உள்ளடக்கத்துக்குச் செல்

மருதநில மங்கை/அலர்மார்பு காணிய

விக்கிமூலம் இலிருந்து

6


அலர் மார்பு காணிய

னங்கொண்ட மனைவி, மனையின்கண் கிடந்து வருந்த, ஓர் இளைஞன் பரத்தையர் சேரி சென்று வாழ்ந்திருந்தான். ஆங்கு, இளமை நலம் குன்றாமல் வாழும் இளம் பரத்தையர்களாகத் தேடிப் பிடித்து, அவர்பால் பேரின்பம் உற்று, மேலும் அத்தகையர் பலரைப் பெற்று மகிழ வேண்டும் எனும் ஆசையால், அப் பரத்தையர் சேரியை விடுத்து வரும் மனமின்றி, ஆங்கேயே வாழ்ந்திருந்தான்.

அவன் ஒழுக்கக் கேட்டை உணர்ந்து, அதனால் அவனுக்கும், தனக்கும் உண்டாம் புகழ்க் கேட்டை எண்ணி வருந்தினாள் அவன் மனைவி. அவன் பரத்தைமை ஒழுக்கத்தை, அவனுக்கு வேண்டியவரிடமெல்லாம் கூறி வருந்தினாள். அவன் ஒழுக்கக் கேட்டிற்குத் துணை புரியும் அவன் பாகனையும், பாணனையும் பழித்தாள். ஒருநாள் அவளைக் கண்ட தேர்ப் பாகன், “அம்மையே! உம் கணவருக்கு வேண்டிய மகளிர், அவர் விரும்பும் மகளிர், தங்களை யல்லது பிறர் எவரும் இலர். அத்தகையார் எவரையும் நான் தேரேற்றிக் கொணர்ந்தறியேன். எனக்கு வாழ்வளிக்கும் இத் தேர்மீது ஆணை !” என்று கூறி அஞ்சி அகன்றான். பிறிதொரு நாள் பாணனைப் பார்த்தாள். அவனை அழைத்துத் தன் கணவனுக்குத் துணை போகும் அவன் கொடுமையைக் கண்டித்தாள். அவள் சினம் கண்டு நடுங்கிய அப் பாணன், “அம்மையே! அவர் பரத்தையர் உறவு கொண்டிருப்பதை நான் அறியேன். அவர் உறவு கொண்ட பரத்தை யார், அவர் செல்லும் இடம் எது என்பதும் எனக்குத் தெரியாது. தெரிந்தால் அதைத் தங்கள் பால் அறிவியாதிரேன். தங்களுக்கு மறைத்துக் கொடுமை புரியும் சிறுமைக் குணம் என்பால் இல்லை. இது உண்மை. என் யாழ்மீது ஆணை !” என்று கூறி அகன்றான். ஒரு நாள், கணவனின் ஆருயிர் நண்பன் அவனைத் தேடி அவன் மனைக்கு வந்தான். ஆங்கு அவனைக் கண்டிலன். வந்த அந் நண்பன்பால், அவள் கணவன் மேற்கொண்டிருக்கும் ஒழுக்கக் கேட்டைக் கூறி வருந்தினாள். ஆனால், வந்த நண்பனோ, தன் தோழனின் தவறுகளைப் பொருட்படுத்தாது, அவன்பால் காணலாம் அருங்குணங்கள் பலவற்றையும் எடுத்துக் கூறிப் பாராட்டி, அத்தகையான் தவறு செய்யான் என்று கூறி, அவள் வாயடைத்துச் சென்றான்.

தேர்ப் பாகனும், யாழ்ப் பாணனும், ஆருயிர் நண்பனும், கணவனுக்கு உற்றவராகவே பேசக் கண்டு, அவள் தன் துயர் தீர்ப்பாரை அறியாது கலங்கினாள். “அக்கலக்கம் தீர, ஒருநாள் இயற்கைக் காட்சிகளைக் கண்டு வரலாம் எனக் கருதிப் புறநகரை அடைந்தாள். அவள் சென்ற காலம் விடியற்காலம். இளஞாயிறு மெல்ல மெல்லத் தன் கதிர்களைப் பரப்பிக் கொண்டிருந்தான். ஒரு பொய்கையை அடைந்தாள். தாமரை அரும்புகள் மலரத் தொடங்கின. ஒரு வண்டு மலரும் அரும்புகளைத் தேடிச் சென்று அவற்றில் உள்ள தேனைக் குடித்து மகிழ்ந்தும், மேலும் அத் தேன் குடிக்கும் ஆசையால், அப் பொய்கையை விட்டு அகலாது, அப் பொய்கையிலேயே சுற்றிச் சுற்றி வந்தது. இந்தக் காட்சியை அவள் கண்கள் கண்டன. ஆனால், கணவனையே எண்ணிக் கொண்டிருக்கும் அவள் மனத்திற்கு அக் காட்சி புலப்பட்டிலது. அதற்கு மாறாக, அப் பொய்கை பரத்தையர் சேரியாகவும், மலரும் புதுமலர்கள் பருவம் பெற்ற இளம் பரத்தையராகவும், அம் மலர்களைச் சுற்றித் திரிந்து, அவற்றின் தேன் உண்டு மகிழும் வண்டு, அவ்விளம் பரத்தையர் பின் சென்று, அவர் மனம் மகிழுமாறு பலப் பல கூறி, அவரை அடைந்து, அவர்பால் நலம் நுகர்ந்து கிடக்கும் கணவனாகவும், தேன் குடித்த பின்னரும், அவ்வண்டு, பொய்கையை விட்டுப் போக மனம் இன்றி, ஆங்கேயே சுற்றிச் சுற்றி வருதல், இளம் பரத்தையர் சிலரோடு இன்பம் நுகர்ந்த தன் கணவன், மேலும் அம் மகளிர்பால் இன்பம் துகரும் ஆசையால், அச்சேரியை விட்டு வர மனமின்றிக் கிடப்பதாகவும் தோன்றவே, பெரிதும் வருந்தினாள்.

அந் நிலையில், அதுகாறும் இலைகளால் மறைப்புண்டு, அவள் கண்ணிற்குப் புலப்படாதிருந்த ஒரு பெரிய தாமரை மலர், தன்னை மறைத்திருந்த இலைகள் அகலவே, அவள் கண்ணிற்குப்பட்டது. ஞாயிற்றின் ஒளி அதன்மீது படரவே, படிந்திருந்த பனிநீர் சிறுசிறு துளிகளாகச் சிந்திச் சொட்ட, மெல்ல மெல்ல மலரும் அக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தாள். தன்னைப் பற்றிய நினைவு மீண்டும் தலை தூக்கிற்று. ‘என்னைப் பிரிந்து கொடுமை செய்யும் கணவன், என்பால் வந்து, என்பிழை பொறுத்து ஆட்கொள்க!’ என்று கூறி என் முன் தோன்றானா? அவனைக் கண்டு என் அகமும் முகமும் ஒருங்கே மலர, என் கண்களில் தேங்கிக் கிடக்கும் நீர் கீழே துளிர்த்து வீழ்ந்து போக, என் முகமும் இம்மலர்போல் மகிழ்ச்சியால் மலராதா?’ என்ற எண்ணம் எழ ஏங்கினாள்.

அவ்வெண்ணம் அலைக்க எழுந்து வீட்டிற்கு வந்தாள். அவள் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கணவனும் வந்து சேர்ந்தான். புணர்ச்சிக் காலத்தில், பரத்தையர், தம் பல்லாலும் நகத்தாலும் பண்ணிய புண்கள், அவன் மேனியில் அவ்வாறே தெரிந்தன. அவற்றை மறைக்க வேண்டும் எனும் மான வுணர்வும் அவனுக்கு இருப்பதாகத் தோன்றவில்லை. அம்மட்டோ! அவன் கழுத்தை நோக்கினாள். புணர்ச்சியின்போது, பரத்தையர் அவனைத் தம் கைகளால் வளைத்து அனைத்துக் கொள்ள, அந் நிலையில் அவர் கையில் அணிந்த தொடிகள் அழுந்தியதனால் ஏற்பட்ட தழும்புகள், அவன் கழுத்தில் எடுப்பாக, எல்லோருக்கும் எளிதில் தெரியுமாறு இருப்பதைக் கண்டாள். அவன் அவளை அணுகினான். அவன் மார்பு புதுமணம் வீசிற்று. அது, அவன் உறவு கொண்ட பரத்தையின் மணம் நாறும் கூந்தலில் கிடந்து உறங்கியதால் உண்டான மணம், என்பதை அறிந்தாள் ஆறாச் சினம் கொண்டாள்.

"அன்ப! ஒழுக்கத்தின் உறைவிடம் நீ, மனைவியை யன்றிப் பிறர் மனை புகுந்தறியாக் குணக் குன்று நீ என்றெல்லாம் உன்னைப் புகழ்ந்தனர் - உன் பாகனும், பாணனும், தோழனும். அவர்கள் இப்பொழுது எங்கே? அவர்கள் இந்நிலையில் ஈண்டு வரட்டும். வந்து உன்னைக் காணட்டும். பரத்தையர் பண்ணிய இப்புண்களை, அவர் தொடி அழுத்திச் செய்த இத் தழும்பைக் காணட்டும். அவள் கூந்தல் மணம் உன் மார்பில் வீசுவதை நுகரட்டும். பின்னர் கூறட்டும், நீ எத்துணைத் துரயோன் என்பதை!” என்று கூறிச் சினந்தாள்.

பின்னர்ச் சிறிதே அமைதியுற்று, “அன்ப! அன்பு குறையாது, நீ செய்யும் தலையளியால் உன்னைப் புணரும் பேறு பெற்ற அப் பரத்தையரைப் பழிப்பவர் ஈங்கு ஒருவரும் இல்லை. வெளி வந்த கதிர்கள், பாலேறி முற்றப் பெருமழையை எதிர்நோக்கி வாடும் பயிருக்கு மேகம், அது வேண்டும் பெருமழை தராது, சிறு தூரலை அளிப்பது போல், உன் அன்பை ஆரப் பெற்று உயிர்வாழ விரும்பும் என்பால், ஓர் ஆண்டிற்கு ஒரு நாள் என வந்து, சிறிது பொழுதே தங்கிச் சிறிது இன்பம் அளித்துச் செல்வதை யான் வேண்டேன். அதனால், நான் பெருந்துயர் கொள்கிறேன். ஆகவே, அன்ப! இதுகாரும் உன் வருகையை எதிர்நோக்கி, ‘இன்று வருவர், நாளை நில்லார்!’ என எண்ணி எண்ணி அமைதியுற்று வாழ்ந்தது போலவே, இனியும் வாழ வல்லேன். உன்னை இமைப் பொழுதும் பிரியாது பேரின்பம் நுகரும் அப்பரத்தையர் வருந்தாவாறே, அவர் மனைக்கே செல்க!” சினந்துகூறி அவ்விடம் விட்டு அப்பாற் சென்றாள்.

<poem> “விரிகதிர் மண்டிலம் வியல்விசும்பு ஊர்தரப் புரிதலை தளைஅவிழ்ந்த பூஅங்கண் புணர்ந்துஆடி வரிதுவண்டு வாய்சூழும் வளங்கெழு பொய்கையுள்,

துனிசிறந்து இழிதரும் கண்ணின்நீர் அறல்வார 5 இனிதுஅமர் காதலன் இறைஞ்சித் தன்அடி சேர்பு நனிவிரைந்து அளித்தலின் நகுபவள் முகம்போலப், பனிஒருதிறம் வாரப் பாசடைத் தாமரைத் தனிமலர் தளைவிடுஉல் தண்துறை நல்ஊர!

'ஒருநீ; பிறர்இல்லை அவன்பெண்டிர்' ஏனஉரைத்துத் தேரொடும் தேற்றிய பாகன்வந் தீயான்கொல்? 10 ஓர்இல்தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்தபுண்

பாரித்துப் புணர்த்தலின், பரத்தைமை காணிய, ‘மடுத்துஅவன் புகுவழிமறையேன்’ என்று யாழோடும் எடுத்துச் சூள்பலவுற்ற பாணன் வந்தீயான்கொல்? அடுத்துத் தன்பொய் உண்டார்ப் புணர்ந்தநின் ‘எருத்தின் கண் 15

எடுத்துக்கொள்வது போலும் தொடிவடுக் காணிய, தனந்தனை எனக்கேட்டுத், தவறுஒராது எமக்குநின் குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்கொல்? கணங்குழை நல்லவர் கதுப்பறல் அணைத்துஞ்சி

அணங்குபோல் கமழும்நின் அலர்மார்பு காணிய; 20 என்றுநின், தீராமுயக்கம் பெறுநர்ப் புலப்பவர் யார்? நீ வருநாள்போல் அமைகுவம்யாம்; புக்கீமோ?

மாரிக்கு அவாவுற்றுப் பீள்வாடும் நெல்லிற்கு ஆங்கு

ஆராத்துவலை அளித்தது போலும், நீ 25
ஓர் யாட்டு ஒருகால் வரவு.

பரத்தையிற் பிரிந்துவந்த தலைவனுக்கு, வாயில் மறுக்கும் தலைவி கூறியது இது.

2. புரிதலை இதழ்முறுக்குண்ட தலைகள்; பூஅம்கள் பூவில் உள்ள அழகிய தேன்; 4. துனிசிறந்து வெறுப்புற்று; 7. ஒரு திறம் – ஒருபால்; வார–ஒழுக; 8. தளைவிடும் – மலரும்; 9, ஓரு–ஆராய்ந்து பார்; 10. தேற்றிய தெளிவித்த; வந்தீயான்கொல்–வாரானோ? 12. பாரித்து பலரும் காணப் பரப்பி; 13. மடுத்து வலியச் சென்று; 15. எருத்தின்கண்–கழுத்தின்கண்; 17. தணந்தனை–பிரிந்து போயுள்ளாய்; ஓராது–எண்ணிப்பாராது; 19. கதுப்பு அறல் அறல்போன்ற கூந்தல்; 22. தீராமுயக்கம்–அன்பு நீங்காத புணர்ச்சி; புலப்பவர் – வெறுப்பவர்: 23. புக்கீமோ–சென்று வாழ்க; பீள்வாடும் கதிர்கள் வாடும்; 25. ஆராத்துவலை–நிறையாத மழை; 26. ஆட்டு–ஆண்டு.