நா. பார்த்தசாரதி
441
வில்லை’ என்று முன் வந்து நின்று மீண்டும் அவர் தலையைக் குனியச் செய்துவிட்டார் நகைவேழம்பர்.
தாம் இரையிட்டு வளர்த்த புலிகளுக்கு இன்று தாமே இரையாகும் நிலை வந்துவிட்டதே என்று மெய்நடுங்க நின்றார் பெருநிதிச் செல்வர். அவரை விளித்து நகைவேழம்பர் சிறிதும் நெகிழ்ச்சியில்லாத குரலில் பேசினார்:
“நஞ்சு கலந்த பாலைப் பருகி நான் அழிந்தொழிந்து போயிருப்பேன் என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தீர்கள். உங்கள் பெருமை நீடிக்க வழியின்றி நானே முன்னால் வந்து நிற்கிறேன். ஒன்று நாமிருவரும் நண்பர்களாயிருக்க வேண்டும். அல்லது பகைவர்களாயிருக்க வேண்டும். ஆனால் நல்லதற்காகவோ, கெட்டதற்காகவோ, எதற்கென்று தெரியவில்லை; இப்போது நாமிருவருமே எப்படியிருக்கிறோமோ அப்படி இதற்கு முன்பு இருக்க நேர்ந்ததில்லை. நட்பின் நெருக்கத்தைக் குறித்து உயிர் நண்பர்கள் என்று சொல்வார்கள். ஆனால் நீங்களும் நானுமோ, இப்போது ஒருவருக்கொருவர் உயிரைக் கவர்ந்து கொள்ளத் துணிந்துவிட்ட நண்பர்களாயிருக்கிறோம். உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நெருக்கத்தில் முன்பு இந்த நட்புத் தொடங்கிற்று என்பதை நீங்கள் மறந்து போயிருக்கலாம். இப்போது உயிர்களை அழிக்கும் ஆத்திரத்தில் முடிவதற்கிருக்கிறது. இந்த உறவு இப்படித்தான் முடிய வேண்டுமா, அல்லது வேறுவிதமாகவும் முடிய இடமிருக்கிறதா என்று சிந்திக்க வேண்டிய விநாடிகளில் நிற்கிறோம் நாம்...”
பெருநிதிச் செல்வர் தலைநிமிர்ந்து எதிராளியைப் பார்ப்பதற்கு வேண்டிய சுறுசுறுப்போ, ஆர்வமோ, சிறிதுமில்லாமல் சோர்ந்து போயிருந்தாலும் இந்தப் பேச்சைக் கேட்டதும் அடிபட்ட நாகம் படத்தைத் தூக்குகிறாற் போலத் தலைநிமிர்ந்து நகைவேழம்பரைப் பார்த்தார். பின்பு இயல்பாகப் பேசும் பேச்சின் விரைவு இல்லாமல்