உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

மணிபல்லவம்

சேர்த்ததாகக் கூறினாளே? அந்தப் படகோட்டிதான் கப்பலில் அவள் கூட வந்தானோ என்று முதலில் சிறிது மனம் குழம்பினார் அவர். ஆனால் கப்பல் தலைவன் இளைஞனைப் பற்றிக் கூறிய அடையாளங்கள் இளங்குமரனுக்கே பொருந்தின. எண்ணங்களை ஒன்றோடொன்று பின்னிச் சூழ்ச்சிமயமாக முனைந்து உண்மையைக் கண்டு பிடிக்கும் வேகம் அவருக்கே உரிய சாதுரியமாகும். அவர் அச்சாதுரியத்தை எப்போதும் இழந்ததில்லை. இப்போதும் இழக்கவில்லை.

“சீனத்துக் கப்பல் தலைவரே! நீங்களே சற்றே சிரமத்தைப் பாராமல் என்னுடன் பட்டினப்பாக்கத்துக்கு வரலாம் அல்லவா? அந்தப் பெண்ணையும், இளைஞரையும் நேரில் பார்த்தால் அடையாளம் சொல்லி விடுவீர்களென நினைக்கிறேன். சீனத்துக் கப்பல் தலைவராகிய நீங்கள் பூம்புகாரின் சிறந்த கப்பல் தலைவரான பெருஞ்செல்வர் ஒருவரை அறிமுகம் செய்து கொண்டாற்போலவும் இருக்கும். என்னோடு இப்போதே புறப்படுங்கள்” என்று துணிந்து அவனை அழைத்தார் நகைவேழம்பர்.

மறுக்காமல் அவனும் உடனே அவரோடு புறப்பட்டு விட்டான். இருவரும் பட்டினப்பாக்கத்து மாளிகையை அடைந்தபோது சுரமஞ்சரி முதலியோர்கள் கோவிலுக்குப் போயிருந்தார்கள்.

சுரமஞ்சரியின் தந்தையாரிடம் அந்தக் கப்பல் தலைவனை அறிமுகம் செய்து வைத்தார் நகைவேழம்பர். அவன் துறைமுகத்தில் தன்னிடம் கூறிய விவரங்களையும் அவரைத் தனியே அழைத்துப் போய்க் கூறினார்.

“உங்கள் பெண்ணரசி நம்மையெல்லாம் ஏமாற்றியிருக்கிறாள். தன்னுடன் கப்பலில் வந்த இளங்குமரனைப் பற்றிச் சொல்லாமலே மறைத்து விட்டாள்.”

“உடன் வந்தவன் அந்தப் பிள்ளைதான் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“இதோ, அதையும் நிதர்சனமாகத் தெரிந்து கொண்டு விடுகிறேன்” என்று கூறிவிட்டுச் சுரமஞ்சரியின் மாடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/22&oldid=1149312" இலிருந்து மீள்விக்கப்பட்டது