நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/புண்ணாக்குப் பையன்

விக்கிமூலம் இலிருந்து
7. புண்ணாக்குப் பையன்

தன் மருமகனைப் பார்க்கும் பொழுதெல்லாம், தங்கத்திற்குப் பெருமையாக இருக்கும். தன் மகளுக்கு இப்படியொரு ஆண்மகன், ஆளாலழகன் கிடைத்தானே என்றும்! மற்றவர்கள் பொறாமைப்படுவார்களே என்று அவள் மனம் அடிக்கடி துடிக்கும். பிறர் கண்பட்டுவிடுமே என்று திருஷ்டி சுற்றிப் போடுவது, தினமும் அவளுக்கு வேலையாகவே போய்விட்டது. திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. மன்மதன் ரதிபோல மகனும் மகளும் தெருவில் போகின்றார்கள் என்று மனதுக்குள்ளே சொல்லி மகிழ்ந்து போவாள் தங்கம். அழகும் குணமும் உள்ள ஒரு பையன். கிடைப்பது இந்தக் காலத்தில் குதிரைக் கொம்பாக அல்லவா இருக்கிறது!

தன் மகளை மருமகனோடு ஊருக்கு அனுப்புகின்ற நாளும் வந்தது. மகளுக்கு அறிவுரை கூறினாள். மருமகனையும் தன் மகளை நன்றாய் பார்த்துக் கொள்ளும்படி நெஞ்சுருகக் கேட்டுக் கொண்டாள். அவனும் சரியென்பதற்கு அடையாளமாகத் தலையாட்டி வைத்தான். தாய்க்கு உள்ள பெருமை போலவே மகளும் கொண்டிருந்ததால், அவளும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டி வைத்தாள். பயணம் இனிதே நடந்தது.

ஒரு வாரம் ஆயிற்று. ஊருக்குப் போய் தன் மகளைப் பார்க்க வேண்டும் என்று தங்கத்திற்குத் தீராத ஆவல். மாமியார் அல்லவா இப்போது? புதுக் குடித்தனம் எப்படி இருக்கிறது என்று பார்த்து, மகளுக்குப் புத்திமதி சொல்லி வரவேண்டும் என்ற நப்பாசையின் நமைச்சல். பயணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டு வெளியே வந்தாள் தங்கம். என்ன ஆச்சரியம்! அவள் மகள்தான் எதிரே நின்று கொண்டிருந்தாள். அழுத கண்கள். சற்று வீங்கிய தோற்றத்தில் அவள் முகம் தென்பட்டது.

என்ன சமாசாரம் என்று மகளை இறுக அணைத்தபடிக் கேட்டாள் தங்கம். என்ன சொல்வது? உன் மருமகன் பக்கத்திலே போக முடியவில்லை என்றாள் மகள். ‘ஏன்? அவர் என்ன பாம்பா? பேயா? அழகும் குணமும் உள்ள ஒருவரை அல்லவா உனக்காகத் தேர்ந்தெடுத்தேன்’ என்றாள் தங்கம்.

தாய் சொல்லி முடிப்பதற்குள்ளே, அழகும் குணமும் எதற்கு! அருகிலே போகவே முடியவில்லை, பேச வாயைத் திறந்தால் பத்து கிலோ மீட்டர் தூரம் வாய் நாறுகிறது. எப்படி அவர்கூட வாழமுடியும்! நான் இனிமேல் அவருடன் வாழப் போகமாட்டேன். போகவே மாட்டேன் என்று சத்யாகிரகம் செய்ய ஆரம்பித்தாள். தங்கத்தின் தலையில் இடிவிழுந்தது போலாயிற்று.

பல் விளக்காத மருமகனிடம் போய் பல்லை விளக்குங்கள் என்று எப்படி சொல்வது? அது அவமரியாதை ஆயிற்றே? இதைக் கூடவா போய் சொல்வார்கள்! ம்...மகளே நேரில் சொல்லியிருக்கலாம். இதை நான் போய் சொல்வது என்றால் நன்றாக இருக்காதே! ஆனால் ஏதாவது தந்திரம் செய்து ஒரு ஏற்பாடு செய்திட வேண்டும் என்று தங்கம் தனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டாள்.

மறுநாளே மருமகனும் மனைவியைத் தேடிக் கொண்டு வந்துவிட்டான். வாருங்கள் என்று வரவேற்றாள் தங்கம், மாமியார் என்று மிகவும் மரியாதையுடன் வணங்கிய மருமகனைப் பார்த்ததும். ‘இப்படி குணமுள்ள பையனுக்கு இதுபோல ஒரு கெட்டப் பழக்கமா’ என்று நினைத்தபடியே வணங்கி வரவேற்றாள். மகளோ, அவன் பக்கமே போகவில்லை.

‘நான் அவனோடு வாழவே மாட்டேன்! அழுக்கும் புண்ணாக்கை கட்டிக்கொண்டு இனி நான் சேர்ந்து வாழவே மாட்டேன்’ என்று அடம்பிடித்தாள் மகள். ஆனால், உங்களை எப்படியும் சேர்த்து வைக்கிறேன் பார் என்று சபதம் செய்தாள் தங்கம். எப்படி?

தங்கம் தன் மகளை அழைத்தாள், ‘இந்த ஒருமுறை மட்டும் நான் சொல்வதைக் கேளம்மா’ என்று தயவுடன் கேட்டுவைத்தாள். அன்பான அன்னையின் கெஞ்சலைப் பார்த்தவுடன், அலமுக்கு அழுகையே வந்துவிட்டது. ‘அப்படியே செய்கிறேன்’ என்பதுபோல தலையை அசைத்து விட்டாள். தங்கம் தன் திட்டத்தின்படி செயல்படத் தொடங்கினாள்.

பக்கத்து ஊரிலே மாரியம்மன் திருவிழா நடக்கிறது. அந்த ஊரில் அம்மனுக்கு அடுத்தபடியாக விசேஷமானது செங்கரும்புதான். அவ்வளவு இனிப்புள்ள செங்கரும்பை பக்கத்து கிராமத்து மக்கள் அனைவரும் கட்டுக்கட்டாக வாங்கிக் கொண்டு போவார்கள். நீங்களும் ஆளுக்கு இரண்டு கரும்பு வாங்கித் தின்றுவிட்டு, ‘எனக்கு இரண்டு வாங்கி வாருங்கள்’ என்று மேலும் பல இனிப்புக்களின் பெயரைச் சொல்லி, கைநிறைய காசுகளைக் கொடுத்து அனுப்பி வைத்தாள்.

மருமகன் கனகசுந்தரம் வந்தான், அவனிடமும் செங்கரும்பின் சுவையைப்பற்றி ஒரு கதாகாலட்சேபமே பண்ணி வைத்தாள் தங்கம். ‘உங்களுக்குப் பிடித்தது எனக்கும் பிடிக்கும். ‘உங்களுக்கு நிறைய வாங்கி வருகிறேன்’ என்று வணக்கம் செய்துவிட்டு, தன் மனைவியுடன் புறப்பட்டான் கனகசுந்தரம். தன் மனைவி தன்கூட திருவிழாவிற்கு வருகிறாள் என்பதிலே அவனுக்குத் தாங்க முடியாத சந்தோஷம்.

திருவிழாக் கூட்டத்தில் இருவரும் சுற்றிச் சுற்றி வந்தார்கள். அலமுவின் கண்கள் செங்கரும்பு வண்டியையே சுற்றிச் சுழன்று ஆலவட்டம் போட்டுக் கொண்டிருந்தன. கனகசுந்தரத்தின் கண்கள் மற்றொரு புறத்தை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருந்தன. அவன் மூக்கு இப்பொழுது துடிக்க ஆரம்பித்து விட்டது. ஆமாம்! எள் புண்ணாக்கை வெல்லம் போட்டு வேகவைக்கின்ற வாசனை, கனகசுந்தரத்தின் மூக்கினும் நுழைந்து, அவனைக் கரகரவென்று கையைப் பிடித்து இழுப்பது போல கவர்ச்சி செய்து கொண்டிருந்தது.

செங்கரும்பை எப்படி வாங்கலாம் என்று அலமு நினைத்துக் கொண்டிருக்கும்போதே நைசாக நழுவிச் சென்று, கனகசுந்தரம் புண்ணாக்கை கைநிறைய வாங்கிக் கொண்டு தின்னத் தொடங்கிவிட்டான். திரும்பிப் பார்த்த அலமுக்குத் திகீர் என்றது. ஓடோடி வந்து கணவன் முதுகைத் தொட்டு அழைத்து, முகத்தைப் பார்த்தாள். கணவன் கனகசுந்தரத்தின் வாய், வானவில்லின் வர்ண ஜாலம் காட்டிக்கொண்டிருந்தது. மஞ்சளாக இருந்த பற்களின் மீது கருப்பாக இருந்த புண்ணாக்குப்படிவம் படிந்து, புதிய தோற்றத்தை அளித்துக்கொண்டிருந்தது, பல் தெரியச் சிரித்த புருஷனை, பளார் என்று அறையலாமா என்றுகூட நினைத்தாள் அலமு.

கரும்பு தின்றால் பற்களின் கறை போகும், வாய் நாற்றம் கூட மறையும் என்று திட்டம் போட்டுத் தங்கம் அனுப்பப்போக, புண்ணாக்கு வாங்கித் தின்று, மேலும் அதை அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தான் அவன்.

‘ஊருக்குப் போகும் பொழுது உன் அம்மாவிற்கு செங்கரும்பு வாங்கிக்கொண்டு போக வேண்டும். மறந்து போய் விடாதே’ என்று மனைவியிடம் கூறியபடியே புண்ணாக்கை சுவைத்துக் கொண்டிருந்தான் அவன். அலமு விக்கித்துப்போய் நின்றாள்.

நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள். மாமியார் ஒன்று நினைக்க மருமகன் ஒன்றை நினைத்தான். மறுபடியும் கணவன் மனைவிக்குள் கலாட்டா தொடர்ந்தது. திருவிழாவிலே அடிதடிசண்டை ஏற்பட, ஆளுக்கொருவராக பிரிந்து போனார்கள். அப்புறம் ஒன்று சேரவே இல்லை.

தங்கம் திட்டம் போட்டு, மனதுக்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டு செலவு செய்ததற்குப் பதிலாக, நேரே சொல்லியிருந்தால், நேரமும் மீதியாயிருக்கும். நினைத்ததும் நடந்திருக்கும்.

இப்படித்தான், தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கப் போய், உதை வாங்கி வருந்துபவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.