உள்ளடக்கத்துக்குச் செல்

தான்பிரீன் தொடரும் பயணம்/இரண்டாம் பதிப்புக்கான பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து


இரண்டாம் பதிப்புக்கான
பதிப்புரை

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாம், உலகின் நாடுகளிலும் கடந்த காலங்களில் நிகழ்ந்த பல்வகை விடுதலைப் போராட்டங்கள், புரட்சிகள் பற்றிய வரலாறுகளையும் அனுபவங்களையும் அறிந்திருப்பது மிகவும் அவசியமானது. அதன்மூலமே நாம், எமது போராட்டத்தினை தடைகளை மீறியும், சரியான திசையிலும் முன்னெடுத்துச் சென்று, எமது இலக்கினை அடைய முடியும்.

விடுதலைப் போராட்டங்களும் புரட்சிகளும் பல்வகைப்பட்டன. குடியேற்றவாதத்திற்கு எதிராகப் போராடி விடுதலை பெற்ற நாடுகளில் முதலாவது நாடு ஐக்கிய அமெரிக்காவாகும். அது, இரு நூற்றியொன்பது ஆண்டுகளுக்கு முன், 1776-இல், பிரித்தானியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.

ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பல, மேற்கத்தைய குடியேற்ற ஆதிககத்தினை எதிர்த்து விடுதலை பெறுவதற்காகத் தேசிய விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டன. அவ்வாறு போராடி விடுதலை அடைந்த நாடுகளுள் இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா என்பன அடங்கும்.

ஏகாதிபத்திய சகாப்தத்தில் முதலாளித்துவம், பிரபுத்துவம் என்பவற்றை எதிர்த்து வெற்றிபெற்ற சோசலிசப் புரட்சி என்ற வகையில் ரஷ்யப் புரட்சி உலகின் சகல புரட்சிகளுக்கும் முன்னுதாரணமாகும்.



மேற்கத்தைய அரைக் காலனித்துவம், யப்பானிய ஏகாதிபத்தியம், உள்நாட்டுப் பிரபுத்துவம் ஆகிவற்றிற்கு எதிரான சோசலிசப் புரட்சியாக அமைந்தது சீனாவில்.

அமெரிக்காவின் நவகாலனித்துவத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டமாகவும் சமூக மாற்றத்திற்கான புரட்சியாகவும் அமைந்தது கியூபப் புரட்சி.

ஆசியாவில், நவகாலனித்துவத்திற்கு எதிரான விடுதலைப்போராட்டமாக அமைந்த வகையில் ஈரானியப் புரட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வரிசையில் நிக்கரகுவா புரட்சியும், எல் சவ்வடோர் போராட்டமும் அடங்கும்.

பல்தேசிய இன அரசமைப்புகளைக் கொண்ட நாடுகளில் தேசிய இன ஒடுக்குமுறை நிகழும்போது, அவ்வாறு ஒடுக்கப்படும் தேசிய இனம் ஒன்றோ பலவோ அந்த அரசிலிருந்து பிரிந்து தமக்கென ஒரு புதிய அரசை நிர்மானிப்பதற்கான போராட்டம் அகக் காலனித்துவ எதிர்ப்புப் (Anti Internal Colonialism) போராட்டம் ஆகும். அயர்லாந்து, பங்களாதேஷ் விடுதலைப் போராட்டங்களும், சைப்பிரஸில் துருக்கிய இனப்போராட்டமும், பிலிப்பைன்ஸில் மித்தனாபோராட்டமும் மேற்கூறிய பிரிவுள் அடங்கும். இந்த வரிசையில் எமது தமிழீழ விடுதலைப் போராட்டமும் இடம் பெறுகிறது.

ஆக, விடுதலைப் போராட்டங்களும், புரட்சி அனுபவங்களும் கூடகாலத்திற்குக் காலம், நாட்டிற்கு நாடு மாறுபடுகின்றன. இவை காலம், இடம் என்பவற்றிற்கும் மேலாக சர்வதேச அரசியல் சூழல், புவியியல் அமைப்பு, அரசியல், சமூக அமைப்புப் போன்ற பல்வேறு காரணிகளையும் பொறுத்து மாறுபடுகின்றன.

எனவே, அத்தகைய வரலாறுகளையும் அனுபவங்களையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டு மக்கள்.அறிவதன் மூலம், அத்தகைய வரலாறுகளிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் எந்ததெந்த அம்சங்களை நேரடியாகவே தாமும் பிரயோகிக்கலாம், எந்தெந்த அம்சங்களைத் தமக்கேற்ப மாற்றத்துடன் பிரயோகிக்கலாம், எந்தெந்த அம்சங்கள் தவிர்க்கப்டவேண்டும், அல்லது செய்யத் தக்கவை எவை, செய்யத் தகாதவை எவை போன்ற அம்சங்களை அறிந்துக்கொள்ளலாம்.

அவ்வாறு நோக்குமிடத்து, ஐரிஷ் (அயர்லாந்து) விடுதலை போராட்டத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குமிடையே நிறைந்த ஒற்றுமை உண்டு. பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளர்ந்த அந்தப் போராட்டம் 750 ஆண்டுகளாகியும் இன்னும் தொடர்கிறது. அந்த நீண்ட வரலாற்றில் பல அரசி யல் தலைவர்களும் விடுதலைப் போராளிகளும் அப்போராட்டத்தை முன்னெ முன்னெடுத்துச் சென்றதன் மூலம் தத்தம் பங்களிப்புகளை நல்கியுள்ளனர். 1916-48 காலப் பகுதியில் சிறப்புப் பெற்ற தலைவர்கள்.ஆர்தர் கிரிபித், மைக்கேல் கொலின்ஸ், டி வலெரா. இவர்களுக்கு இணையாகக் குறிப்பிடத் தகுந்த ஒரு போராளி தான்பிரீன். வீரம் செறிந்த அவனது போராட்டம், இந்நூலில் இடம் பெறுகிறது.

'பாம்பின் கால் பாம்ப்றியும்' என்ற முதுமொழிக்கிணங்க, தான்பிரீனின் போராட்ட உணர்வினை எமது போராளிகள் மத்தியிலும் தொற்றவைக்கும் நோக்கில் தான்பிரீன் பற்றிய நூலை எங்கிருந்தோ முத்துக் குளித்து கண்டெடுத்தவர், தமிழீழப் போராளிகளின் தளபதிகளில் ஒருவர். அதனை மக்களிடையே பரப்பும் நோக்கில் நூலாக்கம் செய்யவென, பிரதி எடுத்து வைத்திருந்தார் மற்றுமொரு தமிழிழப் போராளி. ஆனால் துரதிஷ்ட வசமாக, அவர்கள் எண்ணம் நிறைவேறுமுன்பாகவே, வீரமரணமடைந்துவிட்டனர்; அந்த இருவர் வாழ்க்கையும் கூட இன்று வரலாறுகிவிட்டது. எனினும், அவர்களின் அந்த உணர்வு பல்லாயிரம் போராளிகளை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. அவ்விருவரதும் உடனடி நோக்கமான நூல் வெளியீடு இன்று கைகூடுகிறது. இதுபோலவே அவர்களதும், அவர்களை ஒத்த பலரதும், பரந்துபட்ட மக்களதும் இலக்கான விடுதலையை அடைந்தே தீருவோம் என்பது திண்ணம்.

பிரதியெடுக்கப்பட்ட கையெழுத்துப்பிரதியே எமக்குக் கிடைத்த நிலையில் அதன் ஆசிரியர் பற்றி அதிற் குறிக்கப்படாமையால் நூலாசிரியர் பெயர் தெரியாதிருந்தது. எனினும் நூலில் இடம்பெற்ற 'ஒரு வார்த்தை', முன்னுரை ஆகியவற்றின் ஊடாக, 1932 - 34 காலப் பகுதியில் நூலாசிரியர் திருச்சிச் சிறையில் அரசியல் கைதியாக இருந்த காலத்தில் எழுதியுள்ளார் என்பது புலனாகிளது. மேலும், முன்னுரையிலிருந்து, நூலாசிரியர், தான்பிரீன் நூலைத் தவிரவும் மைக்கேல் காலின்ஸ் பற்றியும், டொரென்ஸ் மாக்ஸ்வினியின் சுதந்திரத் தத்துவங்கள் பற்றியும் எழுதியிருப்பது தெரியவந்தது. இதனடிப்படையில் தேடிப்பார்க்கையில் மைக்கேல் காலின்ஸ் கிடைத்தது. அதனைப் படித்துப் பார்த்ததில் அந்நூலில் உள்ள குறிப்புகளினூடாகவும், தான்பிரீன் பற்றிய நூலையும், மைக்கேல் காலின்ஸ் நூலை எழுதிய திரு. ப. ராமஸ்வாமி என்பவரே எழுதினார் என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது.

மேலும், இந்நூல் பிரசுரமான ஆண்டு எதுவென்பது தெரியாவிடினும், 1947 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளிவந்த மேற்படி மைக்கேல் காலின்ஸ் என்ற நூலில், சுதந்திரவீரன் தான்பிரீன் என்ற தலைப்பில் இந்நூல் வெளிவந்திருந்தற்கான ஓர் அடிக்குறிப்புக் காணப்படுவதால் 1947ஆம் ஆண்டுக்கு முன்பே இந்நூல் வெளிவந்திருந்தது என்பது தெளிவு. நூலின் தலைப்பையும் பொருத்தம் கருதி நாம் மாற்றியுள்ளோம்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள 'ஒரு வார்த்தை', முன்னுரை ஆகிய பகுதிகளையும் நூலாசிரியரே எழுதியுள்ளார். அதேவேளை, தான்பிரீனின் போராட்டத்தினை, அயர்லாந்தின் விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் இணைத்துப் பார்க்கும்போதே முழுமை ஏற்படும் என்ற நோக்கில் அயர்லாந்து விடுதலைப் போராட்டம் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறும், மேலும் தான் பிரீன் பற்றிய ஒரு குறிப்பும் இந்தப் பதிப்பில் எம்மால் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்விரு பகுதிகளையும் உதயன் எழுதியுள்ளார். மேலும் ஆங்காங்கே முக்கியத்துவம் கருதி தடித்த எழுத்துக்கள் எம்மால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தவிரவும், தமிழகத்தில் வழக்கில் உள்ள ரஸ்தா, தானாக்காரன் போன்ற சொற்கள் எம்மிடையே வழக்கில் இல்லாத காரணத்தால் தெரு அல்லது வீதி, போலிஸ்காரன் போன்ற சொற்களை இங்கு நாம் கையாண்டுள்ளோம் என்பதையும் குறிப்பிடுவது அவசியம். நூலின் இறுதியில் காணப்படும் இரு கவிதைகளும் பொருத்தம் கருதி எம்மால் சேர்க்கப்பட்டுள்ளன.

மக்களை அரசியல்மயப்படுத்தும் நோக்கில் மறுமலர்ச்சிக் கழகம் அவ்வப்போது நூல்களை வெளியிட்டுவருகிறது. அந்த வரிசையில் தான்பிரீன் பற்றிய இந்நூலை வெளியிடுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

விடுதலைப் போராட்ட வரலாற்று நூல்கள் தமிழில் மிக அரிதாக காணப்படுகின்றன. நாமறிந்த வரையில் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பாக தமிழில் கணிசமான நூல்கள் வெளிவந்துள்ளன என்ற போதும் விஞ்ஞானபூர்வமான நூல்கள் மிகச் சிலவே. அவையும்கூட இப்போது இங்கு கிடைப்பது அரிது.

இந்நிலையில் மறுமலர்ச்சிக்கழம் ஏற்கனவே மிந்தனா பற்றி ஒரு சிறுபிரசுரத்தினையும், கியூபா - புரட்சிகர யுத்தம் என்ற நூலினையும் வெளியிட்டுள்ளமையை நினைவுகூறுகிறோம். மேலும், நிக்கரகுவா பற்றிய நூலொன்று அச்சு வேலை முடியுந்தறுவாயில் அச்சகத்திலிருந்து கிறீலங்காாணுவத்தினால் கைப்பற்றபட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்நூலினை விரைவில் மீண்டும் அச்சிட்டு வெளியிடுவோம் என்பதையும் கூற விரும்புகிறோம்.

மறுமலர்ச்சிக் கழகம்

யாழ் பல்கலைக் கழகம்
யாழ்ப்பாணம்
29. 8. 85