உள்ளடக்கத்துக்குச் செல்

தான்பிரீன் தொடரும் பயணம்/போலிஸாரிடம் பிடிபட்ட தொண்டன்

விக்கிமூலம் இலிருந்து

9
போலிஸாரிடம் பிடிபட்ட தொண்டன்


தான்பிரீன் அன்னையிடம் அரிதில் விடைபெற்றுக் கொண்டு நண்பர்களுடன் கிளான்மெல் நகருக்குச் சென்றான். அதுதான் ஐரிஷ் போலிஸாரின் தலைமை இடம். அங்கிருந்த்தொண்டர்படைத் தலைவர்களைக் கண்டு பேசி, விரைவாகக் காரியங்களை ஆரம்பிக்கவேண்டும் என்று தான்பிரீன் வர்புறுத்தினான். நகரத் தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினான் பிறகு அங்கிருந்து அவனும் நண்பர்களும் ரோஸ்மூரை அடைந்தனர்.

ரோஸ்மூரில் ஒரு நண்பர் பக்கத்து ஊரான பல்லாக் என்னும் இடத்தில் ஈமன் ஒப்ரியேனுடைய வீட்டில் ஒரு நடனக் கச்சேரி நடக்கப் போவதாக தெரிவித்தார். தான்பிரீனும் அவன் தோழர்களும் களைப்பை மறந்தனர். அங்கு போவதில் ஏற்படக்கூடிய ஆபாயத்தையும் கருதவில்லை.பல வருஷங்களாக அம்மாதிரியான கச்சேரிகளில் அவர்கள் கலந்து கொண்டதில்லை. ஆதலால் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்று தீர்மானித்தனர். அதன்படி கச்சேரி நடக்கும் இடத்திற்குச் சென்றனர். போனவுடன் விருந்துண்ணும் கூட்டத்தோடு கலந்து கொண்டனர்.

அங்கு பாடப்பட்ட கீதமும், அளிக்கப்பட்ட உணவுகளும் மிகவும் இனிமையாக இருந்தன. தொண்டர்கள் தாங்கள் 'சட்ட விரோதமான நபர்கள் என்பதை அடியோடு மறந்து உண்பதிலும், ஆடுவதிலும் ஆனந்தமாய்ப் பொழுது போக்கிவந்தனர். பீலர்களும், ராணுவத்தாரும் வெளியே பல இடங்களில் அவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்க, அவர்கள் இங்கே ‘டான்ஸ்' ஆடிக் கொண்டிருந்தார்கள்

இரவு முழுவதும் நடனஞ் செய்துவிட்டு விடியப் போகிற நேரத்தில், தான்பிரீன் சில பையன்களுடன் ரோஸ்மூருக்குத் திரும்பினான். மற்ற மூவரும் அவனுடன் செல்லாது அங்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். தான்பிரீன் இருப்பிடத்திற்குச் சென்றபின், சிறிது நேரத்தில் டிரீஸியும், ராபின்சனும் அங்கு வந்து சேர்ந்தனர். ஸீன் ஹோகன் மட்டும் வரவில்லை. அவன் பின்னால் வந்து சேருவான் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் படுக்கச் சென்றனர்.

ஐந்து தினங்களாக உறக்கமில்லாதிருந்ததாலும், அன்றிரவு முழுவதும் நடனமாடியதாலும் மூவரும் மிகவும் களைப்புற்றுப் படுத்தவுடனே உறங்கி விட்டனர். தொழுவங்களிலும் தோட்டங்களிலும் அவர்கள் நன்றகத்தூங்குவார்கள். படுக்கைகளும் தலையணைகளும் அலங்காரமாகப் போடப்பட்ட இடத்தில் நித்திரைக்குக் குறைவிருக்குமோ!

தான்பிரீன் உறங்கும் பொழுது யாரோ ஏதோ கூறுவது செவியில் பட்டது. தூக்கத்தில் ஒன்று சரியாக புலனாகவில்லை. பாட்ரிக்கின்னான் என்னும் பழைய நண்பர் திடீரென்று அங்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். தான்பிரீன் கண்னைவிழிக்க முடியாமல் அயர்ந்து கிடந்தான். ஆனால், கின்னான், 'பீலர்கள் ஹோகனைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள், என்று தெளிவாகக் கூறிய சொற்களைக் கேட்டவுடன், அவன் திடுக்கிட்டு எழுந்துவிட்டான். அவ்விஷயத்தை அவனால் நம்ப முடியவில்லை. ஹோகன் பீலர்களால் சுடப்பட்டு இறந்தான் என்றால், அதை நம்பியிருப்பான். ஆனால், எதிரிகளைச் சுட்டுத் தள்ளாமல், பேடித்தனமாக அவன் பீலர்களுடைய கையில் சிக்கினான் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. கின்னான் வேடிக்கையாக் கூறியிருப்பாரோ என்று சந்தேகித்து அவன் டிரீஸியைத் திரும்பிப் பார்த்தான். ஒரு வினாடியில் மூவரும் எழுந்து நின்று அடுத்தாற் போல் என்ன செய்வதென்று யோசிக்கலாயினர்.

தான்பிரீனுடைய தலை கிறுகிறுத்துக் கொண்டிருந்தது. உடம்வு முழுவதும் உணர்ச்சியற்றிருந்தது. ஆயினும் ஆருயிர்த்தோழன் ஹோகன் பகைவர் கையில் சிக்கிவிட்டான் என்றதைக் கேட்டு அவன் நிலை கொள்ளவில்லை. அவனும் தோழர்களும் ஹோகனைப் பீலர்களுடைய கையிலிருந்து உடனே விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர். 'ஹோகனை விடுவிக்க வேண்டும், அல்லது நாம் மடிய வேண்டும்' என்று முடிவு செய்தனர்.

ஹோகன் எப்படிப் பிடிப்பட்டான் என்பதைப் பற்றி அவர்கள் விசாரித்தார்கள். அவன் அவர்களுக்குப் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். இடையில் பத்து பீலர்கள் அவனைச் சூழ்ந்து பிடித்துக் கொண்டனர். அவன் துப்பாக்கியைத் தொடுவதற்குக் கூடச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் பீலர்கள் புரட்சிக்காரர்களைப் பிடிப்பதானால், பிடித்தவுடன் சுட்டுக் கொல்வது வழக்கமாயிற்று. ’கைதிகள் ஓட ஆரம்பித்தார்கள். அதனால் சுட்டு விட்டோம்!' என்று அவர்கள் மழுப்பிவிடுவார்கள். ஆனால் அந்த வழக்கம் ஹோகன் பிடிபடும்போது அமுலில் இல்லை.

ஹோகன் எங்கே வைக்கப்பட்டிருக்கிறான் என்ற தகவலொன்றும் கிடைக்கவில்லை. வழிப்போக்கர் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்றால் அக்காலத்தில் நன்றாய் விடிவதற்குமுன்னால் எவரும் வீதியில் நடமாடுவதில்லை. அவனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துவரச் சில வாலிப நண்பர்கள் சைக்கிள்களில் சுற்றித் திரிந்தனர். ஒரு புலனுந் தெரியவில்லை. பீலர்கள் ஹோகனை மிகவும் எச்சரிக்கையாய் மறைத்துக் கொண்டு போயிருந்தனர். வெகு நேரத்திற்குப் பிறகு, அவன் தர்லஸ் போலிஸ் நிலையத்தில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.

தர்லஸ் போலிஸ் நிலையத்தைத் தாக்கி அதிலிருந்து ஹோகனை மீட்பது நடக்க முடியாத காரியம். ஏனெனில் ஏராளமான போலிசும் பட்டாளமும் எந்த நேரத்திலும் தயாராய் வைக்கப்பட்டிருந்தன. போலிஸ் நிலையத்தைச் சுற்றிலும் பெரிய கோட்டை ஒன்று இருந்தது. போலிஸார் இமைகொட்டாது பாராக் கொடுத்து வந்தனர். புரட்சிக்காரருடைய வேலைகள் அவர்களுக்கு மிக நன்றாய்த் தெரியும். அதிலும் வெடிமருந்து வழக்கில் சம்பந்தப்பட்ட ஹோகன் அவர்களிடம் கைதியாக இருக்கும் பொழுது அவர்கள் அதிக எச்சரிக்கையாயிருந்தது ஆச்சரியமில்லை.

போலிஸ் நிலையத்தைத் தாக்க முடியாவிட்டால் வேறு என்ன செய்வது, இதைப் பற்றித் தான்பிரீன் தீவிரமாக யோசித்து, ஒரு முடிவு செய்தான். அக்காலத்தில் கைதிகளை ‘ரிமாண்டு' செய்வதற்கும் ஆரம்ப விசாரனை செய்வதற்கும் இரண்டொரு நாள்தான் போலிஸ் நிலையத்தில் வைப்பது வழக்கம். பிறகு அவர்கள் மவுன்ட் ஜாய், கார்க், மேரிபரோ, டான்டாக், பெல்டாஸ்டு முதலிய பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றுக்கு மாற்றப்படுவது வழக்கம். திப்பெரரிக் கைதிகளை கார்க் நகர ஜெயிலுக்குக் கொண்டு போவார்கள். எனவே ஹோகன், தர்லஸ் நிலையத்திலிருந்து ரயிலில் கார்க்குக்கே கொண்டு போகப்படுவான் என்று தான்பிரீன் ஊகித்தான்.

அதற்குத் தக்கபடி திட்டம் அமைத்தான். எமிலி என்ற ஸ்டேஷனுக்குப் போய், அங்கு ரயில் வந்தவுடன் உள்ளே பாராக்காரர்களைச் சுட்டுவிட்டு, ஹோகனை மீட்க வேண்டும் என்பது அவன் யோசனை. எமிலி சிறிய ஸ்டேஷன். அங்கு பட்டாளம் கிடையாது. ஆனால் ரயிலை நிறுத்திக் கைதியை மீட்பது மூன்று பேர் செய்யக்கூடிய காரியமில்லை. ஆதலால், தான்பிரீன் உதவியாட்கள் வேண்டுமென்று திப்பெரரி நகரலிருந்து தனது படைக்குத் தகவல் சொல்லிவிட்டான். திப்பெரரியில் இருந்து எமிலி ஏழாவது மைலில் இருந்தது.

முன்னேற்பாடுகள் யாவும் செய்யப்பட்டு முடிந்தன. 1919 மே மாதம் 12ஆம் தேதி தான்பிரீனும் நண்பர்களும் தங்களுடைய சைக்கிள்களை எடுத்துக் கொண்டு எமிலியை நோக்கிப் புறப்பட்டனர். கோபத்தினாலும், ஆத்திரத்தாலும், கவலையாலும் அவர்களுடைய உதிரம் கொதித்துக் கொண்டிருந்தது.

நேர் பாதையிலே சென்றால், எமிலி முப்பது மைல் தூரத்தில்தான் இருந்தது. ஆனால் நேர் பாதையிலே போலிஸ் தோழர்கள் அடிக்கடி நடமாடிக்கொண்டிருப்பார்கள் அல்லவா? காட்டுப்பாதையில் ஐம்பது மைல் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. பாதையோ சீர்கெட்டது. எங்கு பார்த்தாலும் மேடும், பள்ளமும் குழியும், கல்லுமாயிருந்தது. சைக்கிள்களில் அவர்களுடைய உடல் இருந்தனவேயன்றி, உறக்க மயக்கத்தால் மூவருடைய தலைகளும் நாலு பக்கத்திலும் ஆடிக்கொண்டேயிருந்தன. நண்பனை மீட்க வேண்டும் என்ற ஆத்திரம் மட்டுமே அவர்களையும் சைக்கிள்களையும் தள்ளிக்கொண்டு சென்றது.

இடையிலே ஸீன்டிரீஸி வழக்கம் போல் கதைகள் சொல்ல ஆரம்பித்தான். வழியிலிருந்து ஊர்களின் சரித்திரங்களையும் அவற்றில் வசித்த வீரர்களைப் பற்றியும் அவன் விரிவாக எடுத்துச் சொன்னான். திடீரென்று ஏதோ வீழ்வதாக. சத்கங் கேட்டது. டிரீஸியும், தான்பிரீனும் பின்னால் திரும்பிப் பார்த்தனர். ராபின்ஸன் சைக்கிளிலிருந்து தூங்கிக் கீழே விழந்து விட்டான் விழுந்தவன் பங்குவதைக் கண்டனர். அவன் உடலில் அவ்வளவு களைப்பு இருந்தது. அவர்கள் அவனைத் தட்டி எழுப்பபி அழைத்துக் கொண்டு சென்று மே மாதம் 13ஆம் தேதி காலை எமிலியை அடைந்தனர்.