வேங்கடம் முதல் குமரி வரை 1/014-027
14. ஊறல் அமர்ந்த உமாபதி
காவிரி நதியிலே மைசூரை அடுத்த கண்ணம்பாடியில் கட்டப் பட்டுள்ள அணை கிருஷ்ணராஜ சாகரம். இந்த அணைக்கட்டை விட, அங்கு இன்றைய இஞ்சினியர்கள் சமைத்திருக்கும் பிருந்தாவனம் என்னும் வண்ணப் பூங்கா அழகானது. இரவு நேரத்தில் அங்குள்ள தண்ணீரை வான் நோக்கி எழும் வண்ணத் தாரைகளாக்கிப் பல வர்ண ஜாலங்களையே செய்திருக்கிறார்கள். இதுதான் பூலோக சுவர்க்கமோ என்னும்படி அத்தனை இன்பம் காண்பவர்களுக்கு.
கண்ணனும் ராதையும் பளிங்குத் திருவுருவில் நிற்கிறார்கள் ஒரு புறத்தே. வழிந்தோடும் தண்ணீருக்குள் எல்லாம் வண்ண வண்ண விளக்குகள். விசிறி எழுந்து பரவும் குழாய் நீரில் எல்லாம் வானவில்லின் அதிசயங்கள். இத்தனை கோலாகலத்தையும் தூக்கி அடிக்கும் காட்சி ஒன்று உண்டு அங்கே. அதுதான் காவிரித் தாயின் திருவுருவம். அணைக்கட்டிலிருந்து பிருந்தாவனத்துக்கு இறங்கும் வழியிலே அமைத்திருக்கிறார்கள்.
காகங் கவிழ்த்த கரகத்தை ஏந்தியவளாய் நிற்கிறாள் அவள், ஒரு மாடத்திலே. அந்தக் கரகத்திலிருந்து அளவான தண்ணீர் இடைவிடாமல் வழிந்து கொண்டே இருக்கிறது. காவிரி அன்னை ஏந்தி நிற்கும் குடம் வற்றாத பாத்திரமாக இருப்பது அழகாக இருப்பதோடு, அரிய கற்பனையாகவும் இருக்கிறது. இவ்வளவு பெரிய அணைக்கட்டில் தண்ணீரைத் தேக்கியதில் வியப்பில்லை. ஆனால், அந்த அணைக்கட்டின் சுவரிலே ஒரு மாடம் அமைத்து, அதில் காவிரித்தாயை நிறுத்தி, அவள் கையில் ஒரு கரகத்தையும் கொடுத்து, அந்தக் கரகத்திலிருந்து அளவான தண்ணீர் இடைவிடாது விழ வகை செய்த கலைஞனின் கற்பனையை எண்ணி எண்ணி வியக்கிறோம்.
இப்படி இருபதாம் நூற்றாண்டிலே, கலைஞன் ஒரு காவிரித் தாயை உருவாக்கினால், இதற்கு எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே ஒரு கங்காதரரை உருவாக்கி இருக்கிறான் ஒரு சிற்பி, தக்கோலத்திலே.
பாலாற்றின் கரையிலோ எங்கு பார்த்தாலும் நல்ல நீரூற்றுகள், பால் ஆறு இன்று வற்றிக் கிடப்பதைப் பார்த்து ஒரு நண்பர் சொன்னார்: 'இது பாழ் ஆறு, தெரியாமல் பால் ஆறு என்று சொல்லிவிட்டார்கள்!' என்று. ஆனால் உண்மையில் இது நல்ல பால் ஆறுதான். பசுவின் மடியிலே உள்ள பாலைக் கன்றுக்குட்டி முட்டிக் குடித்தால்தானே பால் சுரக்கும். அது போல் தன் மடியையும் கரையையும் அகழ்ந்து தோண்டுவாருக்கெல்லாம் வற்றாது பால் போல் தண்ணீர் சொரியும் இயல்புடையது பாலாறு.
இந்தப் பாலாற்றின் இருபுறமும் பத்துப் பதினைந்து மைல் வரை மணற்பாங்கான இடத்திலெல்லாம், பதினைந்து இருபது அடி ஆழத்தில் நல்ல தண்ணீர் கிடைக்கும், கிணறுகள் தோண்டினால். காஞ்சிக்கு வடக்கே ஏழெட்டு மைல் தூரத்தில் உள்ள புள்வேளுரிலே (பள்ளுர் என்று இன்று அழைக்கப்படுகிறது) ஏழு கிணறு என்ற பெயரோடு ஒரு கிணறு. ஔவை புள்வேளுர் பூதனிட்ட வரகரசிச் சோற்றை உண்ட மகிழ்ச்சியில் பாடியபோது, இதில் நீர் சுரந்தது என்பது கதை. இக் கிணற்றில் தண்ணீர் என்றும் நிறைந்திருப்பது இன்றும் கண்கூடு.
இந்த ஊருக்கு வடகிழக்கே ஆறு ஏழு மைல் துரத்தில் இருப்பது தக்கோலம். இந்த ஊரிலே ஒர் அதிசயம். ஊருக்கு வடகீழ் மூலையில் ஒரு சிறிய கோயில். அங்குக் கோயில் கொண்டிருப்பவர் கங்காதரர். அந்தக் கங்காதரரைச் சுற்றிப் பிராகாரம் எல்லாம் ஒரே தண்ணீர். இந்தத் தண்ணீர் வருவது மேல் பிராகாரத்தில் உள்ள ஒரு சிறு நந்தியின் வாய் வழியாக இந்த வட்டாரத்தின் நீர்நிலை (Water Table) உயர்ந்திருப்பது கண்டு, எந்த இடத்தில் நந்தியை அமைத்தால் தண்ணீர் இடைவிடாது அதன் வாயினின்றும் வழியும் என்று கண்டிருக்கிறான், கலைஞன்.
நந்தியை அமைத்ததோடு, கோயிலையும் அதற்குப் பிராகாரங்களையும் அமைத்து, அந்தக் கோயிலுக்குள் கங்காதரரையுமே பிரதிஷ்டை செய்திருக்கிறான். தண்ணீர் வழியும் இடம் கண்டு நந்தியை, நந்தி தீர்த்தத்தை யெல்லாம் அமைத்தவன், கிருஷ்ண ராஜ சாகரத்தில் காவிரித் தாயை வழிந்தோடும் கரகம் ஏந்தியவளாய் நிறுத்திய கலைஞனுக்கே ஒரு வழிகாட்டி,
இப்படி எப்போதும் நீர் ஊறிக்கொண்டே, வழிந்து கொண்டே இருக்கும் தலத்தை அன்று திரு ஊறல் என்றே அழைத்திருக்கிறார்கள் மக்கள். அந்த ஊறல் அமர்ந்த உமாபதியையே ஞானசம்பந்தர் பாடி மகிழ்ந்திருக்கிறார். இந்த ஊரே இன்று தக்கோலம் என்று வழங்குகிறது. இந்தத் தக்கோலத்துக்கு இன்று சென்றாலும் கங்காதரரைக் கண்டு வணங்கலாம். நந்தியையும் பார்த்து மகிழலாம்.
ஆனால் நந்திவாயிலிருந்து தண்ணீர் விழுவதைத்தான் காண முடியாது. அந்த வட்டாரத்திலே உள்ள நன்செய் புன்செய் நிலங்களில் எல்லாம் எண்ணிறந்த பம்பு செட்டுகள் அமைத்து, மின்சாரத்தின் உதவியால், கிடைக்கும் தண்ணீரை யெல்லாம் இறைத்துப் பயிர் செய்கிறார்கள் மக்கள். ஆதலால் வற்றாத தண்ணீரும் வற்றியது அங்கே கங்காதரரும் அபிஷேகமில்லாமலேயே நின்றுகொண்டிருக்கிறார் அங்கே. ஆம்! வயிற்றுச் சாமிக்குப் போய் மிச்சந்தானே மற்றச் சாமிகளுக்கு. இங்கோ வயிற்றுச் சாமிக்கே போதிய அளவு கிடைப்பதில்லையே.
இந்தத் திருஊறல் என்ற தலத்திலே பிரதானமான கோயில் கங்காதரர் கோயில் அல்ல. கங்காதரர் கோயிலுக்குத் தெற்கே மேற்கு நோக்கிய பிரதான வாயிலுடன் இருப்பதே உமாபதி ஈசுவரர் கோயில், இங்கு உமாபதி உமையம்மையுடன் கோயில் கொண்டிருப்பதில் வியப்பில்லையே.
இவர்கள் இங்கே எப்படி உருவானார்கள்? ஆம்! அன்று பிரமனும் விஷ்ணுவும் இறைவனது திருமுடி காணாமல் ஏமாற்றம் அடைந்து விட்டனர், திருவண்ணாமலையிலே. பின்னர் தந்தையும் மகனுமாகச் சேர்ந்து, சமாதான உடன்படிக்கை செய்து கொண்டு, பிரார்த்தித்துக் கொள்கிறார்கள், இறைவன் திரு உருவைக் காண. இதே சமயத்தில் பிருகஸ்பதியின் தம்பியான சம்வர்த்தனரும் இறைவன் திருக்கோலத்தைக் காணத் தவம் கிடக்கிறார், இந்தத் திருஊறலிலே.
இந்த மூவர் விருப்பத்தையும் பூர்த்தி பண்ணும் பெரு நோக்குடன், உமா பதி தமது துணைவி உமையையும் அழைத்துக் கொண்டே வந்து விடுகிறார், இந்தத் தலத்துக்கு. மூவரும் பெறுதற்கரிய பேறு பெறுகின்றனர் அங்கே. இந்தத் தலத்துக்குச் சம்பந்தர் வருகிறார். இறைவனை வாயாரப் புகழ்ந்து பாடுகிறார். அவருக்குப் பழைய கதைதான் தெரியும். அதன் பின் நடந்த புதிய விருத்தாந்தம் எல்லாம் தெரியாது. ஆதலால்,
நீரின் மிசைத் துயின்றோன், நிறைநான்
முகனும் அறியாது அன்று,
தேரும் வகை நிமிர்ந்தான், அவன்
சேரும் இடம் விரைவில்
பாரின் மிசை அடியார் பலர்வந்து
இறைஞ்சி மகிழ்ந்து, ஆகம்
ஊரும் அரவு அசைத்தான்
திரு ஊறலை உள்குதுமே!
என்றுதான் பாடுகிறார்.
இல்லை, ரயில் பயணமே வசதி என்றால், அரக்கோணம் போய், அங்கிருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில் ஏறி, நான்கைந்து மைல் சென்றதுமே, தக்கோலம் என்ற ஸ்டேஷன் வரும். அந்த ஸ்டேஷனுக்கும், தக்கோலத்துக்கும் நான்கு மைல். ஸ்டேஷனில் வண்டி கிடைப்பதெல்லாம் அருமை. காலிலே வலு இருந்தால் நடந்தே செல்லலாம் கிழக்கு நோக்கி.
ஊருக்குக் கீழ்த் திசையில் விருத்த க்ஷீர நதி என்னும் கல்லாறு ஓடுகிறது. அந்தக் கல்லாற்றின் கரையிலேயே இருக்கிறது கோயில்கள் இரண்டும். வடபக்கம் இருப்பது கங்காதரர் கோயில். கோயில், மண்டபத்தின் விதானம் எல்லாம் தாழ்ந்தே இருக்கும். நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை எல்லாம் அங்கே பலிக்காது. ஆதலால் கங்காதரரை நன்றாகத் தலை தாழ்த்தியே வலம் வர வேணும். கொஞ்சம் பயமாய்க்கூட இருக்கும், நேரத்தில் மண்டபம் இடிந்து விழுமோ என்று. ஆதலால் விரைவிலேயே தொழுது திரும்பி விட வேண்டும்.
திரும்பித் தென்பக்கம் வந்தால், மேற்கே நோக்கிய தலை வாயிலும், கிழக்கு நோக்கிய சந்நிதியும் உடையவராய் உமாபதி ஈசுவரர் இருப்பார். கர்ப்ப கிருஹத்தின் வாயிலில் நிற்கும் துவார பாலகரே மிக்க ஸ்டைலாக நிற்பர். இறைவனை வணங்கிவிட்டுக் கர்ப்ப கிருஹத்தை ஒரு சுற்றுச் சுற்றினால், நான்கு அழகான கோஷ்ட விக்கிரங்களைப் பார்க்கலாம்.
நல்ல அழகான வடிவங்களாக மாத்திரம் அல்ல, புதிய கோணங்களிலே அமைந்த கோலங்கள் அவை. சாதாரணமாக, தக்ஷிணாமூர்த்தி கால் மேல் கால் போட்டு, யோக நிலையில் இருப்பதைத்தான் மற்றக் கோயில்களில் பார்த்திருப்போம். இங்குள்ள தக்ஷிணா மூர்த்தியோ ஒரு காலைத் தொங்கவிட்டு, மற்றொரு காலைப் பீடத்தில் ஏற்றி வைத்துத் தலை சாய்த்த கோலத்தில் இருக்கிறார்.
உத்கடி ஆசனத்தில் அவர் தலை சாய்த்துக் கையை உயர்த்தி இருக்கும் நிலையைப் பார்த்தால், ஆசிரியத் தொழிலுக்கு ஏற்றவரே என்று தோன்றும். சிஷ்யர்களைப் பார்த்து, 'அட பயல்களா! நான் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டியதைப் புரிந்து கொண்டீர்களா?' என்று கேட்பது போலவே இருக்கும். கையில் பிரம்பு இல்லாத குறைதான். மற்றப்படி பழைய ஆசிரியருக்கு உரிய அத்தனை பாணியும் அப்படியே இருக்கிறது அவரிடம்,
பிரும்மாவும் அப்படியே. தஞ்சை ஜில்லாவிலே, கண்டியூரிலேதான் பிரும்மா இருந்த கோலத்தில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். அவரை விட அழகான கோலத்தில் இருக்கிறார், இங்கிருப்பவர். இவரது நான்கு முகங்களில் மூன்று முகமே நமக்குத் தெரியும். மற்றொன்று பின் பக்கத்தில் இருப்பதாகப் பாவனை. தென்முகக் கடவுளும் நான்முகக் கடவுளும் உட்கார்ந்திருக்க, துர்க்கை மட்டும் எழுந்து நிற்கிறாள். மகிஷமர்த்தனம் பண்ணிய கோரத் தோற்றத்தைக் காணோம். மிகவும் சாந்தமான நிலை. ஏதோ நடனத்துக்கே புறப்படுவது போல, வலக்காலை வேணுகோபாலன் பாணியில் ஊன்றி, இடக்கையை இடுப்பில் லாவகமாக இருத்தி ஒயிலாக நிற்கிறாள் அவள். இவர்கள் எல்லோருமே உருவாகி இருக்கிறார்கள், கற்சிலையாக. நல்ல சோழர் காலத்துச் சிலா விக்கிரகங்கள் இவை.
இவர்களைக் காணவே ஒரு நடை போகலாம், தக்கோலத்துக்கு. அப்படிப் போனால், அங்கே செப்புச்சிலை வடிவிலும் உமை உருவாகி இருப்பதைப் பார்க்கலாம். கொள்ளை அழகு இவளது வடிவம். மங்கைப் பருவம் தழைத்து நிற்கும் அந்தத்தங்க வடிவினைக் கண்டால், உள்ளம் தழைத்துக் குழையும். தாழ்ந்த இடக் கரத்தையும், அற்புத முத்திரை தாங்கிய வலக் கரத்தையும், புன்னகை தவழும் அதரங்களையும் உருவாக்கிய சிற்பிக்கு எத்தனை தரம் வேண்டுமானாலும் தலை வணங்கலாம்.
தக்கோலம் என்ற பெயர் இவ்வூருக்கு எப்படி வந்தது என்று சொல்வார் இல்லை. இத்தகைய தக்க கோலங்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பதனால்தானோ என்னவோ, இந்த ஊருக்குத் தக்கோலம் என்று பெயர் வந்திருக்கிறது. கலை அன்பர்கள் சென்று காண வேண்டிய சிற்பச் செல்வங்கள் அவை
இனி, இச் சிலைகளைக் காண்பதிலேயே மெய்ம்மறந்து விடாமல், வெளியே வர வேணும். தென்பக்கம் வடக்கு நோக்கி நிற்கும் கிரிராஜ கன்னிகாம்பாவையும் (இமவான் மகளாம் உமையைத்தான் இத்தனை படாடோபமாக நமக்கு அறிமுகம் செய்து வைப்பார்கள், அர்ச்சகர்கள்) வந்தித்து வணங்கலாம். கோயில் பிராகாரத்துக்குள்ளே மயில் வாகனக் கடவுளுக்கும் ஒரு கோயில், மண்டபத்துடன் சமீப காலத்தில் கட்டியிருக்கிறார்கள். ஆதலால் அவரையுமே வணங்கி வழிபட்டுவிட்டு வெளியில் வரலாம்.
திரு ஊறல் என்னும் இத் தக்கோலம் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊர் என்பதைச் சோழர் சரித்திரம் படித்தவர்கள் அறிவார்கள். தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த மணலில் கோட்டத்திலே, திருநாம நல்லூரிலே இருந்து அரசாண்டவன் முதல் பராந்தக சோழன். அவன் மகனே ராஜாதித்யன்.
ராஷ்டிரகூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணன் இந்த ராஜாதித்யனோடு போர் தொடுக்கிறான். ராஷ்டிரகூடரும், சோழரும் கி.பி. 949 இல் போரில் கைகலந்த இடம் இத் தக்கோலமே, போர்க்களத்திலே யானை மீதிருந்தே உயிர். துறக்கிறான் ராஜாதித்யன். அதனால் யானை மேல் துஞ்சிய தேவன் என்ற பெயர் பெறுகிறான்.
போரில் வெற்றி பெற்ற கிருஷ்ணன், 'கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னட தேவன்' என்று விருதுப் பெயர் சூட்டிக் கொள்கிறான்.
ராஜாதித்யனுக்குப் பின் வந்த சோழர் இந்தக் கன்னட தேலரை யெல்லாம் விரட்டி அடித்துத் திரும்பவும் சோழப் பேரரசை நிலை நாட்டுகிறார் என்பது வரலாறு.
தக்கோலப் போர் சரித்திரப் பிரசித்தி பெற்றது. சண்டை நடந்த சமவெளியை ஊராரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் - அதில் அக்கறை உள்ளவர்கள். அதில் அக்கறை இல்லாதவர்கள், கோயிலில் உள்ள சிற்ப வடிவங்களைப் பார்த்து. உமை, உமாபதியைத் தரிசித்து விட்டுத் திரும்பி விடலாம், விரைவிலேயே.