உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 4.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

654

மணிபல்லவம்

அஞ்சுகிறவை. இன்று நகைவேழம்பர் அருகில் இல்லாததனால் தம் சுகபோகங்களைப் பற்றிய நினைவு அவருக்கு வந்தது. மனிதர்களில் சிலர் பக்கத்திலிருந்தால் தாங்கள் அப்படி யார் பக்கத்தில் நிற்கிறார்களோ அவர்களுடைய சிந்தனையே சுதந்திரமாக வளராதபடி செய்து கொண்டிருப்பார்கள். பேய் பிடித்துக் கொண்டு ஆட்டுவது போல் பிறருடைய சிந்தனை தன்னிச்சையாக வளர முடியாமல் பிடித்துக் கொண்டு ஆட்டுகிற இத்தகைய மனிதர்களும் பேய்த்தன்மை பெற்றவர்களே. நகைவேழம்பரும் இப்படிப் பெருநிதிச் செல்வரைப் பேயாகப் பற்றிக் கொண்டு ஆட்டியவர்தான்.

இன்று இப்போது இந்த விநாடியில் அந்தப் பேய் தன் அருகில் இல்லை என்பதை உணர்ந்தபோதுதான் தாம் சற்றே சுதந்திரமாக இருப்பது போலத் தோன்றியது பெருநிதிச் செல்வருக்கு சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் என்பதைத் தனக்குத்தானே நிரூபித்துக் கொள்வதற்காகவாவது தன்னிச்சையாய் எதையேனும் செய்து பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் அவர்.

ஒளிமிக்க கருங்கல்லில் செதுக்கிய மல்லனின் சிலை போலிருந்த வலிய ஊழியன் ஒருவன் அவரை அமரச் செய்து மருந்துப் பொருள்கள் இட்டுக் காய்ச்சிய தைலத்தை உடம்பில் நன்றாக அழுத்தித் தேய்த்து விட்டான். தம்முடைய உடம்பின் தசைத் தொகுதியை அந்த ஊழியனின் கைகள் அழுத்திப் பிடித்துப் பிசையும் போது கடற்பயணத்தினால் ஏற்பட்ட சோர்வு பஞ்சாய்ப் பறந்து போனது போலிருந்தது அவருக்கு, வெந்நீரில் குளித்து முடித்தபின் விதவிதமான வகைகளில் சுவையோடு சமைத்திருந்த உணவை உடனே தூக்கம் வந்து விடுவதற்கான பெருஞ் சோர்வு ஏற்படும்படி அவர் நிறைய உண்டார். கண்ணிமைகளில் வந்து கொஞ்சும் உறக்கத்தோடு பஞ்சணையில் போய் விழுந்தார். அதற்குப் பின்பு மறுநாள் போது விடிந்ததைக்கூட அவர் காணவில்லை. அவ்வளவு சுகமான உறக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_4.pdf/45&oldid=1190545" இலிருந்து மீள்விக்கப்பட்டது