நா. பார்த்தசாரதி
309
நினைவுகள் பிறந்தன. அந்த நினைவுகளில் மூழ்குவதில் தனியானதொரு களிப்பு அவளுக்கு இருந்தது.
‘கண்ணைக் கவரும் இந்தச் சுந்தரமணித் தோள்களில் ஒன்றின் மேல் நேற்றிரவு ஒரு விநாடி தன் தலையைச் சாய்த்திருக்கிறேன்’ என்று நினைக்கும்போது, அந்த நினைப்பிலேயே அவள் மனத்துக்கு ஒரு பெருமிதம் ஏற்பட்டது.
செல்வச் செழிப்பு மிகுந்த பட்டினப்பாக்கத்தில் எத்துணையோ அழகிய இளைஞர்களைச் சுரமஞ்சரி பார்த்திருக்கிறாள். தன்னுடைய பார்வைக்காக எத்துணையோ இளைஞர்கள் நினைவழிந்து தவிப்பதையும் உணர்ந்திருக்கிறாள். ஆனால் அவர்களுக்காகவும், அவர்களுடைய பார்வைக்காகவும் அவள் ஒருபோதும் நினைவிழந்தது இல்லை. இறுமாப்பினால் இறுகிப் போயிருந்த அவள் மனம் நினைவழிந்து நிறையிழந்து நிற்கும்படி செய்த அழகும் ஆண்மையும் இளங்குமரனுடையவையாக இருந்தன.
இளங்குமரன் தொடர்ந்து அவளை அலட்சியம் செய்தான். எந்த அழகினால் தன் மனம் கர்வப்பட்டதோ, அந்த அழகையும் பொருட்படுத்தாமல் தன்னை அலட்சியம் செய்யவும் ஓர் ஆண்பிள்ளை இருக்கிறான் என்பதையும் முதன் முறையாக அவள் கண்டாள். அவளால் அவனை அலட்சியம் செய்ய முடியவில்லை. தனக்கும் தோற்காத பேராண்மைக்கு முன் அவள் தானே தோற்றுப் போய் நின்றாள். ஆனால் அவளுடைய தோல்வியைத் தன்னுடைய வெற்றியாக ஏற்கவும் அவன் சித்தமாயில்லை. ஈடு இணையில்லாத பேராண்மையாளருக்கு நான் மனம் தோற்றேன். அவ்வாறு தோற்றதனால் என் மனம் பெருமைப்படுகிறது என்ற நினைப்பை அவள் அடைவதற்குக்கூட அவன் வாய்ப்பு நல்கவில்லை. அதனால்தான் அவள் அவனுடன் பிணக்குக் கொள்ள நேர்ந்தது. ஆற்றாமையால் விளைந்த இந்தப் பிணக்கும் அவள் உள்ளத்தில் அதிக நேரம் நிலைத்திருக்கவில்லை.