உள்ளடக்கத்துக்குச் செல்

ஓங்குக உலகம்/003-026

விக்கிமூலம் இலிருந்து

3. ‘வஞ்சமின்றி வாழ்வோம்’


லகம் தோன்றிய நாள்தொட்டு எத்தனையோ ஆன்றோரும் சான்றோரும் தோன்றி வையத்து மக்கள் வாழ்வை மலரச் செய்யும் வழிமுறைகளை ஆய்ந்து அறநெறிகளைத் தந்துள்ளனர். சமயம் வளர்த்த பெரியோர்களும் உலகெங்கணும் வாழும் மெய்ச்சமயங்கள் மக்கள் வாழ்வோடு பிணைந்து சிறக்கும் வகையில் அறவாழ்வை வற்புறுத்தியுள்ளனர். தவறுகளையெல்லாம் செய்துவிட்டு ஆண்டவனுக்குப் பிரார்த்தனையோ காணிக்கையோ செலுத்திவிட்டால் அத் தவறுகள் நீங்கி விடும் என்று நினைப்பவர் நாட்டில் உள்ளனர். ஆனால் அந்த எண்ணம் முற்றிலும் ஏற்புடைத்தாகாது. அறியாது தவறிழைத்து, தவறு என்று அறிந்தபின் வருந்தி இறைவனை வழிபட்டால் அதற்கு ஒரு வேளை கழுவாய் உண்டு என்பதை எல்லாச் சமயங்களும் ஏற்றுக் கொள்ளுகின்றன. உண்மையில் தவறு அறிந்து அழுது அழுது கழுவாய்த் தேடிக்கொண்ட அடியவர் எல்லாச் சமயங்களிலும் உள்ளனர். ஆனால் தவறுக்குப் பிராயச்சித்தமோ அல்லது கழுவாயோ காணிக்கை யாக்கினால் போதும் என எண்ணுவதை எந்தச் சமயமும் ஏற்பதில்லை. அதனாலேதான் எல்லாச் சமயத் தலைவர்களும் சமயம் வாழ்வோடு பிணைந்த ஒன்று என்றும் அவ் வாழ்வினை வாழ்வாங்கு வாழ்ந்தால் இறையருள் கிட்டுமென்றும் அந்த வாழ்வாங்கு வாழும் அறநெறி விட்டு நீங்கின் இறைவன் அருள் செய்யமாட்டான் என்றும் சுட்டிக் காட்டுகின்றனர்.

வாழ்வின் அடிப்படை அனைத்துக்குமே உள்ளத் தூய்மை இன்றியமையாதது என்ற உண்மையினை யாவரும் அறிவர். ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என வள்ளலார் வரம் வேண்டுகிறார். இந்த உள்ளொன்று புறமொன்றாக பேசும்-காட்டும் வாழ்க்கையினையே வஞ்ச வாழ்க்கை என்பர். வஞ்சம் என்ற சொல்லுக்குக் கபடம், பொய், கொடுமை, வஞ்சினம், பழிக்குப்பழி, சிறுமை போன்ற பல பொருள்கள் உள்ளன. வஞ்சகம் என்ற சொல்லுக்கும் ஏமாற்றல், தந்திரம், தூர்த்தச் செயல் போன்ற பல பொருள்கள் உள்ளன. அனைத்தும் மனிதனை மிருகமாக்கும் உணர்வினைக் குறிக்கும் சொற்களேயாம். எனவே இவ் வஞ்சம் மனிதனைச் சமுதாய உணர்வு அற்ற ஒரு விலங்காக்குகிறது என்பது தேற்றம்.

ஆண்டவனைப் பாடும் அடியவர்கள் தூய உள்ளம் பெற்றவர்களாக வேண்டும். உடன் வாழும் மனித சமுதாயத்துக்கு ஊறு இழைத்தோ அல்லது வஞ்சம் புரிந்தோ ஆண்டவனை வழிபட முடியாது. ‘பார்க்குமிட மெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற இன்றவன்’ மக்கள் வடிவிலும் உள்ளான் என உணர்ந்து அவர்களுக்கு ஊறு செய்யா வகையில் வாழ்ந்தால்தான் உண்மைச் சமய வாழ்வு ஆகும். சமயச் சின்னங்கள் அணிவதையும் சமயப் பாடல்களை ஓதுவதையும் யாரும் தடுக்கவில்ல்ை. ஆனால் அவற்றுடன்-ஏன்-அவற்றுக்கு மேலாக உள்ளத்தில் கரவடம் அல்லது வஞ்சம் இல்லாதிருக்க வேண்டும் என்பதைச் சமயத்தலைவர்கள் வற்புறுத்துகிறார்கள்.

அபபரடிகள் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்-முன்னவர். இறைவனைக் கண்டுகண்டு கசிந்து பாடியவர்; அதே வேளையில் தம் உழவாரப் படைகொண்டு சமூகப் பணி செய்தவர் தவறு செய்த இராவணன் தன் செருக்கடங்கி அழுது அழுது பாடி அருள்பெற்ற நிலையைப் பதிகம் தொறும் காட்டியவர். அவர் இறைவன் அருள்புரியும் நிலையை எண்ணிப்பார்க்கிறார். வஞ்சமின்றி வணங்குவார்க்கு அவன் வந்து அருள்புரியும் தன்மையை உணர்கிறார். எனவே அவர் மக்களை அழைத்து ‘வஞ்சமின்றி வணங்குமின் வைகலும்’ என்று அறவுரை கூறுகின்றார். ‘நாள்தோறும் இறைவனை வழிபடும் நல்லவர்களே! உங்கள் உள்ளத்தில் வஞ்சகத்துக்கு இடம் கொடாதீர்கள்’ என்கிறார். ஆம்! உள்ளத்தில் வஞ்சம் வைத்து அவன் அஞ்செழுத்தினை ஓதினால் அவன் வரமாட்டான்; மாறாக வெகுதூரம் விலகிச் செல்வான் என்கிறார். ‘வஞ்சனயால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானை’ என்பது அவர் வாக்கு. எனவே மெய்ச் சமயநெறி சமுதாயத்தொடு பொருந்திய ஒன்று என்பதும் உள்ளத்தில் வஞ்சமின்றி வாழ்வது என்பதும் தேற்றம். வையம் வாழ-சமுதாயம் தழைக்க நினைக்கும் நாம் அனைவரும் அப்பர் காட்டிய வழிநின்று வஞ்சமற்று வாழ்வோமானால் இம்மையில் நாம் நலமுற்று மறுமையின் பேரின்பம் பெறுவதோடு உலகச் சமுதாயமும் இன்னலின்றி இன்பமுற்று இனிது வாழும் என உணர்ந்து ‘வஞ்சமின்றி வாழ்வோமாக! இதோ அப்பர்தம் வாய்மொழி:-

வஞ்சமின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொலின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சி நின்று உள்குளிர் வார்க்கெலாம்
அஞ்சலென்றிடும் ஆனைக்கா அண்ணலே.

—1985

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓங்குக_உலகம்/003-026&oldid=1135749" இலிருந்து மீள்விக்கப்பட்டது