நா. பார்த்தசாரதி
371
பார்க்கும் நீலநாகரின் அந்தப் பார்வையே வாளாகவும், வேலாகவும் கூர்மை பெற்றுச் சென்று நகைவேழம்பரைத் தாக்குவதையும் அவன் கவனித்தான்.
தான் ஓர் ஓவியன் என்ற முறையில் விலங்குகளின் அரசனாகிய சிங்கத்தின் உருவத்தைப் பன்முறை தன் கையால் வரைந்திருக்கிறான் அவன். கம்பீரமான அரசர்களின் உருவங்களையும் வீரர்களின் உருவங்களையும்கூட வரைந்திருக்கிறான். ஆனால் குறுவாளை ஓங்கிக் கொண்டு சீறிவந்த நகைவேழம்பரை இடது கையால் அலட்சியமாகத் தடுத்து நிறுத்திய நீலநாக மறவரின் கம்பீரத்தை ஓவியத்தில் வரைவதற்கு முடியுமா என்று மலைத்தான் அவன். கொடுமைக்காரராகவும் கொலைகாரராகவும் தோன்றித் தன்னைப் பயமுறுத்தி நடுங்கச் செய்த அதே ஒற்றைக்கண் மனிதர், கையை அசைக்கவும் முடியாமல் நீலநாக மறவரின் இரும்புப் பிடியில் திணறுவதை இப்போது அவன் கண்டான் அழுத்திப் பிடிக்கப்பெற்ற எதிரியின் பிடியில் நரம்புகள் புடைத்து இரத்தம் குழம்பும் தமது கை வலுவிழந்து உணர்வு குன்றுவதை நகைவேழம்பர் புரிந்து கொண்டாலும் ஆற்றலின்றி இருந்தார். அவர் கை நடுங்கியது. விரல்கள் பிடி நழுவி விரிந்தன. குறுவாள் கீழே நழுவி விழுந்து ஈரமண்ணில் குத்திக் கொண்டு நின்றது.
நீலநாகமறவர் பிடியை விட்டு முறிந்த வாழை மட்டையை உதறுவதுபோல அந்தக் கையை உதறினார். விடுபட்டதும் குபீரென்று கீழே குனிந்து மீண்டும் வாளை எடுக்க முயன்ற நகைவேழம்பரை அவர் அப்படிச் செய்ய முயல்வார் என்றே எதிர்பார்த்தவர்போல் எச்சரிக்கையாயிருந்த நீலநாகமறவர் பின்னுக்குப் பிடித்துத் தள்ளினார். மலைமோதியது போன்ற அந்தத் தள்ளுதலால் தடுமாறி மண்ணில் மல்லாந்து சாய்ந்தார் நகைவேழம்பர். இதற்குள் படைக்கலச் சாலையின் கதவைத் திறந்து கொண்டு அங்கிருந்த இளைஞர்களெல்லாம் கூட்டமாக வெளி வரவே, நகைவேழம்பரோடு கூட வந்திருந்த யவன ஊழியர்கள் மெல்லப் பின்வாங்கினார்கள். நகைவேழம்