வாழ்க்கை நலம்/044-061
இந்த உலகத்தில் இயற்கை, ஒருவருக்கொருவர் உதவி என்ற நியதியில்தான் இயங்குகின்றது. வாழ்க்கையின் நோக்கமே உதவி செய்வதுதான். ஒருவருடைய வாழ்க்கை முழுமை அடைவதும் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுதுதான். ஏன் உயிரியக்கத்தின் நோக்கம் உதவி செய்தல்தான்!
இங்ஙணம் உதவி செய்யும் முறையில் வாழ்வியல் அமையாது போனால் வாழ்க்கைத் துன்பச் சுமையாக தோன்றும். "ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதற்காகவே, நாம் வாழ்கின்றோம். வேறு எதற்காகவும் இல்லை" என்றார் எலியட்.
ஒருவர் நம்மை நாடி வந்து கேட்டபிறகு செய்வது சிறந்த உதவியாகாது. நாமாகவே தேடிச் சென்று செய்யும் உதவியே உதவி. அபிதாவூது என்ற பெரியார், "நீ பிறருக்காகச் செலவு செய்தால் நான் உனக்காக செய்து கொண்டிருப்பேன்" என்று அல்லா அருளியுள்ளதாகக் கூறியுள்ளார்.
உதவி என்ற அச்சில் உலகியல் இயங்குகிறது. அது மட்டுமின்றிப் பிறருக்குத் தன்முனைப்பின்றி, விளம்பரமின்றி உதவி செய்வதில் இதயம் அன்பால் நிறைகிறது; அடக்கம் வந்தடைகிறது; பலர், சுற்றமாகச் சூழ்வர்.
இன்றைய உலகில் சமய நோன்புகளை நோற்பது பெருமையாகப் பேசப்படுகிறது. அதாவது உண்ணாமல் நோற்பது. பலர் உண்ணாமல் நோற்கின்றனர். அதனால் பெயரும் புகழும் அடைகின்றனர். வரலாற்று நிகழ்வில் உண்ணா நோன்பை அறிமுகப்படுத்தியவர் அப்பரடிகள் ஆவார். பின் அரசியல் போராட்டங்களுக்கு அண்ணல் காந்தியடிகள் உண்ணா நோன்பைக் கருவியாகக் கையாண்டார்.
இன்று மிகச் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாக உண்ணா நோன்பு வந்துவிட்டது. பசியைத் தாங்கிக் கொள்வது, உண்ணாது நோற்பது ஆற்றல் மிக்க தவம் என்று சமய நூல்கள் கூறும். ஆனால் திருவள்ளுவர் பசியைப் பொறுத்துக் கொள்பவரின் ஆற்றலைவிட மற்றவர் பசியை உணவளித்து அகற்றுவார் ஆற்றல் பெரிதென்று கூறுகின்றார்.
தமக்குற்ற பசியைத் தாங்கி, பொறுத்துக்கொண்டு தவம் செய்வது ஒரு வகையில் ஆற்றல்தான். ஆயினும், மற்றவர் பசியை மாற்றுவார் ஆற்றலை நிகர்த்த ஆற்றல் அல்ல அது என்று கருதுகிறார் திருவள்ளுவர். ஏன்? தமக்குற்ற பசியைத் தாங்கிக் கொள்வது, தொடக்க காலத்தில் இடர்ப்பாடாக இருப்பினும் பழகிய நிலையில் பசி வருத்தாது; துன்பம் செய்யாது.
மற்றவர்களுடைய பசியை மாற்ற வேண்டுமாயின் உழைப்பு தேவை. மெய்வருந்த உழைத்துப் பொருளீட்டினால்தான் மற்றவர்க்கு உதவ இயலும். உழைத்துப் பொருளீட்டிய நிலையில், பொருளிடத்துப் பற்று வருதல் இயற்கை. உழைத்து ஈட்டிய பொருளிடத்துப் பற்று மிகாது, மற்றவர் பசி நீக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுதல் அருமையிலும் அருமையாகும். தன் பசி தாங்குவதில் தாங்கும் திறன் மட்டுமே காணப்படுகிறது. அதுவும், பழகிப் போனால் திறனாகாது.
மற்றவர் பசியை மாற்றும் பணியில் உதவி செய்யும் வகையில் கைவருந்தி உழைக்கும் உழைப்பு அமைகிறது; பொருட் பற்றுடன் பொருளீட்டி, பின் பொருட்பற்று விட்டு உதவி செய்யும் குலநல ஆக்க மாற்றங்களாக அமைகின்றது. தன் பசி தாங்கலில் துறவியல் பண்பு முகிழ்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.
வறுமையாளர் கூடப் பசியை தாங்கிக் கொள்ளவே செய்கின்றனர், வேறு வழியில்லாமல்! மற்றவர் பசியை மாற்றுதற்குரிய உதவியைச் செய்கிறவர்கள் பொருட்பற்றினின்று நீங்கியே உதவி செய்கின்றனர்.
பசியைப் பொறுத்தலினும்-மற்றவர் பசியை மாற்றும் ஆற்றலே ஆற்றல்! இத்தகைய ஆற்றலைப் பெருக்கி வளரும் நாடு என்றும் வளரும்; வாழும்.
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.(குறள்-225)