உள்ளடக்கத்துக்குச் செல்

வேங்கடம் முதல் குமரி வரை 2/திருப்பாதிரிப்புலியூர் அரன்

விக்கிமூலம் இலிருந்து
7

திருப்பாதிரிப்புலியூர் அரன்

ந்நில உலக மக்களிலே மூன்று வகையினர். ஒரு வகை, பிறர்க்குச் செய்யும் நல்ல காரியங்களை எல்லாம் அவர்களிடம் முன்கூட்டி சொல்லாமலே தாமாகச் செய்து முடிப்பவர்கள, இன்னொரு வகை, செய்யுங் காரியங்களை எல்லாம் முன் கூட்டியே தம்பட்டம் அடித்து அதன் பின்பு செய்து முடிப்பவர்கள். மூன்றாவது வகை, ஏதோ வாய் விரிய அதைச் செய்வதாக, இதைச் செய்வதாகச் சொல்வார்கள்; ஆனால் ஒன்றுமே செய்யமாட்டார்கள். இவர்கள் மூவரையும் பெரியவர், சிறியவர், கயவர் என்று வகைப்படுத்துகிறார் ஒரு புலவர். இவர்களுக்கு உவமை தேடித் திரிகிறார். அவர் கண்டுபிடித்த உவமைகளே பலா, மா, பாதிரி மரங்கள், பலா பூக்காமலேயே காய்க்கும் இயல்புடையது. மா பூத்துக் காய்க்கும் தன்மையுடையது. பாதிரியோ பூக்கும், ஆனால் காய்க்காது. இதைச் சொல்கிறார் ஒரு பாடலில்,

சொல்லாமலே பெரியர்,
சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் செய்யார்
கயவரே-நல்ல
குலாமாலை வேற்கண்ணாய்

:கூறு உவமைநாடின்
பலா மாவைப் பாதிரியைப்பார்

பலாவும் மாவும் நமக்குத் தெரியும், பாதிரியை நாம் பார்த்ததில்லை. ஆதலால் பாதிரிப்புலியூர் என்று ஒரு தலத்தின் பெயரைக் கேட்டது மே, அங்கு பாதிரியைப் பார்க்கலாமென்று போனேன். அங்குள்ள கோயிலுக்குள்ளும் விரைந்தேன். பாதிரியின் இயல்போடேயே கோயில் இருந்தது. சில கோயில்களில் வெளியில் ஒன்றும் இருக்காது, ஆனால் கோயிலுள் நுழைந்தால் ஒரே கலை மயம். சிறபச் செல்வங்கள் நிறைந்திருக்கும். சில கோயில்களில் உள்ளும் புறமுமே கலைவளம் நிரம்பியிருக்கும். ஆனால் நான் சென்ற பாதிரிப்புலியூர் கோயிலோ, கோபுரம் நன்றாக இருக்கிறது, கோபுரத்துக்கு வடபுறம் குளம் நன்றாக இருக்கிறது. கோயிலின் முன் மண்டபத்தில் குதிரைமீது ஆரோ கணித்து வரும் வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், கோயில் உள்ளே கலையழகு என்பது கொஞ்சம் கூட இல்லை. காரணம் பழைய கோயில் பழுதுற்றிருந்ததைப் புதுப்பித்துத் திருப்பணி செய்ய முனைந்தவர்கள், பழைய கற்களை, பழைய கலை வடிவங்களையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டு, நன்றாக ஒழுங்கு செய்யப்பட்ட (Well dressed stones) புதிய கற்களை அடுக்கிக் கோயில் கட்டியிருக்கிறார்கள்.

இந்தக் கோயிலில் இறைவனும் இறைவியும் மாத்திரமே பழையவர்கள். மற்றவர்கள் எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் கைத்திறன். தல விருக்ஷமான பழைய பாதிரி மரமும் பட்டுப் போயிருக்கிறது. என்றாலும் பட்ட மரத்தை தகடு பொதிந்து மொட்டையாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். மற்றவைகளைப் புதுக்கியது போல், புதிய பாதிரி மரம் ஒன்றைத் தேடி எடுத்து நட்டு வளர்த்திருக்கலாம். அதைச் செய்யத் தவறி விட்டார்கள். பழைய பாதிரி மரம் பழைய பெயரின் சின்னமாக விளங்குகிறதே ஒழிய வளரவோ, பூக்கவோ, காய்க்கவோ செய்கிறதில்லை. பாதிரி பூக்கும், காய்க்காது என்ற கவிஞனையும் அல்லவா விஞ்சி யிருக்கிறது இந்தப் பாதிரி. இந்தப் பாதிரி மரத்தையுடைய திருப்பாதிரிப்புலியூர் கோயிலுக்குத்தான் இன்று செல்கிறோம் நாம்.

திருப்பாதிரிப்புலியூர் - கோயில்

தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமை நகரம் கடலூர் என். டி. அந்த ஸ்டேஷனில் இறங்கி வடமேற்காகச் செல்லும் பாதையில் அரை மைல் சென்றால் திருப்பாதிரிப் புலியூர் கோயில் வாயிலுக்கு வந்து சேரலாம். கோயிலின் ராஜகோபுரத்துக்கும் முந்திக் கொண்டு ஒரு மண்டபம். அந்த மண்டபத்துக்கு வடக்கே ஒரு குளம் நல்ல படிகட்டுகளுடன். இதனையே சிவகரதீர்த்தம் என்கிறார்கள். கோயில் முன் மண்டபத்திலே குதிரை வீரர்களை ஏந்தி நிற்கும் கற்றூண்களும் பழைய கலைஞர்கள் செய்ததல்ல, இன்றைய கலைஞர்கள் வேலையே. ஆதலால் கவர்ச்சிகரமாக இல்லை.

கல்தூண்

அந்த மண்டபத்திலிருந்து தெற்கே கோயில் மதிலைச் சுற்றப் புறப்பட்டால், கோயில் காவல்காரரே சொல்வார். அங்கெல்லாம் ஒன்றுமில்லை வீணாக அலைய வேண்டாம் என்று. ஆதலால் நாம் கோயிலுக்குள்ளேயே துழையலாம். கலையழகு இல்லாவிட்டாலும், கடவுளர் இருக்கிறாரே அவரைக் கண்டு வணங்கி அருள் பெறலாம்தானே. நல்ல பெரிய பிரகாரம்; அதற்கேற்ற பிரும்மாண்டமான தூண்கள். எல்லாம் கூடாது குறையாது அளவோடு இருக்கும். இந்தப் பிராகாரத்தைப் பார்த்தால் கோயில் கட்ட பத்து லக்ஷமாவது செலவாகியிருக்க வேண்டும் என்று தோன்றும். பிராகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றினால் தகடு பொதிந்த பாதிரி மரத்தையும் பார்க்கலாம். இறைவன் சந்நிதிக்கு வந்து அவரை வணங்கிவிட்டு, வடபுறம் இருக்கும் அம்மன் கோயிலுக்குப் போகலாம். இங்கும் தூண், மண்டபம், கர்ப்பக் கிருஹம் எல்லாமே புதிதுதான். அம்மை பெரிய நாயகியைத் தரிசித்துவிட்டு வெளியே வரலாம்.

தலத்தை விட்டுக் கிளம்பு முன் இத்தலத்துக்குப் பாதிரிப் புலியூர் என்று பெயர் வரக் காரணம் என்ன என்று அறியத் தோன்றும், ஸ்தல விருஷம் பாதிரியானதால் பாதிப் பெயருக்கு விளக்கம் பெறுவோம். அதிலும் உமையம்மை ஏதோ தவறு செய்ய அதற்குப் பிராயச்சித்தமாக அம்மையை இவ்வுலகில் பிறக்கும்படி இறைவன் சபிக்க, அந்தச் சாப விமோசனம் பெற அம்மை சப்த கன்னிகைகளுடன் கெடில நதிக்கரையில் உள்ள இப்பாதிரி வனத்துக்கு (பாடலவனம் என்றும் சொல்வார்கள்) வந்து தவம் புரிய, இறைவன் பாதிரி மரத்தடியிலே ஜோதி மயமாகத் தோன்றி ஆட்கொண்டார், என்று தல வரலாறு கூறும். அதற்கேற்பவே, அன்னை பெரியநாயகி அருந்தவநாயகி என்றே அழைக்கப்படுகிறாள். பாதிரியோடு புலியூர் சேருவானேன் என்றால் புலிக்கால் முனிவர் (வியாக்கிர பாதர்) பூசித்துப் பேறு பெற்றதால் என்று விளக்கம் பெறுவோம்.

இந்தத் தலத்துக்கும், முயலுக்கும் ஏதோ மிக்க நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேணும். அதற்குக் கதைகள் இரண்டு உண்டு. ஒன்று வியாக்கிரபாதர் மகன் உபமன்யு பூஜை செய்யும்போது அவரது பாதம் அம்மை எழுந்தருளியுள்ள பீடத்தில் பேரில் பட்டிருக்கிறது. அருந்தவ நாயகியே அவள் என்றாலும் இதைப் பொறுத்துக் கொள்வாளா? உபமன்யு முனிவரை முயல் வடிவு எய்துக என்று சபிக்கிறாள். ஆனால் அந்த முயலோ அங்குள்ள பாதிரி மரத்தின் கிளை மீது பட்டதால் முயல் உரு நீங்கிப் பழைய உபமன்யுவாகவே ஆகிவிடுகிறது. சரிதான், மனைவி சாபம் கொடுக்க, அதற்கு நிவர்த்தியைக் கணவன் அருளி விடுகிறார். இவர்களது தாம்பத்திய உறவு எப்படி நன்றாக இருத்தல் கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது நமக்கு. இரண்டாவது முயல் கதை வேறே. மங்கணர் என்று ஒரு முனிவர், அவர் இறைவன் பூசனைக்கு மலர் பறிக்கிறார். காலில் முள் தைக்கிறது. முள் தைத்த இடத்திலிருந்து ரத்தம் ஒழுகாது நன்னீர் பெருகுகிறது. இதைக் கண்டு ஆனந்தத்தால் துள்ளிக் குதிக்கிறார். இப்படிக் குதித்தவரது கால்கள் அவ்வனத்தில் தவம் செய்யும் தூமப்ப முனிவர் சிரத்தில் படுகின்றன. தூமப்பர் மங்கணரை முயல் ஆகுக எனச் சபிக்கிறார். மனைவியிட்ட சாபத்தையே நிவர்த்தி செய்த இறைவன் முனிவர் இட்ட சாபத்தை மாற்றத் தயங்குவாரா? கார்த்திகைச் சோமவாரத் தீப தரிசனத்தின் மகிமையால் மங்கணர் பழைய உரு எய்துகிறார். இப்படி முயலுக்கு அருள் செய்த இறைவனது கருணையை, இந்தத் தலத்துக்கு வந்த சம்பந்தர் உணர்கிறார், பாடுகிறார்.

முன்ன நின்ற முடக்கால்
முயலுக்கு அருள் செய்து நீள்
புன்னை நின்று கமழ்
பாதிரிபுலியூர் உளான்
தன்னை நின்று வணங்கும்
தனைத் தவம் இல்லிகள்
பின்னை நின்ற பிணி
யாக்கை பெறுவார்களே

என்பதுதான் சம்பந்தர் தேவாரம்.

இப்படி முயல்களுக்குக்கூட அருள் செய்த பரமன் அருள் கனிந்த அடியவரான அப்பர் தளர்கின்றபோது சும்மா இருப்பாரா? சைவ மரபிலே பிறந்த மருள்நீக்கியார், சமண மதத்தைச் சார்ந்து தருமசேனர் ஆகிறார். இவரது தமக்கையார் திலகவதியார் விரும்பியபடி இவருக்குச் சூலை நோய் தந்து, ஆட்கொள்கிறார் இறைவன் திரு அதிகையிலே. இப்படி நாவுக்கரசர் சமணராயிருந்து சைவராக மாறி விட்டது, சமணர்களுக்குப் பிடிக்கவில்லை . சமணனாக இருந்த மன்னன் மகேந்திர வர்மனிடம் சொல்லி எத்தனையோ இன்னல்களை உண்டாக்குகிறார்கள். எத்தனை கொடுமைகளெல்லாம் உண்டோ, அத்தனையும் செய்து பார்த்துவிடுகிறான் அம்மன்னன். அதில் ஒன்று நாவுக்கரசரைக் கல்லிலே கட்டிக் கடலிலே தள்ளுதல். ஆனால் அதற்கெல்லாம் திருநாவுக்கரசர் அஞ்சிவிட வில்லை. அவருக்கோ சிவபிரானிடம் அழியாத நம்பிக்கை.

சொல்துணை வேதியன்,
சோதி வானவன்,
பொன்துணை திருந்து அடி
பொருந்தக்கைதொழ,
கல்துணைப்பூட்டி ஓர்
கடலில் பாய்ச்சினும்,
நல்துணையாவது
நமச்சிவாயவே!

என்று பாடுகிறார். நீரில் மூழ்கும் கல் நாவுக்கரசருக்குத் தெப்பமாகி மிதக்கிறது. அலைமோதும் கடல் தெப்பத்தோடு சேர்ந்த நாவுக்கரசரைக் கரை சேர்க்கிறது. இப்படி நாவுக்கரசர் கரையேறிய இடம் இன்றும் கரை ஏறவிட்ட குப்பம் என்ற பெயரோடேயே கடலூர் பக்கத்தில் நிலவுகிறது. பாதிரிப்புலியூர் அரன், தோன்றாத் துணை யாயிருந்து நாவுக்கரசர் நல்வாழ்வு பெற உதவியிருக்கிறான். இதை நினைத்தே,

ஈன்றாளுமாய், எனக்கு எந்தையும்
ஆய், உடன்தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து
உகந்தான் மனத்து உள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன்
திருப்பாதிரிப்புலியூர்
தோன்றாத்துணையாயிருந்தனன்
தன்னடி யோங்களுக்கே.

என்ற பாடுகிறார் நாவுக்கரசர். இப்பாடலை நாவுக்கரசர் பாடிய பின்னரே, இத்திருப்பாதிரிப் புலியூர் அரனுக்குத் தோன்றாத் துணைநாதர் என்ற பெயர் நிலைத்தது போலும். இப்படி நாவுக்கரசர் கரையேறியதை இன்று சித்திரை அனுஷ நாளன்று கரைஏறவிட்ட குப்பத்தில் திருநாளாகவே சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

எங்கெல்லாமோ சென்ற சுந்தரர் இத்தலத்துக்கு வந்தார் என்று வரலாறு இல்லை. ஆனால் மணிவாசகர் இங்கு வந்ததாக வரலாறு உண்டு. வாதவூர் அடிகளாம் மணிவாசகர் இத்தலத்துக்கு வரும்போது கெடில நதியிலே வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. நதியைக் கடக்க முடியவில்லையே என்று வருந்தி அக்கரையிலேயே அன்ன ஆகாரம் இல்லாமல் நின்றிருக்கிறார் அவர். ஈசனைக் காணாமல் மணிவாசகருக்கு அவ்விடத்தை விட்டு நகர மனமில்லை.

அடியார்களின் துயர் தீர்ப்பதே தனது பணியாகக் கொண்ட இறைவன் ஒரு சித்தர் வடிவத்தில் மணிவாசகர் முன் தோன்றி அவருக்காக நதியை வடபால் போகும்படி செய்து, கோயிலுக்குக் கூட்டிவந்து, பாடலவனநாதனைத் தரிசிக்க வகை செய்து மறைந்திருக்கிறார்.

மணிவாசகர் விரும்பிய வண்ணமே, கங்கையும் கெடிலமும் கலந்த ஒரு தீர்த்தமாக சிவகர தீர்த்தத்தையும் அமைத்திருக்கிறார் அந்தச் சித்தர்.

கலை வளர்க்கும் கோயில் வரிசையில் இக்கோயில் இன்று இடம் பெறாது என்றாலும் தோன்றாத் துணையும் அருந்தவநாயகியும் கோயில் கொண்ட தலம் என்பதால் பிரசித்தி உடையதுதானே. அதிலும் சமயக் குரவர்களில் வயதால் மூத்த நாவுக்கரசருக்கும் நல்வாழ்வு கொடுத்த பதியாயிற்றே. ஆதலால், 'கரையேறவிட்ட பிரான் ஒரு பாகம் வளர் கருணைப் பிராட்டியாள், தரையேறு புகழ்ப் புரிசை பெரிய நாயகி சரணம் தலைமேல் கொண்டு' திரும்பலாம் இங்கு சென்றால், என்று சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.