658
மணிபல்லவம்
அழைத்துக் கொண்டு கோபம் உள்ளே புகுவதற்கு முன்னாலேயே கதவை அடைத்துவிட வேண்டும். இரண்டையுமே சேர்த்து உள்ளே வரவேற்றுக் கொண்டால் அதற்காகப் பின்னால் வேதனைப்பட நேரும். வெற்றியின்போது வெளிப்படையாக மிதமிஞ்சிய மகிழ்ச்சி கொள்வது எப்படிக் கெடுதலோ, அப்படியே தோல்வியின்போது கோபப்படுவதும்கூட கெடுதல்” என்று தம் நிலையை உயர்த்திக் கொண்டதுபோல் பாவித்துக்கொண்டு தமது இயல்போடு ஒட்டாத அறிவுரையைப் போலியாகக் கூறினார் பெருநிதிச் செல்வர். ஆனால் மனத்திலிருந்து சுயமாக எழாத அந்த போலி அறிவுரையாலும் எதிராளி வந்து நிற்கும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வலையில் சிக்காமல் திமிறிக் கொண்டு வலையையே அறுக்க முயலும் முரட்டு மீனைப்போல் கட்டறுத்துக் கொண்டு மீறும் உணர்ச்சிகளோடு நின்றார் நகைவேழம்பர்.
“ஐயா! பெருநிதிச் செல்வரே! மன்னிக்க வேண்டும், நீங்கள் உண்மையை மாற்றிச் சொல்கிறீர்கள். இது என்னுடைய தோல்வி அல்ல. உங்களுடைய தோல்விதான். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் புரிந்து கொள்வீர்கள்.”
“அது எப்படி?”
“அந்த மணிபல்லவத்துக் கப்பலைத் துரத்திக் கொண்டு சென்று நடுக்கடலில் தீ வைத்து மூழ்கச் செய்துவிடுமாறு கூறி நீங்கள் என்னை அனுப்பியபோது உள்ளுற என்ன நினைத்துக் கொண்டு அனுப்பினர்கள் என்கிற இரகசியத்தை இப்போதாவது என்னிடம் சொல்வீர்களா ?”
“அதில் உங்களுக்கும் எனக்கும் தெரியாத புது ரகசியம் வேறு என்ன இருக்கிறது?”
“இல்லை என்றுதான் நீங்கள் சொல்வீர்கள். ஆனால் இருக்கிறது, இருப்பதாக நான் புரிந்துகொண்டேன்.”
“நீங்கள் புரிந்துகொண்டதைச் சொல்லுங்களேன்.”