனால் இதில் என்ன ஒரு விதி விலக்குத் தெரியுமா? ஆங்கிலத்திலேயும், லத்தீன் மொழியிலேயும் நல்ல புலமை பெற்ற சுப்பிரமணியம், இன்றைய தாய்மொழித் துரோகக் கூட்டத்தைப் போல, தனது தாய் மொழிக்குத் துரோகம் செய்யாமல், தமிழையும் நன்றாகக் கற்றுப் புலமையறிவு பெற்றார். இதற்குச் சான்றாக அவர் எழுதிய நூல்களும், கட்டுரைகளும், கவிதைகளும், வரலாற்று ஆய்வு நூல்களையும் படித்தாலே புரியும்.

அக்காலத்திலே பல மொழிகளையும் படித்துப் புலமை பெற வேண்டும் என்ற எண்ணம் கல்வியாளர்கள் இடையே இருந்து வந்தது. அதற்குரிய காரணம் என்னவென்றால், இக்காலத்தில் உள்ளது போல அக் காலத்தில் அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், மருத்துவம், வணிகம் போன்ற பாடங்கள் வளர்ச்சி பெறவில்லை. அக் காரணத்தால் மொழிகள், வரலாறு, புவியியல், தத்துவம், இலக்கியம் போன்ற பாடப்பிரிவுகளை மட்டுமே அக்கால மாணவர்கள் கற்க வேண்டிய அவசிய நிலை இருந்தது. அதனால், மாணவர்களில் பலர் பல மொழிகளை சிரமம் பாராமல் படித்து அதன் சிறப்புக்களை உணர்ந்தார்கள்.

எதை அக்கால மாணவர்கள் விருப்பப்பாடமாக எடுத்துப் படித்துவந்தார்களோ, அவற்றுக்காக மொழிகள் சிலவற்றையும் அத்துடன் சேர்த்தே கற்று வந்தார்கள். அவ்வாறு படிப்பதை ஒரு பெருமையாகவும் அவர்கள் மதித்தார்கள்.

அந்தக் கல்வி நிலைக் கேற்ப, சுப்பிரமணியனும் கற்றார். அத்துடன், சமஸ்கிருதம், இந்துஸ்தானி, ஆங்கிலம், லத்தீன், தமிழ் ஆகிய மொழிகளையும் அவர் கற்றுப் புலமையடைந்தார் இத்துடன் மட்டும் அவர் நிறுத்தவில்லை. பிற்காலத்தில் உருது, பிரெஞ்சு ஆகியமொழிகளையும் படித்தார். இதனால் அவர் எந்தெந்த மொழிகளை விரும்பிக் கற்றாரோ அந்தந்த மொழிகளில் பேசவும், எழுதவும், அதைக் கேட்டு மற்றவர்கள் பாராட்டும் படியான பன்மொழிப் புலமை அறிவும் பெற்றார்.

ஆரம்பக் கல்வியைப் படித்து முடித்தவுடன், சுப்பிரமணியன் உயர்நிலைப் பள்ளியிலே சேர்ந்தார். அங்கேயும் அவர் சிறந்தே விளங்கினார். படிப்பு, பண்பு, அடக்கம் ஆகியவற்றில் எல்லாரும் பாராட்டும் படியான வல்லமை பெற்றார். அதற்குப் பிறகு அவர் எழுதிய மெட்ரிக் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே அவர் ஐந்தாவது மாணவரானார்.

தந்தை வேங்கடேச ஐயர் தனது மகன் சுப்பிரமணியனைச் சிறந்த ஒரு வழக்குரைஞராகப் படிக்க வைக்க விரும்பினார்! ஆனால், அதற்குக் குறைந்த அளவு ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வழக்கம் இன்று இருப்பது போலவே அன்றும் இருந்தது. அதனால், தனது மகனை ஒரு பட்டதாரியாக உருவாக்க என்னசெய்யலாம் என்று அவரது தந்தையார் யோசனை செய்தார். பிறகு, எஃப்.ஏ.வகுப்பில் மகனைக் கல்லூரியில் சேர்த்தார்.

இன்றைக்குள்ள கல்லூரி மாணவர்களைப் போலல்லாமல், தீய பழக்க வழக்கங்களுக்குப் பலியாகி, வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாமல், தனது பெயருக்கு ஏற்றவாறு மாணவ மணியாகவே திகழ்ந்து வந்தார்! தமது தந்தையின் ஆசைக்குத் தக்கபடி கல்வியிலே கருத்தூன்றிப் படித்தார். வகுப்பிலே முதல் மாணவராகத் தொடர்ந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வந்த பல்கலைக்கழக எஃப்.ஏ தேர்வில் சுப்பிரமணியன் முதல் வகுப்பின் மாணவராகத் தேர்வு பெற்றார். இந்தச் செய்தியை வேங்கடேச ஐயரும், காமாட்சி அம்மையாரும் கேள்விப்பட்டு சொல்லொணா மகிழ்வு அடைந்தது மட்டுமன்று, எதற்காக நாம் பாடுபட்டோமோ அந்தக் கஷ்டத்திற்குக் கடவுள் கைமேல் பலன் தந்துவிட்டார் என்று பேரானந்தப் பட்டார்கள்.

அக்காலத்து பழக்க வழக்கத்தின்படி படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே அவருக்குக் கலியாணம் செய்து விடுவது என்று பெற்றோர் முடிவெடுத்தார்கள். பெற்றோர் மனதுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளும் பண்பு கொண்ட அவர், அவர்களது முடிவுக் கேற்றவாறு திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் தந்தார். சுப்பிரமணியனுக்கும் பாக்யலட்சுமி என்ற மங்கைக்கும் திருமணம் நடந்தேறியது.

திருமணமாகிவிட்டது. இனிமேல் குடும்பக் காரியங்களைக் கவனிப்பதும், மனைவி மனதுக்கு விரோதமாக நடந்து கொள்ளாமல் இருப்பதும்தான் வாழ்க்கை என்று சுப்பிரமணியம் எண்ணாமல், பி.ஏ. வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். திருமணத்துக்கு முன்னால் எவ்வாறு கல்வியினை அல்லும் பகலும் அரும்பாடு பட்டுப் படித்து வந்தாரோ, அதனைப்போலவே திருமணத்துக்குப் பின்பும் அயராமல், தளர்ந்துவிடாமல் கல்வியிலே மிக ஆழமாகக் கவனம் செலுத்திப் படித்து வந்தார். ஆனால், எதிர்பாராமல் வந்த நோயால் உடல் பாதிக்கப்பட்டார்.

நோயினால் ஓராண்டு அவதிப்பட்டார். பிறகு, பெற்றோர்களது உதவியாலும், மருத்துவச் சிகிச்சையினாலும் நோயிலே இருந்து மீண்டார். மறுபடியும் கல்லூரியிலே பி.ஏ. வகுப்பிலேயே சேர்ந்து படித்தார். விடாமுயற்சியோடும், மனைவியின் ஒத்துழைப்போடும் 1899-ஆம் ஆண்டில் நடந்த பி.ஏ. தேர்வில் கலந்து கொண்டு பி.ஏ.பட்டம் பெற்றார். இதனைக் கண்டு அவரது பெற்றோரும், மனைவியும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்கள்.

தந்தை வேங்கடேச ஐயர், தமது மகனை எப்படியாவது வழக்குரைஞராக்கி விட வேண்டும். என்ற உறுதியோட்டிருந்தார். அதனால், தனது மகன் ஏராளமாகச் சம்பாதிப்பார் படிப்புக்காகப் பெற்றிருந்த கடனைத் தீர்த்து விடலாம். நமது குடும்ப வாழ்க்கையும் முன்னேறும் என்று நம்பியபடியே சிந்தித்தார்.

மகன் வழக்குரைஞராவதானால், அவன் சென்னை சென்று தங்கிச் சட்டக்கல்லூரியில் சட்டத் துறை பி.எல். கல்வியைப் பயிலவேண்டும். அதுவும் ஓராண்டல்ல. இரண்டாண்டு காலம் சென்னையிலேயே தங்க வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்துக் குழப்பமடைந்தார்.

என்ன ஆனாலும் சரி, எவ்வளவு செலவானாலும் சரி, எப்படியும் சுப்பிரமணியத்தைச் சட்டக் கல்லூரியில் சேர்த்து விட சிலருடைய உதவிகளை நாடினார். அவ்வுதவிகள் அவருக்குக் கிடைத்துவிட்டது. அதனால், தனது மகனைச் சென்னைக்கு அழைத்து வந்து சட்டக் கல்லூரியில் சேர்த்து விட்டார்.

சட்டத்துறையின் நுட்பங்கள், சிந்தனைக்கு வேலை கொடுக்கும் சம்பவ நடப்புக்கள், சட்டங்களின் மூலம் செய்யக் கூடிய பணிகள், ஆகிய அனைத்தும் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவர், ஆர்வத்துடன் தொடர்ந்து படித்தார். அதே நேரத்தில் தனது தந்தையாருக்கு மேலும் வேதனைகளைக் கொடுக்க மனமில்லாமல், தனது குடும்பநிலையினை நினைத்து, மிகவும் சிக்கனமாகவே சென்னையில் தங்கி மிகக் கடுமையாக, இரவு-பகல் என்று பாராமல் உழைத்துப்படித்தார்.

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்ற சங்க காலத்துச் சான்றோர் எண்ணப்படி, உண்மையோடும், உறுதியோடும், உணர்ச்சியோடும், படித்து இரண்டாண்டு கால சட்டப்படிப்பை முடித்து. தேர்விலே வெற்றி பெற்று வ.வே.சுப்பிரமணியன் பி.ஏ.பி.எல் என்று பட்டத்தைப் பெற்று வழக்கறிஞர் ஆனார்.

தனது மகன் வழக்குரைஞரான சம்பவங்களை மனைவியிடமும், மருமகளிடமும் கூறிக் கூறி வேங்கடேச ஐயர் பெருமிதமடைந்தார் திருச்சி மாவட்ட நீதி மன்றத்தில் சுப்பிரமணியன் வழக்கறிஞர் ஆனார். அவர் தன்னிடம் வரும் வழக்குகள் விவரங்களை நன்றாகப் படிப்பார்! வெற்றி பெறுமா என்பதை எண்ணிப் பார்த்தே அந்த வழக்கை நடத்துவார்!

இவ்வாறு நான்கு ஆண்டுகள் திருச்சி நகர நீதி மன்றத்தில் சுப்பிரமணியம் தொழில் நடத்தி வந்தும் அவரது குடும்பத்துக்குப் போதிய வருமானமில்லை. மீண்டும் அவரைக் குடும்பக் கவலை பற்றிக் கொண்டது. தந்தையும் தனயனும் மனம் வருந்திக் கொண்டிருந்தார்கள்.

எவ்வாறு தமது வருமானத்தைப் பெருக்குவது என்று ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்கள் சுப்பிரமணியமும், அவரது தந்தையுமான வேங்கடேச ஐயரும் அப்போதுதான் யாரும் எதிர்பாராத ஒன்று நடந்தது!