700
மணிபல்லவம்
கொண்டிருக்கிற எண்ணங்களை விதைப்பதற்கு எனக்கு காவிய நாயகன் வேண்டும் என்று முதன் முதலாக இளங்குமரனைத் திருநாங்கூருக்கு அழைத்துக் கொண்டு போனபோது தம்மிடம் அடிகள் கூறியது இப்போது மீண்டும் நினைவு வந்தது அவருக்கு. மலை பொங்குவது போல் அவருடைய உடம்பு பெருகி நெட்டுயிர்த்தது. ஆலமுற்றத்துக் கடற்பரப்பும், அதன் கோடியில் தொடு வானமும் கடலும் இணைவதுபோலத் தெரிந்த பொய் யழகும் அவருடைய கண்களில் தெரியாமல் மறைந்து அந்த இடமெல்லாம் இளங்குமரனே தெரிந்தான்.
‘உலகத்தில் ஏதாவது ஒரு பொருளின்மேல் மட்டும் அதிகமாக ஆசைப்படுகிறவன் வீரனாக இருக்க முடியாது... நிறைந்த வீரன் என்பவன் ஒருவகையில் துறவியாகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் வென்று கைப்பற்றி நிமிர்ந்து நிற்கும் ஆற்றலைப் போல் எல்லாவற்றையும் விட்டுவிடுகிற தைரியமும் வீரனுக்கு இருக்க வேண்டும். ஆசைப்பட்டுச் சேர்ப்பதற்கு ஒரு பங்கு ஆற்றல் போதுமென்றால், ஆசைப்பட்டுச் சேர்த்த பொருளையும் அதைச் சேர்க்கக் காரணமாயிருந்த ஆசையையும் விடுவதற்கு இரண்டு பங்கு ஆற்றல் வேண்டும். உயர்ந்த தரத்து வீரம் என்று இதைத்தான் நீலநாகர் எண்ணிக் கொண்டிருந்தார். அவருடைய அந்தரங்கமான வாழ்க்கை நோக்கமும் இதுதான். அடித்துப் பிடித்துச் சேர்த்து வைக்கும் வீரத்தைவிட ‘இதை இழக்கக் கூடாது’ என்கிற வகையைச் சேர்ந்த சிறந்த செல்வத்தையும் மனம் ஒப்பி இழக்கத் துணிகிற வீரன்தான் தேர்ந்தவன் என்ற குறிக்கோள் அவருடையது. ஆனால் அவராலேயே இப்போது இளங்குமரனைப் பற்றிய நினைவை இழப்பதற்குத் துணிய முடியவில்லை. அந்நினைவுகளை எல்லாம் ஒவ்வொன்றாக மனத்தில் எண்ணி எண்ணித் திரும்பத் திரும்பச் சேர்த்து வைக்க முயலுகிற பேராசைக்காரராக மாறிக் கொண்டிருந்தார் அவர்.