414
மணிபல்லவம்
“இந்த மாளிகையில் இதே சூழ்நிலையில் நின்று உங்களோடு பேச எனக்கு விருப்பவில்லை. இருவருமே ஒருவர் மேல் மற்றவருக்கிருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம். நீங்கள் என்னைக் கொல்லவும் துணிந்து விட்டீர்கள் என்பது எனக்கே புரிந்துவிட்டது. இனிமேலும் நான் உங்களை நம்ப வேண்டுமானால் நாம் நம்முடைய நம்பிக்கைகள் பிறந்து வளர்ந்த இடத்துக்குப் போக வேண்டும். நீங்கள் இனிமேல் என்னை நம்புவீர்களா என்பதை அறிந்துகொள்வதற்கு ஒரு சோதனைப்போல் உங்களை இப்போது அழைக்கிறேன். பூம்புகார் நகரம் முழுவதும் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடக்கிற இந்த நேரத்தில் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் தனியாக என்னோடு நீங்கள் வரவேண்டும். தேரிலோ குதிரையிலோ வரக்கூடாது; என்னைப்போல் நடந்துவர வேண்டும்.”
“எங்கே வரவேண்டும்? எதற்காக வரவேண்டும்? வேண்டியதை இங்கேயே பேசலாமே! நாமிருவரும் தனியாகத்தான் இருக்கிறோம்.”
“முடியாது; இது உங்களுடைய எல்லை. இங்கே நான் எந்த விநாடியும் துன்புறுத்தப்படலாம். இன்னும் உங்கள் மேல் பழைய நம்பிக்கை எனக்குத் திரும்பவில்லை. அந்த நம்பிக்கை திரும்புவதும் திரும்பாததும் நீங்கள் என்னை நம்புகிறீர்களா, இல்லையா என்பதைப் பொறுத்தது.”
“நான் உங்களை நம்புகிறேன் என்பதை மீண்டும் எப்படி நிரூபிக்க முடியும்?”
“ஏன் முடியாது? என் அழைப்புக்கு இணங்கினாலே என்னை நம்புவதை ஒப்புக் கொண்டாற்போலத்தானே?”
“ஒப்புக் கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள் நகைவேழம்பரே! இந்த நள்ளிரவில் ஒரு துணையுமின்றி வெறுங்கையனாக உங்களோடு வந்தால் நீங்கள் தனிமையில் என்னிடம் எப்படி நடந்து கொள்வீர்களோ என்று நான் சந்தேகப்பட இடமிருக்கிறதல்லவா?”