உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

மணிபல்லவம்

எல்லா செய்திகளையும் கூறி அவன் குற்றமற்றவன் என்பதையும் வசந்தமாலை தன் தலைவிக்கு விவரித்தாள்:

“நாம் சந்தேகப்பட்டதுபோல் உங்களது மடல் நகை வேழம்பர் கையில் கிடைத்ததற்கு இவர் காரணமில்லை அம்மா! அந்த ஒற்றைக்கண் வேங்கை பயமுறுத்தி இவரிடமிருந்து அதைப் பறித்துக் கொண்டதுமல்லாமல் இவரைத் தன் மாளிகையின் இருட்டறையில் இத்தனை நாட்களாகச் சிறைவைத்துக் கொடுமைப் படுத்தியிருக்கிறது. இந்தக் கொடுமையை யாரிடம் போய்ச் சொல்லுவது?”

வசந்தமாலையிடமிருந்து இதைக் கேட்டபின் சுரமஞ்சரியின் உள்ளத்தில் ஓவியன்மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பு மாறி அநுதாபமே நிறையப் பெருகிற்று. ஆறுதலாக அவனை நோக்கிக் கூறலானாள் சுரமஞ்சரி:

“உங்களைப் போன்றவர்கள் கலைத்திறமையோடு மன உறுதியையும், துணிவையும் சேர்த்து வளர்த்துக் கொள்ள வேண்டும். கொடுமைகளுக்கு அஞ்சி அடங்கி விடக் கூடாது. கொடுமைகளை எதிர்த்துக் கொடுமைகளிலிருந்து மீளவும் மீட்கவும்தான் அறிவு, கலை எல்லாம் ஏற்பட்டிருக்கின்றன.”

"இருக்கலாம், அம்மா! ஆனால் கொலை செய்யும் கைகளுக்கு முன்னால் கலை செய்யும் கைகள் வலுவிழந்து நடுங்குகின்றனவே? நான் என்ன செய்வது? வெள்ளை யுள்ளம் படைத்தவனாகவே வளர்ந்துவிட்டேன். மாற முடியவில்லை. அன்று இந்திரவிழாவின் போது. நாளங்காடிப் பூதசதுக்கத்தில் உங்களைச் சந்திக்க நேர்ந்தபோதே என்னுடைய போதாத காலத்தையும் சேர்த்துச் சந்தித்து விட்டேனோ என்னவோ?”

“இப்படி இன்னொருமுறை சொல்லாதீர்கள், ஓவியரே! உங்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று உங்களிடம் அவரது ஓவியத்தை வரையும் பணியை ஒப்படைத்தேனே தவிர இப்படியெல்லாம் நீங்கள் உங்களுடைய துணிவின்மையால் அடையும் துன்பங்களுக்கு என்னைக் காரணமாகச் சொல்வீர்கள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/40&oldid=1149343" இலிருந்து மீள்விக்கப்பட்டது