ஓங்குக உலகம்/012-026
12. வாழ்க பச்சையப்பர்!
இமயமுதல் குமரிவரை எண்ணற்ற அறக்கட்டளைகளை அமைத்து, நாடும் மொழியும் சமயமும் சமூகமும் வாழ வழி வகுத்த தலையாய பெரியார் பச்சையப்பர். அவர் பெயரால் இயங்கும் கல்வி நிலையங்கள் தம் 125ஆம் ஆண்டு விழாவை இதோ இவ்வாரம் கொண்டாடுகின்றன. இத் திங்கள் (மார்ச்சு) 22, 23, 24 ஆகிய மூன்று நாட்களிலும் இவ்விழா நடைபெறுகிறது. இம் மார்ச்சு மாத இருபத்திரண்டாம் நாள் பச்சையப்பர் வாழ்விலும்-ஏன் நம் வாழ்விலும் தான்-பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பெறவேண்டிய நல்ல நாள். நாற்பது ஆண்டுகளே உலகில் வாழ்ந்த வள்ளல் பச்சையப்பர் அக் குறைந்த வாழ்நாளிலேயே நிறையப் பொருள் ஈட்டி, பெற்ற பொருளையெல்லாம் நாட்டு மக்கள் வாட்டம் தீர்க்கும் அறப்பணிக்கே செலவிட்டார்கள். அவ்வாறு செலவிடும் நெறிக்கு உறுதி அளிக்கும் அவர்தம் உயிராவணத்தை (வில்) 1794ஆம் ஆண்டு மார்ச்சு 22ஆம் நாள் எழுதி முடித்தார். எனவே, இந்நாள், அறநிலைய ஆட்சிப் பொறுப்பினராகிய எங்களுக்கு மட்டுமன்றி-அவர்தம் கல்வி நிலையங்களின் வழியே ஆண்டுதோறும் எண்ணற்ற பயன்பெறு மாணவர்களுக்கு மட்டுமன்றி-அறக்கட்டளைகளால் நலம் பெறுவாருக்கு மட்டுமன்றி-நாட்டுக்கே நல்ல நாளன்றோ? ஆம்! இத்தகைய அறநெறியை-சன்மார்க்க சத்திய நெறியைச் சமுதாயத்துக்கு விளக்கி, பெற்றதை மற்றவர்களுக்கு அளித்து, இறந்தும் என்றும் இறவாத புகழ் பெற்ற பச்சையப்பர் விருப்பாவணம் எழுதி வைத்த இந்த நாள் நல்ல நாளேயாம்!
காஞ்சிபுரத்தைச் சார்ந்த எளிய குடும்பத்தில் தந்தை விசுவநாத முதலியாருக்கும் தாய் பூச்சியம்மாளுக்கும் 1754இல் இவர் பிறந்தார். பச்சையப்பர் கருவில் வளரும் காலத்திலேயே தந்தையாரை இழந்தமையின், அவர் தாயார் ஏழ்மைக்கிடையில் காஞ்சியை விட்டுப் பெரியபாளையம் சேர, அங்கேயே நம் வள்ளல் பிறந்தார். பின் அங்கும் நிலைத்து வாழ முடியாவகையில் சென்னையை நாடினார். சென்னையில் அக்காலத்தில் சிறப்புற வாழ்ந்த இருமொழி அறிந்த (துவிபாஷி) தரகராய் வாழ்ந்த பவுனி நாராயணப் பிள்ளை அவர்களே பச்சையப்பர்தம் குடும்பத்தை ஏற்றுப் பாதுகாத்ததோடு, பிற்காலத்தில் அவர் வாழ்வையும் வளமுறச் செய்தவராவர்.
இளமையிலேயே பவுனி நாராயணப் பிள்ளையுடன் பழகி, தாமும் ‘துவிபாஷி’யாகி, ஆங்கிலக் கல்வி கணக்கறிவு இவற்றுடன் சிறந்து, பச்சையப்பர் பல பண்டங்களை வாங்கியும் விற்றும் வாணிபத் துறையில் தேர்ச்சியுற்றார்; பதினாறு வயதிலேயே நல்ல வருவாய் பெற்றார். எனினும் எதிர்பாராத விதமாக யாரிடமும் சொல்லாமல் பச்சையப்பர் ஆங்கிலேயர் படையில் சேர்ந்துவிட்டார். ஆனாலும் அவரை ஆதரித்த பவுனி நாராயணப் பிள்ளை தம் செல்வாக்கைப் பயன்படுத்தி, அவரை மீட்டு, தாம் ஆற்றிவந்த ‘துவிபாஷி’ப் பணியிலேயே, ‘நிகோலஸ்’ என்ற ஆங்கில வணிகரிடம் அமர்த்தினார். அந்த வாழ்க்கைத் திருப்பமே வையத்தில் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களை வாழ வைக்கும் நல்ல திருப்பமாக அமைந்துவிட்டது.
பச்சையப்பருடன் பிறந்த தமக்கையர் இருவர்; அவர்கள் மணம் புரிந்து வாழ்ந்து வந்தனர். பச்சையப்பர் தம் தமக்கை மகளான அய்யாரு அம்மையை மணந்து - வாழ்ந்தார். எனினும் மகப்பேறு இன்மையின் பின்னர், திருமறைக்காட்டினைச் சேர்ந்த பழநியம்மாளை இரண்டாம் தாரமாக மணந்தார். இரண்டாம் மனைவிக்குப் பெண் குழந்தை பிறந்தது. எனினும் இவருடைய அந்த இரண்டாம் மனைவியும் மகளும் இறந்துவிட்டனர். முதல் மனைவியார் இவர் விருப்ப ஆவணம் செயல்பட ஆவன செய்தார்கள்.
பச்சையப்பருக்கு இளமையிலேயே அற உணர்வும் சமய ஈடுபாட்டுணர்வும் மிகுதியாக இருந்தன. இளமையிலேயே-இருபதாவது வயதிலேயே-தம் சொந்த ஊராகிய காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள-ஏகாம்பரநாதருக்குப் பல திருப்பணிகள் செய்தார்-திருமண மண்டபம் கட்டினார்-கும்பாபிஷேகம் செய்ய உதவினார். இவையன்றிப் பலவகைப் பொதுப்பணிகளையும் செய்து சமுதாயத்தைக் கைதூக்கிவிட்டார்.
அக் காலத்திய நிலையில் ஆங்கிலேயருக்கும் நவாபுகளுக்கும் இடையில் பல இடங்களில் நிலவரி முதலியவற்றைத் திரட்டித் தருவதிலும் பிற பணிகளிலும் ஈடுபட்ட பச்சையப்பர், தம் நிலையினைச் செல்வத்தாலும் செல்வாக்காலும் உயர்த்திக்கொண்டார். தமிழ் நாட்டுத் தென்பகுதியில் இவர்தம் உதவியை வேண்டினர் ஆங்கிலேயர். அங்கேயும் சென்று ஒல்லும் வகையில் உதவி அவர்களுடன் நின்றார்; பின் தஞ்சை அரசருடன் கலந்து பல பணிகளை மேற்கொண்டார். மொத்தத்தில் தமிழ்நாடு முழுதும் பச்சையப்பரின் பணிபுரி திறனும் செயல் நலனும் சிறந்தோங்க, அவர்தம் வாழ்வும் வளமும் செல்வமும் செல்வாக்கும் பெருகின.
இத்தகைய பெரும் பணிகளுக்கிடையிலேதான் பச்சையப்பர் சமயப் பணியினையும் தளராது செய்து வந்தார். சத்திரங்கள் கட்டினார்-கோயில்களைப் புதுப்பித்தார்-அன்ன சாலைகள் அமைத்தார். தில்லைப் பெருமானுக்குப் பல திருப்பணிகள் புரிந்தார். இன்று பச்சையப்பர் அறப்பணி நடவாத பெருங்கோயில்கள் நாட்டில் இல்லை எனலாம்.
இவர் சென்னையில் கோமளீஸ்வரன் பேட்டையில் கூவம் ஆற்றங்கரையில் ஒரு வீடுகட்டிக் கொண்டு தங்கினார். இவர் இருந்த தெருவிற்குக் ‘காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் தெரு’ என்றே பெயரிட்டார்கள். ஆயினும் இன்று அப் பெயர்ப் பலகைகூட அங்கே இல்லாத நிலையில் உள்ளது. சென்னை நகராட்சியாளர் அவர் பெயர் பொறித்த பலகையினைத் தெருவில் இரு புறங்களிலும் இடுவார்கள் என நம்புகிறேன்.
கும்பகோணத்தில் திருப்பணி செய்து கொண்டிருந்த வேளையில் அவருக்கு நலிவு உண்டாயிற்று-நீங்காத நலிவாயிற்று. எனவே 1794 மார்ச்சு 22இல் தம் உயிராவணத்தை எழுதி முடித்தார். அதைப் பவுணி நாராயணப் பிள்ளைக்கு அனுப்பி, தம் இறுதிநாள் நெருங்கிவிட்டதையும் குறிப்பிட்டார். அப்பர் கயிலைக் காட்சி கண்ட-தென் கயிலாயம் என்று போற்றப்பெறுகின்ற திருவையாற்றில் தம் உயிர்பிரிதல் வேண்டுமென்று விரும்பிய பச்சையப்பர், தம் விருப்பப்படியே அங்கே சென்று தங்கி, 1794 மார்ச்சு 31இல் இறையடியுற்றார்.
பின் இவ்வள்ளலது உயிராவணப்படி பல அறங்கள் நடைபெற ஏற்பாடு செய்யவேண்டிய வழிவகைகளைப் பவுனி நாராயணப் பிள்ளை மேற்கொண்டார். குடும்பம் காரணமாகப் பல சிக்கல்கள் தோன்றினபோதிலும், இறுதியில் நீதிமன்றம் நல்ல ஆட்சிக்குழுவினை அமைத்து, என்றும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்தது. இவ்வாறு தொடங்கப்பெற்ற அவ்வறக் கட்டளைகளின் அடிப்படையில் அப்போது ‘அட்வொகேட் ஜெனரலாக’ இருந்த ‘ஜார்ஜ் நார்ட்டன்’ என்னும் அறிஞரின் முயற்சியால் 1842ல் கல்விக்கூடம் தொடங்கப்பெற்றது. அந்தத் தொடக்க நாளிலிருந்து நாம் இப்போது 125 ஆண்டுகளை கடந்துவிட்டோம். ஆம்! இந்த நீண்ட காலத்தில் நாம் எவ்.ெவவ்வாறு வளர்ந்தோம்-உயர்ந்தோம்-பணியாற்றினோம்-பயனளித்தோம் என்பதை இனிக் காண்போமாக!“சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும்
இனி எதிர் காலத்தின் சிறப்பும்
இன்றெழுந் தருளப் பெற்ற பேறிதனால்
என்றைக்கும் திருவருள் உடையேம்”
என்று தெய்வச் சேக்கிழார் பாடிய பாடல் இங்கே என் நினைவிற்கு வருகின்றது. கடந்த 125 ஆண்டுகளில் பச்சையப்பர் ஆற்றிய கல்விப்பணி அளவிடற்கரியது.
‘எஸ்பிளனேடில்’ சிறிய அளவில் தொடங்கிய பள்ளி உயர்ந்தது. அப்படியே அதன் கட்டடம் வானோங்கி இன்றளவும் சிறந்து நிற்கின்றது. நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அக்கட்டடம் தன் கலையும் எழிலும் குன்றாது பசுமையோடு விளங்குகின்றது. சென்னைக்கு வருவார் யாரும் அதன் தோற்றத்தைக் கண்டு வியவாதிரார். அங்கே தொடங்கிய பச்சையப்பர் கல்லூரி, காலந்தோறும் வளர்ந்து நல்ல நிலையுற்று, ஆயிரக்கணக்கான் மக்களை ஏற்று, பல்வேறு துறைப்பாடங்களையும்கொண்டு ஓங்கிய காலத்து, இடத்தின் எல்லையில் குறுக்கம் கண்டது. எனவே, சேத்துப்பட்டில் உள்ள இன்றைய கட்டடங்கள் கால் நூற்றாண்டுக்கு முன் எழுந்தன-வளர்ந்தன. இன்று தனியார் கல்லூரிகளில் மிக அதிகமான பாடங்களைப் பட்ட வகுப்பு நிலையிலும் உயர்நிலையிலும் கொண்டுள்ளது பச்சையப்பன் கல்லூரியே ஆகும். இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமன்றி, பரந்த பாரத நாட்டில் மட்டுமன்றி-விரிந்த உலகில் பல்வேறு இடங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றிச் சிறந்து வாழ்ந்தார்-வாழ்கின்றனர். கல்லூரிப் பேராசிரியர் பலர்-கல்லூரி முதல்வர் பலர்-வணிகர் பலர்-உயர்நீதிமன்ற, இந்தியப் பெருநீதிமன்ற நடுவர் பலர்-அரசியல் மேல் அலுவலர் பலர்-அந்நிய நாடுகளில் இந்தியத் தூதுவர் அலுவலகங்களில் பலர்-ஏன்?-அமைச்சர்கள் பலர்-பாராளும்ன்ற உறுப்பினர் பலர்-சட்டமன்ற உறுப்பினர் பலர்-இன்றைய தமிழக முதலமைச்சர் திரு. சி.என். அண்ணாதுரை அவர்களும் ஆந்திர மாநில முதலமைச்சர் திரு. பிரம்மானந்த ரெட்டியவர்களும் பச்சையப்பர் தந்த செல்வங்களே! இன்று தில்லிப் பாராளுமன்றத்தில் ஒரே கல்லூரியில் பயின்ற மாணவர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்றால், அக்கல்லூரி பச்சையப்பர் கல்லூரியே யாகும். இவ்வாறே எல்லாத்துறைகளிலும் எங்கள் பழைய மாணவ மணிகள் ஒளிவிட்டுத் திகழ்வதைக் காண நாங்கள் உள மகிழ்கின்றோம்.
வளர்ந்துவரும் அறிவியல் துறையிலும் வாழ்வளிக்கும் மொழித் துறையிலும் எங்கள் கல்லூரி முதலிடம் பெறுகிறது. வேதியியல் விலங்கியல், மரவியல், இயற்பியல் போன்ற துறைகளில் பட்டப்படிப்பும் உயர் பட்டப் படிப்பும் (எம்.எசி) கொண்டுள்ளதோடு, வேதியியல் துறையில் ஆய்வுப் படிப்புக்கும் வகை செய்துள்ளோம். அப்படியே தாய்மொழியாம் தமிழ் மொழியில் எல்லா வகுப்புக்களிலும் சிறப்பு நிலை கண்டு முதுகலை வகுப்பும் (எம்.ஏ.) ஆய்வுப் படிப்பும் ஆக்கம் பெறச் செய்துள்ளோம் இத்துறைகளில் பயின்று பயன்பெற்றோர் பலர். இங்கே மொழி வேறுபாடு இன்றி அறுவகை மொழிகளை மாணவருக்கு அளிக்கிறோம். ‘பச்சையப்பர் கல்லூரிப் படிக்கட்டும் பைந்தமிழ் பாடும்’ என்பது நாடறிந்த நல்ல மொழி. ஆம். இங்கே தமிழைச் சிறப்பாகப் பயின்ற மாணவர் இன்று உலகில்-இந்திய நாட்டின் பல பாகங்களில் சிறப்புப் பணியாற்றுகின்றனர். காசியில்-தில்லியில்-சண்டிகரில்-கல்கத்தாவில்-பம்பாயில் -கோலாலம் பூரில்-ஏன்?-அமெரிக்க நாட்டில் சில இடங்களில் பச்சையப்பரின் பைந்தமிழ்க்கொடி பறக்கின்றது. இவ்வாறே பிற துறைகளில் பயின்ற மாணவர் நாடெங்கும் நலம் பெற-திறம் உற-செம்மை விளங்கச் செயலாற்றுகின்றனர். தமிழ்நாட்டு வங்கிகள் பலவற்றிலும் பல நெறியிலும் எம் மாணவர் செயலாற்றுகின்றனர். சுருங்கச் சொல்லின் எம் கல்லூரி மாணவர் ‘வாழ்வாங்கு வாழக்’ கற்றுச் சிறக்கின்றனர் எனலாம்.
பச்சையப்பர்தம் செம்மை திறம்பர் அற ஆட்சியைக் கண்ட அறவோர் பலர் தம் செல்வத்தால் அறம் வளர்க்கக் கருதிய ஞான்று, அச்செல்வங்களைப் பச்சையப்பர் அறநிலையக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். அதனால் அறநிலையப் பொருள் வருவாய் மிகுந்ததோடு, அறமாற்றும் நிலையும் உயர்ந்தது. அந்த அடிப்படையிலேயே சென்னையில் உள்ள கல்லூரி மட்டுமன்றி இங்கேயே வேறு பல நிறுவனங்களும் பிறவிடங்களில் கல்லூரிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் தோன்றி வளரலாயின. செங்கல்வராய நாயக்கர் தொழிற்பயிற்சி நிலையம் ஆண்டுதோறும் அத் தொழில் துறையில் வல்ல மாணவர்களை நாட்டுக்கு நல்குகிறது. சென்னை, காஞ்சி, சிதம்பரம் ஆகிய இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும், நடுநிலைப்பள்ளிகளும் நன்கு செயல்படுகின்றன. காஞ்சியில் பச்சையப்பர் கல்லூரி தொடங்கப்பெற்று பல ஆண்டுகளாகச் சிறக்க நடைபெறுகின்றது. இவ்வாண்டு காஞ்சியிலும் கடலூரிலும் மகளிர் கல்லூரி தொடங்கியுள்ளோம். சென்னையிலும் அண்மையில் அறமாற்றிய கந்தசாமி நாயுடு பேரால் மற்றொரு கல்லூரி தொடங்கியுள்ளோம். இன்னும் சென்னையில் மகளிர் கல்லூரி ஒன்றும் பயிற்றாளர் கல்லூரி (ட்ரெயினிங்) ஒன்றும் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் கல்விப்பணி ஒல்லும் வகையிலெல்லாம் ஓங்க உதவிய-உதவும் எல்லா அன்பர்களுக்கும் எங்கள் வணக்கமும் நன்றியும் உரியனவாகும்:
இக் கல்லூரிகளிலும் பிற கல்விக்கூடங்களிலும் பயிலும் மாணவர்களுள் பலர் ஏழை மக்களே. ஏழையாகப் பிறந்து, ஏழ்மையை உணர்ந்த பச்சையப்பர்தம் அறநிலையம் அந்த ஏழை மக்களை ஏற்று எல்லாத் துறைகளிலும் அவர்கள் முன்னேறப் பாடுபடுகின்றது. பச்சையப்பர் ஏழை மாணவன் ஒருவனை அணைந்து நிற்கும் காட்சியே-பச்சையப்பர் கல்லூரியின் முகப்பில் உள்ள காட்சியே-எங்கள் வாழ்வின் இலட்சியக் காட்சி. இந்தக் குறிக்கோள் அடிப்படையில் எங்கள் அறக்கோயில் அமைகின்றது.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
என்பது வள்ளுவர் வாய்மொழி. எனவே கல்விப் பயன் கடவுள் உணர்வு பெறுதலேயாம். பச்சையப்பர் அறநிலையத்தின் பெரும்பணி அத் துறையிலேயே நடைபெறுகின்றது. குமரி தொட்டு இமயம் வரையில் உள்ள பெருங் கோயில்களிலெல்லாம் பச்சையப்பர் அறக்கட்டளை உண்டு. சிதம்பரத்தில் ஆண்டுக்கு இருமுறை நடக்கும் தேர்த்திருவிழா பச்சையப்பரைச் சார்ந்ததே. ஆக, கல்வி, சமயம் இரண்டின் அடிப்படையிலே சமுதாய வாழ்வைச் செம்மை நெறிக்கு ஈர்த்துச் செல்லும் பெருவழிகாட்டியாக எங்கள் அறநிலையம் இயங்குகிறது.
தமிழ்நாட்டிலே பல நிறுவனங்களை அமைத்து, ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக அவற்றைப் போற்றிப் பாதுகாத்து, மக்கள் வாழ்வுக் கண்ணாகிய கல்வியையும் அதன்வழி வளத்தையும் அளித்து வரும் எங்கள் அறநிலையம் இன்னும் பலப்பல ஆக்கப்பணி செய்ய அவாவுகின்றது. நம் பச்சையப்பர் பெயராலேயே பல்கலைக்கழகமே அமைய வேண்டாவோ? வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, கல்லூரிகளில் புதுப்புது பாடங்களுக்கு உரிய இடமும் கட்டடங்களும் அமைத்தல் வேண்டும். புதிதாகத் தோன்றியுள்ள கல்லூரிகளின் வளர்ச்சிக்குப் பெருந்தொகை செலவிட வேண்டும். பிற அறப்பணிகள் செம்மையாக வளர வேண்டும். இப் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவோர் அனைவரும் நின்ற நலம் பெறக்கூடிய வகையில் நாங்கள் செயலாற்றுகிறோம். இன்னும் அவர்தம் வாழ்வும் வளமும் ஓங்க பல செயல்கள் ஆற்றப்பெறல் வேண்டும். பச்சையப்பர் பெயரால் உள்ள அறச்சாலைகள்-அட்டிற்சாலைகள்-ஆதுலர் சாலைகள்-பிற செயலகங்கள் அனைத்தும் வளரின் நாடு நாடாகும் என்பதை நல்லவர் அறிந்துள்ளார்கள். இந்த 125 ஆண்டுகளாகத் திறம்படச் செயலாற்றிய அறக்குழுவினர் அயராது மேலும் மேலும் செயல்பட முன் நிற்கின்றனர். எனவே உலகெங்கணும் உய்ர்ந்து செம்மைப் பணியாற்றும் எம் பச்சையப்பர் பயந்த நல்லவர் அனைவரும் இவ்வறப்பணி வளர ஆவனகாண வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
நாங்கள் நடத்தும் கல்விச்சாலைகள் ‘இந்து மக்களுக்கே’ என்று வரையறுத்த சட்டத்தால் அறுதியிட்ட போதிலும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ்ப் பண்பாட்டு அடிப்படையிலும் ‘தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறை’ என்ற சமய ஒருமைப் பாட்டு உணர்விலும் இன்று எல்லாச் சம்ய மாணவர்களையும் சேர்த்து அணைத்துச் செல்லுகிறோம் என்பதைப் பெருமையோடு கூறிக்கொள்ளுகிறேன். எனவே இந்த அறநிலையமும் கடவுளைப் போன்று சாதி சமயம் கடந்ததாய்-நாட்டு எல்லை கடந்ததாய்-நிற வேறுபாடு கடந்ததாய்-ஏன்?-காலங் கடந்ததாய் வாழும் ஒரு பெரும் அறநிலையமாகும்! இத்தகைய நல்ல அறநிலையம், தன் கடந்த 125 ஆண்டு வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் அதே வேளையில், எதிரில் நிற்கும் எண்ணற்ற ஆண்டுகளையும் எண்ணி எண்ணி நாடு வளமுற-மொழி வளம் பெற-மக்கள் வாழ் வாழ்வாகத்தக்க ஆக்கப்பணி புரியத் திட்டமிடுகின்றது. அதன் தொடக்கமே இம் மாதம் 22, 23, 24ல் நடைபெறும் விழா! இந்த நல்ல பணி நாடொறும் தழைக்கவும் ஓங்கவும் உயரவும் மக்கள் அனைவரும் சேரவந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அமைகின்றேன். வணக்கம்.1967-கல்லூரி 125வது ஆண்டு மலர்