இருட்டு ராஜா/3
தங்கராசுவை ஆச்சரியமாகப் பார்த்தாள் அவன் அம்மா மறுநாள் காலையில். முத்துமாலையோடு தான் பேசியதைப் பற்றி அவனே அவளிடம் சொன்ன போது தான்,
“ஆங், அப்படியா? அவன் சீறி விழலியா? முறைக்கலியா?” என்று கேட்டாள்.
“அவன் என்ன வெறி மிருகமா சீறிப் பாயறதுக்கு? இல்லே நல்ல பாம்பா? அவனும் நம்ம மாதிரி மனுசன் தானே? என் கூடப் படிச்சவன் தானே ஒரு காலத்திலே!” என்று தங்கராசு சொன்னான்.
“இருந்தாலும், ராசு, எல்லா மனுசங்களும் ஒண்ணு போலவா இருக்கிறாங்க? நாய்க்குணம், நரிக் குணம், பேய்க் குணம் பெற்றவங்களும் இருக்கதானே செய்யறாங்க?”
“துஷடமிருகங்க கூட அதது பாட்டுக்கு, தான் உண்டு தன் காரியம் உண்டுன்னு தான் போகும் அம்மா. நாம அது கிட்டே போய் சேட்டை பண்ணுனா, அதை தாக்கினா, சீண்டி விட்டால்தான் அதுக எதிர்க்கும், பசி அல்லது வெறி ஏற்படுகிற சமயங்களிலும் தாக்கும்...”
“சும்மா போகிற போக்கிலே முறைக்கிறதும் எதிர்க்கிறதும் சில மிருகங்களின் சுபாவம்தான். சில மனுசங்கிட்டேயும் அந்தக் குணம் இருக்கு” என்றாள் அவன் அம்மா.
“இருந்திட்டுப் போகுது! நாம பிரியமும் அன்பும் காட்டினா மத்தவங்களும் அப்படியே நம்மிடம் நடப்பாங்க. நாம வெறுத்து ஒதுக்கினா, மத்தவங்களும் நம்மகிட்டே வெறுப்புக் காட்டுவாங்க!”
“அதெல்லாம் சரிதான் ராசு. எதுக்கும் நீ முத்துமாலையை விட்டு விலகியிருக்கறதே நல்லது. அவன் கிட்டே பேசிப் பழகனும்கிற ஆசையை விடுட்ரு. அது உனக்கு நல்லது செய்யாது” என்று அம்மா உபதேசித்தாள்.
“சரி அம்மா” என்றவன், ஆமா முத்துமாலையின் அம்மா என்ன ஆனாள்? இருக்காளா, போய்ச் சேர்ந்திட்டாளா?” என்று விசாரித்தான்.
அம்மாள் பெருமூச்சு விட்டாள். “வடிவு ஐயாவிடம் போய்ச் சேர்ந்து எத்தனையோ வருசமாச்சு. அவ பாவம் என்ன சுகத்தைக் கண்டா? பாவி நான் பொண்ணாப் பிறந்து புண்ணா உலையிதேனேன்னு அவ புலம்பாத நாள் கிடையாது. மாப்பிள்ளையாலும் அவளுக்கு சந்தோஷம் கிடைக்கலே, மகனாலேயும் நிம்மதி கிடைக்கலே. மகன் கிட்டே உசிரையே வச்சிருந்தா பாவி மட்டை. அவனுக்கு தெருவிலே, மூலை முடுக்கிலே ஏதாவது ஆபத்து நேர்ந்திடப்படாதேன்னு அவன் பின்னாலேயே நிழல் மாதிரிப் போவா. அவன் குடிச்சுப்போட்டு, வம்புச் சண்டையிலே மாட்டிக்கிடு வான். அவதான் போயி அழுது கெஞ்சிக் கும்பிட்டு அவனை மீட்டுக்கிட்டு வருவா. அவன் கேட்டபோதெல்லாம் பணம் கொடுப்பா. கடன் வாங்கியும், பண்டம் பாத்திரங்களை அடகு வச்சும் நகைகளை வித்தும், ஹும், எவ்வளவு பணம் கொடுத்திருக்கா. அவ்வளவையும் நாசமாக்கிப் போட்டானே இந்தக் கரிக்கொல்லன்!”
“அம்மா, அளவு மீறினால் அமுதமும் நஞ்சாகும். அன்பு கூட ரொம்ப அதிகமாகி விட்டால், ஆளைக் கெடுத்துப்போடும்” என்றான் தங்கராசு.
“பெத்தவ மனம் பிள்ளைகளுக்கு எங்கே புரியுது? எந்த மகன்தான் அம்மாவின் உள்ளத்தை சரியாகப் புரிஞ்சுக்கிடுதான்?” என்று பொதுவான புலம்பல் ஒன்றைப் புலம்பி வைத்தாள் அம்மாக்காரி.
மகன் மவுனமாகச் சிரித்துக் கொண்டான்.
மீண்டும் அம்மாவே தொடர்ந்தாள்: ‘வடிவுக்கு வாழ் நாளிலும் அமைதியில்லைன்னு போச்சு, சாவிலும் அமைதியில்லாமப் போச்சு. மகன் எப்படிப் பிழைக்கப் போறானோ என்ற கவலையினாலேயே அவ துடிச்சுக் கிட்டுக் கிடந்தா. அவ சாகிறவரையாது இந்த முடிவான் வீட்டோடு கிடக்கப்படாதா? அவளுக்கு இழுத்துக் கிட்டு கிடக்கு. இவன் குடிச்சிக்கிட்டும் சண்டை பிடிச்சிக் கிட்டும் அலைஞ்சான். சரி, உசிரு ஒருமட்டும் உடலை விட்டுப்போச்சு. உடலை நிம்மதியா சுடுகாட்டுக்கு எடுத்திட்டுப் போக முடிஞ்சுதா? அவ தலையெழுத்து! ஊம். யாராரு என்ன என்ன அனுபவிக்கணும்னு விதிச்சிருக்கோ, அதை அனுபவிச்சுத்தானே தீரனும்”
“ஏன், என்ன நடந்தது?” என்று ஆவல் தூண்டப் பெற்றவனாய் அவன் கேட்டான். “முத்துமாலை அம்மன் கோயிலுக்கு வரிப்பணம் கொடுக்கலே. கொடைக்குக் கொடை தலைக்கட்டு வரி கொடுக்கனுமா இல்லியா? ஊர் நியாயம் தானே அது? நான் கொடுக்க மாட்டேன்; அம்மன் எனக்கு ஒரு உதவியும் பண்ணலே; நான்மட்டும் அம்மனுக்கு பணம் கொடுக்கனுமாக்கும்னு அவன் சண்டித்தனம் பண்ணினான். உன்னைவிட ஏழை எளியவங்க எல்லாம் கொடுக்கலியா, ஊர் வரியை மறுக்கப்படாதுன்னு எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கலே. அதுனாலே, அவனோட அம்மா செத்ததும், ஊர்காரங்க மறிசல் பண்ணிட்டாங்க. அம்மன் வரி பாக்கிப் பணம் பூரா வந்தால்தான் பிணம் வீட்டைவிட்டுப் போகலாம்; இல்லேன்னா தெருவைக் கடக்க முடியாதுன்னு சொல்லி, கூடி நின்னாங்க. முத்துமாலை பிடிவாதம் புடிச்சான்; அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டான். அதுதான் ஊர் மரபுன்னு சொல்லிப் போட்டாங்க. ஒரு நாள் பூரா பிணம் வீட்டிலேயே கிடந்தது. அப்புறம் அவன் தம்பிடி பாக்கி இல்லாமல் அம்மன் வரியையும் அபராதம் பத்து ரூபாயையும் ஊரார் முன்னாலே கட்டினான் பிறகு மளமளன்னு காரியம் நடந்து முடிஞ்சுது. இம்புட்டு வேணுமோ? ஊரோடு ஒத்துப் போயிருக்கலாம் இல்லையா?”
அம்மா நீட்டி இழுத்துப் பேசி முடித்தாள்.
“முத்துமாலைக்கு கல்யாணம் ஆகலியோ?”
“அறுதக் கொல்லனுக்கு கல்யாண எழவு ஒரு கேடா? அவனை முறிச்சு அடுப்பிலே வய்க்கோ!” என்று படபடத்தாள் தாய். பிறகு தொடர்ந்தாள்: “இப்படிப் பேர் எடுத்த கொம்பேறி மூக்கனுக்கு எவ பொண்ணு கொடுப்பா? அம்மாக்காரிக்கு ஆசைதான். எவளாவது கொடுத்திருவான்னு, அலையா அலைஞ்சா. யார் யாரிட மெல்லாமோ சொல்லி முயற்சி பண்ணினா. கல்யா மாகி ஒருத்தி வீட்டோடு வந்திட்டா, பையன் தங்கக்கம்பி ஆயிருவான்னு அவளுக்கு நெனப்பு. அவன் எடுத்த எடுப்புக்கு அது நடக்கிற காரியமா? அதுனாலேயும் அவ நெஞ்சு வேகலேன்னு சொல்லு!”
“ஐயோ பாவமே!” என்றான் தங்கராசு.
“அதுக்காக இவன் வருத்தப்பட்டான் கிறியா? அது ஏது! கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு எத்தனையோ வீடுக; அதுமாதிரி தாலி கட்டினவனுக்கு ஒரு பெண்டாட்டி, தாலி கட்டாதவனுக்கு எத்தனையோ பெண்டாட்டிகள்னு எக்காளம் கொழிச்சான். பிறகு, கெட்டலைஞ்ச கழுதை எதையோ தேடிப் புடிச்சு தொடுப்பு வச்சுக்கிட்டான்” என்று கரித்து கொட்டினாள்.
“அட, அது யாரு அவ? எந்த ஊர்க்காரியோ?”
இத்தனை நேரம் பேசியதே ரொம்பப் பெரிசு. ஏக தாராளம் என்று அம்மா எண்ணி விட்டாள். “எந்த நாயி எப்படிப் போனா நமக்கென்ன! கண்டவன் கதையை எல்லாம் பேசிக்கிட்டிருந்தா நம்ம சோலி என்னாவறது?” என்று சொல்லியவளாய் அடுப்படிக்குள் புகுந்து கொண்டாள்.
முத்துமாலை இன்ட்ரஸ்டிங் கேரக்டர்தான்னு தோணுது என்று எண்ணினான் தங்கராசு.