உள்ளடக்கத்துக்குச் செல்

தான்பிரீன் தொடரும் பயணம்/முதல் வெடிமருந்துச்சாலை

விக்கிமூலம் இலிருந்து

3
முதல் வெடிமருந்துச்சாலை


கட்டாய ராணுவச்சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதால் அயர்லாந்தின் ஜனங்கள் மிகுந்த கலக்கடைந்தார்கள். பல்லாயிரக்கணக்கான வாலிபர்களும் வயோதிகர்களும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்காக ஐரிஷ் தொண்டர் படையில் வந்து சேர்ந்துகொண்டனர். பதினோறிலிருந்து ஐம்பது வயது வரையுள்ளவர்கள் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் ஏதாவதொரு தொண்டர்படையைச் சேர்ந்திருந்தார்கள். பெண்கள் தனியாக ஒரு சங்கத்தை வைத்துக் கொண்டார்கள். பையன்கள் வானரசேனைகளை அமைத்துக்கொண்டு தொண்டர் படைக்கு உதவி செய்ய முன்வந்தனர். வந்த தொண்டர் படையின் முக்கிய அதிகாரிகளிற் பலர் சிறையில் இருந்ததால் வெளியிலிருந்த சிலர் இரவு பகலாக உழைத்து அவர்களுடைய வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருந்தது. கட்டாய ராணுவச்சட்டம் அயர்லாந்தை ஒற்றுமைப்படுத்துவதற்காகக் கடவுள் அருளிய ஒரு பாக்கியம் என்று கருதினார்கள். அதன் மூலமாவது வேற்றுமைகள் ஒழிந்து அயர்லாந்து நிரந்தரமான ஒற்றுமையை அடையுமென்று தான்பிரீன் முதலானவர்கள் எண்ணினார்கள்.

இங்கிலாந்து ஐரிஷ் மக்களின் உறுதியைக் கவனித்து வந்தது. கட்டாய ராணுவச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவருவதா அல்லது அயர்லாந்தை இழப்பதா என்ற பிரச்சினை ஏற்பட்டது. ஏனெனில் மக்கள் எல்லோரும் கலகத்துக்குத் தயாராக நின்றார்கள். இங்கிலாந்து பேசாதிருந்து நாட்டின் நிலைமையை ஆராய்ந்து வந்தது. தொண்டர்களும் தீவிரமாகவும் இடைவிடாமலும் தங்களுடைய பிரசாரத்தை நடத்தி வந்தார்கள்.

தன்பிரீன் இயற்கையான யுத்தம் வருவதற்கு முன்னே தன்படையினருக்குள்ளே ஒத்திகை யுத்தங்களுக்கு ஏற்பாடு செய்தான். அவர்களில் சிலர் திப்பெரரி நகரின் ஒரு பாகத்தைப் பாதுகாப்பார்கள். மற்றும் சிலர் அதை முற்றுகையிட்டுப்பிடிப்பார்கள். இருகட்சியாருக்கும் தீவிரமான போராட்டம் ஏற்படும். அதிலிருந்து அவர்கள் நல்ல பயிற்சி பெற்றுவந்தார்கள் தொண்டர்கள் திப்பெரரி நகரின் சில பாகங்களைத் தங்களுடைய ராணுவ ஸ்தலங்கள் என்று குறிப்பிட்டு அங்கே ஆங்கிலப் போலீஸாரும் சிப்பாய்களும் வராமல் பாதுகாத்து வந்தனர். அவர்களுடைய இந்த நடவடிக்கைகளின் போதெல்லாம் அந்நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ்கிப்பாய்கள் இருந்தனர் என்பதை மத்துவிடக்கூடாது.

சில சமயங்களில் இங்கிலாந்து புத்திசாலித்தனமாக நடந்துகொள்வது வழக்கம். அது தன் கைக்கு எட்டாவிட்டால் குடுமியை விட்டுவிடும். கட்டாய ராணுவச்சட்த்தால் அயர்லாந்திலிருந்து ஒரு மனிதனைக்கூட ராணுவத்திற்குச்சேர்க்க முடியாது என்பதை அது தெரிந்துகொண்டது. ஆதலால் அச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்படாமலே ஒழிந்தது. இதனால் ஐரிஷ் தொண்டர்படைக்கு மிகவும் கஷ்டமேற்பட்டது. பல்லாயிரக்கணக்காக அதில் வந்து சேர்ந்து கொண்டிருந்த மக்கள் படிப்படியாக அதிலிருந்து விலகிவிட்டார்கள். சட்டம் ஒழிந்தவுடன் அவர்களுடைய கவலையும் ஒழிந்து விட்டது. அவர்கள் ஆங்கில அரசாங்கத்தின் கட்டாயத்தினால் ஆங்கிலப்படையில் சேர்ந்து பிரான்ஸ், டாடல்னலிஸ் முதலான யுத்த அரங்கங்களிலே சாவதை வெறுத்து அதற்குப் பதிலாகத் தங்களுடைய நாட்டிலே ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து மடிய விரும்பினார்கள் சட்டம் ஒழிந்த பிறகு அவர்களுக்குத் தொண்டர் படையில் விருப்பமில்லாமல் போய்விட்டது. அவர்கள் அயர்லாந்தின் சுதந்திரத்திற்காக ஆயுத்ந் தாங்கிப் போராடத் தயாராகவிருக்கவில்லை. சுதந்திரத்திற்காக ஒரு சொட்டு ரத்தம் சிந்துவதுகூட அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பழைய அரசியல்தலை வாகளும் இதே கருத்தைத்தான் கொண்டிருந்தார்கள். ஆனால் வாலிபர்கள் பலர் தங்கள் உறுதியில் சிறிதும் தளராது அயர்லாந்து பூரண சுதந்திரத்தைப் பெறும்வரையிலும் போராடியே தீரவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர். தான்பிரீனும் அதே கருத்தை கொண்டிருந்தான்.

அச்சமயத்தில் ஸீன்டிரீஸிடண்டாக் சிறையில் உண்ணாவிரதம் இருந்துவந்தான். பதின்மூன்று நாட்களாக அவன் உணவுகொள்ளவில்லை. அதிகாரிகள் அவனைச்சாகவிட்டு விடுவார்கள் என்று தோன்றிற்று. வெளியே இருந்த தான்பிரீன் முதலானவர்கள் அச்சமயத்தில் தீரமான ஒரு காரியத்தைச் செய்து அவனை மடியவிடாமல் பாதுகாக்க வேண்டுமென்று கருதினார்கள். தான்பிரீனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஸீனை அரசாங்கத்தார் சிறைவூத்திருப்பதைப் போல தானும் அவர்களுடைய போலீஸ்காரன் ஒருவனைப் பிடித்துக்கொண்டு வந்து ஒரு ரகசியமான வீட்டில் அடைத்துவைத்து, அவனை பலவந்தமாக உண்ணாவிரதம் இருக்கும்படி செய்யவேண்டும் என்றும், ஸீனை விடுதலை செய்தால்தான் போலிஸ்காரனையும் விடுதலை செய்ய முடியும் என்றுறு அறிவித்து விடவேண்டும் என்றும் அவன் தீர்மானம் செய்தான் மறற நணபாகளும் அதை ஏற்றுக் கொண்டார்கள். அக்காலத்தில்லிமெரிக் ஜங்ஷன் என்னுமிடத்தில் இருப்புப் பாதை பக்கம் சில போலீஸ்காரர் காவலுக்கு நிற்பது வழக்கம். தான்பீரீனும் அவனுடைய தோழர்களும் மொத்தம் 40 பேர்கள் ஒரு நாள் அவ்விடதிற்குச் சென்று அருகே இருந்த மலையடிவாரத்தில் மறைந்திருந்தார். தற்செயலாக அன்றைக்கு ஒரு போலிஸ்காரனும் அவ்விடத்திற்கு வரவில்லை. பின்னால் தான்பிரீனுடைய யோசனை ஐரிஷ் குடியரசுச் சகோதர சங்கத்தால் நிராகரிக்கபட்டது. அச்சங்கம் மிகவும் ரகசியமானது. மிகுந்த நம்பிக்கைக்குப் பாத்திரமான தொண்டர்கள் பலர் அதில் இருந்தனர். தொண்டர் படையை மேற்பார்க்கும் அதிகாரம் அச்சங்கத்துக்கே உண்டு. இச்சம்பவத்திற்குப் பிறகு தான்பிரீத் சங்கத்திலிருந்து விலகி விட்டான்.

1918 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஸீன் விடுதலை செய்யபட்டான் அவன் வெளியே வந்தவுடன் தொண்டர் படைசம்பந்தமான திட்டங்கள் பற்றி தான்பிரீனிடம் விவாதித்தான். தான்பிரீன் திட்டங்கள் போட்டுப் போட்டு சலிப்படைந்து இருந்ததால் உடனே சண்டையை ஆரம்பிக்க வேண்டுமென்று கூறினான். ஸீனுக்கும் அவனுக்கும் அபிப்பிராய பேதமேற்பட்டது. இருவரும் தாங்கள் நட்புக்கு எவ்விதக் குறைவும ஏறபடாதபடி தத்தம் கருத்துப்படியே வேலைசெய்ய ஆரம்பித்தார்ர்கள். தான்பிரீன். பாட்ரிக் என்னும் நண்பனுடன் சேர்ந்து ஒரு வெடிமருந்துச் சாலையை ஏற்படுத்தினான். அதன்மூலம் ஏராளமான வெடி மருந்தைத் தயார் செய்யவேண்டும் என்பது அவன் நோக்கம். தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் அவனும் கியோக்குமே. அத்தொழிற்சாலை டாம் ஒட்வியர் என்பவருடைய குடிசையின் ஒரு பாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. தான்பிரீனிடம் வெடிமருந்து செய்வதற்குத் தக்க யந்திரங்கள் இல்லை. கையாலேயே வெடிமருந்தும் குண்டுகளும் தயார் செய்யவேண்டி இருந்தது. செய்யபட்ட குண்டுகளும் மழையிலும் காற்றிலும் வெளியே கொண்டுபோனால் வெடிக்கக்கூடியனவாக இல்லை. வெடிகுண்டுகள் தயார் செய்வதோடு அவர்கள் தோட்டக்களும் தயார் செய்து வந்தார்கள். அவர்கள் வெளியிடங்களில் இருந்து துப்பாக்கிகளையும் ரிவால்வர்களையும் அபகரித்து வருவதையும் நிறுத்திவிடவில்லை. ஆங்காங்கே சிலரிடம் இன்னும் துப்பாக்கிகள் பாக்கி இருந்தன. தான்பிரீன் அவர்கள் வீடுகளுக்கு விஜயம் செய்வது வழக்கம்.

ஒரு சமயம் ஆயுதக் கொள்ளைக்காகச் சென்று வரும்பொழுது தான்பிரீன் பகைவர்களுடைய கையில் சிக்கும்படி நேர்ந்தது. அவனும் டிரீஸி முதலான நண்பர்களும் திப்பெரரியிலிருந்து திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது தான்பிரீனுடைய சைக்கிளில் காற்றுக் குறைந்து போய்விட்டதால் அது ஓடாது நின்று விட்டது. அவன் கீழே இறங்கி மற்றவர்களை முன்னால் செல்லும்படி விட்டு சைக்கிளுக்குக் காற்றடிக்க ஆரம்பித்தான். முன்னால் சென்ற தொண்டர்களை போலிஸார் பார்த்துவிட்டனர் அவர்கள் போகும் வழியிலேயே போலிஸ் படை வீடுகள் இருந்தன. ஆனால் போலிஸார் அந்த ஆறு தொண்டர்களிடம் நெருங்கத்துணியவில்லை. அவர்களுக்கு வழக்கமாயிருந்த தைரியத்துடன் விலகியிருந்து விட்டார்கள். தொண்டர்கள் வாயுவேகமாக மறைந்து விட்டார்கள். அந்நிலையில் தான்பிரீன் காற்றடித்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு தடித்த போலிஸ்காரன் அவனுடைய சட்டையைப் பிடித்து இழுத்தான். அதுவரை போலிஸ் புலி அவன் பக்கத்தில் இருப்பதை தான்பிரீன் உணரவில்லை. அவனுடைய இடதுகையில் பூட்டுக்களை உடைப்பதற்கு உபயோகிக்கப்படும் இரும்புப் பட்டையொன்று இருந்தது. அவன் அதைக் கொண்டு போலிஸ்காரன் மண்டையிலே அடித்து, மண்டை சரியாக இருக்கிறதா என்று பரீட்சை பார்த்தான். ஆசாமி அப்படியே அமர்ந்து விட்டான். உடனே தான்பிரீன் ரிவால்வரை உருவி மற்றப் போலிஸார் முன்பு அதை நீட்டிக் கொண்டு புறப்பட ஆரம்பித்தான். போலிஸ் அதிகாரி "மரியாதையாகப் பணிந்துவிடு அல்லது சுட்டுவிடுவேன்“ என்று பயமுறுத்தினார். தான்பரீன், "கைகளைக் கீழே போடுங்கள்! இல்லாவிட்டால் உங்களைக் கூட்டத்தோடு சுவர்க்கத்திற்கு அனுப்பிவிடுவேன்“ என்று பதிலுரைத்தான். போலிஸார் அந்த உத்தரவுக்குப் பணிந்தனர். அச்சமயத்தில் தான்பிரீன் திடீரென்றுதன் சைக்கிளில் ஏறி ஒரு முடுக்கு வழியாகப் பாய்ந்து சென்று விட்டான். அவன் அன்று தப்பியது மிகவும் ஆச்சரியம். ஏனென்றால் சில நிமிஷங்களுக்குள் அபாய அறிவிப்புக் கொடுக்கப்பட்டு, நகரைச்சுற்றிலும், தெருக்களிலும் சந்துகளிலும் ஏராளமான பட்டாளங்கள் தொண்டர்களைப் பிடிப்பதற்காக நிறுத்தப்பட்டன. ஆனால், அதற்குள் தான்பிரீன் தனது வெடிமருந்துச் சாலையில் தோழர்களுடன் செளக்கியமாக அமர்திருந்தான்.

தான்பிரீனுடைய வெடிமருந்துச்சாலை நெடுநாள் நிலைத்திருக்கவில்லை. அங்கு தொண்டர்கள் தங்களுக்கு வேண்டிய செளகரியங்களைத தாங்களே தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. சமையல் செய்வதற்கும், தண்ணிர் கொண்டு வருவதற்கும் வேறு உதவியாளில்லை. ஒருநாள் தான்பிரீன் ஒரு வாளி தண்ணீர் கொண்டுவருவதற்கு வெளியே சென்றிருந்தான். அவன் திரும்புகையில் குடிசையில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் வரும்பொழுது தீடிரென்று குடிசையின் கூரை ஆகாயத்தில் எழும்புவதைக் கண்டான். அதே சமயத்தில் இடி இடித்தது போல் பல வெடிகுண்டுகள் வெடிப்பதையும் கேட்டான். ஒரு நிமிஷத்தில் வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டது. அவன் உள்ளேயிருந்த தன்னுடைய தோழருக்கு என்ன நேர்ந்ததோ என்று கவலையுற்றான். கையில் இருந்த வாளியைக் கீழே வைத்துவிட்டு குடிசைக்குள் விரைந்தோடினான். பரணியில் ஏறிப்பார்த்தான். அங்கே பாட்ரிக்கியோக் பேச்சற்றுக் கீழே கிடந்தான். தான்பிரீன் அவனைக் கைகளில் ஏந்திக்கொண்டு மேலிருந்து விழுந்துகொண்டிருந்த கொள்ளிக்கட்டைகளின் நடுவே எடுத்துச்சென்று அங்கேயிருந்த மல்டீன் ஓடைக்கரையில் கொண்டு வைத்தான். வாளியைக் கொண்டு வந்து அதில் இருந்த குளிர்ந்த நீரை அவனுடைய முகத்தில் இரண்டுமுறை தெளித்தான். உடனே கியோக் எழுந்து நின்று "ஏ மூட சிகாமணியே! என்னைத் தண்ணீரில் அமிழ்த்திவிடுவாய் போலிருக்கிறதே!“ என்று வேடிக்கயைாகக் கோபித்துக் கொண்டான். தான்பிரீன் எப்படியாவது நண்பன் பிழைத்துக் கொண்டானே என்று ஆனந்தங் கொண்டான். அவர்கள் இருவருக்கும் குடிசையும் வெடிமருந்துச் சாலையும் அழிந்துபோன கவலை மட்டும் தணியவில்லை.

தான்பிரீன் கையிலிருந்த காசையெல்லாம் வெடிமருந்துச் சாலைக்காகச் செலவழித்திருந்தான். இப்பொழுது ஒட்வியருடைய வீடு எரிந்து போனதிற்கு நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டியிருந்தது. தோழர்களின் உதவியால் வீடு முன்னைப் பார்க்கிலும் அழகாக அமைக்கப்பட்டுவிட்டது. எனினும் தான்பிரீனுடைய தொழிலுக்கு அவ்வீடு பின்னால் கிடைக்கவில்லை. அதனால் அவன் திப்பெரரிவாசியான ஓ கானல் என்பவருடைய வீட்டில் தனது தொழிற்சாலையை அமைத்துக்கொண்டான். அவ்விடத்தில் அவனுக்கு அதிக வெற்றியும் கிடைத்தது. ஏனென்றால் மீண்டும் வீடு வெடித்துவிடாமல் இருப்பதற்கு அவன் மிகுந்த முன்னெச்சரிக்கை எடுத்துக்கொண்ட்ான்.

அந்த வீட்டில் இருக்கும்பொழுது தொண்டர்களுக்குச் சந்தோஷம் ஏற்படவில்லை. ஏனென்றால் அங்கு ஒரு விதமான செளகரியமும் கிடையாது. படுக்கை, பாய், தலையணை எதுவும் கிடையாது. அவற்றை வாங்கப் பணமும் இல்லை. பக்கத்து வீட்டுக்காரர்களிடம் இரண்டு கம்பளங்களை இரவல் வாங்கி வைத்துக்கொண்டு தலையிலே வைக்கோலை விரித்து அதன்மேல் ஒரு கம்பளத்தை விரித்துத் தொண்டர்கள் கிடப்பது வழக்கம். மேலேயிருந்துவரும் பனியைத் தொண்டர்கள் தாங்கமுடியாமல் அவர்கள் ஏராளமான பழைய பத்திரிகைகளை உடல்களின் மீது போர்த்துக்கொண்டு அவற்றிக்கு மெலாகக் கம்பளத்தை மூடிக்கொள்வார்கள். கொஞ்சம் உருண்டு புரண்டு படுத்தால் பத்திரிகைகள் கிழிந்துபோகும்; மீண்டும் குளிர் ஆரம்பித்துவிடும். ஆதலால், அவர்கள் அசையாமலே ஒரே நிலையில் படுத்திருந்து தினமும் மூன்று மணிநேரம் உறங்குவது வழக்கம். குளிரைத் தவிர வேறு சில தொந்தரவுகளும் இருந்தன. வீடு முழுவதும் சுண்டெலிகள் நிறைந்திருந்தன. இரவில் அவைகள் படுத்திருந்தவர்களின் தலைகளைக் கடித்துக் கடித்து எழுப்பிவிட்டுவிடும். சில சமயங்களில் தான்பரீன் கோபத்துடன் எழுந்து அவற்றை அடிப்பது வழக்கம். அப்பொழுது எலின்டிரிஸி, "அண்ணா அவைகளாவது சந்தோஷமாயிருக்கட்டும். உன்னுடைய தலையில் இருந்து கொஞ்சம் ரோமத்தை அவை கொண்டு போய்விட்டால் ஒன்றும் முழுகிப்போய் விடாது“ என்று சாந்தப்படுத்துவது வழக்கம். தான்பிரீன் "இந்த சுண்டெலிகளுக்குப் போலிஸாரிடம் என்ன உறவு? அவர்களைப் போலவே நாம் போன இடமெல்லாம் வந்து தொந்தரவு செய்கின்றனவே!“ என்று கூறிப் பரிகசிப்பான்.

சிறிது காலத்திற்குப் பிறகு கியோக் வேறு வேலை காரணமாக வெளியேறிவிட்டான். தான்பிரீனுக்கு உதவியாக ஸீன் ஹோகன் என்னும் நண்பன் வந்து சேர்ந்தான். அதிலிருந்து ஐந்து வருடகாலம் அவர்கள் இனைபிரியாமல் இருந்தார்கள். ஹோகன், டிரீஸி, தான்பிரீன் மூவரும் மூன்று உடலும் ஒருயிரும் போல் ஐக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குள் ஒரு கோபமான வார்த்தையோ, மனஸ்தாபமோ ஏற்பட்டதில்லை. அவர்கள் ஓ கானல் வீட்டில் இருக்கும் பொழுது ஸீமாஸ் ராபின்ஸன் என்னும் உயரிய நண்பன் அவர்களோடு சேர்ந்து கொண்டான். இந்நால்வரும் வயது, நோக்கம், குணம் முதலியவற்றில் ஒத்திருந்தார்கள். அயர்லாந்தைச் சுதந்திர நாடாக்கவேண்டும் என்று அவர்கள் கண்ட கனவுகளுக்கும் தயாரித்த திட்டங்களுக்கும் அளவேயில்லை. இதன் பிறகு ஓ கானல் தமது வீட்டைத் திருப்பித்தர வேண்டுமென்று அவர்களுக்கு அறிவித்தார். அவர்கள் காலி செய்வதைத்தவிர வேறு வழியில்லை. சட்டபூர்வமான உரிமைகளைப்பற்றி அவர்கள் அப்பொழுது வாதாடிக்கொண்டிருக்க வில்லை. வாடகை கொடுத்தாகிலும் வேறு வீடுகளை அமர்த்தலாமென்றால் கண்ட வீடுகளில் வசிப்பது அபாயகரமாயிருந்தது. ஏனென்றால் போலிஸார் ஆங்கில ஆட்சியில் வெறுப்புக்கொண்ட ஐரிஷ்காரர்களைப் பிடிக்கவேண்டும் என்று தேடித்திரிந்து கொண்டிருந்தனர். அந்தச்சமயத்தில் தான்பிரீன் கூட்டத்தாருக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டம் பிறந்தது. ஸீன் ஹோகனுடைய உறவினர்களில் சிலர் தங்களுடைய பால் பண்ணை ஒன்றை அவர்களுடைய உபயோகத்திற்காகக் கொடுத்தனர். அங்கே படுக்கை முதலிய வசதிகள் இருந்தன. தான்பிரீனுக்கு இதெல்லாம் பழக்கமாகிவிட்டது. முன்னால் தொண்டர் படையைச் சேர்ந்தபொழுது அவன் பலநாள் உண்ண உணவின்றிப் படுக்க இடமின்றிக் கஷ்டப்பட்டுப் பழக்கமடைந்திருந்தான்.

பால் பண்னை நாளடைவில் போலிஸாருடைய கவனத்திற்குட்பட்டது. அவர்கள் 'தகர வீடு' என்று அதை அடையாளம் சொல்லி அழைப்பது வழக்கம்.

ஒரு சமயம் ஸீன் டிரீஸியும் தான்பீரினும் டப்ளின் நகரிலிருந்து சில ஆயுதங்களைக் கொண்டுவருவதற்காக சைக்கிளில் சென்றனர். அவர்கள் கையில் பணமிருந்திருந்தால் ரயிலில் சென்றிருப்பார்கள். அத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கே செல்ல வேண்டியிருந்தது. காலை எட்டுமணிக்குப் புறப்பட்டு, அன்று மாலை ஆறு மணிக்கு டப்ளினைச் சேரவேண்டியிருந்தது. அவர்கள் நூற்றுப் பத்து மைல் பிரயாணம் செய்து குறிப்பிட்ட நேரத்தில் டப்ளினை அடைந்தனர். அங்கு பில் ஷனாஹன் என்னும் நண்பனுடைய வீட்டில் தங்கியிருந்தனர். அதுமுதல் பில் ஷனாஹன், அவர்களுக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்படாமல் உதவிசெய்துவந்தார்.

அவர்கள் டப்ளினிக்குச் சென்றது திங்கட்கிழமை. சனிக்கிழமைவரை அவர்களுக்கு அங்கு வேலையிருந்தது. சனிக்கிழமை காலை 8.10 மணிக்கு அதை விட்டுப் புறப்பட்டு அன்று மாலை திப்பெரரியில் கூடவிருந்த தொண்டர் படை அதிகாரிகளுடைய கூட்டத்திற்குக் குறித்த நேரத்தில் அவர்கள் வந்து சேர்ந்தனர். அவர்களுடைய கையில் ஆறு ரிவால்வர்களும், ஐந்நூறுதுப்பாக்கிக் குண்டுகளும், ஆறு வெடிகுண்டுகளும் இருந்தன. அவ்வளவையும் சுமந்து கொண்டு அவர்கள் மற்ற அங்கத்தினர்கள் வருவதற்கு முன்னதாகவே கூட்டத்திற்கும் வந்துவிட்டனர்!