நா. பார்த்தசாரதி
661
யிருந்த நாணற் படுக்கையில் பல நாட்களுக்கு முன்பு நீங்களே என்னிடம் கூறியது உங்களுக்கு மறந்து போய்விடவில்லையே?”
“இவ்வாறு பெருநிதிச் செல்வர் கேட்டபோது இந்தக் கேள்வியால் நகைவேழம்பரின் மனத்தில் எந்த உணர்வு கிளர்ந்ததோ தெரியவில்லை! குபீரென்று நெருப்புப் பற்றினாற் போல் மீண்டும் முதலில் அங்கு வந்து நுழைந்த போதிருந்த சீற்றத்தை அடைந்தார். அவர். ஆத்திரத்தில் நெடுநேரமாகச் சொல்வதற்குத் தயக்கப்பட்டுக் கொண்டிருந்த செய்தி ஒன்றை உடனே சொல்லிவிடும் துணிவு வந்து விட்டாற்போல் அப்போது பேசலானார் நகைவேழம்பர்.
“நினைவூட்டக் கூடாத நிகழ்ச்சியை இப்போது உங்களுக்கு நினைவூட்டுகிறேன்! இனி நான் பொறுமையிழந்துவிட்டேன். எனக்கு அந்தப் பயங்கரமான இரவு நினைவு வருகிறது. நீங்களும் நினைத்துக் கொள்ளுங்கள். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சியானாலும் நினைக்கும்போது இன்றே நடந்ததுபோல் குடல் பதறவில்லையா உங்களுக்கு? - சக்கரவாளக் கோட்டத்து வன்னி மன்றத்துக்குப் பின்னால் உள்ள கொடி வழியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் பேரிருட் பக்கமாகிய கிருஷ்ணபட்சத்து அமாவாசை இரவில் அரும்பு மீசையும் புன்னகை வடியும் முகமுமாக வந்து நின்ற காலாந்தகனை எப்படித் துடிக்கத் துடிக்கக் கொலை செய்தோம் என்பதை நினைக்கும்போது உங்களுக்கு உடல் சிலிர்க்கவில்லையா? வன்னி மன்றத்துக்கு அப்பால் கொடி வழியின் அருகே கொன்றைப் புதருக்குள் யாரையோ பிடித்து அறையக் காத்திருப்பது போல் பாய்ந்து கொண்டு நிற்கும் அந்தப் பூதச்சிலையின் கீழே பைரவிப் பேய் மகள் ஒரு கையையும் நான் ஒரு கையையும் பற்றித் திமிறிவிடாமல் காலாந்தகனை அடக்கிக் கொண்டபோது ஆந்தையும் கோட்டானும் அலறிய அலறலில் அந்த உயிரின் அலறலும் கலந்து கேட்டு ஒடுங்கும்படி நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை இந்தக் கணத்தில் நினைத்துப்