நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/இருப்பதும் சிரிப்பதும்!

விக்கிமூலம் இலிருந்து
9. இருப்பதும் சிரிப்பதும்

நண்பர்கள் இருவர், ஒருவன் சிதம்பரம். மற்றொருவன் திகம்பரம். நண்பர்கள் என்றாலும், நடைமுறை வாழ்க்கையில் இருவரும் இருதுருவங்கள். மாறுபட்ட கோணங்கள்.

தன்னைப் பற்றியே சதா காலமும் பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பவன். அதாவது தலைக்கனத்துடன் பிறரிடம் பேசுவதில் நிகரற்றவன் சிதம்பரம். எந்த விஷயமாக இருந்தாலும். அதில் தன்னை இணைத்துக் கொண்டு, ‘நானாக இருந்தால் இப்படித்தான் செய்வேன், செய்திருப்பேன்’ என்று சொந்தக் கற்பனையுடன் சொகுசாக பெருமையடித்துக் கொள்வதில் வல்லவன்.

பிறருக்கு அது பிடிக்குமோ பிடிக்காதோ என்பதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படுவதில்லை. அதீத கற்பனையில் எப்பொழுதும் ஆழ்ந்து போய் விடுவதுண்டு, ஆராய்ச்சி செய்கிறேன் என்று எந்தப் பொருளிலும் குற்றம் குறைகளைப் கண்டுபிடித்து, குதர்க்கவாதம் பண்ணுவதில்தான் அவனுக்கு சந்தோஷம். காலநேரம் பற்றி அவன் கவலைப்படுவதில்லை.

ஆனால் திகம்பரம் அப்படி அல்ல! ‘எதையும் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், எப்படி இருக்கிறதோ சூழ்நிலை’ அதற்கேற்ப நடந்து கொள்ளவேண்டும். என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவன்! இன்றைக்கு வாழ்வோம். நாளைக்கு வழி பிறக்காமலா போகும்! என்ற நெறிமுறையுடன் நடந்து செல்பவன்.

இருவரும் ஒருநாள் சுற்றுலா செல்கின்றார்கள். இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்க வேண்டும் என்பது சிதம்பரத்திற்கு ஆசை. அவர்கள் பட்டண சவகாசமே அறியாத பட்டிக்காடு ஒன்றுக்குப் போக வேண்டும் என்று முடிவு கட்டிக் கொண்டு புறப்படுகின்றனர். அந்த குக்கிராமத்தை அடைந்து, அதனைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் நல்ல உச்சி வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது. வெளியில் அனலாக வெயில் காய்வது போலவே, வயிற்றின் உள்ளேயும் பசி தனலாகக் காய்ந்து கொண்டிருந்தது.

எங்கேயாவது எதையாவது வாங்கிச் சாப்பிட்டால் தான், மேலும் நடக்க முடியும் என்ற நினைவில் உடல் தள்ளாடும் போது, எதிரே மாந்தோப்பு ஒன்று தெரிகிறது. சுற்றிலும், வேலியிட்டுப் பத்திரமாக பாதுகாக்கப்படுகின்ற தோப்பு அது. வாசலில் ஒரு கிழவன் நிற்கிறான். தோப்புக்குரிய காவலாளி அவன்.

இருவரின் முகத்தைப் பார்த்து பசித்து வருகின்றார்கள் என்று புரிந்து கொள்கிறான் கிழவன். ‘எங்களுக்கு உதவுங்கள்’ என்று இருவரின் வேண்டுகோளுக்கு அவனும் ஒத்துக் கொள்கிறான், ‘உங்கள் பசியாற நான் உதவுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை’ என்று அவன் உதவிட சம்மதிக்கிறான். பசியாயிற்றே! எந்த நிபந்தனைக்கும் தயார் என்கின்றனர் இருவரும்.

தோப்புக்குள்ளே இல்லாத பழவகைகள் இல்லை என்றே சொல்லிவிடலாம். உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. அதனால், உங்களுக்குப் பத்து நிமிடம் அவகாசம் தருகிறேன், அதற்குள் உங்களால் எவ்வளவு சாப்பிட முடியுமோ, அந்த அளவுக்குச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். எதையும் வெளியிலே எடுத்துக் கொண்டு வரமுடியாது. முடிந்தவரை சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ‘பத்து நிமிடம்தான் அவகாசம்’ என்றான். சரியென்று உள்ளே நுழைகின்றனர் நண்பர்கள்.

திகம்பரம் ஒரு புறம் சென்றான். சிதம்பரம் மறுபுறம் சென்றான். ஒருவர் தின்பது மற்றொருவருக்குத் தெரியக் கூடாது என்பதனாலா? தாயும் பிள்ளையும் ஒன்றாக இருந்தாலும், வாயும் வயிறும் வேறு என்பார்களே, அது போல, இவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள் போலும்.

‘பத்து நிமிடம் ஆகிவிட்டது. வெளியே வாருங்கள்’ என்று கூச்சல் போட்டான் காவலாளி. அவன் போட்ட சத்தத்திற்குப் பயந்து, இருவரும் விரைந்து வெளியே வந்தனர், திகம்பரம் தெம்பாக நடந்து வந்தான். அவனது முகத்திலே திருப்தியில் திளைத்த மனத்தின் சாயல் ஒளிர்ந்தது. சிதம்பரமோ, உள்ளே போவதற்கு முன் இருந்த களைப்பைவிட, மேலும் அசதியடைந்தவனாகத் தள்ளாடி வெளியே வந்தான். காவலாளி சிதம்பரத்தைப் பார்த்து. ‘பிழைக்கத் தெரியாத பிள்ளை’ என்று தலையிலடித்துக் கொண்டான். பின்னர் திகம்பரத்தை முதுகிலே தட்டிக் கொடுத்து ‘போய் வா’ என்று வாழ்த்தியும் அனுப்பினான். தள்ளாடியபடியே நடந்தான் சிதம்பரம்.

பத்து நிமிடத்திற்குள்ளே பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்றவுடன். உள்ளே போன திகம்பரம், எதிரே தென்பட்டவைகளில் தனக்கு விருப்பமான பழங்களைப் பறித்தான். சாப்பிட்டான். பசியாறினான். மகிழ்ந்தான். அங்கு அசைந்தாடிய மலர்களைப் பார்த்து ரசித்தான். இயற்கையின் இனிய காட்சியில் திளைத்தான் இறைவனுக்கு நன்றி கூறினான். உபசரித்த கிழவன் இருந்த திசை நோக்கி, வணக்கம் செலுத்தினான், அதற்குள் நேரம் முடிந்தது. வெளியே வந்து விட்டான்.

ஆனால் சிதம்பரமோ, பழங்களை எல்லாம் குறை என்று ஒதுக்கினான். இன்னும் கொஞ்ச தூரம் போனால், பழுத்த பழங்கள், சுவையான பழங்கள் கிடைக்கும் என்று. அவசரப்பட்டான். நிராகரித்தான். எதையும் ஏற்றுக்கொள்ள, எடுத்துக்கொள்ள அவனது குறை காணும் மனம் இடந்தரவில்லை. நல்லது எது என்று முடிவெடுப்பதற்குள்ளாக நேரம் கழிந்து போனது. காவாலாளி குரல் கேட்டு வெளியே வந்தான். ஐயோ பாவம் சிதம்பரம்!

இப்படித்தான் சிதம்பரங்களாக மக்கள் இருக்கின்றார்கள். அந்த அழகானத் தோட்டம் என்பது இயற்கை அழகு நிறைந்த இனிய கனிகள் மிகுந்த நாம் வாழும் உலகமாகும். பத்து நிமிடம் என்று நிர்ணயிக்கப்பட்ட நேரம்தான் நமது வாழ்க்கைக் காலமாகும். காவலாளி தான் நம்மைக் காக்கும் இறைவனாகும்.

நமக்கு வாழ அனுமதிக்கப்பட்டக் காலவரையறைக்குள் திகம்பரம் போல, சந்தோஷமாக வாழ்ந்து செல்ல வேண்டும் என்பதுதான் இறைவன் கட்டளை. எதையும் வெறுப்புடன் பார்த்து, எரிச்சலுடன் வாழ்பவர்கள் பொய் நோய்க்கு ஆளாகி, துன்பப் புதைச் சேற்றில் நிமிடத்துக்கு நிமிடம் அமிழ்ந்து கொண்டே இருக்கின்றார்கள். இருப்பது நமக்குத் தெரியும். இனிமேல் இருப்போமா என்பது யாருக்குத் தெரியும்?

அதற்குள், சிரித்து வாழ்வது, செழிப்புடன் வாழ்வது, துன்பத்தைத் தவிர்த்து வாழ்வது அறிவுடையோர்க்கு அழகல்லவா! சிதம்பரமாக வாழ்ந்தால் எப்படி? என்ற கேள்விக்கு நீங்களே விடை கண்டு பிடித்து விட்டால், வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது விளங்கும்.

‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று நம் வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை ஏற்றுக் கொண்ட பிறகு, நல்லதை மகிழ்ச்சியுடன் அனுபவித்து, துன்ப நிகழ்ச்சி என்றால் அதிலிருந்து விடுபடும் வழியை நிதானத்துடன் எண்ணித் துணிந்து, செயல்படுகின்ற செம்மாந்த இதயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறரைப் பழிப்பதனாலேயே ஒருவர் பெரிய ஆளாக மாறிட முடியாது. தன்னைப் பற்றி உயர்த்திப் பேசுவதனாலேயே ஒருவர் அறிஞன் ஆகிவிட முடியாது. பிறரது செயலில் குற்றம் குறை கண்டுபிடிப்பதனாலேயே ஒருவர் சிறந்த செயல் வீரர் ஆகிவிட முடியாது.

எதையும் ஏற்றுக் கொள்கின்ற மனம், எதையும் நல்ல முறையில் பயன்படுத்தி, தனக்கு சாதகமாக்கிக் கொள்கின்ற தங்கக் குணம், உள்ளதைக் கொண்டு திருப்தியடையும் பண்பு, நல்ல வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்று நாளும் நினைக்கின்ற மனிதர்களே நிம்மதியாக வாழ்கின்றனர்.

நிம்மதியான வாழ்வைவிட இந்த உலகில் வேறு நிலையான செல்வம் இல்லை. அவர்களே பெரிய செல்வந்தர்கள் ஆவார்கள். நீங்களும் செல்வந்தர் ஆகலாம். முயலுங்கள். நிச்சயம் வரலாம். பெறலாம்!

நோயில்லாமல் வாழ்வதுதான் வாழ்வின் லட்சியம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். நம்மையறியாமல் நாம் பொய் நோய்களில் வீழ்ந்து விட்டு, மேலேறி வரமுடியாமல் திணறியிருக்கிறோம். என்பதையும் அறிந்திருக்கிறோம்.

என்றாலும், நம்மால் பொய் நோய்களைத் தவிர்க்க முடியவில்லை தடுக்க முடிவதில்லை. தைரியமாக இருக்க, வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாலும் கூட, தக்க சமயத்தில் தைரியம் கைவிட்டு விடுவதை நாம் கண்கூடாகவே காண்கிறோம்.

அறிந்ததை நம்மால் ஏன் செய்ய முடியவில்லை? செயல்படுத்த முடியவில்லை? பொய் நோய்களை புறமுதுகிட்டு ஓடும்படி ஏன் செய்ய முடியவில்லை?

அதற்குச் சரியான விளக்கம் வேண்டுமென்றால் நாம் தான் உண்மையான காரணமாகும். ஓட்டுபவனைப் பார்த்த பிறகே குதிரை ஒழுங்காக ஓடும் என்பார்கள். இல்லையேல் குதிரையின் சண்டித்தனம் கொடுமையாக இருக்கும் என்று கூறுவார்கள் அனுபவசாலிகள்.

வண்டிக்காரனின் கயிறு இழுக்கும் வலிமையைக் கண்டுதான் வண்டிமாடும் ஒழுங்காக இழுக்கும் என்பார்கள். வண்டிக்காரன் சரியில்லை என்றால், வழியிலே படுத்துக் கொண்டு, வழக்காடும் அந்த மாடுகளைப் போல, ஆற்றல் இல்லாதவனின் பக்கத்தில் பொய் நோய்கள் வாலாட்டும்.

சோம்பிக் கிடப்பவன்; தேம்பித் திரிபவன், உழைக்க மறுப்பவன், உழைப்பை வெறுப்பவன், உட்கார்ந்து கதை பேசிக் காலம் கழிப்பவன், பிறர் பிழைப்பில் வாழ்பவன், பேச்சை நம்பிப் பிழைப்பவன், எல்லாம் பொய் நோயின் குடியிருப்புக்களாக வாழ்பவர்கள் ஆவார்கள்.

சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற்சாலை என்பார்கள். ஓய்ந்திருக்காமல், ஓய்வில்லாமல் உழைப்பவர் இடமே அண்மையான அமைதியும், உயர்ந்த மகிழ்ச்சியும் அடையும் என்பார்கள். இதுதான் உண்மையான வழியாகும். தீமையற்ற திறமை காட்டும் வழியுமாகும்.

இத்தகைய வலிமையான திடமான மனது எங்கே கிடைக்கும்? பொய் நோய்களை விரட்டி விரட்டி அடிக்கின்ற திடமான இதயத்தை எப்படிப் பெறுவது?

இதற்கும் ஏதாவது குறுக்குவழி இருக்காதா என்று கிறுக்குத் தனமாகப் பேசி அலைந்து நலிபவர்கள் ஏராளம். ‘மருந்துகளைத் தேடுபவர்கள், ‘மயக்கங்களை நாடுபவர்கள்’ ‘மாதுகளுக்காக ஓடுபவர்கள்’ ‘மந்திரம் நாடி வாடுபவர்கள்’ ஏராளம் - ஏராளம்.

திடமான இதயமும் வலிமையான மனமும் எங்கே கிடைக்கும்? வலிமையான உடலில்தான் கிடைக்கும். இருக்கும் இடத்தை விட்டு விட்டு, இல்லாத இடங்களில் போய்த்தேடினால் எப்படி கிடைக்கும்?

வளமான வயலில்தான் தரமான பயிர்கள் விளைகின்றன. உரமான மரங்களில்தான் உயர்வான பழங்கள் கொழிக்கின்றன. அதுபோலவே, வலிவான உடலில்தான் வளமான மனம் இருக்கும்.

நல்ல உடல் மனம் என்பதுதானே பழமொழி! அதை ஏன் நாம் அடிக்கடி மறந்து போகிறோம்?

பொய் நோய்கள் வரும். அடிக்கடி வரும், தள்ளத் தள்ள மீண்டும் வரும். விரட்ட, விரட்ட திரும்பி வந்து மிரட்டும். என்றாலும், பொய் நோய்களைக் கண்டு பயந்து, பதறி வாழ்க்கையை சுமையாக்கிக் கொள்ளக்கூடாது என்பதைத்தான் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொய் நோய்களின் பலத்தை ஒழிக்க வேண்டுமானால், உன்னத நலத்தைக் காத்துக் கொண்டால்தான் முடியும். பதமறிந்து நோய்களை நம் வசப்படுத்தி, தலை தூக்காமல் செய்து கொள்கின்ற சாதுர்ய பண்புகளைப் பெற வளமான உடலால்தான் முடியும்.

வளமான உடல் என்பதோ நோய் அணுகாத உடல். நோயால் நலியாத உடல். நோய்கள் மேயாத உடல். நோகச் செய்யும் நோய்களை வந்த பிறகு போக்க முயல்வதைவிட, வராமல் தடுப்பதுதான் புத்திசாலித்தனமாகும்.

வராமல் எப்படி தடுப்பது? இனி அடுத்த பகுதியில் இதனைக் காண்போம்.