உள்ளடக்கத்துக்குச் செல்

மருதநில மங்கை/அழிந்து உகு நெஞ்சத்தேம்

விக்கிமூலம் இலிருந்து

7


அழிந்துஉகு நெஞ்சத்தேம்

ணவன் பரத்தை வீடு சென்று வாழும் பழியுடையன் ஆனான். அவன் செயல் அறிவுடையோர் பாராட்டும் அறமாகாது என அவனுக்கு அறிவுரை கூறாது, அவன் பரத்தையர் ஒழுக்கத்திற்குத் துணை புரிந்தனர் அனைவரும். கணவனும் மனைவியும் கூடி மேற்கொள்ளும் வாழ்க்கையின் மாண்புகளைப் பாராட்டிப் பாட்டிசைக்க வேண்டிய பாணன், அக்கணவன் பரத்தையரோடு கூடி வாழும் வாழ்வில் பெறலாம் இன்பமே பேரின்பமாம் எனப் பாராட்டி அவனை மகிழ்வித்தான். ஊர் மக்களின் ஆடைகளை அழுக்குப் போக வெளுத்துத் தந்து, அம் மக்களை அறநெறியில் நிறுத்தக் கடமைப்பட்ட வண்ணாத்தி, தன் வெளுக்கும் தொழிலைக் கைவிட்டு, விரும்பும் பரத்தையரைத் தேடிக் கொண்டு வரும் தூதுத் தொழில் மேற்கொண்டாள். ஒழுக்க நெறி உணர்த்தும் விழுமிய கடப்பாட்டை உடைய அந்தணன், அப் புகழ் நெறி மறந்து, பழிநெறி மேற்கொண்டு, பரத்தையர் மனை சென்று வாழும் கணவனுக்கு அறவுரை கூறுவதை விடுத்து அதற்கு மாறாக அவனை அவன் ஒழுக்கக் கேடுணர்ந்து வெறுக்கும் அவன் மனைவியின் மனைக்குச் சென்று, அவள் சினம் அடங்குமாறு அவனைப் புகழ்ந்து வாழ்ந்தான்.

இவ்வாறு, அவனை இடித்துக் கூறித் திருத்துவார் அனைவரும், அதைச் செய்யாது, அவன் ஒழுக்கக் கேட்டிற்கே உறுதுணை புரிபவராக மாறவே, அவன் அவ்வொழுக்கக் கேட்டில் ஆழ்ந்து போனான். அதனால், அவன் மனைவி பெரிதும் கலங்கினாள். நீலப்பட்டால் பண்ணிய மெத்தென்ற படுக்கை அதன் ஒருபால், அன்னத் தூவியால் ஆகிய மெல்லிய அணை. அதன் மீது படுத்தும் அவள் கண்கள் உறங்க மறுத்தன. கணவன் கைவிட்டனனே, அவன் அன்பைப் பெற்று அகம் மகிழ்தற்கு இல்லையே என்ற ஏக்கம் அவள் மனத்தை மிகவும் வருத்திற்று. அதனால் அவள் முகம் மலர்ச்சி இழந்தது. கணவனைப் பற்றிய கவலை சிறிதே மறக்குமாறு, கூண்டில் வளரும் கிளிகளுக்கு உணவூட்டும் பணியைத் தானே மேற்கொண்டாள். வெள்ளிக் கிண்ணத்தில் பாலேந்திச் சென்று அவற்றிற்கு ஊட்டினாள். உண்ண மறுக்கும் அவற்றிற்கு, உள்ளம் மகிழும் உரைபல கூறி உண்பித்தாள். அவை, அவள் இன்னுரை கேட்டுப் பால்உண்ண, அதுகண்டு அவள் முகம் சிறிதே மலர்ந்தது. கணவன் முகம் கண்டு, அவன் இன்பம் பெற்று மலராத அவள் முகம், கிளிகளின் இன்முகம் கண்டு மலர்ந்தது. ஆனால், அம் மலர்ச்சியும் நெடிது நிற்கவில்லை. சிறிது பொழுதே நின்றது. அம் மலர்ச்சி. கணவன் நினைவு மீண்டும் எழவே, அம்மலர்ச்சி அகன்றது. கவலைகொண்டு கண்ணீர் சிந்தினாள். இவ்வாறு நாட் பலவும் வருந்திக் கிடந்தாள்.

ஒரு நாள் காலை, தன் மனத் துயர் மறையுமாறு, ஊர்ப்புறத்தே சென்று உலாவிக் கொண்டிருந்தாள். ஆங்கே ஒரு பொய்கை, அல்லியும் தாமரையும் பின்னிப் படர்ந்திருந்தன. கரையில், நீரில் படுமாறு தாழ்ந்த கிளைகளைக் கொண்ட மாமரங்கள் நெருங்க வளர்ந்திருந்தன. அக் காட்சிகளை அகம் குளிரக் கண்டு களித்திருந்தாள். அந்நிலையில், ஒரு பெரிய அலை வீச, அது மோதியதால் அற்று வீழ்ந்த ஒரு மாவடு, பொய்கையில் மலர்ந்து கிடந்த ஒர் அல்லி மலரில் பட்டு, அருகில் இருந்த தாமரை அரும்பைத் தாக்கிற்று. வண்டு வந்து மொய்க்க மலர வேண்டிய அத் தாமரை அரும்பு, அவ்வடுப்பட்டு மலர்ந்தது. அந்நிகழ்ச்சி, அவளுக்கு அவள் நிலையை உணர்த்தி விட்டது. கணவனைக் கண்டு மலர வேண்டிய தன் முகம், கிளிகள் உணவுண்ணக் கண்டு மலரும் தன் நிலையை நினைவூட்ட உணர்ந்து வருந்தி வீடடைந்தாள்.

ஆங்கு, அவன் வாராமுன்பே வந்து, அவளை எதிர் நோக்கி நிற்கும் கணவனைக் கண்டாள். அவன் தோற்றம் சிறிதே மாறுபட்டிருப்பதை உணர்ந்து ஊன்றி நோக்கினாள். தம்மை மறந்து போவதால், தமக்கு இன்பம் தந்திலன் எனும் நினைவால், அவன், தம்மை என்றும் மறவாதிருக்கப் பண்ணும் குறியாக, அவன் மேனியைத் தம் நகங்களால் கீறி வடுச் செய்தார் சில பரத்தையர். அதைக் கண்ட வேறு சில பரத்தையர், அவனைப் புணர்ந்த காலத்தில், முத்தம் கொண்டாராக, அவர் பற்கள் அழுந்திய வடு அவன் இதழ்களில் ஆறாமலே காட்சி அளித்தது. அவன் பரத்தையர் சிலரோடு கூடிச் சென்று புனலாடி மகிழ, அது பொறாத வேறு சில பரத்தையர், அவனைச் சினந்து, அவன்மீது வாரி இறைத்த சாதிலிங்கக் குழம்பு, அவன் மார்பில் அவ்வாறே ஒளிவிட்டுக் கிடக்க, அவள் முன்வந்து நின்றான். முன்னர் ஒரு பரத்தை அவனைப் புணர, அவள் அணிந்த மாலைகள் உராய்ந்து உராய்ந்து அவன் மேனியை மெத்தென மென்மையதாக்கப் பின்னர்க் கூடிய பரத்தையின் கூந்தலை, அவன் வாரி முடிக்க, அப்போது, அவள் கூந்தல் மலர் அவன்மீது உதிர்ந்து அழகு செய்ய, அவ் வழகிய தோற்றத்தோட அவள் முன் வந்து நின்றிருந்தான்.

கணவன் கோலத்தைக் காணக் காண, அவள் கலக்கம் அளவிறந்து பெருகிற்று. “ஐய! தகாவொழுக்கம் மேற்கொண்டு தவறு செய்தாய். அதைக் கண்டே நான் வருந்துகிறேன். உன் ஒழுக்கக் கேட்டினை உணர்த்தி, உனக்கு அறிவுரை கூற வேண்டியவர் அதைச் செய்திலர். மாறாக, அவ் வொழுக்கக் கேட்டிற்கு உற்ற துணையாயும் நிற்கின்றனர். அம்ட்டோ! உன் பரத்தையர் ஒழுக்கம் அறிந்தே வருந்துகிறாள் உன் மனைவி. அவள் முன், இத் தோற்றத்தோடு, சென்று நிற்பது பொருந்தாது. அது அவள் துயரை அதிகமாக்கும். ஆகவே, இக் கோலத்தோடு அவள்பால் செல்லற்க!’ என்று கூறியாவது தடுத்தனரா? இல்லையே! ‘அன்ப! இக் கோலத்தோட சென்று, உன் இதழ்ப் புண்ணையும், மார்பில் சாதிலிங்கக் குழம்பையும், மலர்ப் பொடியையும் உன் மனைவிக்கும் கொண்டு சென்று காட்டு!’ என்று உனக்குக் கூறி, உன்னை இங்கு அனுப்பினவரும் அவர்தாமோ? ஐய! பண்டு நீ அன்பு செய்ய, நானும் மகிழ்ந்து வாழ்ந்தேன். இன்று உன் ஒழுக்கக் கேடு உணர்ந்து உள்ளம் நோகிறேன். இவ்வாறு நான் வருந்த, நீ செய்த தவறுகளை எண்ணிப் பாராது, உன்னைக் கண்டவுடனே, அவற்றை யெல்லாம் மறந்து, உன்னை வரவேற்க வேண்டும் என்று விரும்புகின்றாய். அன்ப! அவ்வாறு மானம் இழந்து, மனத் துயர் மிக்கு, உன்னை வரவேற்று வாழ்வதினும், உன் பிரிவால் நான் அடையும் துயரம் பெரிதன்றே. அவ்வாறு உன்னை வரவேற்று வாழ்வதினும் அந் நோய் பொறுத்து வாழ்தல் இழிவுடைத்தும் அன்று. ஆகவே, அன்ப! உன்னைப் பிரிந்தும் உயிர் கொண்டு வாழும் வல்லமை உடையேன் நான். ஆகவே, என்னைக் கைவிட்டு, உன் உள்ளம் விரும்பும் அப் பரத்தையர்பால் சென்று, அகம் மகிழ்ந்து வாழ்க!” எனக் கூறி வாயில் அடைத்துச் சென்றாள். <poem> “இணைபட நிவந்த நீலமென் சேக்கையுள், துணைபுணர் அன்னத்தின் தூவிமெல் அணை அசைஇச். சேடுஇயல் வள்ளத்துப் பெய்தபால் சிலகாட்டி ஊடும் மென்சிறுகிளி உணர்ப்பவள் முகம்போலப்,

புதுநீர புதல்ஒற்றப் புணர்திரைப் பிதிர்மல்க 5 மதிநோக்கி அலர்வித்த ஆம்பல் வான்மலர் நண்ணிக் கடிகயத் தாமரைக் கமழ்முகை கரைமாவின் வடிதீண்ட வாய்விடுஉம் வயல்அணி நல்ஊர!

கண்ணிநீ கடிகொண்டார்க் கனைதொறும், யாம்அழப் பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ? 10 பேணான் என்று உடன்றவர் உகிர்செய்த வடுவினான்,

மேனாள் நின்தோள்சேர்ந்தார் நகைசேர்ந்த இதழினை,

நாடி நின்தூது ஆடித், துறைச்செல்லாள், ஊரவர்
ஆடைகொண்டு ஒலிக்கும் நின்புலைத்தி காட்டு என்றாளோ?
கூடியார் புனல் ஆடப் புணையாய மார்பினில் 15
ஊடியார் எறிதர ஒளிவிட்ட அரக்கினை

வெறிது நின்புகழ்களை வேண்டார்இல் எடுத்துஏத்தும்
அறிவுடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ?
களிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட உருவின் மேல்,
குறிபெற்றார் குரற்கூந்தல் கோடுளர்ந்த துகளினை, 20

என வாங்கு,
செறிவுற்றேம், எம்மைநீ செறிய, அறிவற்று
அழிந்து உகு நெஞ்சத்தேம்; அல்லல் உழப்பக்
கழிந்தவை உள்ளாது, கண்டவிடத்தே

அழிந்து நிற்பேணிக் கொளலின், இழிந்ததோ, 25
இந்நோய் உழத்தல் எமக்கு?”

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு வாயில் மறுக்கும் தலைவி கூறியது இது.

1. இணை–பலவகை; நிவந்த உயர்ந்த; சேக்கை–படுக்கை; 3. சேடுஇயல்–பெருமை மிக்க; வள்ளம் – கிண்ணம்; 6. நீர–நீரை உடைய; புதல்–புதர்; ஒற்ற–அலைக்க 6. வான்மலர்–வெண்ணிற மலர்; 8. வடி–மாம் பிஞ்சு; 9. கண்ணி –கருதி; கனைதொறும்–தழுவும் தொறும்; 11. உடன்றவர்–கோபித்த பரத்தையர்; 12. மேனாள்–பின்னாள்; நகை–பல் செய்த குறி; 14, ஒலிக்கும்–வெளுக்கும்; புலைத்தி–வண்ணாத்தி; 16, அரக்கு– சாதிலிங்கக் குழம்பு; 17. வெறிது–பயன் இல்லாமல்; 18. அவளை–அவளுக்கு; 19. களிபட்டார்–புணர்ந்து மகிழ்ந்தவர்; கயம்பட்ட–மென்மை அடைந்த; 20. கோடு உளர்தல்–மயிரைச் சிக்குப் போக வாரி முடித்தல்; 22. செறிவுற்றேம்–மனம் நிறைவுற்றேம்; 23. உகு–வருந்துகின்ற.